பழமையான விதைப் படுக்கையின் முக்கியத்துவம்!

விதைப் படுக்கை பழமையான விதை படுக்கை 764c87e95a94eb2543af0b278cc4a70d

ழமையான விதைப் படுக்கை என்பது, இயற்கை முறையில் களைகளைக் கட்டுப்படுத்தப் பயன்படும் நுட்பமாகும். களை என்பது, பண்ணையில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், தேவைக்கு மாறாக, தானாக வளரும் தாவரமாகும். இதைக் கட்டுப்படுத்த, பல்வேறு முறைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, உயிரியல் முறை, இயந்திர முறை, இரசாயன முறை மற்றும் பயிர்க் கலாச்சார முறை.

உயிரியல் முறை களைக் கட்டுப்பாடு என்பது, பூச்சிகள் அல்லது வேறு சில உயிரினங்களைக் கொண்டு களைகளைக் கட்டுப்படுத்துவது ஆகும். ஆனால், இம்முறை, அனைத்துக் களைகளையும் கட்டுப்படுத்தும் வகையில் இருக்காது. இயந்திர முறை களைக் கட்டுப்பாடு என்பது, பலவகையான இயந்திரங்கள் அல்லது கருவிகள் மூலம் செய்யப்படுவது ஆகும். இங்கே, இயந்திரங்களைக் கையாள்வதற்குத் திறமையான ஆட்கள் தேவை. மேலும், பயிர் வரிசையில் உள்ள களைகளைக் களையும் திறன் குறைவாகவே இருக்கும்.

இரசாயன முறை களைக் கட்டுப்பாட்டில், மண்ணில் அல்லது களைகள் மீது களைக்கொல்லிகள் தெளிக்கப்படும். இதில், சிலவகைக் களைக்கொல்லிகள் நெடுநாட்கள் வரை மட்காமலும், நச்சுத் தன்மையுடனும் நிலத்தில் நீடித்திருக்கும். பயிர்க் கலாச்சார முறை என்பது, இரசாயனமற்ற களைக் கட்டுப்பாட்டு முறையாகும். பழமையான விதைப் படுக்கை என்பது, பயிர்க் கலாச்சார முறையில் ஒன்றாகும்.

பழமையான விதைப் படுக்கை

இது, சாகுபடி செய்வதற்கு முன்பே, இளம் களைகளை அழிப்பதாகும். இதனால், பயிர்களின் வளர்ச்சிப் பருவத்தில் களைகளின் தீவிரம் குறைந்து விடுவதால், பயிர் விளைச்சலை மேம்படுத்தலாம்.

பழமையான விதைப் படுக்கைத் தயாரிப்பு

நிலத்தில் அறுவடை முடிந்ததும் அல்லது புதிய பயிர் சாகுபடிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, நிலத்தைத் தட்டையான பாத்திகளாக மாற்றி அமைத்து, நீர்ப் பாய்ச்ச வேண்டும். இதனால், மண்ணிலுள்ள களை விதைகள் முளைக்கத் தொடங்கும். இந்தக் களைகள் துளிர் விடும்போது அல்லது 2-3 இலைகளுடன் உள்ள நிலையில், இயந்திர முறை அல்லது இரசாயன முறையில் அந்தக் களைகளை அழிப்பதே, பழமையான விதைப் படுக்கை முறையாகும்.

பயன்கள்

சாகுபடிக்கு முன் 1-2 முறை பழமையான விதைப் படுக்கையை அமைத்தால், மண்ணிலுள்ள களைகளை அதிகளவில் கட்டுப்படுத்தலாம். தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு இம்முறையைச் செயல்படுத்தினால், நிலத்திலுள்ள களை விதை வங்கியில் இருந்து களைகளை அகற்றலாம்.

அனைத்து வகையான களைகளையும், முக்கியமாக, கோரை, அறுகம்புல் போன்ற சிரமமான களைகளையும் இம்முறையில் எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். தொடர்ந்து இம்முறையைப் பயன்படுத்தினால், பயிரின் தொடக்க வளர்ச்சிப் பருவத்தில் இருந்தே களைப் போட்டியின்றிப் பயிர்கள் நன்கு வளர்ந்து அதிக விளைச்சலைத் தரும்.

தந்தை ரோவர் வேளாண்மைக் கல்லூரியில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவியர், கல்லூரிப் பண்ணையில், பழமையான விதைப்படுக்கை முறையில் களைகளைக் கட்டுப்படுத்தினர். இயற்கை விவசாயத்தில் களைகளைக் கட்டுப்படுத்த, இம்முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


விதைப் படுக்கை R.RAJAPRIYA

ர.ராஜபிரியா, ச.பிரணவ மாரிமுத்து, தந்தை ரோவர் வேளாண்மைக் கல்லூரி, பெரம்பலூர்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading