My page - topic 1, topic 2, topic 3

Advertisement:

கொள்ளு ஒண்டர்!

kollu

ந்தியாவைத் தாயகமாகக் கொண்ட கொள்ளுப்பயிர், பயறுவகைப் பயிர்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது, தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் பெரிதும் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 60,000 ஏக்கர் பரப்பளவில் கொள்ளு சாகுபடி நடைபெறுகிறது. இது, உணவுப் பயிராக, தீவனப் பயிராக மட்டுமின்றி, பசுந்தாள் உரமாகவும் பயன்படுகிறது.

பயன்கள்

+ மிகக் குறைந்த சாகுபடிச் செலவில் விளையும் கொள்ளுப்பயறு, மருத்துவப் பயன்கள் மிக்கது.

+ கொள்ளுப் பயற்றில், கொழுப்பை எரிக்கும் சக்தி அதிகமாக உள்ளது. இது, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

+ கொள்ளுப் பயற்றில் உள்ள சேர்மங்கள், சிறுநீரகக் கற்களைக் கரைத்து வெளியேற்ற உதவுகின்றன.

+ இதை, உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், உடல் எடைக்குறைப்பு, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, மலச்சிக்கல் தீர்வு போன்ற நன்மைகளைப் பெறலாம்.

சாகுபடி

+ மிதமான மழையுடன் கூடிய வறண்ட நிலையில், கொள்ளு நன்கு வளரும். இதைத் தனிப் பயிராகவும், கலப்புப் பயிராகவும் சாகுபடி செய்யலாம்.

+ நிலத்தை, ஐந்து கலப்பை அல்லது ஒன்பது கலப்பை மூலம், புழுதியாக உழவு செய்ய வேண்டும்.

விதைப்பு

+ ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் தேவைப்படும்.+ இவற்றை, ஒரு பொட்டலம் ரைசோபியம், ஒரு பொட்டலம் பாஸ்போபேக்டீரியா மற்றும் ஆறிய அரிசிக்கஞ்சி கலந்த

கலவையில் நன்கு கலந்து நிழலில் உலர்த்தி, 24 மணி நேரத்துக்குள் விதைக்க வேண்டும்.

உரமிடல்

+ விதைப்பதற்கு முன், அடியுரமாக எக்டருக்கு 12.5 டன் மட்கிய தொழுவுரத்தை இட வேண்டும்.

+ மேலும், மண் பரிசோதனைப்படி இரசாயன உரங்களை இட வேண்டும்.

+ இல்லையெனில், பொதுப் பரிந்துரைப்படி, ஏக்கருக்கு 5:10:5 கிலோ தழை, மணி, சாம்பல் சத்தைத் தரவல்ல, 11 கிலோ யூரியா, 63 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 8 கிலோ பொட்டாசை அடியுரமாக இட வேண்டும். 20-25 நாட்களுக்குள் களையெடுக்க வேண்டும்.

கொள்ளு வொண்டர்

மேலும், கொள்ளுப்பயிரில் மகசூலை அதிகரிக்க, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின், பயிர் வினையியல் துறை வெளியிட்டுள்ள, கொள்ளு ஒண்டர் என்னும் பூஸ்டரைத் தெளிக்க வேண்டும்.

+ இது, கொள்ளுப் பயிருக்குத் தேவையான சத்துகள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த இடுபொருளாகும்.

+ இதை, ஏக்கருக்கு இரண்டு கிலோ வீதம் எடுத்து, பூக்கும் பருவத்தில், 200 லிட்டர் நீரில் ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும்.

+ இந்த பூஸ்டரைத் தெளிப்பதன் மூலம், கொடிகளின் எண்ணிக்கை குறைந்து, பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பூக்கள் உதிர்வது குறையும். எனவே, 20 சதம் வரை விளைச்சல் அதிகரிக்கும்.

அறுவடை

+ அனைத்துக் காய்களும் முதிர்ச்சி அடைந்ததும், கொடியுடன் அறுவடை செய்ய வேண்டும்.

+ பிறகு, காய வைத்து அடித்து, பயற்றைத் பிரித்தெடுக்க வேண்டும். ஏக்கருக்கு 300-350 கிலோ கொள்ளுப்பயறு மகசூலாகக் கிடைக்கும்.


C.RAJA BABU e1738060655504

முனைவர் சி.இராஜா பாபு, இணைப் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, திருச்சி மாவட்டம்.

Share:

Advertisement:

  சந்தேகமா? கேளுங்கள்!  

Advertisement:

இன்னும் படியுங்கள்!