இந்திய உணவு உற்பத்தியில் மக்காச்சோளத்தின் பங்கு 13.5 சதமாகும். நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வருவதால், பெரும்பாலான விவசாயிகள் மானாவாரி சாகுபடி முறைக்குத் தள்ளப் படுகிறார்கள்.
தமிழகத்தில், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில், அதிகளவில் மானாவாரி மக்காச்சோள சாகுபடி நடைபெற்று வருகிறது. இம்முறையில், பல்வேறு காரணங்களால் போதியளவில் மகசூலைப் பெற முடிவதில்லை.
இந்நிலையில், கிடைக்கும் மழைநீரை முறையாகப் பயன்படுத்தி, மக்காச்சோள சாகுபடியில் அதிக மகசூலை எடுப்பதற்கான உத்திகளை இப்போது பார்க்கலாம்.
நிலம் தயாரித்தல்
முதலில் நிலத்தைச் சட்டிக் கலப்பையால் உழ வேண்டும். அடுத்து, 2-3 நாட்கள் கழித்துக் கொக்கிக் கலப்பையால், ஏற்கெனவே உழுததற்கு நேர் எதிர்த் திசையில் இரண்டு முறை உழுது கட்டிகளை உடைக்க வேண்டும்.
கடைசி உழவுக்கு முன், தொழுவுரத்தை இட வேண்டும். பிறகு, பார் கலப்பை மூலம் 45 செ.மீ. இடைவெளியில் பார்களைப் பிடிக்க வேண்டும்.
பருவமும் இரகங்களும்
செப்டம்பர் அக்டோபரில் வரும் புரட்டாசிப் பட்டத்தில், கோ.6, கோ.எக்ச்1, கோ.எக்ச். 2 மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் NK 6240, CP 808, CP 818, இராசி 1, இராசி 2 கார்கில் ஆகிய இரகங்களைப் பயிரிடலாம்.
வீரிய இரகமெனில் எக்டருக்கு 20 கிலோ விதைகள், ஏனைய இரகங்கள் எனில் 25 கிலோ விதைகள் தேவைப்படும்.
விதை நேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி வீதம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். பிறகு, மூன்று பொட்டலம் அசோஸ்பைரில்லம் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
விதைப்பு
விதைகளை 4 செ.மீ. ஆழத்தில் விதைக்க வேண்டும். செடிக்குச் செடி 20 செ.மீ. பாருக்குப் பார் 45 செ.மீ. இடைவெளி இருக்க வேண்டும். அதாவது, ஒரு சதுர மீட்டரில் 11-12 பயிர்கள் இருக்க வேண்டும்.
களை மற்றும் பயிர்க் கலைப்பு
விதைத்த மூன்றாம் நாள் எக்டருக்கு 0.25 கிலோ அட்ரஸின் களைக்கொல்லி வீதம் எடுத்து, விசைத் தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். அடுத்து, விதைத்து 35 நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.
ஊடுபயிர் செய்திருந்தால், எக்டருக்கு 0.75 கிலோ பென்டிமெத்திலின் வீதம் எடுத்துத் தெளிக்க வேண்டும்.
விதைகள் நன்கு முளைத்து வந்த பிறகு, நல்ல பயிர்களை விட்டு விட்டு மற்ற பயிர்களை அகற்ற வேண்டும். விதைத்து இருபது நாளில் களைகளை நீக்கி விட்டு மண் அணைக்க வேண்டும்.
உரம்
கடைசி உழவுக்கு முன் எக்டருக்கு 12.5 டன் தொழுவுரம் மற்றும் பத்துப் பொட்டலம் அசோஸ்பைரில்லத்தை அடியுரமாக இட வேண்டும். 12.5 கிலோ நுண்ணூட்டக் கலவையை, 37.5 கிலோ மணலில் கலந்து சீராகத் தூவ வேண்டும். 7.5 கிலோ தமிழ்நாடு நுண்ணுரக் கலவையை ஊட்டமேற்றிய தொழுவுரமாக இட வேண்டும்.
மேலும், மண்ணாய்வு செய்திருந்தால் அதன் பரிந்துரைப்படி உரமிட வேண்டும். இல்லையெனில், மணற்பாங்கான நிலத்தில், எக்டருக்கு 130 கிலோ யூரியா, 188 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 50 கிலோ பொட்டாசை இட வேண்டும்.
களிமண் நிலமாக இருந்தால், எக்டருக்கு 88 கிலோ யூரியா, 125 கிலோ சூப்பர் பாஸ்பேட், 32 கிலோ பொட்டாஷ் தேவைப்படும். இவற்றில் 50 சத யூரியா, 100 சத சூப்பர் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷை அடியுரமாக இட வேண்டும்.
இலைவழி நுண்ணூட்டம்
கதிர்கள் வரும்போது, எக்டருக்கு 3 கிலோ மக்காச்சோள மேக்சிம் வீதம் எடுத்து, 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதனால், பயிர்கள் வறட்சியைத் தாங்கி வளர்ந்து அதிக மகசூலைத் தரும்.
அறுவடை
விதைத்த 90 நாளிலிருந்து 105 நாளில் அறுவடை செய்யலாம். முதிர்ந்த கதிரின் மேலுறை காய்ந்து மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்நிலையில் கதிர்களை அறுவடை செய்து, வெய்யிலில் காய வைத்து மணிகளைப் பிரிக்க வேண்டும்.
அடுத்து, ஈரப்பதம் 12%க்குக் குறைவாக இருக்கும் வகையில் காயவிட்டுக் கோணிப் பைகளில் சேமிக்க வேண்டும். எக்டருக்கு 2,500-3,000 கிலோ தானியமும், 3,000-5,000 கிலோ தட்டையும் மகசூலாகக் கிடைக்கும்.
பயிர்ப் பாதுகாப்பு
பூச்சிகள்: குருத்து ஈ, தண்டு ஈ: இதன் தாக்கம் இருந்தால், இளம் பயிரில் குருத்து வாடி விடும். சதைப்பற்றுள்ள மஞ்சள் புழுக்கள் குருத்துப் பகுதியின் தண்டுக்குள் இருக்கும். இப்புழுக்கள் ஒரு மாத வயதுள்ள பயிரையே தாக்கும்.
தண்டுப்புழு: உருளை வடிவிலான இப்புழுக்கள், பழுப்புத் தலையுடன் மஞ்சளாகவும், சிவப்புத் தலையுடன் இளஞ்சிவப்பாகவும் இருக்கும். இப்புழுக்கள் தாக்கிய பயிரின் தண்டுப் பகுதியில் ஓட்டையும், தண்டின் உட்பகுதி குகை போலவும் காணப்படும்.
இலைகளில் சல்லடையைப் போலத் துளைகள் இருக்கும். இலையின் நடு நரம்பு அரிக்கப்பட்டு, சிவப்பு நிறத்தில் காணப்படும். நடுக்குருத்து வாடி விடும்.
இதைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 400 மி.லி. குயினால்பாஸ் 25 இ.சி. அல்லது 400 கிராம் கார்பரில் 4 டபிள்யூபி வீதம் எடுத்து, விதைத்த 20 ஆம் நாளில் தெளிக்க வேண்டும்.
அசுவினி: இதன் தாக்குதலை எறும்பு நடமாட்டத்தின் மூலம் கண்டறியலாம். பூச்சிகளும், குஞ்சுகளும் கரும்பச்சைக் கால்களுடன் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
இதைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 100 மி.லி. பாஸ்போமிடான் அல்லது 200 மி.லி. டைமெத்தோயேட் வீதம் எடுத்துத் தெளிக்க வேண்டும்.
இலைத்தின்னிப் புழுக்கள்: மூன்று வகையான புழுக்கள் இலைகளைத் தின்று சேதத்தை ஏற்படுத்தும். இவற்றைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 400 கிராம் நனையும் கார்பரில் 50% அல்லது 300 கிராம் பெனிட்ரோதயான் வீதம் எடுத்துத் தெளிக்க வேண்டும்.
கதிரைத் தாக்கும் புழுக்கள்: மொச்சைக்காய்ப் புழு: கதிரிலுள்ள குஞ்சத்தையும், பால் பிடித்து உருவாகும் தானியத்தையும் தின்று சேதம் விளைவிக்கும்.
இலைகளைப் பிணைக்கும் புழு: இதன் தாக்கம் இருந்தால், மக்காச்சோளக் கதிர்கள் நூலிழைகளால் பிணைக்கப்பட்டு இருக்கும். கதிரில் உடைந்த மணிகள் காணப்படும்.
இவற்றைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 10 கிலோ நனையும் கார்பரில் 10% தூள் அல்லது 400 மி.லி. குயினால்பாஸ் 25 இ.சி. மருந்தைத் தெளிக்க வேண்டும்.
நோய்கள்: இலைப்புள்ளி: இலைகளின் அடிப்பாகத்தில் வெண் பூசணம் வளர்ந்து இலைகள் வெளுத்துக் காய்ந்து விடும். நரம்புகளினூடே இலைகள் கிழிந்து நாரைப் போலத் தெரியும்.
இதைக் கட்டுப்படுத்த, ஒவ்வொரு பகுதியிலும் 20 இலைகளைத் தேர்ந்தெடுத்து, நோயின் தன்மை பொருளாதாரச் சேத நிலைக்கு மேல் இருந்தால், எக்டருக்கு 500 கிராம் மெட்டாலக்சில் வீதம் எடுத்துத் தெளிக்க வேண்டும்.
சார்கோல் அழுகல் நோய்; இது, நீர்ப் பற்றாக்குறை, வறட்சி மற்றும் அதிக வெப்ப நிலையில் அதிகமாகத் தாக்கும். இந்நோய்க்கான பூசணம், மண் மூலம் பரவும். நாற்றுகள் மற்றும் இளம் பயிர்களின் வேர்களைத் தாக்கும். இதனால் பயிர்கள் வாடி விடும்.
மேலும், கதிர் கரிப்பூட்டை நோய், தட்டையழுகல் நோய், பழுப்புப்புள்ளி நோய், மொசைக் வைரஸ் நோய் ஆகியனவும் மக்காச்சோளத்தைத் தாக்கும்.
இவற்றைக் கட்டுப்படுத்த, ஆழமாக உழ வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியுள்ள இரகங்களைப் பயிரிட வேண்டும். களைகள் மற்றும் மாற்றுப் பயிர்களை அழிக்க வேண்டும்.
இதர மானாவாரி நுட்பங்கள்
கோடையுழவு: இது, மழையை நம்பி சாகுபடி செய்யும் நிலங்களுக்கு ஏற்ற முறையாகும். இதனால், இறுக்கமான மேல் மண் கிளறி விடப்படுவதால், அதிகமான மழைநீரை நிலம் கிரகித்துச் சேமிக்க ஏதுவாகிறது.
கோரை, அறுகு மற்றும் இதர களைகள் அழியும். மேலும், சில பூச்சிகளின் கூட்டுப் புழுக்கள் மண்ணுக்கு மேலே கொண்டு வரப்பட்டு வெய்யிலால் அழிக்கப்படும்.
இதனால், பயிரில் பூச்சிகளின் தாக்குதல் குறையும். மண்ணின் பௌதிகக் குணங்களும் மேம்படும்.
பண்ணைக் குட்டைகள்: சரிவாக இருக்கும் நிலங்களில் பண்ணைக் குட்டைகள் அமைப்பதன் மூலம் மழைநீரைச் சேமித்து வைத்து, பயிர்கள் வாடும் சூழலில் அவற்றுக்கு அளிக்கலாம்.
பண்ணைக் குட்டைகளை 30 மீட்டர் சதுரத்தில் 1.5 மீட்டர் ஆழத்தில் அமைக்கலாம். தேவை மற்றும் நிலத்தின் அளவைப் பொறுத்து, அளவைக் கூட்டியும் அமைக்கலாம்.
இயற்கை உரங்கள்: இறுக்கமான மண்ணில் இயற்கை உரங்களை இடுவதால், மண் இறுக்கம் தளர்ந்து நல்ல வடிகால் வசதி ஏற்படும். மணற்பாங்கான நிலங்களில் சிறந்த கட்டமைப்பு உருவாகி, நீரைப் பல நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் நிலை ஏற்படும்.
ஊடுபயிர் சாகுபடி: மானாவாரியில் ஊடுபயிர் சாகுபடி செய்வது, பருவமழை சரியாகப் பெய்யா விட்டாலும், ஏதாவது ஒரு பயிர் பலன் தரும் வகையில் அமையும். மக்காச்சோளத்தில் தட்டைப்பயற்றை ஊடுபயிராக இட்டால், மண்ணின் ஈரம் மற்றும் சூரிய ஒளியைச் சீரான முறையில் பயன்படுத்தி அதிக மகசூலைப் பெறலாம்.
ஒருங்கிணைந்த பண்ணையம்: மானாவாரி மக்காச்சோளப் பயிருடன், வேளாண்மை சார்ந்த ஆடு வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, பசு, எருமை வளர்ப்பு, முயல் மற்றும் புறா வளர்ப்பு ஆகியவற்றில் ஏதுவான சில தொழில்களைச் செய்வதன் மூலம் கூடுதல் வருமானத்தை ஈட்ட முடியும்.
முனைவர் வி.அரவிந்த், வேளாண்மை அறிவியல் நிலையம், காரைக்கால். க.திவ்யா, தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரி, பெரம்பலூர். முனைவர் சு.திருமேனிநாதன், வேளாண்மை அறிவியல் நிலையம், மாதூர், ஐதராபாத். முனைவர் நா.சா.சுடர்மணியன், வேளாண்மை அறிவியல் நிலையம், அருப்புக்கோட்டை.
சந்தேகமா? கேளுங்கள்!