அசோலா தனித்தன்மை வாய்ந்த தாவரமாகும். ஏனெனில், இது வளர்வதற்கு மண் தேவையில்லை. மேலும், மிக வேகமாக வளரும் அசோலா, 2-3 நாட்களில் இரண்டு மடங்காகப் பெருகி விடும்.
காற்று வெளியில் உள்ள கார்பன் டை ஆக்சைடை நிலை நிறுத்தி, தழைச்சத்து சார்ந்த பொருள்களை உருவாக்குவதால், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறையும்.
தழைச்சத்தை நிலை நிறுத்தும் அசோலா, மேலும் பல நன்மைகளை நெற்பயிருக்கு அளிக்கிறது. நெல் வயல்களில் அடர்ந்து பரவி, களைகளைக் கட்டுப்படுத்துகிறது. எளிதில் சிதையும் அசோலா, தழை, மணி மற்றும் இதர சத்துகள் நெல் வயலில் வெளியிடும். இவை நெற்பயிருக்குப் பயன்படும்.
நெற்பயிரைக் காட்டிலும் சாம்பல் சத்தைக் கிரகித்துக் கொள்ளும் அசோலா, சாம்பல் சத்துக் குறைவாக உள்ள மண்ணில் சிதையும் போது, அங்குள்ள நெற்பயிருக்குச் சாம்பல் சத்து எளிதாகக் கிடைக்கும். மண்வளம் நெடுங்காலம் கெடாமல் இருக்க உதவுகிறது.
ஆலைக் கழிவு நீரிலுள்ள குரோமியம், காப்பர், துத்தநாகம் போன்ற கடின உலோகங்களை நீக்கும், உயிர்வளித் தீர்வாக அசோலா செயல்படுகிறது. நிலம் முழுதும் பரவும் அசோலா, நீருக்குள் வெய்யில் புகுவதைக் குறைத்து, ஆவியாதல் மூலம் ஏற்படும் தழைச்சத்து இழப்பைத் தடுக்கிறது.
மேலும், மண்ணில் அமில காரத் தன்மையை உயர விடாமல் தடுக்கிறது. அசோலாவை நெல்லுடன் சேர்த்து வளர்த்தால், மீத்தேன் வெளியாதல் குறைந்து, நெல் மகசூல் அதிகமாகும்.
முனைவர் த.உதயநந்தினி
சந்தேகமா? கேளுங்கள்!