My page - topic 1, topic 2, topic 3

கோடையிலும் குளிர் காலத்திலும் அசோலா பராமரிப்பு!

விவசாயத்தில் விளைச்சலைப் பெருக்குவதில், குறிப்பாக, நெல் மகசூலைக் கூட்டுவதில், அசோலா பெரும்பங்கு வகிக்கிறது. இதில், புரதம் மிகுதியாக இருப்பதால், ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளின் தீவனமாகவும் பயன்படுகிறது. இதைப் பச்சையாகவும், உலர வைத்தும் தீவனமாகத் தரலாம்.

மிக எளிதாக அசோலாவை உற்பத்தி செய்ய முடிந்தாலும், ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்ய விவசாயிகளால் முடியவில்லை. இதற்குக் காரணம், கோடையில் வெப்பக்காற்று வீசுவதே ஆகும். நல்ல நிழல், நன்னீர், உர நிர்வாகம் போன்றவை சரியாக இருப்பினும், வளர்ச்சிக் குறைந்து கடைசியில் காய்ந்து விடுகிறது.

நல்ல வாய்ப்பான சூழலில் 20x5x05 அடி நீள, அகல, ஆழமுள்ள பாத்தியில், 10-15 நாட்களில் 3-3.5 கிலோ அசோலா கிடைக்கும். ஆனால், அதிகக் குளிர் மற்றும் வெப்பக் காலத்தில் இதன் வளர்ச்சிக் குறைந்து விடுகிறது. அசோலா, 27-30 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் நன்கு வளரும்.

32-35 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையைத் தாங்கி வளரும் என்றாலும், இதே வெப்பநிலை தொடர்ந்தால், இதன் தண்டுப் பெருக்கம் பாதிக்கப்படும். ஒளி அடர்த்தி 15001 UX மற்றும் ஈரப்பதம் 60-70 சதம் இருத்தல், அசோலா வளர்ந்திட ஏற்ற சூழலாகும். ஈரப்பதம் 60 சதத்துக்குக் குறைந்தால் காய்ந்து விடும்.

கோடைக்காலப் பராமரிப்பு

அசோலாப் பாத்தியை, நிழலும் வெய்யிலும் கிடைக்கும் இடத்தில் அமைக்க வேண்டும். பாத்தியில் நேரடியாக வெய்யில் விழுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, பகல் 12 முதல் மாலை 3 மணி வரை வெப்பம் அதிகமாக இருக்கும் போதும், வெப்பக் காற்று வீசும் போதும், பாத்தியின் ஒரு மூலையில் அசோலா தேங்கி விடும். இது, அசோலா நன்கு வளரும் முன்பே, பிரிந்து விடக் காரணமாகி விடுகிறது.

வெய்யில் கடுமையாகும் போது, அசோலா இதழ்கள் கருஞ்சிவப்பு நிறமாக மாறி விடும். அசோலாவின் வளர்ச்சிக்கு நன்னீர் அவசியம். வெப்பநிலை உயர்ந்தாலும், நன்னீரில் அசோலா இயல்பாக வளரும். ஒவ்வொரு அறுவடைக்குப் பின்பும், அசோலாப் பாத்தியில் உரமிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

அசோலா ஓர் உயிர் உரம். இதில் வாழும் அனபீனா அசோலே என்னும் பாக்டீரியா, காற்று வெளியில் உள்ள தழைச்சத்தை, அசோலா இலைகளில் தேக்கி வைக்கும். இந்தச் செயல் அசோலா வளரும் காலம் முழுவதும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

இதனால், தேங்கியுள்ள நீரில் தழைச்சத்துக் கூடுதலாகக் கரைந்திருக்கும். இப்படி, சத்துகளின் அடர்த்தி மிகுவதால், அசோலா வேர்கள் சத்துகளை உறிஞ்சுவது தடைபடும். அதனால் அவற்றின் வளர்ச்சிக் குறையும்.

இந்நிலையில், தேங்கியுள்ள நீர் முழுவதையும் மாற்றி விடுவது, அசோலாவின் வளர்ச்சிக்குத் துணையாகும். கோடையில் அசோலாப் பாத்தியில் உள்ள நீர் அதிகமாக ஆவியானால், 10-30 லிட்டர் நீரை, பாத்தியின் அளவுக்கு ஏற்ப, சேர்த்துக் கொள்ள வேண்டும்.

குளிர்காலப் பராமரிப்பு

அசோலாவின் அசோலா பிலிகுலாய்டஸ் போன்ற சில சிற்றினங்கள், 5 டிகிரி குளிரையும் தாங்கி வளரும். இந்த இனத்தை வெப்ப, மிதவெப்பப் பகுதிகளில் உற்பத்தி செய்ய முடியாது.

அசோலா பின்னேட்டா என்னும் இனம், பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் வளர்க்க ஏற்றதாகும். குளிருள்ள மாதங்களான டிசம்பர் முதல் பிப்ரவரி வரை அசோலாவின் வளர்ச்சிக் குறைவாக இருக்கும்.

ஏனெனில், அசோலா மிதந்து கொண்டிருக்கும் மேல்மட்ட நீர் அதிகக் குளிராக இருப்பதால், வேர்களின் வளர்ச்சித் தடைபடும். இந்தக் குளிர்ச்சியை மாற்ற, நீரில் மிதமான வெய்யில் படும்படி செய்ய வேண்டும்.

கவனிக்க வேண்டியவை

அசோலா பின்னேட்டா மற்றும் அசோலா மைக்ரோ பில்லா இனங்கள், வெப்ப நிலையைத் தாங்கி வளரும். 20 செ.மீ. முதல் 2 அடி வரை நீரைத் தேக்கி வைத்து இவற்றை வளர்க்கலாம்.

கார அமிலத் தன்மை 5-5.7 வரை இருக்கலாம். அமிலத் தன்மை அதிகமாக (< 3.5) இருந்தால் வளராது. இதைப் போல, காற்று அதிகமாக வீசும் இடங்களிலும் அசோலாவின் வளர்ச்சித் தடைபடும்.

நைட்ரஜன் சத்துக் குறைவாக அல்லது இல்லாத இடங்களிலும் அசோலா நன்கு வளரும். தொட்டி அல்லது பாத்தியில் வளர்க்கும் போது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, நீரையும் மண்ணையும் முற்றிலும் மாற்றி விட்டு, புதிய மண், நீரைப் பயன்படுத்த வேண்டும்.

20x5x05 அடி நீள, அகல, ஆழமுள்ள பாத்தி, அசோலாவை வளர்க்க ஏற்றதாகும். தேவைக்கு ஏற்ப, இந்த அளவில் பாத்திகளை அமைத்துக் கொள்ளலாம்.

தீவனமாகக் கொடுத்தல்

கறவை மாடு, உழவு மாட்டுக்குத் தினமும் 1-1.5 கிலோ அசோலாவைத் தரலாம். முட்டைக் கோழி, இறைச்சிக் கோழி, வான்கோழிக்குத் தினமும் 20-25 கிராம் வீதம் கொடுக்கலாம்.

வெள்ளாடு மற்றும் செம்மறி ஆட்டுக்குத் தினமும் 300-500 கிராம் வீதம் கொடுக்கலாம். வெண் பன்றிக்குத் தினமும் 1.5-2 கிலோ வீதம் தரலாம்.

முயலுக்குத் தினமும் 100 கிராம் வீதம் தரலாம். அசோலா அதிகமாகக் கிடைத்தால் அதை உலர்த்தி, அடர் தீவனத்துடன் கலந்தும் கொடுக்கலாம்.

இதுவரை கூறியுள்ள உத்திகளைக் கடைப்பிடித்தால், ஆண்டு முழுவதும் அசோலாவைச் சிறப்பாக உற்பத்தி செய்து கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தலாம்.


DAISY

முனைவர் மா.டெய்சி, முனைவர் கி.செந்தில்குமார், வேளாண்மை அறிவியல் நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகம், நாமக்கல்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks