காப்பியைத் தாக்கும் இலைத்துரு நோய்!

காப்பி coffee tree

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட்.

ஹெமிலியா வாஸ்டாடிரிக்ஸ் என்னும் பூஞ்சையால், காப்பி இலைத்துரு நோய் ஏற்படுகிறது. முதன் முதலில் 1867-இல் இந்நோய் இலங்கையில் உள்ள காப்பித் தோட்டங்களைத் தாக்கியது. பிறகு, இந்தியாவில் 1890-ஆம் ஆண்டில் இந்நோய் தோன்றியது. இது, இந்தியாவிலுள்ள காப்பித் தோட்டங்களில், ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகி, மிகுந்த சேதத்தை விளைவித்து வருகிறது. கர்நாடகம், கேரளம், மத்திய பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது.

நோயின் அறிகுறிகள்

இந்நோய் பெரும்பாலும் இலைகளைத் தான் தாக்கும். தளிர் இலைகள் இந்நோயால் அதிகளவில் தாக்கப்படும். முதலில், இலைகளின் அடிப்பாகத்தில் துருக்கூடுகள் 1-2 மி.மீ. விட்டமுள்ள சிறிய புள்ளிகளாகத் தோன்றும். முதலில் மஞ்சள் நிறமாகத் தோன்றும் புள்ளிகள், பிறகு விரிவடைந்து ஆரஞ்சு நிறப் புள்ளிகளாக மாறும்.

இந்தப் புள்ளிகளுக்கு நேரெதிரே உள்ள இலைகளின் மேற்பரப்பு, பழுப்பு நிறமாகக் காணப்படும். நோய் அதிகளவில் தாக்கும் போது, இலைகள் கரிந்து, மடிந்து, உதிர்ந்து விடும். காய்கள் சிறுத்தும், முதிராமலும், பழுக்காமலும், உதிர்ந்து விடும்.

நோய்க்காரணி

இந்நோய், ஹெமிலியா வாஸ்டாடிரிக்ஸ் என்னும் பூசணத்தால் ஏற்படுகிறது. இப்பூசணம் நோயை ஏற்படுத்தும் போது இலைகள், ஊண் வழங்கியின் திசுவறைக்கு, இடையே காணப்படும். இலைகளில் இருந்து தோன்றும் கோள வடிவ உறிஞ்சும் உறுப்புகள், திசுவறைகளுக்குள் சென்று, பூசணத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களைச் சேகரித்துக் கொள்ளும்.

பிறகு, இலைகளில் மஞ்சள் புள்ளிகள் தோன்றும். வித்துக் காம்புகளின் நுனியில் யூரிடோ வித்துகளும் தோன்றுவதால், புள்ளிகளின் மேல் ஆரஞ்சு நிறப் பொடியைத் தூவியதைப் போன்ற தோற்றத்தை அளிக்கும். யூரிடோ வித்துகள் ஆமைத்தோடு போன்ற வடிவில், 26-40 மைக்ரான் விட்டத்தில், 20-30 மைக்ரான் உயரத்தில் இருக்கும். நாளடைவில், யூரிடோ வித்துக் கூடுகளில் இருந்தே, டீலியோ வித்துகள் தோன்றும்.

நோய் பரவும் விதமும், பரவும் கால நிலைகளும்

யூரிடோ வித்துகள் மூலமே நோய் தோன்றிப் பரவும். மழைத்துளி, காற்று மற்றும் பூச்சிகள் மூலம் இந்நோய் பரவும். அதிக ஈரப்பதம், அதிக வெப்பநிலை, விட்டு விட்டு மழை தூறுதல், பனி பெய்தல், நல்ல வெளிச்சம், மரங்களின் நிழல் போன்ற கால நிலைகளில் இந்நோய் அதிகளவில் தோன்றிப் பரவும். ரோபஸ்டா காப்பிச் செடிகளை விட, அராபிக்கா காப்பிச் செடிகளை இந்நோய் அதிகளவில் சேதப்படுத்தும்.

நோய்க் கட்டுப்பாடு

காப்பித் தோட்டங்களில் கீழே உதிர்ந்து கிடக்கும், நோய் தாக்கிய இலைகள், காய்கள் போன்றவற்றை அகற்றி எரித்து விட வேண்டும். இந்நோய்க்கு எதிர்ப்புத் திறனுள்ள ஷி 238, ஷி 395 ஆகிய வகைகளைப் பயிரிடலாம்.

இந்நோயைத் தடுக்க 0.5 சத போர்டோக் கலவையை, இலைகளின் அடிப்பாகம் நன்றாக நனையும் வகையில், பூ விடுவதற்கு முன்பு ஒருமுறையும், பருவமழை ஆரம்பிப்பதற்கு முன் மே மாதத்தில் ஒருமுறையும், பருவ மழைக்குப் பின்பு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் ஒருமுறையும், அக்டோபர் மாதத்தில் ஒருமுறையும் தெளிக்க வேண்டும்.


காப்பி suguna

சு.சுகுணா, முனைவர் வி.ம.சீனிவாசன், முனைவர் பி.கார்த்திக், தந்தை ரோவர் வேளாண்மைக் கல்லூரி, பெரம்பலூர், சீ.பார்த்தசாரதி, தாவர நோயியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading