செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர்.
பழப் பயிர்கள், அடர்ந்து வளரும் பயிர்கள் ஆகியவற்றில் கூடுதலான வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதைப் போல, காய்கறிப் பயிர்களின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்தி மகசூலைப் பெருக்க முடியும். வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவது என்பது, செடிகளைச் சரியான முறையில் வடிவமைப்பது மற்றும் கவாத்து செய்வதன் மூலம் சாத்தியப்படும். அதைப் பற்றி இங்கே காணலாம்.
வடிவமைத்தல்
செடிகளைச் சிறந்த வடிவத்துக்குக் கொண்டு வருவதை, கட்டி வைப்பது, குச்சிக் கட்டுவது, பந்தலில் வளர்ப்பது, ஒரு வடிவத்தில் இருக்கும்படி வெட்டுவது, தூணில் இணைப்பது போன்றவற்றின் மூலம் செயல்படுத்தலாம்.
கவாத்து செய்தல்
வேண்டாத கிளைகள், பூச்சி, நோய் தாக்கிய பகுதிகள், குறுக்கு நெடுக்காக வளர்ந்த கிளைகள் மற்றும் அதிகமான கிளைகளை வெட்டி நீக்குதல் போன்றவற்றைக் கவாத்து மூலம் செய்யலாம்.
பயன்கள்
இவ்விதம் செடிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தினால், செடிகள் நன்கு படர்ந்து திடமாக வளரும். இதனால், அதிகப்படியான காய்ப்பிடிப்பையும் தாங்கி, கிளைகள் உடையாமல் வளரும். சூரிய வெப்பம் நன்றாகக் கிடைப்பதால் பூச்சி, நோய்த் தாக்குதல் குறையும். மேலும், அறுவடை செய்தல், மருந்தடித்தல் போன்ற சாகுபடி வேலைகளை எளிதாகச் செய்ய முடியும். செடியின் வளர்ச்சியும், காய்ப்புத் திறனும் நடுநிலைப்படும். செடிகள் வளமாகவும் நீண்ட நாட்கள் காய்ப்புடனும் இருக்கும்.
தீமைகள்
வேலையாட்கள் அதிகமாகத் தேவைப்படும். உபகரணங்களை வாங்கும் செலவு கூடும். செடிகளின் வெட்டப்பட்ட பகுதிகள் மூலம் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூசண நோய்கள் பரவும். நன்கு தேர்ச்சிப் பெற்றவரே சரியான முறையில் செய்ய முடியும்.
பழ மரங்களை வடிவமைப்பதன் அவசியம்
நடவின் போது செடிகளைச் சரியாக வடிவமைப்பதால், செடியின் வளர்ச்சிக் காலத்தில் வடிவமைப்பதன் அளவு குறையும். கவாத்து செய்வதால் மரத்தின் வளர்ச்சி அதிகரிக்கும். இந்தப் புதிய வளர்ச்சி, பழ மொக்குகள் உருவாக ஏதுவாகும். பழ மரங்களுக்குத் தகுந்தவாறு மொக்குகள் உருவாவது மாறுபடும்.
வடிவமைத்தல், கவாத்து செய்வதில் தொழில் நுணுக்கம்
கவாத்து செய்தல்: மரத்தின் தாழ்ந்த கிளைகள், குறுக்கும், நெடுக்குமாக ஒன்றின் மேல் ஒன்றாக இருக்கும் கிளைகள், நோய் தாக்கிய மற்றும் மெல்லிய, பட்டுப்போன கிளைகள் ஆகியவற்றை முதலில் நீக்க வேண்டும். இதனால் சூரிய வெளிச்சம் உள்ளேயுள்ள இலைகளுக்குக் கிடைக்கும். கவாத்து செய்வதன் நோக்கம், தரமான செடிகளை உருவாக்குவது, பழங்கள் மற்றும் பூக்களின் தரத்தை உயர்த்துவது மற்றும் மகசூலைக் கூட்டுவது ஆகும்.
செடிகளை வடிவமைத்தல்: ஒரு செடியைக் கம்பத்தில் கட்டியோ, முளையடித்து நிறுத்தியோ அல்லது செடி கொடிகளுக்குக் கொளுத்தட்டி அமைத்தோ, தேவையில்லாத, நோய் தாக்கிய கிளைகளை நறுக்கி எடுக்க வேண்டும்.
கொளுத்தட்டியின் (Trellises) நன்மைகள்: பயிர்களில் ஏற்படும் நோய்களை எளிதாகக் கட்டுப்படுத்தலாம். சிறந்த முறையில் பயிர்களைப் பராமரிக்கலாம். பழங்களின் தரத்தைக் கூட்டலாம். வழக்கத்தை விட கூடுதல் மகசூலை எடுக்கலாம். செடிகளின் கொழுந்துகளைக் கிள்ளி விடுவதால், பக்கவாட்டுக் கிளைகளும், பக்கக் குருத்துகளும் உருவாகும்.
பூசணிக்கொடி வகைகளில் வடிவமைத்தல், கவாத்து செய்தல்
பாகல், பீர்க்கன், புடல், சுரை, முலாம் கொடிகளில் முறையாகக் கவாத்து செய்வது மிகவும் அவசியம். இதனால், காய்கள் பிடிக்கும் கிளைகள் திடமாக இருக்கும். இந்தக் கொடி வகைகள், பந்தலைத் தொடும் வரை ஒரே கொடியாக மேலே ஏற்றி, பிறகு, பக்கக் கிளைகளைப் பரப்பி விடுவதன் மூலம், திடமான காய்கள் எல்லாக் கணுக்களிலும் வர ஏதுவாகும்.
காய், பழம் உருவாதல் மற்றும் செடி வளர்ச்சியில், கவாத்து செய்தல் முக்கியப் பங்கு வகிக்கிறது. கவாத்து செய்வதால் சராசரியாக, காய், பழத்தின் எடை கூடும். தரமற்ற காய், பழத்தின் அளவு குறையும். மேலும், முறையாக வடிவமைத்தல் மற்றும் தறித்தலின் மூலம், காய்கள் நீண்ட காலம் (Extended Harvesting Period) கிடைக்க ஏதுவாகும்.
அவரை வகைக் கொடிகளில் பயிற்றுவித்தல், தறித்தல்
கொடியவரை வகையில், கொடிகள் பந்தலைத் தொடும் வரையில், ஒரே கொடியாக ஏற்றிவிட வேண்டும். பிறகு, அதிகப்படியான செடி வளர்ச்சியை அகற்ற வேண்டும். நுனிக் கிள்ளுதல் மற்றும் முறையான தறித்தல் மூலம் வேண்டாத கிளைகளை நீக்க வேண்டும். இது முறையான ஒளி கிடைக்க ஏதுவாகும். இதன் மூலம் செடிகளில் ஒளிச்சேர்க்கை அதிகமாகி, பூக்களும் காய்களும் நன்கு பிடிக்க ஏதுவாகும்.
பாலித்தீன் குடில் தக்காளியில் தறித்தல், பயிற்றுவித்தல்
தறித்தல்: தக்காளிச் செடிகளில் இரண்டு தண்டுகளை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற கிளைகளைத் தறித்துவிட வேண்டும். இந்தத் தறித்தல் வேலையை, செடிகளை நட்டு 20-30 நாட்கள் கழித்துத் தொடங்கி, வாரத்தில் ஒருமுறை செய்ய வேண்டும். முதல் மலர்க்கொத்து விட்டதும், தக்காளிச் செடிகள், இரண்டு முதன்மைக் கிளைகளை விடும். இந்த இரண்டு கிளைகளை மட்டும் விட்டுவிட்டு, மற்ற கிளைகளை நறுக்கி எடுத்துவிட வேண்டும். செடியின் அடிப்பாகத்தில் வளரும் கிளைகளும் அகற்றப்பட வேண்டும்.
பயிற்றுவித்தல்: தக்காளிச் செடியின் ஒவ்வொரு கிளையும் தனித்தனியே நிறுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக் குழாயில் இணைந்து செல்லும்படி பயிற்றுவிக்க வேண்டும். சணல் கயிற்றால் கிளைகளை, குழாயில் சேர்த்துக் கட்டி வைப்பதன் மூலம், தழை மற்றும் காய்களின் பாரத்தால் கிளை முறியாமல் காக்கப்படும். இப்படிச் சேர்த்துக் கட்டுவதை, நான்காம் வாரத்தில் இருந்து தொடங்கி, வார இடைவெளியில், தறித்தலுடன் சேர்த்துச் செய்ய வேண்டும். செடியை முற்றாக அகற்றுவதற்கு ஆறு வாரங்களுக்கு முன், மேல்மட்டத்தில் வளர்வதை நறுக்க வேண்டும்.
தாழ்வாகப் படியச் செய்தல்
ஆரம்பத்தில் இருந்தே, செடிகள் அதிக உயரம் செல்லாத வகையில், பிளாஸ்டிக் நூலால் கீழே இறக்கி, தாழ்வாகப் படரச் செய்ய வேண்டும். இப்படிச் செய்தால், காய்களைப் பறிப்பதும், செடிகளைக் கையாள்வதும் சுலபமாக இருக்கும். தாழ்வாகப் படரச் செய்தலை 80-90 நாட்களுக்குப் பிறகு தொடங்கி, 20-30 நாட்களுக்கு ஒருமுறை செய்ய வேண்டும்.
தழைகளை நீக்குதல்
பழுத்த தழைகளை முறையாகக் களைதல் வேண்டும். இதைச் செடிகளை நட்டு 70 நாட்களில் தொடங்க வேண்டும். எப்போதும் வளரும் முனையில் இருந்து ஐந்து அடிக்குள் மட்டும் இலைகள் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
பாலித்தீன் குடில் சீமை மிளகாயில் தறித்தல், பயிற்றுவித்தல்
தறித்தல்: நான்கு கிளைகள் மட்டும் இருக்கும் வகையில், சீமை மிளகாயில் தறித்தல் செய்யப்படுகிறது. செடிகளை நட்டு 15-20 நாட்களில் இருந்து தொடங்கி, வார இடைவெளியில் தறித்தல் வேலையைச் செய்ய வேண்டும். இரட்டைக்கிளை விடும் வகையைச் சேர்ந்தது இந்தச் சீமை மிளகாய்ச் செடி. இச்செடி, நட்டு 15-20 நாட்கள் முடிந்த பின், ஐந்து அல்லது ஆறாவது கணுவில், இதழ் வளர்முளை இரண்டாகப் பிரிகிறது. அந்த இரண்டு கிளைகள் மீண்டும் 25-30 நாட்களில் இரண்டு இரண்டாகப் பிரிந்து, நான்கு கிளைகளாக வளர்கின்றன. இந்த நான்கு கிளைகள் மட்டுமே கடைசி வரையில் பராமரிக்கப் படுகின்றன.
ஒவ்வொரு கணுவிலும் இரண்டு கொழுந்துகள் விடுகின்றன. இவற்றில், மூன்று கிளைகள் திறன் மிகுந்து, கடினமாக, பெரிய இலைகளையும் கொண்டிருக்கும். மற்றது திறன் குறைந்த கிளையாக, சிறிய இலைகளுடன் இருக்கும். இந்த மெல்லிய கிளை மட்டும் அகற்றப்படுகிறது. இதை வாரம் ஒருமுறை செய்ய வேண்டும். நான்காம் மாதத்துக்குப் பிறகு, பத்து நாட்களுக்கு ஒருமுறை இந்தத் தறித்தல் செய்யப்பட வேண்டும். அடிப்பாகத்தில் இருக்கும் பயன்படாத கிளைகள் அகற்றப்பட வேண்டும். இதேபோல, நட்டு ஒரு மாதத்தில் விடும் பூக்களைக் கிள்ளிவிட வேண்டும். ஒரு கணுவில் ஒரு பழம் மட்டுமே வளர வேண்டும்.
பயிற்றுவித்தல்: இந்தச் செடியின் ஒவ்வொரு கிளையையும் தனித்தனி பிளாஸ்டிக் குழாய் மூலம் பயிற்றுவிக்க வேண்டும். இந்த பிளாஸ்டிக் நூலை, 2.5 முதல் 3 மீட்டர் இடைவெளியில் கட்டப்பட்ட கொடியில் இருந்து கட்ட வேண்டும். செடியின் கிளைகளைச் சணல் மூலம் பிளாஸ்டிக் குழாயில் கட்ட வேண்டும். இதை ஆறாவது வாரத்தில் தொடங்கி, இருபது நாட்களுக்கு ஒருமுறை செய்ய வேண்டும்.
முனைவர் சி.சுபா, முனைவர் மு.சியாமளா, தோட்டக்கலைக் கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் – 641 003.