குறைந்த முதலீட்டில் ஒருங்கிணைந்த பண்ணையம்!

Integrated farm

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச்.

கால்நடைகளுடன் மீன் வளர்ப்பை மேற்கொண்டால், நீரையும் நிலத்தையும் முழுமையாகப் பயன்படுத்தலாம். கால்நடைக் கழிவுகள், மீன்களுக்கு நேரடி உணவாகவும், மீன் குளத்துக்கு உரமாவதன் மூலம் மறைமுக உணவாகவும் அமைவதால், மீன்களுக்கான தீவனச்செலவு குறைகிறது.

கால்நடைகளின் சாணம் அன்றாடம் குளத்தில் இடப்படுவதால், குளத்தில் உயிர்வளிக் குறைவு உண்டாவதில்லை. குளத்தின் இயற்கையான உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது. கால்நடைகளுக்குத் தேவையான நீரானது, குளத்தில் இருந்து கிடைத்து விடுவதால், இரண்டு தேவைகள் ஒரே செலவில் தீர்க்கப்படுகின்றன.

இப்படி, கால்நடை வளர்ப்புடன் மீன் வளர்ப்பையும் மேற்கொள்ளும் போது, குளக்கரையில் தீவனப் பயிர்கள் மற்றும் காய்கறிப் பயிர்களையும் வளர்க்கலாம். இதனால், கால்நடைத் தீவனமும், வீட்டுக்குக் காய்கறிகளும், எஞ்சும் கழிவுகள் மீன்களுக்கு உணவாகவும் கிடைக்கும்.

இப்படி, பலவகையான கால்நடை வளர்ப்பை மீன் வளர்ப்புடன் இணைக்கும் போது, ஒரு பிரிவில் சிறிது தொய்வோ, இழப்போ ஏற்பட்டாலும், அதை மற்றதன் மூலம் சரிக்கட்ட முடியும். இதனால், முதலீடு குறைந்து மகசூலும் வருமானமும் கூடுகின்றன; சத்தான உணவு கிடைக்கிறது; வேலை வாய்ப்பு அதிகமாகிறது; நிலம் வளமடைகிறது.

வாத்துகளுடன் மீன் வளர்ப்பு

வாத்துகளுடன் மீன்களை வளர்ப்பது சிறந்த ஒருங்கிணைந்த பண்ணை முறையாகும். வாத்துகள் நீருடன் தொடர்புடையவை என்பதால், இம்முறை சிறந்ததாக விளங்குகிறது. ஒரு ஏக்கர் பரப்பில் குளம் இருப்பது மீன் வளர்ப்புக்கு மிகச் சிறந்தது. நீரின் ஆழம் ஒரு மீட்டர் இருக்க வேண்டும். குளமானது நீரைத் தேக்கி வைக்கும் வகையில் களிமண் கலந்த இடமாகவும், நீரின் கார அமிலத் தன்மை 7.5 முதல் 8.5 வரையும் இருக்க வேண்டும்.

குளத்தின் மேலே மிக எளிமையாகக் குடிலை அமைத்தால் போதும். நீருக்கு மேலே ஒரு மீட்டர் உயரத்தில், ஒரு சதுரடிக்கு ஒரு வாத்து என்னும் கணக்கில் குடிலை அமைக்க வேண்டும். பகலில் குளத்தில் நீந்தித் திரியும் வாத்துகள், இரவில் குடிலில் தங்கும். ஒரு எக்டர் குளத்தில் 200 முதல் 250 வாத்துகள் வரையில் வளர்க்கலாம்.

ஒரு வாத்திலிருந்து 100 முதல் 150 கிராம் வரையில் கழிவு கிடைக்கும். இக்கழிவு, மீன்களுக்கு உணவாகவும், குளத்துக்கு உரமாகவும் பயன்படும். ஒரு வாத்துக்கு ஒரு நாளைக்கு 100 கிராம் தீவனம் கொடுக்க வேண்டும். தீவனத்துடன் குடிநீர் அளிப்பது மிகமிக அவசியம்.

மீன் குஞ்சுகளை இருப்பு வைத்து ஒரு மாதம் கழித்து வாத்துகளைக் குளத்தில் விட வேண்டும். அல்லது, மீன் குஞ்சுகள் 10 செ.மீ. வளர்ந்த பிறகு வாத்துகளை விட வேண்டும். இல்லையெனில் வாத்துகளுக்கு மீன் குஞ்சுகள் உணவாகும் வாய்ப்புகள் அதிகம். ஓராண்டில் ஒரு எக்டர் குளத்தில் 3,500 முதல் 4,000 கிலோ மீன்களையும், 18,000 முதல் 18,500 வாத்து முட்டைகளையும் பெறும் வாய்ப்பு உள்ளதால், வாத்துகளுடன் சேர்ந்து மீன்களை வளர்ப்பது, சிறந்த ஒருங்கிணைந்த பண்ணைய முறையாகும்.

பயன்கள்: வாத்துகளின் கழிவானது, மீன்களுக்கு உணவாகவும், குளத்துக்கு அங்கக உரமாகவும் பயன்படுகிறது. குளத்திலுள்ள புழு, பூச்சிகள், நத்தைகள் போன்ற தேவையற்ற உயிரிகளை வாத்துகள் உணவாகக் கொள்வதால், அவற்றுக்கான தீவனச் செலவு குறைகிறது. வாத்துகள் நீரைக் கிழித்துக் கொண்டு அங்குமிங்கும் நீந்துவதால், நீரில் கரைந்துள்ள உயிர்வளியின் அளவு அதிகமாகிறது.

மேலும், வாத்துகள் குளம் முழுவதும் நீந்துவதால், அவற்றின் கழிவு குளத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் கிடைக்க ஏதுவாகிறது. இம்முறையைத் தவிர, நெல் வயலில் மீன் வளர்ப்பு, தோட்டப்பயிர் மற்றும் தீவன மரங்களுடன் மீன் வளர்ப்பு என, பல்வேறு ஒருங்கிணைந்த பண்ணை முறைகள் உள்ளன.

கறவை மாடுகளுடன் மீன் வளர்ப்பு

கறவை மாடுகளுடன் ஒருங்கிணைத்து மீன் வளர்ப்பை மேற்கொள்வதும் அதிக இலாபத்தை அளிக்கக் கூடியது எனத் தெரிந்து, விவசாயிகள் பலர் இதைக் கடைப்பிடித்து வருகின்றனர். ஒரு எக்டருக்கு 5-6 கறவை மாடுகளை வளர்க்கலாம். 400-450 கிலோ எடையுள்ள ஒரு மாட்டில் இருந்து ஆண்டுக்கு 4 முதல் 5 டன் சாணம் மற்றும் 3,500-4000 லிட்டர் சிறுநீர் கிடைக்கும்.

சாணம் ஒரு நிமிடத்தில் 2-6 செ.மீ. ஆழம் வரை செல்லும். இது, சாணத்தை உணவாக மீன்கள் எடுத்துக்கொள்ளப் போதுமான நேரமாகும். கட்லா, வெள்ளிக் கெண்டை ஆகிய மீன்களுக்குச் சாணமும் சிறுநீரும் முழு உணவாகும்.

சாணத்தில், 0.2-0.4 சதம் தழைச்சத்தும், 0.5-0.8 சதம் மணிச்சத்தும், 0.10-0.7 சதம் சாம்பல் சத்தும் உள்ளன. மாட்டுச் சிறுநீரில், 1.1 சதம் தழைச்சத்தும், 1.4 சதம் சாம்பல் சத்தும் உள்ளன. இந்த அடிப்படையில், 5-6 மாடுகளில் இருந்து கிடைக்கும் சாணம், ஒரு எக்டர் குளத்திலுள்ள மீன்களுக்கான இயற்கை உணவை உற்பத்தி செய்யப் போதுமானது. மேலும், சாணத்தில் கார்பன்- ஹைட்ரஜன் விகிதம் 25:1 என, மிக அதிகமாக இருப்பதால் சிறுநீருடன் கூடிய கழிவு சிறந்ததாகக் கருதப்படுகிறது.

எனவே, குளத்தின் அருகில் சிமெண்ட் தரையாலான கொட்டகையை, மாட்டுக்கு 2-3 சதுர மீட்டர் இட வசதியுடன் அமைத்து, மாடுகளின் கழிவுகள் நேரடியாகக் குளத்தை அடையும்படி செய்ய வேண்டும். இதனால், நேரமும் ஆள்கூலியும் மிச்சமாகும். ஒரு மாட்டுக்கு ஆண்டுக்கு 7,000-8,000 கிலோ பசும்புல் தேவை. இதில், 2,500 கிலோ புல் வீணாகிறது.

இந்தப் புல்லைக் குளத்திலுள்ள புல் கெண்டைகளுக்குக் கொடுப்பதன் மூலம், அந்த மீன்களின் உணவுச் செலவு குறையும். மேலும், மாடுகள் வீணாக்கும் புண்ணாக்கு, தானியங்கள் போன்றவற்றையும் நேரடியாக மீன்களுக்கு உணவாகக் கொடுக்கலாம். இவ்வகையான ஒருங்கிணைந்த பண்ணை மூலம் ஆண்டுக்கு 9,000 கிலோ பாலையும், 3,000-4,000 கிலோ மீன்களையும் பெற முடியும்.

பயன்கள்: குளத்துக்கான இயற்கை உரம் இலவசமாகக் கிடைக்கிறது. மாடுகளுக்குத் தேவையான நீர் கிடைக்கிறது. மீன்களை உற்பத்தி செய்வதற்கான செலவு குறைகிறது. வருவாய் அதிகமாகக் கிடைக்கிறது. மேலாண்மை முறைகள் எளிமையாக உள்ளன.

கோழிகளுடன் மீன் வளர்ப்பு

கோழிகளுடன் மீன்களை வளர்ப்பதும் சிறந்த முறையாகும். ஒரு எக்டர் குளத்தில் 200-250 கோழிகள் வரையில் வளர்க்கலாம். ஒவ்வொரு கோழியும் ஆண்டுக்கு 200-250 முட்டைகளை இடும். கோழிக்கழிவில், 25.5 சதம் அங்ககப் பொருள்கள், 1.63 சதம் நைட்ரஜன், 0.83 சதம் பொட்டாசியம், 1.54 சதம் பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் உள்ளன.

கோழிகளுக்கு வெப்பம், வெளிச்சம், நல்ல காற்றோட்டம், அமைதியான சூழல் ஆகியன தேவை. ஒரு கோழிக்கு 1-2 சதுரடி இடவசதியை அளித்து, குளிர்க்காற்று தாக்காத வகையில், மீன் குளத்துக்கு வெளியே கூண்டுகள் அல்லது சிமெண்ட் தரையாலான கொட்டகையை அமைத்து, கோழிக்கழிவைக் குளத்தில் இடுவதே சிறந்த முறையாகும்.

கோழிகளுக்கு அளிக்கும் தீவனம் மீதமிருப்பின், அதை மீன்களுக்கு உணவாகத் தரலாம். கோழி எச்சத்தில், 10 சதம் புரதமும், மணிச்சத்தும், சத்துகளும் ஏற்ற விகிதத்தில் இருப்பதால், இது மீன்களுக்கு உணவாக அமைந்து, உற்பத்தியைப் பெருக்கும் தன்மையைக் கொண்டதாக விளங்குகிறது.

இப்படிக் கோழிகளுடன் மீன்களை வளர்ப்பதன் மூலமாக, கோழி முட்டை, இறைச்சி மற்றும் மீனுற்பத்தியை அதிகரித்து அதிக வருவாயைப் பெறலாம். ஒரு எக்டர் குளத்தில், 5,000 கிலோ மீன்கள், 30,000 முட்டைகள், 500 கிலோ இறைச்சியைப் பெறலாம்.

பயன்கள்: கோழிகளுக்குத் தேவையான நீர் கிடைக்கிறது. கோழிகளின் கழிவு மீன்களுக்குச் சிறந்த உணவாகிறது. மீனுற்பத்திச் செலவு குறைகிறது. அதிக வருவாய் கிடைக்கிறது. மேலாண்மை முறைகள் எளிமையாக உள்ளன.

பன்றிகளுடன் மீன் வளர்ப்பு

ஒருங்கிணைந்த பண்ணை முறையில், பன்றிகளுடன் மீன்களை வளர்ப்பதும் சிறந்த முறையாகும். மீன் குளத்துக்கு அருகில் பன்றிகளை வளர்க்கலாம். குளக்கரையில் அல்லது குளத்து நீர்ப்பகுதிக்கு மேலே கொட்டகையை அமைத்தால், பன்றிக் கழிவானது குளத்தில் விழுந்து உரமாகும். பண்ணையில் உள்ள கால்நடைகள் குடிக்கவும், கொட்டகையைச் சுத்தம் செய்யவும், குளத்து நீரைப் பயன்படுத்தலாம்.

பன்றிக்கழிவு உரச்சத்து மிகுந்தது. பன்றிச் சாணத்தில், 0.5-0.8 சதம் தழைச்சத்து, 0.45-0.6 சதம் மணிச்சத்து, 0.35-0.5 சதம் சாம்பல் சத்து ஆகியன உள்ளன. சிறுநீரில், 0.3-0.5 சதம் தழைச்சத்து, 0.07 சதம் மணிச்சத்து, 0.20-0.70 சதம் சாம்பல் சத்து, 2.5 சதம் அங்ககப் பொருள்கள் ஆகியன உள்ளன.

ஒரு எக்டர் குளத்தில், 30 பன்றிகள் வரையில் வளர்க்கலாம். இதன் மூலம், 6 டன் மீன்களும், 4.2 டன் பன்றி இறைச்சியும் கிடைக்கும். ஒரு பன்றிக்கு, 1.5 முதல் 3.0 சதுர மீட்டர் வரையில் இடவசதி அளிக்க வேண்டும்.

மேலும், குளக்கரையில் 1.5 மீட்டர் உயரத்துக்குச் சுற்றுச்சுவரை எழுப்பி, பன்றிக் கொட்டகையைச் சாய்தளமாக அமைத்து, கழிவானது நேரடியாகக் குளத்தில் விழுமாறு செய்யலாம். அல்லது, ஓரிடத்தில் தேக்கி வைத்து மெதுவாகக் குளத்தில் விடலாம்.

பயன்கள்: பன்றிக்கழிவு மீன்களுக்கு உணவாகிறது. அதனால், மீனுற்பத்திச் செலவு குறைந்து வருவாய் அதிகமாகிறது. எளிய பராமரிப்பு முறைகளைக் கொண்டதாக இம்முறை இருக்கிறது.

நெல் வயலில் மீன் வளர்ப்பு

நெல் வயலில், 10-20 செ.மீ. வளர்ந்த மீன் குஞ்சுகளை எக்டருக்கு 1,000 முதல் 2,000 வரையில் இருப்பு வைத்து வளர்க்கலாம். இத்துடன் அசோலாவையும் சேர்த்து வளர்ப்பதன் மூலம், 5 சதவீதத் தழைச்சத்துக் கிடைக்கும். மேலும், அசோலாவில் உள்ள 27 சதவீதப் புரதமானது, மீன்களுக்கு நல்ல உணவாகும்.

மீன் குளங்களின் கரைகளில் வாழை, பப்பாளி போன்ற பழ மரங்களையும், கத்தரி, தக்காளி, வெண்டை, மிளகாய் போன்ற காய்கறிச் செடிகளையும் பயிரிடலாம். இப்படிப் பல்நோக்குப் பயன் மிகுந்த கால்நடைகளுடன் மீன் வளர்ப்பை ஒருங்கிணைத்துச் செய்தால், பண்ணையின் உற்பத்திச் செலவைக் குறைத்து, இலாபத்தை அதிகரித்து, வாழ்வில் வெற்றி அடையலாம்.


PB_DEVAKI

முனைவர் க.தேவகி, முனைவர் ப.இரா.நிஷா, முனைவர் க.வேல்முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!