சணப்புப் பயிரை, உரப்பயிராக, விதை உற்பத்திக்காக மற்றும் நார்ப் பயிராக சாகுபடி செய்யலாம். சணப்பின் தாவரப் பெயர், குரோட்டலேரியா ஜன்சியா ஆகும்.
குரோட்டலேரியா என்னும் இனப்பயிர், ஆரவாரம் என்று பொருள்படும். மேலும் இது, முதிர்ந்த நெற்றுகளில் விதைகளால் ஏற்படும் சத்தத்தைக் குறிக்கும். இந்தத் தாவர இனங்கள் வெப்ப மண்டல மற்றும் குளிர் பிரதேசங்களில் பரவலாக உள்ளன. சணப்பின் தாயகம் இந்தியா ஆகும்.
தட்ப வெப்ப நிலை
சணப்பு சாகுபடிக்கு, மிதமான வெப்பம், அதாவது, 10 டிகிரி செல்சியசுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். நல்ல சூரிய வெளிச்சம் இருக்க வேண்டும். சணப்பு விதைப் பிடிக்கும் பருவத்தில் மழை இருக்கக் கூடாது.
நிலம் தயாரிப்பு
நிலத்தை, 2-3 முறை, கொக்கிக் கலப்பையால் உழ வேண்டும். பிறகு, ரோட்டவேட்டர் மூலம், மண்ணை புழுதியாக அடிக்க வேண்டும். முளைப்புத் திறனை அதிகரிக்க, விதைகளை விதைக்கும் போது, மண்ணின் ஈரப்பதம் 25-30 சதவீதம் இருத்தல் அவசியம்.
இரகங்கள்
சணப்பில், ADT 1, K 12 கருப்பு, K 12 மஞ்சள், SH 4 (சைலேஸ்), SUNO 53/ SUIN 037 மற்றும் JRJ 610 ஆகிய இரகங்கள் உள்ளன.
விதைப்பு
இவற்றை, அனைத்துப் பருவங்களிலும் விதைக்கலாம். விதை உற்பத்திக்கு, மார்ச், ஏப்ரலில் விதைப்பது நல்லது. எக்டருக்கு 20-25 கிலோ விதைகள் தேவை. எக்டருக்கு 5 பொட்டலம் ரைசோபியம் வீதம் எடுத்து, விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
இடைவெளி
சணப்பு, பல கிளைகளைக் கொண்ட பயிர் என்பதால், வரிசைக்கு வரிசை 45 செ.மீ., செடிக்குச் செடி 20 செ.மீ. இடைவெளியில் விதைத்தால், விதை உற்பத்தி அதிகரிக்கும்.
நீர் மேலாண்மை
பொதுவாக, சணப்பு ஒரு மானாவாரிப் பயிர். எனவே, விதைக்கும் போது, போதுமான ஈரப்பதம் மண்ணில் இருக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று முறை பூக்கும். காய்கள் பிடிக்கும் போதும், காய்கள் முதிர்ச்சி அடையும் போதும், பாசனம் செய்தால் போதும்.
உர மேலாண்மை
சணப்பு, பயறுவகைப் பயிரைச் சார்ந்தது என்பதால், அதிகளவில் உரம் தேவையில்லை. இருப்பினும், அதிக விதை உற்பத்தியைப் பெற, எக்டருக்கு 20 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, 40 கிலோ சாம்பல் சத்தை இட வேண்டும்.
பூச்சி மற்றும் நோய் மேலாண்மை
சணப்புப் பயிரை, பல்வேறு பூச்சி மற்றும் நோய்கள் தாக்கும். குறிப்பாக, காய்த் துளைப்பான் மூலம், 20 சத மகசூல் பாதிக்கும். எனவே, காய்த் துளைப்பானைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. புரோபனோபாஸ் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
விதை உருவாகும் போது, விதைப் பூசணங்கள் தாக்கி, விதைகளின் தரத்தைக் கெடுக்கும். அதாவது, விதையின் நிறம் மாறும், விதை அழுகல் ஏற்படும். இதற்கு, 0.2 சத கார்பென்டசிம் மருந்தைத் தெளிக்க வேண்டும். மொசைக், இலைச்சுருள் மற்றும் சுருட்டு இலை ஆகிய வைரஸ் நோய்கள், சணப்புப் பயிரைத் தாக்கும். வைரஸ் தாக்கிய தாவரப் பாகங்களை எடுத்து அழித்து விட வேண்டும்.
அறுவடை
சணப்பு, 90-110 நாட்களில் அறுவடைக்கு வரும். டிராக்டர் அல்லது தடியால் சணப்புக் காய்களை அடித்து, விதைகளைப் பிரித்து உலர்த்தி, 10 சத ஈரப்பதத்தில் சேமிக்க வேண்டும்.
விதை மகசூல்
சணப்பு விதை மகசூல், இடத்துக்கு இடம், தட்பவெப்ப நிலை மற்றும் பயிர் மேலாண்மையைப் பொறுத்து மாறுபடும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, எக்டருக்கு 800-1,000 கிலோ விதைகள் கிடைக்கும்.
சணப்பின் மற்ற பயன்கள்
சணப்புப் பயிரானது, பொருளாதார நோக்கில், நார் உற்பத்திக்காக, இந்தியா, பிரேசில், மேற்குப் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. சணப்பு நார் மூலம், பல்வேறு பொருள்கள் தயாரிக்கப் படுகின்றன.
எடுத்துக்காட்டு: கம்பளி நூல், சணல், கோணி, கேன்வாஸ், கயிறு, மீன் வலை மற்றும் திசுக் காகிதம். மேலும், சணப்புப் பயிரை, தீவனப் பயிராக, மூடுபயிராக, பசுந்தாள் உரப் பயிராக, நார்ப்பயிராக சாகுபடி செய்யலாம்.
தீவனப்பயிர்
சணப்பை விதைத்து 45 நாட்களில் அறுவடை செய்து, ஆடு, மாடுகளுக்குத் தீவனமாகத் தரலாம். முதல் அறுவடைக்குப் பிறகு, இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் அறுவடையை, 30 நாட்கள் இடைவெளியில் செய்யலாம். விதைத்து 80 நாட்களில், சணப்பு வைக்கோலைத் தயாரிக்கலாம்.
மூடுபயிர்
அதிகப் பசுமையாக வளரும் பயிர்களையே மூடுபயிராகப் பயிர் செய்வது வழக்கம். மாறாக, சணப்புப் பயிரை, குளிர் காலத்தில் மூடுபயிராக சாகுபடி செய்யலாம். இதனால், மண்ணின் தன்மை மாறும். மேலும், மண்ணரிப்பு மற்றும் மண்ணின் நீரைப் பாதுகாக்கும் சணப்பு, தாவரச் சத்துகளின் மறு சுழற்சியாகப் பயன்படும்.
பசுந்தாள் பயிர்
பயிர்களுக்கு வேண்டிய தழைச்சத்தை தருவதில் முக்கியத்துவம் வாய்ந்தவை, பசுந்தாள் உரப் பயிர்கள். இவை, நிலத்தின் தன்மையை மேம்படுத்திப் பாதுகாத்து, சத்துகளை, சுழற்சி முறையில் பயிர்களுக்குக் கிடைக்கச் செய்யும்.
பசுந்தாள் உரப்பயிரும் அதன் அங்ககப் பொருள்களும் மண்ணரிப்பைத் தடுக்கும். பயிர்களைத் தாக்கும் பூச்சி, நோய்களைக் கட்டுப்படுத்த உதவும். மண்வளம் மற்றும் பௌதிகத் தன்மையை மேம்படுத்திப் பாதுகாத்து, பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
மண்ணில் நிலை நிறுத்தி, பயிருக்குக் கிடைக்காத நிலையில் உள்ள மணிச்சத்தை, பயிர்களுக்குக் கிடைக்கச் செய்யும். மண்ணில் உள்ள சத்துகளின் இடப் பெயர்ச்சியை ஊக்குவித்து, பயிர்களுக்கு அதிகளவில் சத்துகளைக் கிடைக்கச் செய்யும்.
தழைச்சத்தை மட்டுமின்றி, மணிச்சத்து, சாம்பல் சத்து போன்ற முக்கியச் சத்துகளை, போரான், மாங்கனீஸ், மயில் துத்தம், துத்தநாகம், இரும்பு, மாலிப்டினம், சுண்ணாம்பு, சிலிக்கான் ஆகிய நுண் சத்துகளை, மண்ணுக்குத் தரும்.
மண்ணின் ஈரத்தன்மை மற்றும் நுண்ணுயிர்கள் வளர்ச்சியை ஊக்குவித்து, மண்வளத்தைப் பெருக்கும். களர் மற்றும் உவர் மண்ணைச் சீர்திருத்தம் செய்யும். செயற்கை உரங்களை இடுவதால் ஏற்படும் சிக்கல்களை, பசுந்தாள் உரங்கள் சரி செய்யும்.
உலர் நிலையில் உள்ள சணப்புப் பயிரில், தழைச்சத்து 2.30 சதம், மணிச்சத்து 0.5 சதம், சாம்பல் சத்து 1.80 சதம் இருக்கும். ஒரு எக்டர் சணப்புப் பயிரை, பசுந்தாளாக மண்ணில் மடக்கி உழுதால், 25-30 டன் இயற்கை உரம் கிடைக்கும்.
சணப்பை விதைத்த 45-50 நாட்களில் வயல்களில் மடக்கி உழ வேண்டும். இதனால், மண்ணில் உள்ள கரிமச் சத்தின் அளவு 15.5 சதவீதம் கூடும், மண்ணுக்கு 130 கிலோ தழைச்சத்துக் கிடைக்கும்.
நார்ப்பயிர்
நாருக்காகச் சணப்பைப் பயிரிட்டால், இயற்கையில் கிடைக்கும் நார் உற்பத்தி அதிகரிக்கும். இந்த நார் பல்வேறு நிலைகளில் பயன்படும். சணப்பை விதைத்து 80-90 நாட்கள் கழித்து அறுவடை செய்தால், தரமான நாரைப் பிரித்து எடுக்கலாம்.
ஒரு எக்டர் சணப்பில் இருந்து 800-1,000 கிலோ நார் கிடைக்கும். ஒரு கிலோ சணப்பு நார் ரூ.60-க்கு விற்கப்படுகிறது. எனவே, ஒரு எக்டரில் நாருக்காகச் சணப்பைப் பயிரிட்டால், ரூ.48,000 முதல் ரூ.60,000 வரை வருமானம் கிடைக்கும். உற்பத்திச் செலவு மிகவும் குறைவு. ஒரு எக்டருக்கு ரூ.10,000 மட்டுமே ஆகும்.
முனைவர் த.பார்த்திபன், முனைவர் ம.ப.மனோன்மணி, முனைவர் அ.இராமநாதன், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், காட்டுத்தோட்டம், தஞ்சாவூர்.
சந்தேகமா? கேளுங்கள்!