My page - topic 1, topic 2, topic 3

சோற்றுக் கற்றாழை சாகுபடி!

ற்றாழை பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த பேரினமாகும். லில்லியேசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த கற்றாழையின் தாயகம் ஆப்பிரிக்கா. தமிழில் இந்தத் தாவரம், கற்றாழை, கத்தாழை, குமரி, கன்னி என அழைக்கப் படுகிறது.

இது, ஆற்றங்கரை, சதுப்பு நிலம், தோட்டக்கால் ஆகிய இடங்களில் வளரும். நுனியில் பெரும்பாலும் சிறு முட்கள் இருக்கும். மடல், வேர் ஆகியன மருத்துவப் பயனுள்ளவை. அழகுப் பொருள்கள் தயாரிப்பில் கற்றாழை பெருமளவில் பயன்படுகிறது.

கிரேக்கம், பார்படோ தீவுகள், சீனா, இத்தாலி, வெனிசுலா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளம் ஆகிய நாடுகளில் இயற்கையாக வளர்கிறது.

ஆப்பிரிக்காவில் அதிகமாக வளர்கிறது. இது, தென்னாப்பிரிக்க கேப் மாநிலம், ஆப்பிரிக்க வெப்ப மண்டலப் பகுதியிலுள்ள மலைகள், ஆப்பிரிக்க தீவுகள், அராபிய தீபகற்பம், மடகாஸ்கர் போன்ற பகுதிகளிலும் காணப்படுகிறது.

இந்தியாவில், இராஜஸ்தானில் உள்ள ஆழ்வார், ஆந்திரத்தில் உள்ள சட்நாபள்ளி, குஜராத்தில் உள்ள இராஜபிப்லா, தமிழ்நாட்டில் சேலம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் சாகுபடி செய்யப் படுகிறது.

அமைப்பு

பெரும்பாலான கற்றாழை இனங்களுக்கு ரோஜா இதழ்கள் போன்ற பெரிய அமைப்பும், தடித்த சதையுள்ள மடல்களும் இருக்கும். மேலும், தண்டுகள் இல்லாமல் காணப்படும்.

இது, தரையிலிருந்து நேரடியாக ரோஜா இதழ் அமைப்பில் வளரும். மற்ற வகைகளில் கிளைகளுடன் கூடிய அல்லது கிளைகள் இல்லாத தண்டு இருக்கலாம்.

இதில், சதையுள்ள மடல்கள் இருக்கலாம். அவை சாம்பல் நிறத்திலிருந்து கரும் பச்சை வரை நிறத்தில் வேறுபடும். சில நேரங்களில் அவை ஒரே நிறத்தில் அல்லது பல நிறங்களில் இருக்கலாம்.

தென்னாப்பிரிக்க நாட்டில் வளரும் சிலவகைக் சோற்றுக் கற்றாழைகள் மரங்களைப் போல இருக்கும்.

இது, வறட்சியான சூழ்நிலையில் கடல் மட்டத்தில் இருந்து 1,000 அடி உயரம் வரையுள்ள மலைப் பகுதிகளில் வளர்கிறது. இதன் மடல்கள் தடித்து, சிறிது சிவப்புக் கலந்த பச்சை நிறத்தில் 30-60 செ.மீ. நீளத்தில், சிறிய முட்களுடன் இருக்கும்.

கற்றாழைப் பூக்கள் குழாய் வடிவத்தில், மஞ்சள், இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில், அடர்த்தியான கொத்துகளாக, சாதாரணமாக அல்லது கிளைகளுடன் இலையில்லாத தண்டுகளாக இருக்கும்.

எப்போதும் வாடாத பெரணி வகையைச் சார்ந்த இத்தாவரம், வெப்பப் பகுதிகளில் வயல் வரப்புகளில், உயரமான பகுதிகளில் வேலிகளில் வளரும். சதைப்பற்றும், நீர்ச்சத்தும் மிகுந்த இக்குறுஞ்செடி, பல பருவங்களில் வாழும் தன்மை மிக்கது.

வகைகள்

கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெருங் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழை எனப் பல வகைகள் உண்டு.

இவற்றில், சோற்றுக் கற்றாழை மருத்துவத்தில் பயன்படுகிறது. மடல் சாற்றில் ஆந்த்ரோ குயினோன்கள், ரெசின்கள், பாலி சாக்கரைடு, ஆலோக்டின்பி என்னும் வேதிப் பொருள்கள் உள்ளன.

கற்றாழையில் இருந்து வடிக்கப்படும் மஞ்சள் திரவம் மூசாம்பரம் எனப்படுகிறது. தளிர்ப் பச்சை, இளம் பச்சை, கரும் பச்சை எனவுள்ள பலவிதச் சோற்றுக் கற்றாழைகளில், முதிர்ந்த கற்றாழையில் தான் மருத்துவக் குணம் மிகுந்துள்ளது.

ஏ.பி.ஜி 111 முறைமையில் (2009) இவ்வகைத் தாவர இனத்தைச் சார்ந்த அந்தோறியேசியே குடும்பத்தின் ஆஸ்போடெலீசி என்னும் துணைக் குடும்பப் பிரிவில் வைத்தது.

கடந்த காலத்தில் இவ்வகைத் தாவரம், அலோசி குடும்பங்கள் மற்றும் லில்லியேசீயே அல்லது லில்லி குடும்பத்தில் இணைக்கப் பட்டிருந்தது.

காஸ்டீரியா, ஹாவார்தியா மற்றும் நிஃபோஃபியா போன்ற இனங்களுடன் மிகவும் நெருக்கமாக ஒத்துப் போகும் தாவர இனங்களுக்கு இதைப் போன்ற வளர்ச்சி இருக்கும்.

இந்த இனங்களும் சோற்றுக் கற்றாழைகள் என்றே அழைக்கப் படுகின்றன. இவ்வகைத் தாவரம், சில நேரங்களில் அமெரிக்க கற்றாழை என்றும் அழைக்கப் படுகிறது. இது, அஸ்பரகேசியே என்னும் வேறொரு குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.

சாகுபடியிலுள்ள கற்றாழை வகைகள்

கற்றாழையில் மூன்று வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. அவையாவன: குர்குவா கற்றாழை, கேப் கற்றாழை, சாகோட்ரின் கற்றாழை.

இவற்றில், முதல் இரண்டு வகைகள், பார்பலோயின் மற்றும் அலோ எமோடின் ஆகிய வேதிப் பொருள்களுக்கு என வளர்க்கப் படுகின்றன.

இவற்றின் கூழில் தயாராகும் முசபார் என்னும் மருந்து, வலியைப் போக்கப் பயன்படுகிறது. கேப் கற்றாழை, கால்நடை மருத்துவத்தில் பயன்படுகிறது. ஜான்சிபார் கற்றாழை, யுகான்டா கற்றாழை, நேட்டல் கற்றாழை, ஜஃபராபாத் கற்றாழை ஆகியன தரமானவை.

அடங்கியுள்ள பொருள்கள்

அலாய்ன் என்னும் வேதிப் பொருள் அலோ வீராவில் 50%, அலோ பெரியில் 25-28% அலோ பெராக்சில் 10% உள்ளது.

இந்த அலாய்னில் தான் பார்பலின், பென்டோசைட்ஸ், ரெசின், சப்போனின் போன்றவை உள்ளன.

மேலும், சோற்றுக் கற்றாழைச் சாற்றில் ஆந்த்ரோ குயினோன், குயினோன்கள் ஆகிய நிறமேற்றிகள் உள்ளன.

சோற்றுக் கற்றாழை மடல் கூழிலிருந்து பெறப்படும் பானத்தில், கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம், மாங்கனீசு போன்ற சத்துகள் உள்ளன. மேலும், அலோ கூழ்மத்தில் வைட்டமின் ஏ, பி1, பி2, பாலி சாக்கரைடுகள், யூரிக் அமிலம் போன்றவை உள்ளன.

பயன்கள்

வறட்சிப் பகுதிகளில் வளர்ப்பதற்கு ஏற்ற மருந்துச் செடி. அழகுக்கான மருந்துப் பொருள்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது.

கற்றாழை ஜெல் எனப்படும் கூழ், சரும ஈரத் தன்மையைப் பாதுகாக்க உதவுகிறது. கற்றாழையைச் சேகரித்துப் பதப்படுத்தி வைத்து, தேவைப்படும் போது பயன்படுத்த முடியும்.

இருப்பினும் தரம் வாய்ந்த கற்றாழைக் கூழை எடுப்பதற்கு, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், குர்குவா தீவுகள், இந்தியா ஆகிய நாடுகளில் வணிக நோக்கில் பயிரிடப்படுகிறது.

அழகுப் பொருள்கள் தயாரிப்பு

கற்றாழை மடலிலிருந்து எடுக்கப்படும் கூழானது, சூரிய ஒளியுடன் கலந்து வந்து கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா, எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளில் இருந்து சருமத்தைக் காக்கிறது.

மேலும், சருமத்தின் ஈரத் தன்மையைக் காத்து, சரும நிறத்தை மேம்படுத்துகிறது. இதனால், இந்தக் கூழ், உலகெங்கிலும் சருமப் பராமரிப்பு, சவரம் செய்வதற்கான கூழ்மங்கள், ஷாம்பூ ஆகியவற்றில் சேர்க்கப் படுகிறது. இது, சிறப்பு வாய்ந்த சோப்புகள் தயாரிப்பிலும் பயன் படுகிறது.

மருத்துவப் பயன்கள்

கற்றாழை மருந்தாகப் பயன்படுவதை, கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் கண்டறிந்த ஆப்பிரிக்கர்கள், அதை உலகத்துக்கு அறியப் படுத்தினர். கற்றாழை மடலில் அலோயின், அலோசோன் போன்ற வேதிப் பொருள்கள் உள்ளன. 4-25% வரையில் அலோயின் உள்ளது.

சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச் சாறு, இருமல், சளி, குடற்புண், கடும் வயிற்றுப் புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு, வெட்டுக் காயம் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

அலங்காரச் செடிகள்

கற்றாழை இனங்கள் மிகவும் அழகாகவும், அலங்காரச் செடிகளைப் போலவும் இருக்கும். எனவே, வீடுகளில், தோட்டங்களில் அலங்காரச் செடிகளாக வளர்க்கப் படுகின்றன. சதைப் பற்றுள்ள தாவரங்களைச் சேகரிப்போர்க்கு, இது, மிகவும் மதிப்பு வாய்ந்த தாவரமாக இருக்கும்.

பயிரிடும் முறை

பயிரிட்டு இரண்டாம் ஆண்டில் தான் பூக்கும். ஆனால், பூக்களில் மகரந்தம் செயலிழந்து இருப்பதால் காயோ விதையோ பிடிப்பதில்லை.

எனவே, கற்றாழையைப் பக்கக் கன்றுகள் மூலமாகத் தான் பெருக்கம் செய்ய வேண்டும்.

மடலில் 80-90% நீர் உள்ளதால் விரைவாகக் கெட்டு விடும். இதனால், அறுவடை செய்ததும் மடல்களைப் பக்குவப்படுத்தி, கூழைப் பிரித்தெடுக்க வேண்டும்.

கற்றாழைக் கூழின் நன்மைகள்

கற்றாழையில் சருமத்துக்கான நன்மைகள் நிறைய உள்ளன. கூந்தலுக்கும் பெரிதும் உதவும்.

முகப்பருவை நீக்கும் சிறந்த பொருள் கற்றாழை தான். இதில், நிறைந்துள்ள ஆன்ட்டி மைக்ரோபியல், ஆன்ட்டி பாக்டீரியல் ஆகியன, பாக்டீரிய கிருமிகளை அழித்து, முகப் பருவையும் வடுக்களையும் நீக்கும்.

கற்றாழையைத் தினமும் முகத்தில் தடவி வந்தால், முகம் பட்டுப் போல மாறி விடும். கற்றாழைக் கூழைத் தடவி வந்தால், வறட்சியான முகம் ஈரப் பசையுடன் மென்மையாகும்.

குறிப்பாக முக ஒப்பனை செய்ய விரும்பும் பெண்கள், கற்றாழைக் கூழை முகத்தில் தடவி ஊற வைத்துக் கழுவி விட்டு, ஒப்பனை செய்தால் நன்றாக இருக்கும்.

முகச்சவரம் செய்த பிறகு அரிப்பு ஏதும் நேராமலிருக்க, இரசாயனம் கலந்த களிம்பைத் தடவுவதற்குப் பதிலாக, கற்றாழைக் கூழைத் தடவி, முகத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கலாம்.

உடலில் இருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்கை நீக்குவது மிகவும் கடினம். ஆனால், கற்றாழையை வைத்து, மார்க் உள்ள இடத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், இது லேசாக மறையத் தொடங்கும். பொதுவாக இது, உடல் எடை அதிகரிப்பது அல்லது கர்ப்பக் காலத்தில் ஏற்படும்.

இளமையிலேயே முதுமைத் தோற்றத்தில் இருப்பவர்கள், கற்றாழைக் கூழை முகத்தில் தடவி வரலாம். இதனால், தளர்ந்த சருமம் இறுக்கமாகி இளமைத் தோற்றத்தைத் தரும்.

மேலும், இந்தக் கூழிலுள்ள வைட்டமின்கள் சி, ஈ, சருமம் எப்போதும் ஈரப் பசையுடன் இருக்க உதவும்.

சூரியக் கதிர்கள் படுவதால் சருமம் கருக்கும்; கரும் புள்ளிகள் உண்டாகும்; சருமப் பழுப்பும் ஏற்படும். தொடர்ந்து வெய்யில் பட்டால், தோல் புற்றுநோயும் வரலாம்.

இவற்றைத் தடுக்க, வெளியே செல்லும் போது, ஏதேனும் ஒரு மேற்பூச்சைத் தடவிக் கொண்டு செல்வதற்குப் பதிலாக, கற்றாழைக் கூழைத் தடவினால் மிகவும் சிறப்பாக இருக்கும்.


முனைவர் மு.சியாமளா, முனைவர் சி.சுபா, தோட்டக்கலைக் கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் 641 003.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks