மானாவாரியில் சோள சாகுபடி!

சோள solam

மிழ்நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படும் தானிய வகைகளில் சோளமும் அடங்கும். ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் சோளம் முக்கியமான உணவுப் பயிராகும்.

இது, ஆடு, மாடுகள், கோழிகள் மற்றும் பன்றிகளுக்கு உணவாகப் பயன் படுகிறது. சோளத்தில் 10-12% புரதம், 3% கொழுப்பு, 70% மாவுச்சத்து உள்ளன. தமிழ்நாட்டில் பெரும்பாலும் மானாவாரியில் தான் சோளம் பயிரிடப் படுகிறது. இங்கே, மானாவாரியில் சோள மகசூலைக் கூட்டும் உத்திகள் குறித்துப் பார்க்கலாம்.

புதிய இரகங்கள்

கோ.32: இது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக வெளியீடாகும். இந்த இரகமானது, தீவனம் மற்றும் தானியத்துக்கு ஏற்றது. இதன் வயது 105-110 நாட்கள்.

எக்டருக்கு 2,455 கிலோ தானியம் மற்றும் 6,470 கிலோ உலர்ந்த தட்டை கிடைக்கும். குருத்து ஈ, தண்டுத் துளைப்பான் மற்றும் அடிச்சாம்பல் நோய், கதிர்ப் பூசண நோய் ஆகியவற்றை மிதமாகத் தாங்கி வளரும்.

மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் தானியம் இருக்கும். இதில், 11.31-14.66% புரதமும், 4.95-5.80% நார்ச்சத்தும் உள்ளன. தட்டையில் 6.15% புரதமும், 54.58% செரிப்புத் திறனும் இருக்கும். இதை, மானாவாரி மற்றும் இறவையில் தமிழகம் முழுவதும் பயிரிடலாம்.

கே.12: இது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின், கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலைய வெளியீடாகும். மானாவாரியில் பயிரிட மிகவும் உகந்தது.

இதன் வயது 95-100 நாட்கள். எக்டருக்கு 3,123 கிலோ சோளமும், 11.9 டன் தட்டையும் கிடைக்கும்.

தண்டுத் துளைப்பான், குருத்துப்பூச்சி மற்றும் அடிச்சாம்பல் நோயை மிதமாகத் தாங்கி வளரும். தமிழ்நாடு முழுவதும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மானாவாரியில் விதைக்கலாம். சோள சாகுபடிக்கு 250-300 மி.மீ. மழையே போதுமானது.

நிலம் தயாரித்தல்

முதல் கோடைமழை பெய்ததும் சட்டிக் கலப்பையாலும், அடுத்து, ஒவ்வொரு மழைக்குப் பின்பு மற்ற கலப்பைகள் மூலமும் நன்றாக உழ வேண்டும். இதனால் களைகள் கட்டுப்படும்.

பூச்சிகளின் கூட்டுப் புழுக்கள் மேலே வந்து அழிவதால் சாகுபடிக் காலத்தில் பூச்சித் தாக்குதல் குறையும். மானாவாரியில் அதிக மகசூலை எடுக்க, 4-5 முறை உழ வேண்டும்.

விதைப்பு

எக்டருக்கு தரமான 15 கிலோ விதைகள் தேவைப்படும். விதைகளை 45×15 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். இதனால், பயிர்களுக்குத் தேவையான நீர், சத்துகள் மற்றும் காற்றோட்டம் போதியளவில் கிடைப்பதால் மகசூல் அதிகமாகக் கிடைக்கும்.

விதைகளைக் கடினப்படுத்துதல்

பயிர்கள் வறட்சியைத் தாங்கி வளர, விதைகளைக் கடினப்படுத்தி விதைக்க வேண்டும். இதற்கு, ஒரு லிட்டர் நீருக்கு 20 கிராம் பொட்டாசியம் டை-ஹைட்ரஜன் பாஸ்பேட் வீதம் கலந்த கரைசல் தேவை. இதில், விதைகளை 6 மணி நேரம் ஊற வைத்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

விதைகளைக் கடினப் படுத்தினால், பருவமழை பெய்வதற்கு 10-15 நாட்கள் முன்னதாகவே விதைக்கலாம். இல்லையெனில், மழை பெய்த பிறகே விதைக்க வேண்டும்.

நுண்ணுயிர் விதை நேர்த்தி

ஓர் எக்டருக்குத் தேவையான விதைகளை 600 கிராம் அசோஸ்பைரில்லம், 600 கிராம் பாஸ்போ பேக்டீரியாவை, ஆறிய அரிசிக் கஞ்சியில் கலந்து கலவையைத் தயாரித்து, அதில் விதைகளைக் கலந்து நேர்த்தி செய்ய வேண்டும். இந்த நுண்ணுரங்கள், காற்றிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்துப் பயிர்களுக்குத் தரும்.

உர நிர்வாகம்

மண் பரிசோதனை அடிப்படையில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை இட வேண்டும். அல்லது பொது பரிந்துரையாக, எக்டருக்கு 90 கிலோ தழைச்சத்து 45 கிலோ மணிச்சத்து மற்றும் 45 கிலோ சாம்பல் சத்து வீதம் இட வேண்டும்.

தழைச்சத்தில் பாதியை, விதைக்கும் போதும், அடுத்த பாதியை, 30 மற்றும் 45 நாளில் சமமாகப் பிரித்து இட வேண்டும்.

மணி மற்றும் சாம்பல் சத்து முழுவதையும், விதைப்பதற்கு முன் இட வேண்டும். மேலும், எக்டருக்கு 12.5 கிலோ நுண்ணுரம் வீதம் எடுத்து, அதை 37.5 கிலோ மணலில் கலந்து இட வேண்டும். இதனால், உரப்பயன் அதிகமாகி மகசூல் கூடும்.

களை நிர்வாகம்

சோளப்பயிரின் இரண்டாம் வாரம் முதல் ஐந்தாம் வாரம் வரை களைகள் இல்லாமல் இருக்க வேண்டும். இதற்கு, விதைத்த 3-5 நாட்களுள் எக்டருக்கு 900 லிட்டர் நீரில் 500 கிராம் அட்ரசினைக் கலந்து, நிலத்தில் போதுமான ஈரம் இருக்கும் போது தெளிக்கலாம்.

சோளத்துடன் பயறுவகைப் பயிர்கள் ஊடுபயிராக இருந்தால், எக்டருக்கு 2 லிட்டர் பென்டி மெத்தலின் வீதம் தெளிக்க வேண்டும். ஆனால், களைக் கொல்லியைத் தெளிக்காமல் இருப்பதே நல்லது.

தாக்கும் பூச்சிகள்

குருத்துப் ஈ: இது, தண்டுகளைத் துளைத்து உண்பதால் நடுக்குருத்து காய்ந்து விடும். இது, ஒரு மாதப் பயிரைத் தாக்கும். இதைக் கட்டுப்படுத்த, விதைகளை இமிடா குளோபிரிட்டில் நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். அல்லது மெத்தில் டெமட்டான் 25 இ.சி. மருந்தைத் தெளிக்கலாம்.

தண்டுத் துளைப்பான்: இதன் தாக்குதலால் நடுக்குருத்துக் காய்ந்து போகும். மேலும், புதிய இலைகளில் துளைகள் இருக்கும். கதிர்கள் பதராகி விடும். இதைக் கட்டுப்படுத்த, விளக்குப் பொறிகளை வைத்து, இந்தப் புழுக்களை உருவாக்கும் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

தாக்கும் நோய்கள்

தானியக் கரிப்பூட்டை: கதிரிலுள்ள தானியங்கள் பகுதி அல்லது முழுவதும் கரிப் பூசணமாக மாறியிருக்கும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கேப்டான் அல்லது 4 கிராம் திரம் வீதம் எடுத்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

அடிச்சாமல் நோய்: இலைகளின் அடிப்பாகத்தில் வெண் பூசணம் தோன்றுதல், இலைகள் வெளுத்துக் காய்ந்து வாடுதல், நரம்புகளிடையே கிழிந்து இலைகள் நாரைப் போலத் தோன்றுதல் இந்நோயின் அறிகுறிகள் ஆகும். இதைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 500 கிராம் மெட்டாலக்சில் அல்லது மெட்டாலக்சில் உடன் ஒரு கிலோ மேன்கோசெப் வீதம் எடுத்துத் தெளிக்க வேண்டும்.

துரு நோய்: இலைகளில் சொரி சொரியாகப் பழுப்பு நிறத்தில் புள்ளிகள் தோன்றும். பின்பு, இவை முழுவதும் பரவுவதால் இலைகள் பழுப்பு நிறமாக மாறிச் சேதமாகி விடும். இந்நோயைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 1250 கிராம் மேன்கோசெப் வீதம் தெளிக்க வேண்டும்.

இதுவரை கூறியுள்ள தொழில் நுட்பங்களைப் பின்பற்றினால், மானாவாரி சோளத்தில் அதிக மகசூல் கிடைக்கும்.


சோள MAGESHWARAN e1709465520407
பொ.மகேஸ்வரன், சி.சபரிநாதன், எம்.அருண்ராஜ், வேளாண்மை அறிவியல் நிலையம், தேனி.
Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading