இந்திய வேளாண்மையின் தரத்தை மேம்படுத்த, உணவு உற்பத்தியில் மட்டுமின்றி, உற்பத்திக்குப் பிந்தைய நிலைகளிலும் கவனம் செலுத்தினால், விவசாயிகளின் வருமான நிலையை உயர்த்தலாம். பருவநிலை மாற்றம், புதிய நோய்கள் மற்றும் பூச்சிகளின் தாக்கத்தால், மகசூல் பாதித்து, அதிகப் பொருளாதாரச் சரிவு ஏற்படுகிறது.
உற்பத்தி செய்யும் போது தோன்றும் நோய்க் காரணிகள், மண், விதை மற்றும் காற்று மூலம் பரவி, அந்த மண்ணிலேயே தங்கி விடுகின்றன. எனவே, இவற்றைக் கட்டுப்படுத்துவது கடினமான செயலாக உள்ளது. இந்த நோய்க் காரணிகள், வயலிலிருந்து சேமிப்புக் கிடங்குக்கும் பரவி, அதிகளவில் இழப்பை ஏற்படுத்துகின்றன.
ஆகவே, அறுவடைக்குப் பின்சார் தொழில் நுட்பங்களையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது. இங்கே, அறுவடைக்குப் பின் வாழைக்காய்களைத் தாக்கும் நோய்களையும், அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளையும் பற்றிக் காண்போம்.
ஆந்தராக்னோஸ்
அறிகுறிகள்: சிறிய, கறுப்பு நிற வட்டப் புள்ளிகள் தோலில் தோன்றி, ஒன்று சேர்ந்து பெரிய புள்ளிகளாக மாறும். அடுத்து, இந்தப் புள்ளிகளில் ஆழ்ந்த அரக்கு நிறத்தில் பெரியளவில் பூசணம் தோன்றும். இதனால், பழம் மென்மையாகி விடும். உள்ளுறை இல்லாத தொற்றால், குலையை அறுவடை செய்வதற்கு முன்பு அல்லது பின்பு, சிறிய புண்ணைப் போன்று தோலில் தொடங்கி, பின் செயலற்ற நிலையில் தொடர்ந்து உருவாகும். இந்தப் பூசணம் காற்று மூலம் பரவும்.
கட்டுப்பாடு: அறுவடை செய்த பழங்களை, 400 பி.பி.எம். கார்பன்டாசிம் அல்லது 1,000 பி.பி.எம். பெனோமில் கரைசலில் பழங்களை நேர்த்தி செய்ய வேண்டும்.
வாழைக்காம்பு அழுகல் நோய்
அறிகுறிகள்: தாரின் தண்டு கறுப்பு நிறமாக மாறும். பழத்தைத் தாங்கும் திறனை இழந்து விடும். இந்தப் பூசணம் காற்று மூலம் பரவும். பழத்தின் முனைகள் கறுப்பு நிறத்தில் இருக்கும். அவற்றில் பூசணமும் படர்ந்து இருக்கும். காற்று மற்றும் மழைக் காலத்தில் குலையில் உள்ள விரல்களில் புள்ளிகள் தோன்றும்.
கட்டுப்பாடு: வயலில் உள்ள காய்ந்த இலைச் சருகுகளை அடிக்கடி சுத்தம் செய்தால் முனை அழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம். சேமிப்புக் கிடங்கைச் சுத்தமாக வைத்துக் கொண்டால் முனை அழுகல் பூசண வித்துகளைக் குறைக்கலாம். சேமித்து வைக்கும் பழங்களின் அருகில். அழுகிய பழங்களையோ அல்லது வாழைக் கழிவுப் பொருள்களையோ வைக்கக் கூடாது.
தாரிலிருந்து வரும் பாலைச் சுத்தமான நீரில் நன்றாகக் கழுவ வேண்டும். பிறகு, அந்த நீரை உடனடியாக அகற்றி விட வேண்டும், இல்லையெனில் பூசண வித்துகள் பலமாகத் தாக்கி விடும்.
சுருட்டு வகை முனை அழுகல் நோய்
அறிகுறிகள்: இந்த நோய் முற்றாத காயின் நுனியில் தோன்றி, மேற்புறம் நோக்கிப் பரவும். அழுகிய பகுதியில் சாம்பல் நிறப் பூசணம் மற்றும் பூசண வித்துகள் இருக்கும். எரிந்த சாம்பல் தோற்றத்தில் அடர் நிற விளிம்புடன் காணப்படும். பழத்தின் முன்பகுதி அழுகி விடும். ஆனால், உட்புறத் திசுக்கள் உலர் அழுகல் நோயை உருவாக்கும்.
கட்டுப்பாடு: இறந்த பூவின் பகுதிகள் மற்றும் நோயுற்ற பழங்களைக் கைகளால் எடுத்து எரித்து விட வேண்டும். நோயுற்ற பழத்திலுள்ள பூசண வித்துகள், நோயற்ற பழங்களுக்குப் பரவுவதால், நோயுற்ற பழத்தை உடனே நீக்கி விட வேண்டும்.
ஒரு லிட்டர் 0.25 சத காப்பர் ஆக்ஸி குளோரைடுக்கு 0.5-1.0 மி.லி. ஈரமாக்கும் திரவம் வீதம் கலந்து தெளிக்கலாம். கார்பன்டாசிம் 0.1 சதம் அல்லது எம்.45 டைத்தேன் மருந்தை 0.1 சதம் வீதம் எடுத்து மஞ்சரிக் காம்புகளில் தெளிக்கலாம்.
த.துர்காதேவி, கு.பிரபாகர், பயிர் நோயியல் துறை, வானவராயர் வேளாண்மைக் கல்வி நிறுவனம், மணக்கடவு, பொள்ளாச்சி – 642 103.
சந்தேகமா? கேளுங்கள்!