தமிழ்நாட்டில் சோளம் முக்கியச் சிறுதானியப் பயிராக, காரீப் மற்றும் ராபி பருவத்தில் பயிரிடப்படுகிறது. இப்பயிர் பெரும்பாலும் வறண்ட பகுதிகளிலும், மானாவாரிப் பகுதிகளிலும் பயிர் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் 4.05 இலட்சம் எக்டரில் பயிரிடப்படும் சோளப்பயிர் மூலம், 4.27 இலட்சம் டன் சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் சராசரி விளைச்சல், எக்டருக்கு 1,054 கிலோவாகும். கிட்டத்தட்ட 85 சதவீதப் பரப்பில் சோளம் மானாவாரிப் பயிராகப் பயிரிடப்படுகிறது.
நகர்ப்புறங்களில் சத்தான உணவுகளுக்கு முக்கியத்துவம் தரப்படுவதால் சோளம் போன்ற தானியங்களின் தேவை அதிகரித்துள்ளது. மானாவாரியில் அதிகத் தானிய விளைச்சல், தீவனம் மற்றும் குருத்து ஈ மற்றும் தண்டுத் துளைப்பானுக்கு எதிர்ப்புத் தன்மையுள்ள இரகங்களை உருவாக்கும் முயற்சியின் பயனாக, கே.13 என்னும் புதிய சோள இரகம் உருவாக்கப்பட்டு உள்ளது.
டி.கே.எஸ்.வி. 1036 என்னும் சோள வளர்ப்பானது, ஐ.சி.எஸ்.பி.518 மற்றும் எஸ்.பி.வி.1489 வளர்ப்புகளைக் கலப்பினம் செய்து அதிலிருந்து மரபு வழித்தோன்றல் மூலம் உருவாக்கப்பட்டது. இந்த வளர்ப்பு, டி.கே.எஸ்.வி. 1036 பல திடல் பரிசோதனைப் பாத்திகளிலும், பண்ணைத் திடல் பாத்திகளிலும் சோதிக்கப்பட்டு உள்ளது.
மேலும், இந்த வளர்ப்பு, அகில இந்திய சோள ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ், பல மாநிலங்களில் பரிசோதிக்கப்பட்டு உள்ளது. அதில், எக்டருக்கு 2,575 கிலோ தானியத்தைக் கொடுத்துள்ளது. இது, கே.12 இரகத்தை விட 10.7 சதமும், கோ.30 இரகத்தை விட 3.5 சதமும் கூடுதல் தானிய மகசூல் ஆகும். தட்டை மகசூல் எக்டருக்கு 11.4 டன் கிடைத்துள்ளது. இது, கே.12 இரகத்தை விட 26.6 சதமும், கோ.30 இரகத்தை விட 16.3 சதமும் கூடுதல் மகசூலாகும்.
டி.கே.எஸ்.வி. 1036 சோள இரகம், புரட்டாசிப் பட்டத்தில் மானாவாரியில் பயிரிட ஏற்றது. இதன் வயது 95-100 நாட்களாகும். இந்தப் பயிர் கரும் பச்சை நிறத்தில் இருக்கும். கோடையில் பூக்கும் தன்மை மிக்கது. வறட்சியைத் தாங்கி வளரும். தானியம் இளமஞ்சள் வெள்ளை நிறத்தில் இருக்கும். கதிர் நீண்டு மிதமான அடர்த்தியில் இருக்கும். தட்டை சன்னமாக இருப்பதால், கால்நடைகள் விரும்பி உண்ணும். குருத்து ஈ மற்றும் தண்டுத் துளைப்பானை மிதமாகத் தாங்கி வளரும். அடிச்சாம்பல் நோயைத் தாங்கி வளரும்.
எனவே, டி.கே.எஸ்.வி. 1036 சோள இரகம், கே.13 என்னும் சோள இரகமாக, தென் மாவட்டங்களில் புரட்டாசிப் பட்டத்தில் மானாவாரியில் பயிரிட ஏற்ற இரகமாக, 2023-இல் வெளியிடப்பட்டு உள்ளது. மானாவாரியில் சராசரி தானிய விளைச்சல் எக்டருக்கு 2,575 கிலோ. தட்டை விளைச்சல் எக்டருக்கு 11.4 டன்.
சிறப்பியல்புகள்
கே.13 இரகச் சோளம், தானியம் மற்றும் தட்டை சாகுபடிக்கு ஏற்றது. இதன் வயது 95-100 நாட்கள் ஆகும். தானியம் இளமஞ்சள் வெள்ளை நிறத்தில் இருக்கும். தட்டை சன்னமாக இருப்பதால் கால்நடைகள் விரும்பி உண்ணும்.
புரதச்சத்து 10.9 சதம், இரும்புச் சத்து 39.78 சதம், நார்ச்சத்து 3.20 சதம் இருக்கும். அதாவது, சிறந்த சமையல் பண்புகளைக் கொண்டிருப்பதால் உணவுக்கு ஏற்ற இரகமாகும்.
குருத்து ஈ மற்றும் தண்டுத் துளைப்பானை மிதமாக எதிர்த்து வளரும். தேன் ஒழுகல் மற்றும் அடிச்சாம்பல் நோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது. தென் மாவட்டங்களில் மானாவாரி மற்றும் இறவையில் பயிர் செய்ய ஏற்ற இரகம். கோடையிலும் பூக்கும் தன்மை மிக்கது.
பருவம்
இந்த இரகத்தைத் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மானாவாரிப் பயிராக, புரட்டாசிப் பட்டத்தில், அதாவது, செப்டம்பர்- அக்டோபரில் சாகுபடி செய்யலாம்.
நிலம் தயாரித்தல்
களைகள் அதிகளவில் முளைக்காத வகையில், புழுதியாக, நிலத்தை 3-4 முறை நன்கு உழ வேண்டும். பொதுவாகச் சோளம் அகலப்பாத்தி முறையில் பயிரிடப்படுவதால், அதற்கு ஏற்றாற் போல், நிலத்தைச் சமன் செய்து, 2×2 மீட்டர் பாத்திகளை அமைத்து, வரிசைக்கு வரிசை 45 செ.மீ., பயிருக்குப் பயிர் 15 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். குச்சியால் 3 செ.மீ. ஆழத்தில் கோடுகளைக் கிழித்து விதைகளை விதைக்கலாம்.
விதையளவும் விதை நேர்த்தியும்
மானாவாரியில் விதைக்க, எக்டருக்கு 15 கிலோ விதைகள் தேவைப்படும். விதைகள் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த, ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் கார்பன்டாசிம் அல்லது காப்டான் அல்லது திரம் வீதம் கலந்து நேர்த்தி செய்ய வேண்டும். குருத்து ஈக்களைக் கட்டுப்படுத்த, குளோர்பைரிபாஸ் 20 இ.சி. அல்லது பாசலோன் 36 இ.சி. மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 மி.லி. வீதம் கலக்க வேண்டும்.
வளரும் பயிர்களுக்கு இயற்கைச் சத்துகள் கிடைக்க, ஒரு எக்டருக்குத் தேவையான விதைகளை 600 கிராம் அசோஸ் பயிரில்லத்தில் கலந்து, வரிசைக்கு வரிசை 45 செ.மீ., பயிருக்குப் பயிர் 15 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.
விதைகளைக் கடினப்படுத்துதல்
மானாவாரியில் விதைப்பதற்கு, ஒரு எக்டருக்குத் தேவையான விதைகளை, 2 சதவீத பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் கரைசலில், அதாவது, ஒரு லிட்டர் நீருக்கு 20 கிராம் பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் வீதம் கலந்த கரைசலில், 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, 5 மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். இப்படிச் செய்தால், தானிய விளைச்சல் கூடுவதுடன் இலாபமும் அதிகமாகும்.
உரம் மற்றும் களை நிர்வாகம்
மானாவாரியில் அடியுரமாக, 12.5 டன் தொழுவுரம், 40 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்தை இட வேண்டும். விதைத்த 20 நாளில் பயிர்களைக் களைத்து விட்டு ஒருமுறையும், மீண்டும் 45 நாளில் ஒருமுறையும் கைக்களை எடுக்க வேண்டும். மேலும், சோளத்தைத் தனியாகப் பயிரிடும் போது, விதைத்த மூன்றாம் நாள், எக்டருக்கு 500 கிராம் அட்ரசிக் களைக்கொல்லி வீதம் தெளிக்கலாம்.
பயிர்ப் பாதுகாப்பு
குருத்து ஈ: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் குறைந்த விலையில் வழங்கும் கருவாட்டுப் பொறியை, எக்டருக்கு 12 வீதம் வைத்து, தாய்ப் பூச்சிகளை அழிக்கலாம். இதை, விதைத்த 30 நாள் வரை வைக்க வேண்டும். மேலும், எக்டருக்கு 500 மி.லி. மீத்தைல் டெமட்டான் 25 இ.சி. அல்லது 500 மி.லி. டைமித்தோயேட் 30 இ.சி. வீதம் எடுத்துத் தெளிக்க வேண்டும்.
தண்டுத் துளைப்பான்: இதைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 17 கிலோ கார்போ பியூரான் 8 ஜி வீதம் எடுத்து, இத்துடன் 33 கிலோ மணலைக் கலந்து, பயிர்களின் குருத்துகளில் இட வேண்டும்.
கதிர்நாவாய்ப் பூச்சி: இதைக் கட்டுப்படுத்த, கதிர்கள் தோன்றி 3 மற்றும் 10 நாட்களில், எக்டருக்கு 20 கிலோ கார்பரில் 10 சதவீதத் தூள் வீதம் எடுத்துத் தூவ வேண்டும்.
செம்பேன்: இதைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு நனையும் கந்தகம் 3.76 கிலோ. அல்லது டைக்கோபால் 1,500 மி.லி. வீதம் தெளிக்க வேண்டும்.
துரு நோய்: இதைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு ஒரு கிலோ மான்கோசெப் வீதம் எடுத்துத் தெளிக்க வேண்டும்.
தேன் ஒழுகல் நோய்: இதைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு ஒரு கிலோ திரம் அல்லது 625 கிராம் காப்டாபாஸ் அல்லது ஒரு கிலோ மான்கோசெப் அல்லது ஒரு கிலோ ஜினப் 50 சதவீத மருந்தை, பயிர்கள் பூக்கும் போது தெளிக்க வேண்டும்.
கதிர்ப்பூசண நோய்: இதைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு ஒரு கிலோ மான்கோசெப் அல்லது ஒரு கிலோ காப்டன் அல்லது 100 கிராம் ஆரியோபன் ஜின்சால் வீதம் எடுத்து, கதிர்கள் வெளிவரும் போதும், பின்பு ஒருவாரம் கழித்தும் தெளிக்க வேண்டும்.
அடிச்சாம்பல் நோய்: இதைக் கட்டுப்படுத்த, ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் மெட்டலாக்சில் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்தல், நோயுற்ற பயிர்களை அகற்றுதல் மற்றும் ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் மான்கோசெப் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
அறுவடை
இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, காய்ந்த தோற்றத்தைத் தருதல், தானியங்கள் கடினமாதல், கதிர்கள் நன்கு காய்ந்து முற்றுதல் ஆகியன, அறுவடைக்கான அறிகுறிகள் ஆகும். அறுவடை செய்த கதிர்களைக் களத்தில் காய வைத்து அடித்து விதைகளைப் பிரிக்க வேண்டும். பிறகு, நன்கு உலர்த்திச் சுத்தம் செய்து, ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கேப்டான் அல்லது திரம் வீதம் கலந்து, சாக்குப் பைகளில் பாதுகாக்க வேண்டும். உணவுக்காகச் சேமித்தால், மருந்தைக் கலக்கக் கூடாது. கதிர்களைத் தனியாக அறுவடை செய்த பிறகு, தட்டையை ஒருவாரம் கழித்து வெட்டி, நன்கு காய விட்டுச் சேமித்து வைக்கலாம்.
முனைவர் நா.மாலினி, முனைவர் செ.ஹரிராம கிருஷ்ணன், பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை, மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி.