விவசாய உற்பத்திப் பொருள்களை நெடுநாட்கள் சேமித்து வைப்பதற்கு, அவற்றைக் குறிப்பிட்ட ஈரப்பதம் இருக்கும் வகையில் உலர்த்த வேண்டும். இந்த நடைமுறை, பழங்காலம் முதல் இருந்து வருகிறது.
இந்தப் பொருள்கள் அதிக ஈரப்பதம் மிக்கவை என்பதால், இவற்றை உலர்த்த மிகுந்த ஆற்றல் தேவைப்படுகிறது. மேலும், அறுவடை முடிந்ததும் குறுகிய காலத்தில் உலர்த்த வேண்டும். இல்லாவிடில், ஈரப்பதத்தால் நுண்ணுயிர்கள் வளர்ந்து பொருள்கள் கெட்டுப் போகும்.
அறிவியல் அடிப்படை
சூரிய உலர்த்தி மூலம் கிடைக்கும் வெப்பத்தின் மூலம், பகல் நேரத்திலும், உயிர் எரிபொருளை எரித்துக் கிடைக்கும் வெப்பத்தின் மூலம், இரவு மற்றும் மழைக் காலத்திலும், விவசாயப் பொருள்களை உலர்த்த ஏதுவாக, சூரியக்கூடம் மற்றும் உயிரி எரிபொருள் உலர்த்தி அமைக்கப்பட்டு உள்ளது.
சூரிய சக்தியுடன் உயிரி எரிபொருள் சக்தியை இணைத்துப் பயன்படுத்தும் விதத்திலான இந்த உலர்த்தியை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் வேளாண்மைப் பொறியியல் கல்லூரியில் உள்ள உயிராற்றல் துறை உருவாக்கி உள்ளது. இதன் மூலம், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரையும், மழையின் போதும் பொருள்களை உலர்த்தலாம்.
உலர்த்தியின் அமைப்பு
சூரியக்கூட உலர்த்தி 18×3.75×2 மீட்டர் அளவைக் கொண்டது. இத்துடன், உயிர் எரிபொருள் வெப்பக்காற்று உற்பத்திக் கருவி இணைக்கப்பட்டு உள்ளது. இக்கருவி, உயிரி எரி பொருள்களான தேங்காய் மட்டை, தொட்டி மற்றும் இதர வேளாண் கழிவுகளை எரிப்பதால் கிடைக்கும் வெப்பத்தைக் கொண்டு தூய காற்றைச் சூடாக்கும். அப்போது, நீண்ட குழாய்கள் வழியாக உலர்த்திக்குள் வெப்பக்காற்று அனுப்பப்படும்.
இந்தக் காற்றானது, சூரியவொளி மூலம் சூரியக் கூடத்தில் கிடைக்கும் 60 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை, இரவு மற்றும் மழையின் போது தரும். இந்த உலர்த்தியில் காய வைக்கும் பொருள்களை எளிய முறையில் கையாள, மூன்றடுக்குத் தட்டுகளுடன் நகரும் வண்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
உலர்த்தியின் சிறப்புகள்
இந்த உலர்த்தில், 50-60 டிகிரி செல்சியஸ் வெப்பம், எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். தொடர்ந்து உலர்த்துவதால் ஈரப்பதம் ஒரே சீராகக் குறைந்து வரும். சூரியக்கூட உலர்த்தியைக் காட்டிலும், 35 சத அளவுக்கு உலர்த்தும் நேரம் குறையும். தேங்காயை, அதன் குறைந்த ஈரப்பதத்துக்கு மூன்று நாளில் உலர்த்த முடியும்.
தேங்காயை உலர்த்துவதில் சல்பர் முற்றிலும் தவிர்க்கப்படுவதால், இரசாயனம் இல்லாத கொப்பரை கிடைக்கும். கொப்பரையின் நிறம், எண்ணெய் மகசூல், கொழுப்பில்லா அமில உள்ளடக்கம் போன்றவற்றின் தரம், திறந்த வெளியில் உலர்த்துவதைக் காட்டிலும் அதிகமாகும். மழை, தூசு, புகை மற்றும் பூஞ்சைத் தாக்கம் முற்றிலும் இருக்காது.
சூரியக்கூடம் மற்றும் உயிரி எரிபொருள் உலர்த்தியின் மூலம் கிடைக்கும் எண்ணெய், நெடுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இதில், தேங்காய், மிளகாய், மூலிகை இலைகள், வடகம், தானியங்கள் போன்ற பொருள்களை உலர்த்தலாம்.
கூடம் அமைப்பதற்கான செலவு
இந்த ஒருங்கிணைந்த உலர்த்தியில், சூரியக்கூட உலர்த்தி, உயிரி எரிபொருள் வெப்பக்காற்றுக் கருவி, வெப்பக் கட்டுப்பாட்டுக் கருவி என, மூன்று பாகங்கள் உள்ளன.
இதை அமைக்கச் சுமார் எட்டு இலட்சம் ரூபாய் செலவாகும். சூரியக்கூட அளவு, தளம், உயிரி எரிபொருள் வெப்பக்காற்றுக் கருவியின் அளவு, உலோகம் மற்றும் கட்டுமானப் பொருள்களின் விலைக்கு ஏற்ப, செலவு, கூடலாம் அல்லது குறையலாம்.
தேங்காயை உலர்த்துதல் – ஓர் ஒப்பீடு
தேங்காயைத் திறந்த வெளியில் உலர்த்திய பிறகு இருக்கும் ஈரப்பதம் 6.7 சதம். இதையே சூரியக் கூடத்திலும், ஒருங்கிணைந்த உலர்த்தியிலும் உலர்த்திய பிறகு இருக்கும் ஈரம் 5-6 சதம்.
இதைத் திறந்த வெளியில், பகலில் உலர்த்த 90-94 மணி நேரம் ஆகும். இதையே சூரியக் கூடத்தில் உலர்த்த 50-55 மணி நேரமும், ஒருங்கிணைந்த உலர்த்தில் உலர்த்த 48-52 மணி நேரமும் ஆகும்.
வெளியில் உலர்த்திய தேங்காயில் 63-66 சதம், சூரியக் கூடத்தில் உலர்த்திய தேங்காயில் 66-70 சதம், ஒருங்கிணைந்த உலர்த்தியில் உலர்த்திய தேங்காயில் 70-72 சதம் எண்ணெய் கிடைக்கும்.
வெளியில் உலர்த்தினால், பூசணத் தாக்கம், காற்று மாசு கலக்கும். மற்ற இரு முறைகளில் உலர்த்தினால் சுத்தமான எண்ணெய் கிடைக்கும்.
வெளியில் உலர்த்த, ஒரு கிலோ தேங்காய்க்கு ரூ.2.8 வீதம் செலவாகும். சூரிய உலர்த்தியில் உலர்த்த, கிலோவுக்கு ரூ.1.2 வீதம் செலவாகும். ஒருங்கிணைந்த முறையில் உலர்த்த, கிலோவுக்கு ரூ.1.8 செலவாகும்.
மேலும் விவரங்களுக்கு: கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள வேளாண்மைப் பொறியியல் கல்லூரியின், புதுப்பிக்கவல்ல ஆற்றல் பொறியியல் துறை, பேராசிரியர் மற்றும் தலைவரை அணுகலாம். தொலைபேசி: 0422 – 6611276.
பேராசிரியர் மற்றும் தலைவர், புதுப்பிக்கவல்ல ஆற்றல் பொறியியல் துறை, வேளாண்மைப் பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 641 003.
சந்தேகமா? கேளுங்கள்!