My page - topic 1, topic 2, topic 3

மாவைத் தாக்கும் சாம்பல் நோய்!

மாவைத் தாக்கும் சாம்பல் நோய், ஆய்டியம் மான்ஜிஃபெரா என்னும் பூசணம் மூலம் உருவாகிறது. அமெரிக்கா, ஜமேய்க்கா, பிரேசில், இலங்கை, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் காணப்படும் இந்நோய், இந்தியாவில் மா பயிராகும் எல்லா மாநிலங்களிலும் உள்ளது. அனைத்து மா இரகங்களையும் தாக்கும். டிசம்பர் முதல் மார்ச் வரை, இந்நோய் மிகத் தீவிரமாக இருக்கும்.

நோயின் அறிகுறிகள்

வெண்மை அல்லது சாம்பல் நிறப் பொடியைத் தூவியதைப் போல, நோய் தாக்கிய பாகங்களில் இப்பூசண வளர்ச்சி இருக்கும். பூங்கொத்தின் நுனியை இப்பூசணம் முதலில் தாக்கும். பிறகு, கீழ் நோக்கிப் பரவி, பூங்கொத்து முழுவதையும் தாக்குவதோடு, தண்டு, தளிர் இலைகள், கிளைகள் ஆகிய பாகங்களையும் தாக்கும்.

தாக்கப்பட்ட பூவின் பாகங்கள், கரிந்து உதிர்ந்து விடும். பிஞ்சுக் காய்கள் தோன்றினாலும், அவை விரைவில் உதிர்ந்து விடும் அல்லது உருமாறி, நிறம் மாறி விடும். அதிகமாகத் தாக்கப்பட்ட மரங்களில் மகசூல் இழப்பு, 70-80 சதத்தை எட்டிவிடக் கூடும்.

நோய்க்காரணி

இந்நோயை உருவாக்கும் பூசணம் முழு ஒட்டுண்ணி ஆகும். பூசண இழைகள், தாக்கப்பட்ட பகுதிகளின் வெளிப்பரப்பில் மட்டுமே காணப்படும். இழைகள் நிறமற்றும், நன்கு கிளைத்துப் படர்ந்து வளர்ந்தும், குறுக்குச் சுவர்களைக் கொண்டும் தென்படும்.

மேலும், இந்நோய் கொனிடியா மூலமும் பரவும். வித்துத் தண்டுகளின் நுனியில் இருந்து, சங்கிலித் தொடரைப் போல, கொனிடியா வித்துகள் தோன்றும். தாக்கப்பட்ட பகுதிகளின் மேற்பரப்பில் காணப்படும் பூசண இழைகள், வித்துத் தண்டுகள் மற்றும் கொனிடியா வித்துகள், வெண்மை அல்லது சாம்பலைத் தூவியதைப் போலிருக்கும்.

நோய் பரவும் விதம்

இந்நோய் பெரும்பாலும் காற்றினால் பரவும். காய்ந்து போன இலைகள் மற்றும் கிளைகளின் கரிந்த நுனிப் பகுதியில், உறங்கும் நிலையில் காணப்படும் பூசண இழைகள், நோய் புதிதாகத் தோன்ற ஏதுவாகும். நல்ல ஈரப்பதம், மிதமான பகல் நேர வெப்பம், குளிர்ந்த இரவு, இந்நோய் வேகமாகப் பரவ ஏற்ற சூழலாகும்.

கட்டுப்படுத்துதல்

உழவியல் முறைகள்: பின்னோக்கிக் கருகல் அறிகுறிகள் தென்படும் கிளைகளை, வெட்டி எரித்துவிட வேண்டும். நிலத்தில் கிடக்கும் நோயுற்ற இலைகள், பூங்கொத்துகள், கிளைகள் போன்றவற்றைச் சேகரித்து எரித்து விட வேண்டும்.

மருந்து சிகிச்சை: கந்தகத் தூளை இலைகள், கிளைகள், பூங்கொத்துகள் ஆகியவற்றில் நன்கு படுமாறு தூவ வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு, 4 கிராம் நனையும் கந்தகம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். பூக்கள் விரிவதற்கு முன்பு ஒருமுறையும், பிஞ்சு, காய்கள் தோன்றிய பிறகு ஒருமுறையும் தெளிக்க வேண்டும்.

மரத்தின் வளர்ச்சியைப் பொறுத்து, ஒரு மரத்துக்கு, 1-1.5 கிலோ தூவு தூள் மருந்து அல்லது 10-20 லிட்டர் தெளிப்பு மருந்துக் கலவை தேவைப்படும். மரம் ஒன்றுக்கு 0.5 கிலோ கந்தகத் தூளைத் தூவ வேண்டும்.

மேலும், பூக்கும் பருவத்துக்குப் பிறகு, இரண்டாவதாக, ஈரமான கந்தகம் 0.2 சதம் அல்லது கார்பென்டசிம் 0.1 சதம் அல்லது டிரைடிமார்ப் 0.1 சதம் மருந்தைத் தெளிக்க வேண்டும்.


சு.சுகுணா, வி.ம.சீனிவாசன், பி.கார்த்திக், தந்தை ரோவர் வேளாண்மைக் கல்லூரி பெரம்பலூர்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks