தென்னந் தோப்புக்கு ஏற்ற ஊடுபயிர் கோகோ!

லகளவில் சாக்லேட் உணவுப் பொருள்கள், சுவையுள்ள குளிர் பானங்கள் மற்றும் மருத்துவப் பொருள்களில் மூலப் பொருளாக, கோகோ பயன்பட்டு வருகிறது. இதன் தேவை ஆண்டுக்கு 15-20 சதவீதம் அதிகமாகி வருகிறது.

இந்தியாவில் இதன் தேவை, உற்பத்தியை விடக் கூடுதலாக இருப்பதால், 60-70 சதம் வரை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

ஐவர் கோஸ்ட் நாடு, ஆண்டுக்கு 12 இலட்சம் டன் விதைகளை உற்பத்தி செய்து, உலகளவில் முதலிடம் வகிக்கிறது. கானா 7.2 இலட்சம் டன், இந்தோனேசியா 4.4 இலட்சம் டன், காமரூன் 1.75 இலட்சம் டன், நைஜீரியா 1.60 இலட்சம் டன் என, கோகோ விதை உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. இந்தியாவின் உற்பத்தி உலகளவில் 0.3 சதமாக உள்ளது.

தென்னை பற்றும் பாக்குத் தோப்புகளில் ஊடுபயிராகக் கோகோவை சாகுபடி செய்யலாம். 50-60 சதம் சீரான நிழல், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருத்தல், மழை மற்றும் பாசன வசதியுள்ள இடங்கள் மிகவும் ஏற்றவை.

தென்னமெரிக்க அமேசான் ஆற்றுப் படுகையைத் தாயகமாகக் கொண்ட கோகோ, பூமத்திய ரேகையில் இருந்து 10-20 டிகிரி வடக்கிலும், அதேயளவு தெற்கிலும் உள்ள நாடுகளில் பயிரிடப்படுகிறது.

தாவரவியல் பண்புகள்

தியோபிரம்மா கோகோ இதன் தாவரவியல் பெயராகும். இது, மால்வேசியே குடும்பத்தைச் சேர்ந்தது. கோகோவில், க்ரையல்லோ, ஃபாரஸ்டிரோ என இரு வகைகள் உள்ளன. இவற்றில், க்ரையல்லோ சிவப்புக் காய்களையும், ஃபாரஸ்டிரோ பச்சை மற்றும் மஞ்சள் காய்களையும் காய்க்கும். இந்தியாவில் ஃபாரஸ்டிரோ கோகோ பெருமளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

இனப்பெருக்கம்

கோகோ செடிகள் உற்பத்தி, விதை மற்றும் விதையில்லா முறையில் நடைபெறுகிறது. ஆனால், விதை மூலமான உற்பத்தியே அதிகமாகும். கூடுதல் மகசூலைத் தரும் மரங்களில் இருந்து, ஒட்டுக் கன்றுகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

மண் மற்றும் நீர்வளம்

மண்ணின் கார அமிலத் தன்மை 4.5-8.0 வரையுள்ள நிலத்தில் கோகோ நன்கு வளரும். நீரிலுள்ள உப்பின் அளவு 1.5 மி.மோஸ்/ கிராமுக்குக் குறைவாக இருக்க வேண்டும்.

தென்னையில் ஊடுபயிர்

இருபது ஆண்டுக்கு மேற்பட்ட தென்னந் தோப்பில் இடைவெளியைப் பொறுத்து, ஏக்கருக்கு 200 செடிகள் வரை பயிரிடலாம். இளம் செடிகளுக்கு 50 சதம் நிழல் வேண்டும்.
25 அடி மற்றும் அதற்கு மேல் இடைவெளி உள்ள தென்னந் தோப்பில், இரண்டு தென்னை வரிசைக்கு இடையில், பத்தடி இடைவெளியிலும், இரண்டு தென்னை மரங்களுக்கு நடுவில் ஒரு கோகோ செடி வீதமும் நடலாம்.

பாக்குத் தோப்பில் ஊடுபயிர்

எட்டடி இடைவெளியில் நடப்பட்ட, எட்டு ஆண்டுக்கு மேலான பாக்குத் தோப்பில், இரண்டு பாக்குமர வரிசைக்கு இடையில், 16 அடி இடைவெளியில் கோகோ செடிகளை நடலாம்.

குழியும் நடவும்

கோகோ செடி நடவுக் குழிகளை 1.5 அடி நீள, அகல, ஆழத்தில் எடுக்க வேண்டும். இவற்றை ஒரு மாதம் வரை ஆறப்போட வேண்டும். பிறகு, மண் மற்றும் தொழுவுரத்தை 3:1 வீதம் கலந்து நிரப்ப வேண்டும்.

செடியின் வேர்ப் பகுதியில் இருக்கும் மண்ணின் மேற்பரப்பும், பூமியின் மேற்பரப்பும் சமமாக உள்ளபடி நட வேண்டும். பிறகு, செடியைச் சுற்றிக் கைகளால் மண்ணை அணைத்து விட வேண்டும். கால்களால் மிதித்து விடக்கூடாது.

பராமரிப்பு

தென்னந் தோப்பின் ஓரத்தில் நட்ட செடிகளுக்குக் கூடுதல் நிழல் கிடைக்க வகை செய்ய வேண்டும். இதற்கு, தென்னை மட்டையின் நுனியை வெட்டி, செடியின் அருகே நட்டுத் தற்காலிக நிழலைத் தரலாம். கோகோ செடிகள் மரங்களாக வளரும் வரையில், களைகளை நீக்கிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

இலைகளை அதிகமாக உற்பத்தி செய்யும் தன்மை கோகோவுக்கு இருப்பதால், ஓர் எக்டரிலுள்ள கோகோ மூலம், ஆண்டுக்கு 800 கிலோ இலைகள் உதிர்ந்து நிலத்துக்கு உரமாகும். இந்த இலைகளை மூடாக்காக இட்டு, மண்வளம் மற்றும் நிலத்தின் ஈரத்தைக் கூட்டலாம்.

நீரும் உரமும்

கோகோவுக்கு ஆண்டு முழுவதும் சீராக ஈரப்பதம் இருக்க வேண்டும். கோடையில், மரத்துக்கு 20 லிட்டர் நீர் வீதம் தினமும் கொடுக்க வேண்டும். சொட்டு நீராக அல்லது வாய்க்கால் மூலம் பாசனம் செய்யலாம். மரத்துக்கு 220 கிராம் யூரியா, 250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 240 கிராம் பொட்டாஷ் வீதம் இட வேண்டும்.

ஓராண்டுச் செடிகளுக்கு இந்த உரங்களில் மூன்றில் ஒரு பகுதியை, அதாவது, 75 கிராம் யூரியா, 85 கிராம் சூப்பர் பாஸ்பேட், 80 கிராம் பொட்டாசை, இரண்டு பாகமாகப் பிரித்து, நடவு செய்த நாளிலிருந்து ஆறு மாத இடைவெளியில் இட வேண்டும்.

இரண்டாம் ஆண்டில், இந்த உரங்களில் இரண்டு பங்கை, அதாவது, 145 கிராம் யூரியா, 165 கிராம் சூப்பர் பாஸ்பேட், 100 கிராம் பொட்டாசை, மூன்று பாகமாகப் பிரித்து, நான்கு மாத இடைவெளியில் இட வேண்டும்.

மூன்றாம் ஆண்டில், 220 கிராம் யூரியா, 250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 240 கிராம் பொட்டாசை, மூன்று பாகமாகப் பிரித்து, நான்கு மாத இடைவெளியில் இட வேண்டும்.
இரண்டு கிலோ உலர் விதைகளைத் தருமளவில் வளர்ந்த கோகோ மரங்களுக்கு, அதாவது, ஐந்தாண்டுக்குப் பிறகு, 220 கிராம் யூரியா, 250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 240 கிராம் பொட்டாசை, நான்கு பாகமாகப் பிரித்து மூன்று மாத இடைவெளியில் இட வேண்டும்.

பொதுவாக, கோகோவில் இரும்பு, துத்தநாகச் சத்துக் குறை இருப்பதால், ஆண்டுக்கு இருமுறை 0.5 சத அளவில், துத்தநாக சல்பேட் மற்றும் அன்னபேதி உப்புக் கரைசலை, கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

கவாத்து

செடிகளை நட்ட இரண்டு ஆண்டில் உருவகக் கவாத்து, அதாவது, முக்கியத் தண்டில் தோன்றும் போத்துகளை அவ்வப்போது கிள்ளி விட வேண்டும். செடிகளின் விசிறிக் கிளைகளை, குடையைப் போல வடிவமைக்க வேண்டும்.

மூன்றாண்டுகள் கழித்து, துப்புரவுக் கவாத்து, அதாவது, நோயுற்ற, காய்ந்த கிளைகளை நீக்க வேண்டும். விசிறிக் கிளைகளில் இருந்து மேல் நோக்கி வளரும் போத்துகளை, கூரிய கத்தியால் வெட்டிவிட வேண்டும்.

வெட்டுப் பகுதியில், தாமிரப் பூசணக் கொல்லிப் பசையைத் தடவ வேண்டும். நோயுற்ற மற்றும் பூச்சிகள் தாக்கிய, காய், பழங்களை, பூங்கொத்தைப் பாதிக்காத வகையில், கூரிய கத்தியால் நீக்க வேண்டும்.

பூக்கும் தன்மை

நட்ட 2-3 ஆண்டுகளில் கோகோ மரங்கள் பூக்கத் தொடங்கும். முக்கியக் கிளைகள் மற்றும் விசிறிக் கிளைகளில் பூங்கொத்துகள் உருவாகும். ஒவ்வொரு கொத்திலும் 10-20 பூக்கள் இருக்கும். மரத்தில் பூக்கும் பூக்கள் அனைத்தும் காயாக மாறாது. மே, ஜூன் மற்றும் நவம்பரில் பூக்கள் அதிகமாகத் தோன்றும்.

பயிர்ப் பாதுகாப்பு: பூச்சிகள்

மாவுப்பூச்சி: இது, இளந்தளிர்கள், பூக்கள், காய்கள் மற்றும் தண்டிலுள்ள சாற்றை உறிஞ்சும். கோடையில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால், பூக்களும் காய்களும் கருகி உதிர்ந்து விடும்.

இதன் தாக்கம் குறைவாக இருக்கும் போது, ஒரு லிட்டர் நீருக்கு 3 சத வேப்ப எண்ணெய், 25 கிராம் மீன் எண்ணெய் சோப் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது ஏக்கருக்கு 400 மில்லி புரப்பனபாஸ் அல்லது 200 மில்லி டைமெத்தயேட் வீதம் தெளிக்கலாம்.

தேயிலைக் கொசு: இது, காய்களில் உள்ள சாற்றை உறிஞ்சும். இதனால் தாக்கப்பட்ட காய்களில், நீர்க் கோர்த்த சாம்பல் நிறப் புள்ளிகள் வட்டமாகத் தோன்றும்.

பிறகு, இவை கறுப்பாக மாறும் போது காய்கள் சிறுத்து உருமாறி விடும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி புரப்பனபாஸ் அல்லது 0.5 மில்லி இமிடா குளோபிரிட் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

அசுவினி: இது, பக்கக் கிளைகள் மற்றும் இளம் கிளைகளில், கூட்டம் கூட்டமாக இருந்து சாற்றை உறிஞ்சும். தாக்கம் மிகும் போது, இளம் பூக்களும் தளிர் இலைகளும் கொட்டத் தொடங்கும்.

இதைக் கட்டுப்படுத்த, 100 லிட்டர் நீரில் 200 மில்லி டைமெத்தயேட் மருந்தைக் கலந்து தெளிக்க வேண்டும்.

இலைத் தின்னிப் புழுக்கள்: கம்பளிப் புழு, கூடைப் புழு, சிலவகைக் காவடிப் புழுக்கள் ஆகியன, இளந் தளிர்கள், இளந் தண்டுகளைத் தின்று சேதம் செய்யும். இவற்றால் இளஞ் செடிகளும், சிறிய மரங்களும் பெரிதும் பாதிக்கப்படும்.

இவற்றைக் கட்டுப்படுத்த, புழுக்களைப் பிடித்து அழிக்கலாம். மேலும், 100 லிட்டர் நீரில் 200 மில்லி டைமெத்தயேட்டைக் கலந்து தெளிக்கலாம்.

எலிகள், அணில்கள்: அணில்கள், கோகோ பழ விதைகளைச் சதையுடன் கொரிக்கும். இளம் மற்றும் முற்றிய காய்களைக் கடித்துச் சேதம் செய்யும். கோகோவைத் தென்னையில் ஊடுபயிராக இடும் போது எலித்தொல்லை அதிகமாக இருக்கும். அணிலைப் போலவே சேதத்தை ஏற்படுத்தும்.

இவற்றைக் கட்டுப்படுத்த, மெழுகுக் கட்டிகளை மரக் கிளைகளில் 12 நாட்கள் இடைவெளியில் இருமுறை வைக்கலாம். பொறிகள் மூலம் அணில்களைக் கட்டுப்படுத்தலாம். முற்றிய காய்களை அவ்வப்போது அறுவடை செய்து விட வேண்டும்.

நோய்கள்: கருங்காய் நோய்: காயிலிருந்து பழமாகும் வரை, எந்த நிலையிலும் இந்நோய் தாக்கலாம். காய் அல்லது பழத்தில் கரும் வட்டப் புள்ளிகள், நீர்க் கோர்த்த பழுப்பு நிறத்தில் தோன்றிப் பரவும். இதனால், காய்கள் கறுப்பாக அல்லது கரும் பழுப்பாக மாறும். காய்களின் உட்பகுதியும் கறுப்பாக மாறுவதால் விதைகள் அழுகி விடும்.

இதைக் கட்டுப்படுத்த, காய்ந்த மற்றும் நோயுற்ற காய், பழங்களை அகற்ற வேண்டும். நல்ல வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும். நிழலைக் குறைத்து, நல்ல காற்றோட்டம் கிடைக்கச் செய்ய வேண்டும். ஒரு சத போர்டோ கலவையை, மழைக்கு முன் ஒரு முறையும், தேவைப்படின் மீண்டும் ஒரு முறையும் தெளிக்க வேண்டும்.

கேங்கர் நோய்: இது, மரத்தண்டில், விசிறிக் கிளைகளில் தோன்றும். முதலில் நீர்க் கோர்த்த சாம்பல் நிறப் புள்ளிகள் தோன்றும். இவை, நாளாக நாளாகச் சிவப்பாக மாறும். இப்பகுதியில் இருந்து சிவப்புத் திரவம் வழிந்து காய்ந்து விடும்.

இதனால், மரத்தண்டின் நடுப்பகுதி பிளந்து, மரம் ஒடிந்து விடும். இந்நோய்க் காரணியான பூஞ்சை, கருங்காய் நோயுற்ற காய்களில் இருந்தும், மண்ணில் இருந்தும் மரத்துக்குப் பரவும்.

இதைக் கட்டுப்படுத்த, கருங்காய் நோயுற்ற காய்களைப் பறித்து அகற்ற வேண்டும். நல்ல வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும். தொடக்க நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் செதுக்கி விட்டு, போர்டோ பசையைத் தடவ வேண்டும்.

மரக்கரிக்காய் அழுகல் நோய்: இது, கோடையில், காய் முதல் பழம் வரையான எல்லா நிலைகளிலும் அதிகமாகத் தாக்கும். காய், பழம் மற்றும் தண்டில் அல்லது நுனியில் மஞ்சள் புள்ளிகள் தோன்றும்.

பிறகு, இவை பெரிதாகி, எல்லா இடங்களிலும் பரவி, சாக்லேட் பழுப்பு நிறமாகும். காய்கள் மற்றும் பழங்களில் பூசண விதைகள் தோன்றுவதால், கரும்பாசி படர்ந்ததைப் போலத் தெரியும்.

இதைக் கட்டுப்படுத்த, சிறந்த உத்திகளைப் பின்பற்றி மரங்களை நன்கு பராமரிக்க வேண்டும். நோயுற்ற காய்களை, பழங்களை நீக்க வேண்டும். ஒரு சத போர்டோ கலவையைத் தெளிக்க வேண்டும்.

இளங்காய் வாடல் அல்லது செர்லி வாடல் நோய்: இது, பிஞ்சுகளைத் தீவிரமாகத் தாக்கும். ஜனவரி முதல் மே வரை அதிகமாக இருக்கும். நோயுற்ற பிஞ்சுகள் சுருங்கி உருமாறி, கீழே விழாமல் ஒட்டிக் கொண்டிருக்கும்.

பூச்சி, பூசணத் தாக்குதல், சத்துக்குறை மற்றும் அதிகக் காய்கள் உற்பத்தி போன்றவை இந்நோய்க்கான காரணங்கள் ஆகும். இதைக் கட்டுப்படுத்த, நோய்க் காரணியை அறிந்து நடவடிக்கை வேண்டும்.

பூசணக் கொல்லிகள் தயாரிப்பு

ஒரு சத போர்டோ கலவை: மண் அல்லது நெகிழிப் பாத்திரத்தில் ஒரு கிலோ மயில் துத்தத்தை எடுத்து 50 லிட்டர் நீரில் கலக்க வேண்டும். பிறகு, ஒரு கிலோ சுண்ணாம்புத் தூளை எடுத்து 50 லிட்டர் நீரில் வேறொரு பாத்திரத்தில் கலக்க வேண்டும்.

பிறகு, மயில் துத்தக் கரைசலை மெதுவாகச் சுண்ணாம்புக் கரைசலில் இட்டு நன்கு கலக்க வேண்டும். இந்த போர்டோ கலவையின் கார அமிலத் தன்மை நடுநிலையில் (7.0) இருக்க வேண்டும்.

இதைக் கண்டறிய, நன்கு தீட்டிய கத்தியை இந்தக் கரைசலில் முக்கி எடுக்க வேண்டும், அப்போது, பளபளப்பான பகுதியில் செம்படிவு அல்லது துரு இருந்தால் அமிலத் தன்மை அதிகம் என்று பொருளாகும். இதைச் சரி செய்ய, சுண்ணாம்புக் கரைசலை மேலும் கலந்து நடுநிலைக்குக் கொண்டு வர வேண்டும்.

பத்து சத போர்டோ பசை: ஒரு கிலோ மயில் துத்தம், ஒரு கிலோ சுண்ணாம்புத் தூளை எடுத்து, பத்து லிட்டர் நீரில் கலந்து இந்தப் பசையைத் தயாரிக்க வேண்டும்.

அறுவடை

இரண்டு மூன்று ஆண்டுகளில் காய்கள் காய்க்கத் தொடங்கும். பூக்கள் பூத்து 120-150 நாட்களில் காய்கள் அறுவடைக்கு வரும். முற்றிய காய்கள் இளமஞ்சள் நிறமாக மாறும் போது அறுவடை செய்ய வேண்டும்.

பூ மெத்தையைப் பாதிக்காத வகையில், கத்தியால் வெட்டி அறுவடை செய்ய வேண்டும். ஐந்தாண்டுக்குப் பிறகு மரத்துக்கு 1-2 கிலோ உலர் விதைகள் வீதம் கிடைக்கும்.

பின்செய் நேர்த்தி

பழுக்க வைத்தல்: அறுவடை செய்த காய்களை நிழலில் 5-6 நாட்கள் குவித்து வைத்து, சீராகப் பழுக்க வைக்க வேண்டும். இதனால், விதைகளில் உள்ள அமிலத் தன்மை குறைந்து வாசத்தன்மை ஏற்படும். மேலும், இதனால் உலர் விதையின் எடையும் கூடும்.

விதைகளைப் பிரித்தல்: நன்றாகப் பழுத்த பழங்களைச் சிறிய தடியால், தேங்காயை உடைப்பதைப் போலச் சரிபாதியாக உடைத்து, விதைகளைத் தனியாகப் பிரித்தெடுக்க வேண்டும். விதைகள் நசுங்காத வகையில் பழங்களை உடைக்க வேண்டும்.

நொதிக்க வைத்தல்: சதையுடன் பிரித்த விதைகளை நொதிக்க வைத்துப் பதப்படுத்த வேண்டும். விதையைச் சுற்றியுள்ள வழவழப்பான சதையை நீக்க, முளையைக் கொல்ல, விதையுறையை இளக்க வைக்க, கசப்பைக் குறைத்து மணத்தையும் சுவையையும் கூட்ட, நொதிக்க வைத்தல் அவசியமாகும்.

பெட்டி முறையில் நொதிக்க வைத்தல்: அதிகளவு விதைகளை நொதிக்க வைக்க இம்முறை பயன்படும். இதற்கு 120x95x75 செ.மீ. அளவுள்ள மரப்பெட்டியைப் பயன்படுத்தலாம். சதைக்கூழ் வழிந்து போகும் வகையிலும், காற்றுச் சுழற்சி ஏற்படும் வகையிலும், பெட்டியின் அடிப்பகுதி சற்று உயரமாக இருக்கும்படி, சட்டங்களைக் கொண்டு வடிவமைக்க வேண்டும்.

இம்முறையில், குறைந்தது மூன்று பெட்டிகள் வரிசையாக வைக்கப்படும். அதாவது, ஒரு பெட்டியில் இருந்து அடுத்த பெட்டிக்கு விதைகள் நகரும் வகையில் அடுக்காக இப்பெட்டிகள் அமைக்கப்படும்.

பெட்டிகளில் விதைகளை நிரப்பி அவற்றின் மேற்பகுதியை வாழையிலை அல்லது சாக்கால் மூடிவிட வேண்டும். மூன்று மற்றும் ஐந்தாம் நாளில் விதைகளை நன்றாகக் கிளறி விட வேண்டும். பெட்டிகளில் வைத்து ஏழு நாட்கள் கழித்து விதைகளை எடுத்து உலர்த்த வேண்டும்.

கூடை முறையில் நொதிக்க வைத்தல்: மூங்கில் கூடைகளின் அடியில் சதைக்கூழ் வடிந்து போகும் வகையில் மூன்று தாங்கிகளை வைக்க வேண்டும். இதற்குக் கூடையில் வாழையிலையைப் பரப்பி, அதில் விதைகளை நிரப்ப வேண்டும்.

கூடையின் மேற்பகுதியை வாழையிலையில் மூடி, அதன் மேல் கனமான பொருளை வைக்க வேண்டும். மூன்று மற்றும் ஐந்தாம் நாளில் விதைகளை நன்றாகக் கிளறி விட்டு, வாழையிலையில் மூடி வைக்க வேண்டும். ஏழு நாட்கள் கழித்து விதைகளை வெளியே எடுக்க வேண்டும். ஊதா நிறமாக இருக்கும் விதையின் உட்புறம் காப்பி நிறமாக மாறத் தொடங்கும்.

உலர்த்திச் சேமித்தல்

சுத்தமான களத்தில் விதைகளைச் சீராகப் பரப்பி வெய்யிலில் உலர்த்த வேண்டும். 7-10 நாட்களில் விதைகளின் ஈரப்பதம் எழுபதில் இருந்து 6.5 சதமாகக் குறைந்து விடும். உலர்த்தும் போது தினமும் விதைகளைக் கிளறி விட வேண்டும்.

நன்கு காய்ந்த விதைகளைச் சுத்தமான சாக்குப் பைகளில் நிரப்பி, காற்று, ஈரப்பதம் இல்லாத அறையில் மரக்கட்டைகளை அடுக்கி அவற்றின் மேல் சாக்குப் பைகளை வைக்க வேண்டும்.


முனைவர் ரெ.பாஸ்கரன், முனைவர் வெ.சிவக்குமார், முனைவர் அ.காமராஜ், முனைவர் இரா.இரமேஷ், துரை.நக்கீரன், வேளாண்மை அறிவியல் நிலையம், நீடாமங்கலம், திருவாரூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!