My page - topic 1, topic 2, topic 3

தீவனப் பயிர்களை சாகுபடி செய்யும் முறைகள்!

ரகப்பகுதி மக்களின் மிக முக்கிய வாழ்வாதாரம் கால்நடை வளர்ப்பு. ஆடு, மாடு போன்றவற்றில் சிறந்த உற்பத்தியை ஈட்ட வேண்டும் என்றால், அவற்றுக்குச் சரியான அளவில் தீவனத்தைத் தர வேண்டும். பசுந்தீவனம், உலர் தீவனம் மற்றும் அடர் தீவனத்தைப் போதியளவில் தர வேண்டும்.

பசுந்தீவனத்தில், தானிய வகை, புல் வகை, பயறு வகை, மர வகை என, நான்கு வகைத் தீவனங்கள் உள்ளன. அவற்றை உற்பத்தி செய்யும் முறைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

தானிய வகைத் தீவனங்கள்

கோ.எஃப்.எஸ்.29, கோ.31 தீவனச் சோளம்: இதில், 41 சதம் மாவுச்சத்தும், 8.5 சதம் புரதச்சத்தும் உள்ளன. இதைப் பயிரிட, ஏக்கருக்கு 2-4 கிலோ விதைகள் தேவைப்படும்.

பயிர் இடைவெளி 45×30 செ.மீ. இருக்க வேண்டும். நிலத்தை நன்கு உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன், ஏக்கருக்குப் பத்து டன் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும்.

மேலும், 18:16:16 கிலோ வீதம், தழை, மணி, சாம்பல் சத்தையும் அடியுரமாக இட வேண்டும். விதைத்த முப்பது நாளில் மற்றும் ஒவ்வொரு அறுவடை முடிந்ததும் 18 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இட வேண்டும்.

முதல் அறுவடையை 70 நாளில் செய்யலாம். அடுத்து, ஒவ்வொரு அறுவடையையும் 50 நாளில் செய்யலாம். இதன் மூலம், ஆண்டுக்கு 70 டன் தீவனம் கிடைக்கும்.

கோ.27 தீவனச்சோளம்: இதில், 41 சதம் மாவுச் சத்தும், 8.0 சதம் புரதச் சத்தும் உள்ளன. இதைப் பயிரிட, ஏக்கருக்கு 16 கிலோ விதைகள் தேவைப்படும். பயிர் இடைவெளி 30×10 செ.மீ. இருக்க வேண்டும். நிலத்தை நன்கு உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன், ஏக்கருக்குப் பத்து டன் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும்.

மேலும், 12:16:8 கிலோ வீதம், தழை, மணி, சாம்பல் சத்தையும் அடியுரமாக இட வேண்டும். விதைத்த முப்பது நாளில், 12 கிலோ தழைச் சத்தை மேலுரமாக இட வேண்டும். 60-70 நாளில் அறுவடை செய்யலாம். இதன் மூலம், 15 டன் தீவனம் கிடைக்கும்.

ஆப்பிரிக்கன் நெட்டைத் தீவனச்சோளம்: இதில், 52 சதம் மாவுச் சத்தும், 8.2 சதம் புரதச் சத்தும் உள்ளன. இதைப் பயிரிட, ஏக்கருக்கு 16 கிலோ விதைகள் தேவைப்படும். பயிர் இடைவெளி 30×10 செ.மீ. இருக்க வேண்டும். நிலத்தை நன்கு உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன், ஏக்கருக்குப் பத்து டன் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும்.

மேலும், 12:16:8 கிலோ வீதம், தழை, மணி, சாம்பல் சத்தையும் அடியுரமாக இட வேண்டும். விதைத்த முப்பது நாளில், 12 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இட வேண்டும். 60-70 நாளில் அறுவடை செய்யலாம். இதன் மூலம், 20 டன் தீவனம் கிடைக்கும்.

கோ.8 தீவனக்கம்பு: இதில், 50 சதம் மாவுச் சத்தும், 11 சதம் புரதச் சத்தும் உள்ளன. இதைப் பயிரிட, ஏக்கருக்கு 4-5 கிலோ விதைகள் தேவைப்படும். பயிர் இடைவெளி 30×10 செ.மீ. இருக்க வேண்டும். நிலத்தை நன்கு உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன், ஏக்கருக்குப் பத்து டன் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும்.

மேலும், 10:8:5 கிலோ வீதம், தழை, மணி, சாம்பல் சத்தையும் அடியுரமாக இட வேண்டும். விதைத்த முப்பது நாளில், 10 கிலோ தழைச் சத்தை மேலுரமாக இட வேண்டும். 50-55 நாளில் அறுவடை செய்யலாம். இதன் மூலம், 12 டன் தீவனம் கிடைக்கும்.

புல் வகைத் தீவனங்கள்

கோ.4, கோ.5 கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்: இவற்றில், 43 சதம் மாவுச்சத்தும், 10 சதம் புரதச்சத்தும் உள்ளன. இவற்றைப் பயிரிட, ஏக்கருக்கு 13 ஆயிரம் கரணைகள் தேவைப்படும். பயிர் இடைவெளி 60×50 செ.மீ. இருக்க வேண்டும். நிலத்தை நன்கு உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன், ஏக்கருக்குப் பத்து டன் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும்.

மேலும், 30:20:16 கிலோ வீதம், தழை, மணி, சாம்பல் சத்தையும் அடியுரமாக இட வேண்டும். விதைத்த முப்பது நாளில் மற்றும் ஒவ்வொரு அறுவடை முடிந்ததும், 30 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இட வேண்டும்.

முதல் அறுவடையை 75 நாளில் செய்யலாம். அடுத்து, ஒவ்வொரு அறுவடையையும் 45 நாளில் செய்யலாம். இதன் மூலம், ஆண்டுக்கு 160 டன் தீவனம் கிடைக்கும்.

கோ.ஜிஜி.3 கினியாப்புல்: இதில், 42 சதம் மாவுச்சத்தும், 9-10 சதம் புரதச்சத்தும் உள்ளன. இதைப் பயிரிட, ஏக்கருக்கு ஒரு கிலோ விதை அல்லது 16 ஆயிரம் வேர்க் கரணைகள் தேவைப்படும்.

பயிர் இடைவெளி 50×50 செ.மீ. இருக்க வேண்டும். நிலத்தை நன்கு உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன், ஏக்கருக்குப் பத்து டன் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும்.

மேலும், 20:20:16 கிலோ வீதம், தழை, மணி, சாம்பல் சத்தையும் அடியுரமாக இட வேண்டும். விதைத்த முப்பது நாளில் மற்றும் ஒவ்வொரு அறுவடை முடிந்ததும் 20 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இட வேண்டும்.

முதல் அறுவடையை 75 நாளில் செய்யலாம். அடுத்து, ஒவ்வொரு அறுவடையையும் 45 நாளில் செய்யலாம். இதன் மூலம், ஆண்டுக்கு 150 டன் தீவனம் கிடைக்கும்.

எருமைப்புல்- நீர்ப்புல்: இதில், 46 சதம் மாவுச்சத்தும், 11 சதம் புரதச்சத்தும் உள்ளன. இதைப் பயிரிட, ஏக்கருக்கு 16 ஆயிரம் வேர்க் கரணைகள் தேவைப்படும்.

பயிர் இடைவெளி 50×50 செ.மீ. இருக்க வேண்டும். நிலத்தை நன்கு உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன், ஏக்கருக்குப் பத்து டன் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும்.

மேலும், 8:16:0 கிலோ வீதம், தழை, மணி, சாம்பல் சத்தையும் அடியுரமாக இட வேண்டும். விதைத்த முப்பது நாளில் மற்றும் ஒவ்வொரு அறுவடை முடிந்ததும் 8 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இட வேண்டும்.

முதல் அறுவடையை 75 நாளில் செய்யலாம். அடுத்து, ஒவ்வொரு அறுவடையையும் 45 நாளில் செய்யலாம். இதன் மூலம், ஆண்டுக்கு 60-75 டன் தீவனம் கிடைக்கும்.

கோ.4 நீலக் கொழுக்கட்டைப் புல்: இதில், 41 சதம் மாவுச் சத்தும், 9 சதம் புரதச் சத்தும் உள்ளன. இதைப் பயிரிட, ஏக்கருக்கு 3.5 கிலோ விதைகள் தேவைப்படும்.

பயிர் இடைவெளி 50×30 செ.மீ. இருக்க வேண்டும். நிலத்தை நன்கு உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன், ஏக்கருக்குப் பத்து டன் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும்.

மேலும், 10:16:8 கிலோ வீதம், தழை, மணி, சாம்பல் சத்தையும் அடியுரமாக இட வேண்டும். விதைத்த முப்பது நாளில் மற்றும் ஒவ்வொரு அறுவடை முடிந்ததும் 10 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இட வேண்டும்.

முதல் அறுவடையை 70 நாளில் செய்யலாம். அடுத்து, ஒவ்வொரு அறுவடையையும் 65 நாளில் செய்யலாம். இதன் மூலம், ஆண்டுக்கு 16 டன் தீவனம் கிடைக்கும்.

பயறுவகைத் தீவனங்கள்

கோ.2 குதிரை மசால்: இதில், 37 சதம் மாவுச் சத்தும், 20-24 சதம் புரதச் சத்தும் உள்ளன. இதைப் பயிரிட, ஏக்கருக்கு 6-8 கிலோ விதைகள் தேவைப்படும்.

பயிர் இடைவெளி 30 செ.மீ. இருக்க வேண்டும். நிலத்தை நன்கு உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன், ஏக்கருக்குப் பத்து டன் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும்.

மேலும், 10:40:16 கிலோ வீதம், தழை, மணி, சாம்பல் சத்தையும் அடியுரமாக இட வேண்டும். விதைத்த முப்பது நாளில் மற்றும் ஒவ்வொரு அறுவடை முடிந்ததும் 10 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இட வேண்டும்.

முதல் அறுவடையை 60 நாளில் செய்யலாம். அடுத்து, ஒவ்வொரு அறுவடையையும் 30 நாளில் செய்யலாம். இதன் மூலம், ஆண்டுக்கு 35 டன் தீவனம் கிடைக்கும்.

கோ.1, கோ.2 வேலிமசால்: இவற்றில், 54 சதம் மாவுச் சத்தும், 20-25 சதம் புரதச் சத்தும் உள்ளன. இதைப் பயிரிட ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் தேவைப்படும்.

பயிர் இடைவெளி 30 செ.மீ. இருக்க வேண்டும். நிலத்தை நன்கு உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன், ஏக்கருக்குப் பத்து டன் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும்.

மேலும், 10:16:8 கிலோ வீதம், தழை, மணி, சாம்பல் சத்தையும் அடியுரமாக இட வேண்டும். விதைத்த முப்பது நாளில் மற்றும் ஒவ்வொரு அறுவடை முடிந்ததும் 10 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இட வேண்டும்.

முதல் அறுவடையை 80 நாளில் செய்யலாம். அடுத்து, ஒவ்வொரு அறுவடையையும் 45 நாளில் செய்யலாம். இதன் மூலம், ஆண்டுக்கு 50 டன் தீவனம் கிடைக்கும்.

கோ.1, கோ.2 முயல் மசால்: இவற்றில், 37 சதம் மாவுச் சத்தும், 20-24 சதம் புரதச் சத்தும் உள்ளன. இதைப் பயிரிட, ஏக்கருக்கு 4 கிலோ விதைகள் தேவைப்படும்.

பயிர் இடைவெளி 30×15 செ.மீ. இருக்க வேண்டும். நிலத்தை நன்கு உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன், ஏக்கருக்குப் பத்து டன் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும்.

மேலும், 8:24:6 கிலோ வீதம், தழை, மணி, சாம்பல் சத்தையும் அடியுரமாக இட வேண்டும். விதைத்த முப்பது நாளில் மற்றும் ஒவ்வொரு அறுவடை முடிந்ததும் 8 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இட வேண்டும்.

முதல் அறுவடையை 75 நாளில் செய்யலாம். அடுத்து, ஒவ்வொரு அறுவடையையும் 50 நாளில் செய்யலாம். இதன் மூலம், ஆண்டுக்கு 12-15 டன் தீவனம் கிடைக்கும்.

கோ.எஃப்.சி.8, கோ.9 தட்டைப்பயறு: இவற்றில், 36 சதம் மாவுச் சத்தும், 21 சதம் புரதச் சத்தும் உள்ளன. இதைப் பயிரிட, ஏக்கருக்கு 10 கிலோ விதைகள் தேவைப்படும்.

பயிர் இடைவெளி 30×15 செ.மீ. இருக்க வேண்டும். நிலத்தை நன்கு உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன், ஏக்கருக்குப் பத்து டன் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும்.

மேலும், 10:18:8 கிலோ வீதம், தழை, மணி, சாம்பல் சத்தையும் அடியுரமாக இட வேண்டும். விதைத்த முப்பது நாளில் 10 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இட வேண்டும். 50-55 நாளில் அறுவடை செய்யலாம். இதன் மூலம் 10-12 டன் தீவனம் கிடைக்கும்.

மரவகைத் தீவனங்கள்

புதிய சவுண்டல் என்னும் சூபா புல்: இதில், 35 சதம் மாவுச் சத்தும், 26 சதம் புரதச் சத்தும் உள்ளன. இதைப் பயிரிட, ஏக்கருக்கு 3.5 கிலோ விதைகள் தேவைப்படும்.

பயிர் இடைவெளி 100×30 செ.மீ. இருக்க வேண்டும். நிலத்தை நன்கு உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன், ஏக்கருக்குப் பத்து டன் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும்.

மேலும், 5:24:12 கிலோ வீதம், தழை, மணி, சாம்பல் சத்தையும் அடியுரமாக இட வேண்டும். முதல் அறுவடையை 120 நாளில் செய்யலாம். அடுத்து ஒவ்வொரு அறுவடையையும் 60 நாளில் செய்யலாம். இதன் மூலம், ஆண்டுக்கு 40 டன் தீவனம் கிடைக்கும்.

அகத்தி: இதில், 47 சதம் மாவுச் சத்தும், 25 சதம் புரதச் சத்தும் உள்ளன. இதைப் பயிரிட, ஏக்கருக்கு 3 கிலோ விதைகள் தேவைப்படும். பயிர் இடைவெளி 100×100 செ.மீ. இருக்க வேண்டும். நிலத்தை நன்கு உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன், ஏக்கருக்குப் பத்து டன் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும்.

மேலும், 5:10:5 கிலோ வீதம், தழை, மணி, சாம்பல் சத்தையும் அடியுரமாக இட வேண்டும். முதல் அறுவடையை 240 நாளில் செய்யலாம். அடுத்து ஒவ்வொரு அறுவடையையும் 60 நாளில் செய்யலாம். இதன் மூலம், ஆண்டுக்கு 40 டன் தீவனம் கிடைக்கும்.

கிளைரிசிடியா: இதில், 20-24 சதம் புரதச்சத்து உள்ளது. இதைப் பயிரிட, ஏக்கருக்கு 2 கிலோ விதைகள் அல்லது 640 செடிகள் தேவைப்படும். பயிர் இடைவெளி, விதைக்கு 1×1 மீட்டரும், செடிக்கு 2.5×2.5 மீட்டரும் இருக்க வேண்டும். நிலத்தை நன்கு உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன், ஏக்கருக்குப் பத்து டன் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும்.

மேலும், 4:24:12 கிலோ வீதம், தழை, மணி, சாம்பல் சத்தையும் அடியுரமாக இட வேண்டும். முதல் அறுவடையை 180 நாளில் செய்யலாம். அடுத்து, ஒவ்வொரு அறுவடையையும் 60 நாளில் செய்யலாம். இதன் மூலம், ஆண்டுக்கு 20 டன் தீவனம் கிடைக்கும்.

தீவன சாகுபடி மாதிரி

10+1 மாடுகள் உள்ள பண்ணைக்கு, கோ.4 கம்பு நேப்பியர் புல் 40 சென்ட், கோ.எஃப்.எஸ். சோளம் 30 சென்ட், வேலிமசால் 30 சென்ட் என, ஒரு ஏக்கரில் பசுந்தீவனம் இருக்க வேண்டும்.

20+1 வெள்ளாடு- செம்மறியாடுகள் உள்ள பண்ணைக்கு, கோ.4 கம்பு நேப்பியர் புல் 20 சென்ட், கோ.எஃப்.எஸ். சோளம் 15 சென்ட், வேலிமசால் 15 சென்ட் என, அரை ஏக்கரில் பசுந்தீவனம் இருக்க வேண்டும்.

ஒரு கறவை மாடு அல்லது 5 ஆடுகள் உள்ள பண்ணைக்கு, கம்பு நேப்பியர் புல் 4 சென்ட், கோ.எஃப்.எஸ். சோளம் 3 சென்ட், வேலிமசால் 3 சென்ட் என, பத்து சென்ட் நிலத்தில் பசுந்தீவனம் இருக்க வேண்டும்.

இந்தத் தீவனப்பயிர் மாதிரியின் ஓரத்தில், அகத்தி, கிளைரிசிடியா, சூபாபுல் போன்ற மரவகைகளை வளர்த்து ஆண்டு முழுவதும் தீவனத்தைப் பெறலாம்.

தீவன அளவு

கறவை மாட்டுக்குத் தினமும் 25-30 கிலோ பசுந்தீவனம் தேவை. இதில், 20 கிலோ தானியத் தீவனம், புல்வகைத் தீவனம் இருக்க வேண்டும். பயறுவகைத் தீவனம் 10 கிலோ இருக்க வேண்டும்.

ஆட்டுக்குத் தினமும் தானிய வகை, புல் வகைத் தீவனம் 2-3 கிலோ கொடுக்க வேண்டும். 1-2 கிலோ பயறுவகைத் தீவனம் கொடுக்க வேண்டும். தீவனத்தை இரண்டு அங்குலத் துண்டுகளாக நறுக்கிக் கொடுக்க வேண்டும்.

குறிப்பு: வேலிமசால் விதைகள் நன்கு முளைக்க, நன்கு கொதிக்கும் நீரில் நான்கு நிமிடம் வரையில் இந்த விதைகளைப் போட்டு எடுக்க வேண்டும்.

இப்படிச் செய்தால் 80% முளைப்புத் திறன் இருக்கும். தீவனப்பயிர் விதைகள் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கிடைக்கும். தொலைபேசி: 04286 – 266345, 266650.


முனைவர் பெ.முருகன், முனைவர் ந.அகிலா, வேளாண்மை அறிவியல் நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகம், நாமக்கல் – 637 002.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks