My page - topic 1, topic 2, topic 3

பூச்சிகளைக் காட்டிக் கொடுக்கும் ஆமணக்கு!

ன்றைய நவீன விவசாயத்தில் நோய்கள் மற்றும் பூச்சிகளிடம் இருந்து பயிர்களைக் காப்பதற்கு, பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தான் பயன்படுத்தி வருகிறோம்.

இதனால், கூடுதல் செலவு, நஞ்சு கலந்த விளைபொருள், சூழல் கேடு போன்ற பக்க விளைவுகளை அனுபவித்து வருகிறோம். இவற்றில் இருந்து மீள்வதற்கு, இயற்கை சார்ந்த சில முறைகளைக் கையாளலாம்.

ஆமணக்கு

ஆமணக்கை, பூச்சிகளின் பதிவேடு என்று கூறலாம். எந்தப் பூச்சி வந்தாலும் முதலில் ஆமணக்குச் செடியைத் தான் நாடும். இதை ஆங்கிலத்தில் TRAP CROP என்று கூறுவார்கள்.

ஆமணக்குச் செடிகளை நிலத்தின் ஓரக்காலில் வளர்க்கலாம். குறைந்த அளவில் நட வேண்டும். அதிகமாக நடக்கூடாது. நெருக்கியும் நடக் கூடாது, நிலத்தின் நடுவிலும் நடக்கூடாது. இந்தச் செடிகளை அடிக்கடி பரிசோதித்து, தீமை செய்யும் பூச்சிகள் இருந்தால், அவற்றைச் சேகரித்து அழித்து விட வேண்டும்.

தட்டைப்பயறு

தட்டைப் பயற்றஞ் செடிகளை வரப்போரம் அல்லது ஊடுபயிராக நடலாம். இவை, அசுவினிப் பூச்சிகள் வளர்வதற்கு ஏற்றவை. இவற்றை நோக்கி அசுவினிப் பூச்சிகள் ஓரளவு வந்ததும், அசுவினியை உண்ணும் பொறி வண்டுகள் மற்றும் பல நன்மை செய்யும் பூச்சிகள் வந்து விடும்.

மக்காச்சோளம்

மக்காச் சோளத்தில் இரை விழுங்கிகள் அதிகமாகத் தங்கும். இதை, வரப்பைச் சுற்றி அல்லது ஊடுபயிராக இடும்போது நிறைய இரை விழுங்கிகள் உற்பத்தியாகி, பயிரைத் தாக்கும் பூச்சிகளை உண்டு அழிக்கும்.

மேலும், மக்காச்சோளம், பறவைகள் உட்கார ஏற்றதாக இருப்பதால், இதில் அமரும் பறவைகள், பயிரைத் தாக்கும் பூச்சிகளைப் பிடித்து உண்ணும்.

செண்டுமல்லிச் செடிகள்

செண்டுமல்லி என்னும் துலுக்க சாமந்தியின் வேர்களில் இருந்து சுரக்கும் திரவங்கள் நூற்புழுக்களைக் கொல்லக் கூடியவை. இந்தத் திரவங்கள், ஒரு சதுர மீட்டர் பரப்பில் பரவும். எனவே, பயிர்களுக்கு அருகிலேயே துலுக்க சாமந்தியை நடவேண்டும்.

வேப்ப விதைக் கரைசல்

பாரம்பரியமாக நாம் பயன்படுத்தும் வேம்பில் 18 வகை ஆல்கலாய்டுகள் உள்ளன. இவற்றில் முக்கியமானது அசாடிராக்டின் என்னும் ஆல்கலாய்டு. இதனால், வேப்ப விதையில் எடுக்கப்படும் வேப்ப எண்ணெய், சிறந்த இயற்கைப் பூச்சி மருந்தாக, நோய்களைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

வேப்பிலையில் பத்து வகை ஆல்கலாய்டுகள், வேப்பம் பட்டையில் எட்டு வகை ஆல்கலாய்டுகள், வேப்ப விதையில் 18 வகை ஆல்கலாய்டுகள் உள்ளன.

கடைகளில் விற்கும் வேப்ப எண்ணெய் இரும்புச் செக்கில் ஆட்டி எடுக்கப்படுகிறது. எனவே, வெப்பத்தால் ஆல்கலாய்டுகள் சிதைந்து விடும். இதனால், 18 வகை ஆல்கலாய்டுகள் இருக்க வேண்டிய வேப்ப எண்ணெய்யில், எட்டு வகை ஆல்கலாய்டுகள் மட்டுமே உள்ளன.

எனவே, வேப்ப எண்ணெய்யை விட, வேப்ப விதைகளைச் சேகரித்து இடித்துத் தெளிப்பது தான் சிறந்தது. இதனால், 18 வகை ஆல்கலாய்டுகள் முழுமையாகக் கிடைக்கும்.

வேப்பங் கொட்டைக் கரைசலைப் பயிர்களுக்கு தெளிக்கும் போது, அது பயிர்களின் மேல் படிகிறது. பூச்சிக் கட்டுப்பாடு மற்றும் நோய்க் கட்டுப்பாடு இரண்டுக்கும், வேப்பங் கொட்டைக் கரைசல் நல்ல தீர்வாகும்.

பூச்சிக் கட்டுப்பாடு: வேம்பின் வாசம் பூச்சிகளை விரட்டி விடும். இதன் கசப்புச் சுவையால் பூச்சிகள் பயிரைச் சாப்பிடாது. கசப்பையும் மீறி உண்ணும் பூச்சிகளின் வயிறு மந்தமாகும். தொடர்ந்து உண்ணும் போது, பூச்சிகளுக்குப் பக்கவாதம் ஏற்பட்டு இறந்து விடும்.

இறக்காத பூச்சிகளுக்கு மலட்டுத் தன்மை ஏற்பட்டு, இனப்பெருக்கம் செய்ய இயலாத நிலை ஏற்படும். பெண் பூச்சிகளின் முட்டை உற்பத்தி, முட்டையிடுதல் தவிர்க்கப்படும்.

நோய்க் கட்டுப்பாடு: பூச்சிகள் கட்டுப்படுவதால், அந்தப் பூச்சிகள் மூலம் பரவும் வைரஸ் நோய்களும் கட்டுப்படும். வேப்பங் கொட்டைக் கரைசலைத் தெளித்த பயிரில், பூஞ்சை மற்றும் பாக்டீரிய ஸ்போர்கள் முளைத்து வளராது.

நட்டு 25 நாளான நெற்பயிரில் இதைத் தெளிக்கலாம். அடுத்து, ஏழு நாட்களுக்கு ஒருமுறை தேவையைப் பொறுத்து அடிக்கலாம்.

கரைசல் செய்முறை

ஓர் ஏக்கருக்குத் தேவையான கரைசலைத் தயாரிக்க, 5 கிலோ வேப்பங் கொட்டை, 500 கிராம் நாட்டுப் பூண்டு தேவை. இந்த இரண்டையும் தனித்தனியே ஆட்டுக் கல்லில் இட்டு, துவையலைப் போல ஆட்டிக் கொள்ள வேண்டும். பிறகு, இதைப் பழைய பருத்தித் துணியில் கட்டி, 10 லிட்டர் கோமியத்தில் ஊறவிட வேண்டும்.

வேப்பங் கொட்டைச் சாறு சிறிது சிறிதாகக் கோமியத்தில் கலக்கும். 2-4 நாட்களில், வேம்பின் சத்து கோமியத்தில் கலந்து விடும், இந்தச் சாற்றை வடிகட்டி, அதனுடன் நூறு கிராம் காதி சோப்பைக் கரைத்துக் கரைசலைத் தயாரிக்க வேண்டும்.

இந்தக் கரைசலையும் நீரையும் 1:10 வீதம் கலந்து, மாலை மூன்று மணிக்கு மேல் தெளிப்பது நல்லது. காலையில் தெளித்தால் கரைசலில் உள்ள ஆல்கலாய்டுகள் வெய்யிலால் அழிந்து விடும்.

ஆனால், வேப்பங் கொட்டைக் கரைசலை மாலையில் தெளிக்கும் போது, அதிலுள்ள ஆல்காலாய்டுகள் இலையில் நன்கு ஒட்டிக் கொள்ளும். 2-4 நாட்கள் வரை அந்தக் கசப்புத் தன்மை பயிர்களில் இருக்கும். இந்தக் கரைசலைத் தேவைப்படும் போது, புதிதாகத் தயாரித்துக் கொள்வது சிறந்தது.

இயற்கை விவசாயிகள் வேம்பின் அவசியத்தை உணர்ந்து, நிலத்தைச் சுற்றி நிறைய வேப்ப மரங்களை நட வேண்டும். ஆண்டுதோறும் அடியுரமாக இடுவதற்கு, ஏக்கருக்கு 200 கிலோ கரைசலைத் தயாரிக்க, 20 கிலோ வீதம் வேப்ப விதைகள் தேவைப்படும். எனவே, இந்தளவில் வேப்ப விதைகளை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

பொறிகள்

மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி: பழைய எண்ணெய்த் தகரத்தில் மஞ்சள் பெயின்ட்டைப் பூசி, அதன் மேல் விளக்கெண்ணெய் அல்லது கிரீசைத் தடவிவிட வேண்டும். இந்த மஞ்சள் நிறத்தால் கவரப்படும், அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ, இலைப்பேன் போன்ற பூச்சிகள், அதன் மேல் ஒட்டிக் கொண்டு மீள முடியாமல் இறந்து விடும்.

விளக்குப்பொறி: ஒளியை நோக்கிச் செல்லும் குணம் பூச்சிகளுக்கு உண்டு. அதனால், இரவில் மின்சார விளக்கை எரிய விட்டு அதன்கீழ் அகலமான பாத்திரத்தில் ம.எண்ணெய் கலந்த நீரை நிரப்பி, இரவு 6 மணி முதல் 8 மணி வரை வைக்க வேண்டும். அப்போது இந்த விளக்கொளியை நோக்கி வரும் பூச்சிகள், நீரில் விழுந்து மடிந்து விடும்.

இரவு 8 மணிக்கு மேல் நன்மை செய்யும் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும், இதனால் 8 மணிக்கு மேல் விளக்கை அணைத்து விட வேண்டும். இல்லையேல் நன்மை செய்யும் பூச்சிகளும் இறந்து விடும்.

எனவே, இத்தகைய எளிய உத்திகளைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில், நஞ்சற்ற உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும்.


தொகுப்பு: பசுமை

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks