நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை!
கிருஷ்ணகிரி வட்டாரம் கம்பம்பள்ளி கிராமத்தில், வேளாண்மை மற்றும் அட்மா திட்டத்தின் கீழ், நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப்பள்ளி வகுப்பு நடத்தப்பட்டது.
இப்பயிற்சியில், சிறப்புரை ஆற்றிய கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.பச்சையப்பன், நெல்லில் பண்ணைப்பள்ளி என்பது, அதிக மகசூல் பெற்ற விவசாயியின் வயலில் உழவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி வகுப்பாகும். அந்த வெற்றி விவசாயி பின்பற்றிய தொழில் நுட்பங்கள், விதை நேர்த்தி செய்து விதைத்தல், கையாண்ட ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை முறைகள், அறுவடை உத்திகள்,
அறுவடைக்குப் பிந்தைய செய்நேர்த்திகள் போன்றவற்றை, பிற விவசாயிகளும் கடைப்பிடித்து, அதிக மகசூல் பெற வழி வகுப்பது தான் பண்ணைப்பள்ளி பயிற்சியின் நோக்கமாகும் என்று கூறினார். மேலும், நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகளைப் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
கிருஷ்ணகிரி எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியல் மையத் தொழில் நுட்ப வல்லுநர் உதயன், நெல்லில் பின்பற்ற வேண்டிய சாகுபடி உத்திகள் குறித்தும்; நுண்ணுரம், உயிர் உரம் இட வேண்டியதன் அவசியம் குறித்தும், நெல் நடவு வயலில் ஏக்கருக்கு 10 கிலோ வீதம் ஜிங்க் சல்பேட் இட வேண்டிய தேவை குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
கிருஷ்ணகிரி உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் பன்னீர் செல்வம், அட்மா திட்டம் மற்றும் அவற்றின் செயல்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், விவசாயிகளுடன் உரையாடிய அவர், விவசாயத்தில் ஏற்படும் தொழில் நுட்ப ஐயங்களுக்கு, வேளாண்மைத் துறையை அணுகிப் பயன்பெற வேண்டும் என்று கூறினார்.
வேளாண்மை அலுவலர் எலிசபெத் மேரி, வேளாண்மைத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்களைப் பற்றி விளக்கினார். நெல்லில் பின்பற்ற வேண்டிய உத்திகள் குறித்த கையேட்டினை விவசாயிகளுக்கு வழங்கினார்.
உதவி வேளாண்மை அலுவலர் வி.விஜயன், திருந்திய நெல் சாகுபடி முறை, கோனோவீடர் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு எடுதுரைத்தார். இந்தப் பண்ணைப் பள்ளியில் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். பயிற்சிக்குத் தேவையான ஏற்பாடுகளை, அட்மா திட்ட உதவி தொழில் நுட்ப மேலாளர் சண்முகம், பார்வதி ஆகியோர் செய்திருந்தினர்.
செய்தி: கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்.
சந்தேகமா? கேளுங்கள்!