My page - topic 1, topic 2, topic 3

Advertisement:

பொன்னாங்கண்ணிக் கீரை சாகுபடி!

பொன்னாங்கண்ணி

கீரையை, விவசாய நிலத்தில் மட்டும் தான் பயிர் செய்ய வேண்டும் என்பது இல்லை. வீட்டுத் தோட்டத்திலும் சாகுபடி செய்யலாம். இதற்கு, நீர் அதிகமாகத் தேவைப்படாது. சிறிய இலைகளைக் கொண்ட பொன்னாங்கண்ணிக் கீரை, தரையில் படர்ந்து வளரும். இது, படர் பூண்டு வகையைச் சேர்ந்தது. எதிர் அடுக்குகளில் சற்று நீண்ட, சிறு இலைகளைக் கொண்ட சிறு செடியினம்.

இதில், வெள்ளைப் பூக்கள் இலைக் கோணங்களில் காணப்படும். இதன் இளம் தளிர்ப் பாகங்கள் உணவுக்குப் பயன்படும். இது, மருத்துவத் தேவைக்காகப் பயிரிடப்படுகிறது. பொன்னாங்கண்ணியில், சீமைப் பொன்னாங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி என இருவகை உண்டு.

பொன்னாங்கண்ணி பயன்கள்

+ கூந்தல் நன்றாக வளர, பொன்னாங்கண்ணிச் சாற்றை, தேங்காய் எண்ணெய்யில் சேர்த்துக் காய்ச்சி, தைலமாகப் பயன்படுத்தலாம்.

+ புரதம், இரும்பு, சுண்ணாம்பு, வைட்டமின் சி நிறைந்த இந்தக் கீரை, உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது.

+ இந்தக் கீரை, கண் எரிச்சல், கண் மங்குதல், கண்கட்டி, கண்ணில் நீர் வடிதல், போன்ற கண் நோய்களைக் குணமாக்கும் தன்மை மிக்கது. பொன்னாங்கண்ணிக் கீரையைத் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டால், கண் பார்வை நன்றாகத் தெரியும்.

+ கால்சியத்தை அதிகமாகக் கொண்ட இக்கீரை, எலும்புகளின் உறுதிக்கும், பற்களின் நலத்துக்கும் உதவுகிறது.

சாகுபடி முறை

சீமைப் பொன்னாங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி என, இரண்டு இரகங்கள் உள்ளன. இதை, ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். சித்திரை, ஆடி, மார்கழி, மாசிப் பட்டம் ஆகியன, ஏற்ற பருவங்கள் ஆகும்.

மண்: பொன்னாங்கண்ணி அனைத்து வகை மண்ணிலும் விளையும். ஆயினும், செம்மண்ணில் பயிரிட்டால், விளைச்சல் அதிகமாக இருக்கும்.

நிலம் தயாரித்தல்: முதலில், நிலத்தை 2-3 முறை உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன், ஏக்கருக்கு 5 டன் தொழுவுரம் வீதம் இட்டு, நிலத்தைப் பண்படுத்த வேண்டும். பிறகு, தேவையான அளவுக்குப் பாத்திகளை அமைக்க வேண்டும். குறிப்பாக, 12×12 சதுரடிப் பாத்திகளாக அமைப்பது நல்லது. பிறகு, பாசனம் செய்து பொன்னாங்கண்ணி தண்டுகளை நடவு செய்யலாம்.

பாசனம்: நடவு முடிந்ததும் நீர்ப் பாய்ச்ச வேண்டும். பிறகு, மூன்றாம் நாள் உயிர் நீர் விட வேண்டும். பிறகு, நான்கு நாட்களுக்கு ஒருமுறை பாசனம் தர வேண்டும்.

உரமிடுதல்: மண்புழு உரம், கம்போஸ்ட் ஆகியவற்றை இடலாம். இலைகள் அதிகமாகத் தழைத்து வர, ஒரு லிட்டர் நீருக்கு 30 மி.லி. பஞ்சகவ்யா வீதம் கலந்து தெளிக்கலாம். மாதம் இருமுறை, ஜீவாமிர்தக் கரைசலைப் பாசன நீரில் கலந்து விடலாம். இதனால், கீரைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

களைகளை அகற்றுதல்: நடவு முடிந்த 10-15 நாட்கள் கழித்து, களையெடுக்க வேண்டும். சரியான பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும். கூடுதலாக இருக்கும் பயிர்களை நீக்க வேண்டியது மிகவும் அவசியம்.

பூச்சித் தாக்குதல்: பூச்சிகளின் தாக்குதல் இருந்தால், நொச்சி, பிரண்டை, சோற்றுக் கற்றாழை ஆகிய மூன்றையும், சமமாக எடுத்து அரைத்து, ஒரு லிட்டர் மாட்டுக் கோமியத்தில் கலந்து ஒருநாள் வைத்திருந்தால், இக்கரைசல் தயாராகி விடும். இதை, பத்து லிட்டர் நீருக்கு 300 மி.லி. வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை

நிலத்தை உலர விடாமல் தொடர்ந்து பாசனம் செய்தால், 25 நாளில் அறுவடை செய்யலாம். இலைகளைத் தண்டுடன் கிள்ளி அறுவடை செய்யலாம். ஒரே நாளில் முற்றிலும் அறுவடை செய்யாமல், சந்தைத் தேவைக்கேற்ப அவ்வப்போது அறுவடை செய்யலாம். அறுவடை செய்த 20 நாட்களில் மீண்டும் அறுவடைக்குத் தயாராகி விடும். தரையிலிருந்து 5 செ.மீ. உயரத்தில் முழுச் செடியையும் அறுவடை செய்யலாம். குறிப்பிட்ட கால இடைவெளியில் அறுவடை செய்தால், நல்ல மகசூல் கிடைக்கும்.

வீட்டுத் தோட்டத்தில் வளர்த்தல்

தொட்டிகளில் பராமரிப்பு: பொன்னாங்கண்ணிக் கீரைத் தண்டுகளை அறுத்து விட்டால், மீண்டும் மீண்டும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எனவே, வீட்டில் இதை எளிதாக வளர்க்க முடியும். வேர்ச்செடி மற்றும் நுண்தண்டு மூலம் பயிர்ப் பெருக்கம் செய்யலாம்.

பொன்னாங்கண்ணிக் கீரையைப் பயிரிடுவதற்கு, விதை, உரம் என்று எதுவும் தேவையில்லை. ஒரு கட்டுக் கீரை மட்டுமே போதும். பொன்னாங்கண்ணி இலைகளை நீக்கி விட்டு, தண்டை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு, 3:1:1 வீதம், மணல், மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கை நிரப்பிய மண் தொட்டியில், வேர்ச் செடிகள் அல்லது தண்டுகளை நட வேண்டும். அடுத்து, சிறிதளவு மண்ணை லேசாகத் தூவிவிட்டு, பூவாளி மூலம் நீரைத் தெளிக்க வேண்டும்.

ஒவ்வொரு தொட்டிக்கும் 500 கிராம் மண்புழு உரம், 500 கிராம் கம்போஸ்ட், 50 கிராம் வீதம் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியாவைக் கலந்து, ஆறு மாதத்துக்கு ஒருமுறை இட வேண்டும்.

காசம் புகைச்சல் கருவிழி நோய் வாதமனல்
கூசும் பீலிகம் குதாங்குரநோய் -பேசிவையால்
என்னாங்கா ணிப்படிவம் ஏமமாம் செப்பலென்னைப்
பொன்னாங்கா ணிக்கொடியைப் போற்று

என்னும் தேரையரின் பாடல், பொன்னங்கண்ணிக் கீரையின் மருத்துவக் குணங்களைக் கூறுகிறது. பொன்னாங்கண்ணிக் கீரை, காசநோய், இருமல், கண் நோய்கள், வெப்ப நோய்கள், வாத நோய்கள் போன்றவற்றைக் குணமாக்கக் கூடிய சிறந்த உணவாகும் என்பது, இந்தப் பாடலின் பொருளாகும். எனவே, குறைந்தது வாரம் இருமுறை, இந்தக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டுப் பயன் பெறுங்கள்.


C.RAJA BABU e1738060655504

முனைவர் சி.இராஜா பாபு, இணைப் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, திருச்சி மாவட்டம்.

Share:

Advertisement:

  சந்தேகமா? கேளுங்கள்!  

Advertisement:

இன்னும் படியுங்கள்!