My page - topic 1, topic 2, topic 3

அதிக வருமானம் தரும் ஆமணக்கு சாகுபடி!

மணக்கு, முக்கியமான எண்ணெய் வித்துப் பயிராகும். காரணம், எளிய சாகுபடி முறைகள், வறட்சியைத் தாங்கி வளரும் பண்பு மற்றும் மற்ற பயிர்களுடன் சூழ்நிலைக்கு ஏற்ப வளரும் தன்மை ஆகியன ஆகும். எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் ஆமணக்கு 3.44 சதத்தை மட்டுமே வகித்தாலும், எண்ணெய்ச் சந்தையில் முதன்மையான இடத்தை வகிக்கிறது.

உலகளவில் ஆமணக்கு உற்பத்தி, உற்பத்தித் திறன் மற்றும் வணிகத்தில் இந்தியா முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. ஆமணக்கு எண்ணெய் மற்றும் இதர பொருள்களை ஏற்றமதி செய்வதன் மூலம், ரூ.5,000 கோடி அந்நியச் செலாவணியாகக் கிடைப்பதால், விவசாயப் பொருளாதாரத்தில் ஆமணக்கு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. தொழில் துறையில் அதிகளவில் பயன்படுவதால், உலகளவில் ஆமணக்கு எண்ணெய்த் தேவை அதிகரித்து வருகிறது.

தற்போது விவசாயிகள் ஆமணக்கு சாகுபடியில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய விவசாயிகள் ஆமணக்கு சாகுபடியில் மேலும் கூடுதல் மகசூலைப் பெறுவதற்கான உத்திகளைக் கையாள வேண்டும்.

மண் மற்றும் தட்பவெப்ப நிலை

நல்ல ஆழமான, வடிகால் வசதியுடன் கூடிய கார அமிலத் தன்மையற்ற வண்டல், செம்மண் நிலங்கள் மிகவும் உகந்தவை. வெப்பநிலை 20 முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை இருந்தால், நல்ல பலன் கிடைக்கும். வெப்பநிலை அதிகமானால், ஆண் பூக்கள் அதிகமாகத் தோன்றி, விளைச்சல் குறையும். ஆண்டுக்கு 750 மி.மீ. மழை பெய்தால் நல்லது. நீர்த் தேங்கி நிற்கும் நிலத்தில், ஆமணக்கு சாகுபடியைத் தவிர்க்க வேண்டும்.

உழவும் விதைப்பும்

பருவமழை பெய்ததும் நிலத்தை நன்கு உழ வேண்டும். செம்மண் பகுதிகளில் கோடைக் காலத்தில் உளிக்கலப்பை மூலம் ஆழமாக உழ வேண்டும். இதனால், நிலத்தின் மேல்மண் மற்றும் அடிமண் இறுக்கம் தளரும். பயிர் வேர்கள் நன்றாக ஊடுருவிச் செல்லும். களைகள் கட்டுப்படும். பூசண நச்சுயிரிகள் மற்றும் கூட்டுப் புழுக்கள் அழியும். இந்தக் கோடை உழவைத் தொடர்ந்து, அடுத்த மழையின் போது, 2-3 முறை, குறுக்குச் சால் மேற்கொள்வது அவசியமாகும்.

விதைக்கும் காலம்

பயிர்கள் நன்றாக வளரவும், அதிகமான மகசூலுக்கும், சரியான நேரத்தில் விதைப்பது மிகவும் முக்கியம். மானாவாரி சாகுபடியில் ஆடிப் பட்டமும், இறவைக்கு வைகாசி, கார்த்திகைப் பட்டமும் உகந்தவை. மேலும், மானாவாரி சாகுபடியில், பருவமழை தாமதமானால், ஆடி மாதத்துக்குப் பிறகு வேறு பயிர்களைப் பயிரிடுவது உகந்ததாக இருக்காது. இந்த நேரத்தில், இடைக்கால மற்றும் அவசரக்காலப் பயிராக ஆமணக்கைத் தேர்வு செய்து, ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை விதைத்து நல்ல பயனைப் பெறலாம்.

தரமான விதைகள்

ஆமணக்கில் அதிக மகசூலைப் பெற, தரமான சான்று விதைகளைத் தான் பயன்படுத்த வேண்டும். கலப்பின விதைகள் எனில், எக்டருக்கு 5 கிலோ விதைகளும், மற்ற இரகங்கள் எனில், எக்டருக்கு 8-10 கிலோ விதைகளும் தேவைப்படும்.

விதை நேர்த்தியும் விதைப்பும்

விதைகளின் முளைப்புத் திறன் மற்றும் வீரியத்தைக் கூட்டவும், பூச்சி மற்றும் பூசணங்களில் இருந்து விதைகளைக் காக்கவும், பல்வேறு விதை நேர்த்தி முறைகள் உள்ளன. ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டாசிம் வீதம் கலந்து 24 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும். அல்லது ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடர்மா வீதம் கலந்து விதை நேர்த்தி செய்தும் விதைக்கலாம்.

மேலும், 200 கிராம் அளவுள்ள மூன்று பொட்டலம் அசோஸ்பயிரில்லம் மற்றும் அதே அளவுள்ள மூன்று பொட்டலம் பாஸ்போபாக்டீரியா அல்லது ஆறு பொட்டலம் அசோபாசை, ஆறிய அரிசிக் கஞ்சியில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். பிறகு, இந்த விதைகளை 15 நிமிடம் நிழலில் உலர்த்தி உடனடியாக விதைக்க வேண்டும். இதனால், விதை முளைப்பும் பயிர் வளர்ச்சியும் ஊக்குவிக்கப்படும். பயிர் எண்ணிக்கை சரியாக அமைந்து அதிக விளைச்சல் கிடைக்க ஏதுவாகும்.

பயிர் இடைவெளியும் பராமரிப்பும்

ஆமணக்கில் விதை உற்பத்தியைப் பெருக்க, பயிர் எண்ணிக்கையைச் சரியாகப் பராமரித்தல், செலவில்லாத மற்றும் முக்கியமான தொழில் நுட்பமாகும். இந்த எண்ணிக்கை, வீரிய ஒட்டு இரகம், சுற்றுச்சூழல் மற்றும் உழவியல் நுட்பங்களைச் சார்ந்து மாறுபடும். ஏனெனில், சுற்றுச்சூழல் காரணிகள் அடிக்கடி மாறுபடும் தன்மை மிக்கவை. ஆகவே, ஒரே அளவிலான பயிர் இடைவெளி அனைத்து இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு இரகங்களுக்குப் பொருந்தாது. எனவே, கீழ்க்கண்ட இடைவெளிகளில் பயிரிட வேண்டும்.

YRCH1 : மானாவாரி: 120×90 செ.மீ.
YRCH1 : இறவை: 150×120 செ.மீ.
YRCH2: மானாவாரி: 150×120 செ.மீ.
YRCH2: இறவை: 180×150 செ.மீ.

பயிர் இடைவெளி குறைவாக இருந்தால், பயிர் நெருக்கம் ஏற்பட்டு, செடிகள் உயரமாக வளர்ந்து சாய்ந்து விடும். பயிர் இடைவெளி அதிகமாக இருந்தால், களைகளின் தாக்கம் அதிகமாகும். செடிகளின் பூக்கும் காலம் தாமதமாகும். பக்கக் கிளைகள் அதிகமாகத் தோன்றும்.

எனவே, பயிர் எண்ணிக்கை சரியாக இருக்க, ஒரு குத்துக்கு இரண்டு விதைகள் வீதம் ஊன்ற வேண்டும். விதைத்து 10 நாட்களுக்குப் பிறகு, முளைத்த இரண்டு செடிகளில் பலவீனமான செடியைப் பிடுங்கி விட்டு, தரமான செடியைப் பராமரிக்க வேண்டும்.

களை மேலாண்மை்

விதைத்த மூன்று நாட்களுக்குள் ஏக்கருக்கு 1,300 மி.லி. பென்டிமெத்தலின் அல்லது புளுளோகுரலின் களைக்கொல்லி வீதம் எடுத்து, 200 லிட்டர் நீரில் கலந்து விசிறித் தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். இந்தக் களைக்கொல்லியை 50 கிலோ மணலில் நன்றாகக் கலந்தும் விதைத்து விடலாம். அப்போது மண்ணில் போதுமான ஈரப்பதம் இருக்க வேண்டும்.

இந்தக் களைக்கொல்லி மூலம், அனைத்துப் புல் வகைகளைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தலாம். ஆனால், கோரை மற்றும் சில அகன்ற இலைக் களைகள் கட்டுப்படாது. எனவே, இவற்றைக் கட்டுப்படுத்த, விதைத்து 25-30 நாளில், குளோரிமுரான் ஈதைல் என்னும் களைக்கொல்லியைத் தெளிக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைத்ததும் முளைப்பு நீரும், மூன்றாம் நாள் உயிர் நீரும் அவசியமாகும். பிறகு, காலநிலை மற்றும் மண்வாகைப் பொறுத்து, 10-15 நாட்களுக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். பயிரின் எல்லா நிலைகளிலும் நீர்த் தேங்காமல் இருக்க வேண்டும். வறட்சிக் காலத்தில் நீர் ஆவியாவதைத் தடுக்க மற்றும் காயாமல் இருக்க, மழை பெய்ததும், தாள் கலப்பை மூலம், மண்ணை நன்கு கிளறி விட வேண்டும்.

பூக்கும் போதும் காய்கள் பிடிக்கும் போதும் வறட்சி ஏற்பட்டால், ஏக்கருக்கு 15 கிலோ யூரியா, 10 கிலோ பொட்டாஷ் வீதம் எடுத்து நிலத்தில் இட வேண்டும். இதனால், வறட்சிக்குப் பிறகு தோன்றும் குலைகளில் மணிகள் திரட்சியாக உருவாகி, நல்ல மகசூல் கிடைக்கும்.

சத்து மேலாண்மை

ஏக்கருக்கு 5 டன் தொழுவுரம் அல்லது மட்கிய தென்னை நார்க்கழிவு வீதம் இட்டு உழ வேண்டும். கடைசி உழவின் போது, ஏக்கருக்கு 12 கிலோ கந்தகத்தை, ஜிப்சம் மூலம் இட்டால் அதிக மகசூலைப் பெறலாம்.

மேலும், மானாவாரியில் பயிரிடும் இரகங்களுக்கு, 39 கிலோ யூரியா, 37.5 கிலோ சூப்பர், 10 கிலோ பொட்டாஷ் தேவைப்படும்.

மானாவாரியில் பயிரிடும் வீரிய ஒட்டு இரகங்களுக்கு, 52 கிலோ யூரியா, 75 கிலோ சூப்பர், 20 கிலோ பொட்டாஷ் தேவைப்படும்.

இறவையில் பயிரிடும் இரகங்களுக்கு, 52 கிலோ யூரியா, 75 கிலோ சூப்பர், 20 கிலோ பொட்டாஷ் தேவைப்படும்.

இறவையில் பயிரிடும் வீரிய ஒட்டு இரகங்களுக்கு, 78 கிலோ யூரியா, 112.5 கிலோ சூப்பர், 30 கிலோ பொட்டாஷ் தேவைப்படும்.

இடும் முறை

மண்ணாய்வு முடிவின்படி உரமிட வேண்டும். அல்லது பொதுவான பரிந்துரையைப் பின்பற்ற வேண்டும். மானாவாரி சாகுபடியில், நூறு சதம் மணிச்சத்து, 50 சதம் தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்தை அடியுரமாக இட வேண்டும். மீதியுள்ள தழை மற்றும் சாம்பல் சத்தை, ஈரம் இருக்கும் போது 1-2 தடவை மேலுரமாக இட வேண்டும்.

இறவையில், 100 சதம் மணிச்சத்து, 50 சதம் தழை மற்றும் சாம்பல் சத்தை அடியுரமாக இட வேண்டும். மீதமுள்ள 50 சதம் தழை மற்றும் சாம்பல் சத்தை, இரண்டு பாகங்களாகப் பிரித்து, விதைத்த 30 மற்றும் 60 நாளில் இட வேண்டும்.

மண்ணில் துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்துப் பற்றாக்குறை இருந்தால், ஏக்கருக்கு 5 கிலோ துத்தநாக சல்பேட், 10 கிலோ பெர்ரஸ் சல்பேட் வீதம் இட வேண்டும். சுண்ணாம்பு இல்லாத மண்ணில் பயிருக்குக் கிடைக்கும் துத்தநாகம் < 1.2 பி.பி.எம். ஆகும். இரும்பு < 3.7 பி.பி.எம். ஆகும். சுண்ணாம்பு மண்ணில் பயிருக்குக் கிடைக்கும் இரும்பு < 6.3 பி.பி.எம். ஆகும்.

த.வே.ப.க. ஆமணக்கு நுண்ணுரக் கலவை

மண் பரிசோதனை செய்யாத நிலையில், ஏக்கருக்கு 6 கிலோ தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக ஆமணக்கு நுண்ணுரம் மற்றும் 60 கிலோ தொழுவுரம் வீதம் எடுத்துக் கலந்து, ஒரு மாதம் நிழலில் வைத்திருந்து மண்ணில் இட வேண்டும்.

அறுவடையும் மகசூலும்

வீரிய ஒட்டு ஆமணக்கு இரகம், பல கிளைகளை விடும் தன்மை மிக்கது. இச்செடி, 4-5 தொடர் வரிசை முறையில், ஒருமாத இடைவெளியில், காய்க் குலைகளை 6 மாதங்கள் வரை உற்பத்தி செய்யும். அறுவடைக் காலமானது இரகத்துக்கு இரகம் மாறுபடும். பெரும்பாலான வீரிய ஒட்டு இரகங்களில் 150-170 நாட்களில் அறுவடை முடிந்து விடும்.

முதல் அறுவடையை, விதைத்த 90 நாட்களிலும், இரண்டாம் அறுவடையை 120 நாட்களிலும், கடைசி அறுவடையை 150 நாட்களிலும் செய்யலாம். இதைப்போல, குறுகிய மற்றும் நடுத்தர வயதுள்ள செடியில் மூன்று முறை, நீண்ட காலப் பயிர்களில் 4-5 முறை அறுவடை செய்யலாம்.

முதிர்ச்சி அடையாத காய்களை அறுவடை செய்யக் கூடாது. ஏனெனில், இதில் எண்ணெய்ச் சத்தும், விதையின் எடையும் குறைவாக இருக்கும். இதனால், பெரியளவில் வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

குலையில் 1-2 காய்கள் நன்றாக முதிர்ந்த நிலையில் இருந்தால், அதாவது, காய்கள் பழுப்பு நிறமாக இருந்தால், ஒரு குலை அறுவடைக்குத் தயார் எனத் தெரிந்து கொள்ளலாம். இதையடுத்து, முழுக் குலையையும் அறுத்து எடுத்து வெய்யிலில் மூன்று நாட்கள் உலர்த்தி, காய் உடைப்புக் கருவி மூலம் விதைகளைப் பிரிக்கலாம்.

விளைச்சல்

இதுவரை கூறிய உழவியல் தொழில் நுட்பங்களைக் கையாண்டால், மானாவாரியில் ஏக்கருக்கு 1,000 கிலோ வரையிலும், இறவையில் 1,500 கிலோ வரையிலும் மகசூல் கிடைக்கும். மேலும், வீரிய ஒட்டு ஆமணக்கு விதைகளைப் பெறுவதற்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், ஏத்தாப்பூர், சேலம் – 636 119 என்னும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: 04282 – 299731.


முனைவர் பெ.வீரமணி, முனைவர் ச.ரா.வெங்கடாசலம், முனைவர் ப.அருட்செந்தில், மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், ஏத்தாப்பூர், சேலம் – 636 119.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks