பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் நோய்கள்!

பயறுவகை pulse crops

மிழ்நாட்டில் பயறு வகைகள் உற்பத்திக் குறைவாக இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், பூச்சி மற்றும் நோய்கள் தாக்குதலால் ஏற்படும் மகசூல் இழப்பும் முக்கியக் காரணமாகும். சரியான பயிர்ப் பாதுகாப்பு முறைகளைச் செய்தால், இவற்றில் 20 முதல் 30 விழுக்காடு வரை கூடுதல் மகசூலைப் பெற முடியும்.

தமிழ்நாட்டில் காணப்படும் சூழ்நிலை, பயறுவகைப் பயிர்களில் வெவ்வேறு நோய்கள் வெவ்வேறு இடங்களில் அதிகளவில் தோன்றுவதற்கு மிகவும் சாதகமாக உள்ளது. ஆகவே, விவசாயிகள் தன்னிச்சையாகச் செயல்படாமல், ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை முறைகளைப் பின்பற்றி, பயிர்களைப் பாதுகாக்க வேண்டும்.

பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் முக்கிய நோய்களைப் பற்றியும், அவற்றைக் கட்டுப்படுத்த உதவும் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளைப் பற்றியும் அறிந்து கொள்வோம்.

வேரழுகல் நோய்

அறிகுறிகள்: பாதிக்கப்பட்ட செடியின் இலைகள் முதலில் மஞ்சளாகி வாடிக் காய்ந்து உதிர்ந்து விடும். தண்டின் அடிப்பாகத்தில் ஆழ்ந்த பழுப்புக் கோடுகள் தென்படும். தண்டின் பட்டைகள் அழுகி உரிந்து தொங்கும். பாதிக்கப்பட்ட தண்டு மற்றும் வேர்களில் கரும்பூசண இழை முடிச்சுகள் (ஸ்கிளிரோசியா) காணப்படும். இதனால் பாதிக்கப்பட்ட செடிகளை எளிதாகப் பிடுங்கி விடலாம்.

கட்டுப்படுத்தும் முறைகள்: விதைகளை விதைப்பதற்கு முன், ஒரு கிலோ விதைகளுக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா (டி.அஸ்பரில்லம்) அல்லது 10 கிராம் பேசில்லஸ் சப்டிலிஸ் அல்லது 2 கிராம் கார்பன்டசிம் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். அடியுரமாக ஏக்கருக்கு 10 கிலோ துத்தநாக சல்பேட் மற்றும் 60 கிலோ வேப்பம் புண்ணாக்கு வீதம் இட வேண்டும்.

விதைத்த 30-ஆம் நாள் ஏக்கருக்கு ஒரு கிலோ டிரைக்கோடெர்மா (டி. அஸ்பரில்லம்) அல்லது ஒரு கிலோ பேசில்லஸ் சப்டிலிஸ் வீதம் எடுத்து, நன்கு மட்கிய 100 கிலோ தொழுவுரத்தில் கலந்து நிலத்தில் இட்டு நீர்ப் பாய்ச்ச வேண்டும். பாதிக்கப்பட்ட இடங்களில், ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பன்டசிம் 50 சதம் டபிள்யூ.பி. வீதம் கலந்து வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும்.

வாடல் நோய்

அறிகுறிகள்: செடியின் அடிப்பகுதியில் உள்ள முதிர்ந்த இலைகள் தொடக்கத்தில் மஞ்சளாக மாறி வாடி உதிர்ந்து விடுவதால் நாளடைவில் செடிகளும் காய்ந்தும் விடும். பாதிக்கப்பட்ட செடியின் சாற்றுக்குழாய்த் தொகுப்புகள் பழுப்பு நிறத்தில் இருப்பதுடன், வேர்களின் வளர்ச்சியும் குன்றி விடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: விதைகளை விதைப்பதற்கு முன், ஒரு கிலோ விதைகளுக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா (டி.அஸ்பரில்லம்) அல்லது 10 கிராம் பேசில்லஸ் சப்டிலிஸ் அல்லது 2 கிராம் கார்பன்டசிம் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். அடியுரமாக, ஏக்கருக்கு 10 கிலோ துத்தநாக சல்பேட் மற்றும் 60 கிலோ வேப்பம் புண்ணாக்கு வீதம் இட வேண்டும்.

விதைத்த 30-ஆம் நாள், ஏக்கருக்கு ஒரு கிலோ டிரைக்கோடெர்மா (டி.அஸ்பரில்லம்) அல்லது ஒரு கிலோ பேசில்லஸ் சப்டிலிஸ் வீதம் எடுத்து, நன்கு மட்கிய 100 கிலோ தொழுவுரத்தில் கலந்து நிலத்தில் இட்டு நீர்ப் பாய்ச்ச வேண்டும். பாதிக்கப்பட்ட இடங்களில், ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பன்டசிம் 50 சதம் டபிள்யூ.பி. வீதம் கலந்து வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும்.

தண்டழுகல் நோய்

அறிகுறிகள்: அடித்தண்டில் ஊதா நிற அல்லது பழுப்புக் கோடுகள் தோன்றி வளர்ந்து, குழி விழுந்ததைப் போல இருக்கும். இதனால், அடித்தண்டு மென்மையாகி அழுகுவதால், செடிகள் இறந்து விடும். இலைகளின் ஓரங்கள் மஞ்சள் நிறமாகி நடு நரம்புகளை நோக்கிப் பரவும். பழுப்பு நிற இலைப்புள்ளிகள் நாளடைவில் பெரிதாக, இலைகள் காய்ந்து உதிர்ந்து விடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: விதைகளை விதைப்பதற்கு முன், ஒரு கிலோ விதைகளுக்கு 6 கிராம் மெட்டலாக்சில் 35 டபிள்யூ.பி.எஸ். வீதம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். நோய்த் தாக்குதல் அதிகமிருப்பின், ஏக்கருக்கு 200 கிராம் மெட்டலாக்சில் 35 டபிள்யூ.பி.எஸ். வீதம் எடுத்துத் தெளிக்க வேண்டும்.

சாம்பல் நோய்

அறிகுறிகள்: இலை, இலைக்காம்பு, தண்டு, பூங்கொத்து, பிஞ்சு, காய் முதலிய அனைத்துப் பகுதிகளையும் தாக்கும். முதலில், சாம்பல் நிறத் திட்டுகள் இலைகளின் மேற்பரப்பில் தோன்றி இலை முழுவதும் பரவி வெண்மையாகக் காணப்படும். பாதிக்கப்பட்ட பிஞ்சு, காய்கள் சிறுத்தும் சுருங்கியும், கறுப்பாக மாறியும் கீழே விழுந்து விடும். துவரை இலையின் அடிப்பாகத்தில் தோன்றும் வெண்பூசணத் திட்டுகள், நாளடைவில் இலையின் மேற்பரப்பிலும் காணப்படும். இதனால், இலைகள் மஞ்சளாகிக் காய்ந்து உதிர்ந்து விடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: ஜூன் மாதத் தொடக்கத்தில் விதைத்தால், நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். ஏக்கருக்கு 600 கிராம் நனையும் கந்தகம் 80 சதம் டபிள்யூ.பி. அல்லது 200 கிராம் கார்பன்டசிம் 50 சதம் டபிள்யூ.பி. அல்லது 200 மி.லி. புரோபிகோனசோல் 25 இ.சி. அல்லது 200 கிராம் டெபியுகனோசோல் + டிரைபுளாக்சிஸ்ட்ரோபின் டபிள்யூ.சி. 50 சதம் + 25 சதம் மருந்து வீதம் தெளிக்கலாம்.

பூசணக் கொல்லிகளுக்குப் பதிலாக, 5 சத வேப்பங்கொட்டைக் கரைசல் அல்லது 3 சத வேப்ப எண்ணெய்க் கரைசல் அல்லது 10 சத யூக்கலிப்டஸ் இலைச்சாற்றை, பத்து நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

இலைப்புள்ளி நோய்

அறிகுறிகள்: இலைகளில் சிறு சிறு வட்டப் புள்ளிகள் தோன்றும். அடுத்து இவை கிளைகள் மற்றும் காய்களிலும் தென்படும். சாதகமான சூழ்நிலையில், பயிர்களில் பூ மற்றும் காய்கள் உருவாகும் போது அதிகளவில் புள்ளிகள் தோன்றுவதால், இலைகள் உதிர்வதுடன், மகசூல் இழப்பும் ஏற்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: நோய்த் தாக்காத விதைகளை விதைக்க வேண்டும். ஏக்கருக்கு 200 கிராம் டெபியுகனோசோல் + டிரைபுளாக்சிஸ்ட்ரோபின் டபிள்யூ.சி. 50 சதம் + 75 சதம் அல்லது 200 கிராம் கார்பன்டசிம் 50 சதம் டபிள்யூ.பி. அல்லது 200 கிராம் மேங்கோசெப் 75 சதம் டபிள்யூ.பி. வீதம் எடுத்து, நோய் தெரிந்ததும் மற்றும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.

ஆந்தரக்னோஸ்

அறிகுறிகள்: செர்கோஸ்போரா இலைப்புள்ளியை விடச் சற்றுப் பெரிதாகக் காணப்படும். இளஞ்செடி விதையிலைகளில் கருஞ்சிவப்புப் புள்ளி தோன்றி, நாளடைவில் காய்ந்து விடும். இலைகளில் செவ்வக வடிவில் பழுப்புப் புள்ளிகள் தோன்றிப் படர்ந்து இலைக் காம்புகளையும் தாக்கும். காய்களில் கருஞ்சிவப்புப் புள்ளிகள் தோன்றுவதால், விதைகள் நிறமாறிக் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: நோய்த் தாக்காத விதைகளை விதைக்க வேண்டும். ஏக்கருக்கு 200 கிராம் டெபியுகனோசோல் + டிரைபுளாக்சிஸ்ட்ரோபின் டபிள்யூ.சி. 50 சதம் + 75 சதம் அல்லது 200 கிராம் கார்பன்டசிம் 50 சதம் டபிள்யூ.பி. அல்லது 200 கிராம் மேங்கோசெப் 75 சதம் டபிள்யூ.பி. வீதம் எடுத்து, நோய் தெரிந்ததும் மற்றும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.

துரு நோய்

அறிகுறிகள்: நோயுற்ற 8-10 நாட்களில் இலைகளின் அடிப்பாகத்திலும், மேல் பாகத்திலும் ஆரஞ்சு கலந்த பழுப்பு நிறக் கொப்புளங்கள் அதிகளவில் காணப்படும். பாதிக்கப்பட்ட இலைகள் சுருண்டு, காய்ந்து உதிர்ந்து விடுவதால், காய்ப்பு மிகவும் குறைந்து விடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: நோய் வந்ததும், ஏக்கருக்கு 400 கிராம் மேங்கோசெப் 75 சதம் டபிள்யூ.பி. அல்லது 600 கிராம் நனையும் கந்தகம் 80 டபிள்யூ.பி. அல்லது 200 மி.லி. புரோபிகோனசோல் 25 இ.சி. அல்லது 400 மி.லி. குளோரோதலனில் 75 சதம் டபிள்யூ.பி. வீதம் தெளிக்க வேண்டும்.

பாக்டீரிய இலைக்கருகல் நோய்

அறிகுறிகள்: முதலில், சிவப்பும் பழுப்பும் கலந்த வட்டப் புள்ளிகள் இலைகளின் மேல் காணப்படும். இவை நாளடைவில் வளர்ந்து, ஒழுங்கற்ற பழுப்பு நிறக் கோடுகளை உண்டாக்கும். பாதிக்கப்பட்ட இலைகள் முதிர்வதற்கு முன் காய்ந்து உதிர்ந்து விடும். காய்களில் நீர்க் கோர்த்ததைப் போன்ற குழி விழுந்த புள்ளிகள், சிவப்பு ஓரங்களுடன் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: விதைகளை, ஒரு லிட்டர் நீருக்கு 500 மி.லி. வீதம் கலந்த ஸ்ட்ரெப்டோசைக்ளின் திரவத்தில் அரைமணி நேரம் ஊற வைத்து விதைக்க வேண்டும். நிலத்தில் நோய் தெரிந்ததும், ஒரு லிட்டர் நீருக்கு 100 மி.கி. ஸ்ட்ரெப்டோசைக்ளின் + 3 கிராம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 75 சதம் டபிள்யூ.பி. வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

மஞ்சள் தேமல் நோய்

அறிகுறிகள்: இந்நோய், முங்பீன் மஞ்சள் தேமல் நச்சுயிரி மூலம் தோன்றும். நோய் ஏற்படும் பருவத்தைப் பொறுத்து, மகசூல் இழப்பு 10 முதல் 100 சதவீதம் வரை இருக்கும். முதலில் இளம் இலைகளில் சிறிய மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றி, மஞ்சள் நிறத் தேமல் அறிகுறிகளை உண்டாக்கும். நாளடைவில் இலைகள் முழுவதும் மஞ்சளாகி விடும். பாதிக்கப்பட்ட பயிர்கள் குறைவான பூக்கள் மற்றும் காய்களைக் கொண்டிருக்கும். காய்கள் சிறிதாக இருக்கும். இந்த நச்சுயிரி, வெள்ளை ஈக்கள் மூலம் பரவும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: ஒரு கிலோ விதைகளுக்கு 2 கிராம் போராக்ஸ், 300 மி.லி. நொச்சி இலைச்சாறு கரைசல் வீதம் எடுத்துக் கலந்தும், அடுத்து, 5 மி.லி. இமிடாகுளோபிரிட் 600 எப்.எஸ். வீதம் எடுத்துக் கலந்தும், விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும். நிலத்தைச் சுற்றி 2 வரிசையில் மக்காச்சோளத்தைப் பயிரிட வேண்டும்.

நோயுற்ற செடிகளை, விதைத்த 25 நாட்கள் வரை பிடுங்கி அழிக்க வேண்டும். ஏக்கருக்கு 5 மஞ்சள் ஒட்டுப் பொறிகளை வைக்க வேண்டும். விதைத்து 30 நாளில், 10 சதவீத நொச்சி இலைச்சாற்றில் 0.1 சத போராக்ஸ் துகளைக் கரைத்துத் தெளிக்க வேண்டும். தேவைப்பட்டால், ஏக்கருக்கு 100 கிராம் அசிட்டாமிபிரிட் 20 எஸ்.பி. வீதம் தெளிக்கலாம்.

அல்லது ஏக்கருக்கு 70 கிராம் தயாமீத்தாக்சம் 25 சதம் டபிள்யு.சி. அல்லது 100 மி.லி. இமிடாகுளோபிரிட் 17.8 சதம் எஸ்.எல். அல்லது 100 மி.லி. மீத்தைல் டெமட்டான் 25 இ.சி. அல்லது 100 மி.லி. டைமீத்தோயேட் 25 சதம் இ.சி. மருந்தை, 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

தேமல் நோய்

அறிகுறிகள்: இந்நோய், தட்டைப்பயறு தேமல் நச்சுயிரி மூலம் தோன்றும். இதனால் பாதிக்கப்பட்ட செடிகள் வளர்ச்சிக் குன்றிக் காணப்படும். இலை நரம்புகள் அடர் பச்சை நிறத்திலும், மற்ற பகுதிகள் வெளிர் பச்சை கலந்த மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இலைகள் தொடுவதற்கு ரப்பரைப் போல இருக்கும். மிகக் குறைந்த காய்களும், விதைகள் சிறுத்து உருமாறியும் இருக்கும். இந்த நச்சுயிரி அசுவினி மூலம் பரவும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: நோயற்ற தரமான விதைகளை விதைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட செடிகளை, விதைத்த 30 நாட்கள் வரை பிடுங்கி அகற்ற வேண்டும். நோயைப் பரப்பும் அசுவினிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 100 மி.லி. இமிடாகுளோபிரிட் 17.8 சதம் எஸ்.எல். அல்லது 100 மி.லி. மீத்தைல் டெமடான் 25 இ.சி. அல்லது 100 மி.லி. டைமீத்தோயேட் 25 சதம் இ.சி. மருந்து வீதம் எடுத்து, 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

இலை நெளிவு நோய்

அறிகுறிகள்: இந்நோய் இலை நெளிவு நச்சுயிரி மூலம் தோன்றும். இதனால், 60 முதல் 100 சதவீதம் வரை இழப்பு ஏற்படும். இலைகள் வளைந்தும், நெளிந்தும், கரும்பச்சை அல்லது வெளிர் நிறத்தில் கெட்டியாகக் காணப்படும். இடைக்கணுக்கள் மற்றும் இலைக்காம்புகளுக்கு இடையில் உள்ள தூரம் மிகக் குறைவாக இருக்கும். நோயுற்ற பயிர்கள் வளர்ச்சிக் குன்றி, பூக்கும் காலம் தள்ளிப் போவதுடன், பூக்கள் உருமாறிச் சிறிதாகவும், மொட்டுகள் விரியாமலும் இருக்கும். இந்நோய் வெள்ளை ஈக்கள் மூலம் பரவும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: ஒரு கிலோ விதைகளுக்கு 2 கிராம் போராக்ஸ், 300 மி.லி. நொச்சி இலைச்சாறு கரைசல் வீதம் எடுத்துக் கலந்தும், அடுத்து, 5 மி.லி. இமிடாகுளோபிரிட் 600 எப்.எஸ். வீதம் எடுத்துக் கலந்தும், விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும். நிலத்தைச் சுற்றி 2 வரிசையில் மக்காச்சோளத்தைப் பயிரிட வேண்டும்.

நோயுற்ற செடிகளை, விதைத்த 25 நாட்கள் வரை பிடுங்கி அழிக்க வேண்டும். ஏக்கருக்கு 5 மஞ்சள் ஒட்டுப் பொறிகளை வைக்க வேண்டும். விதைத்து 30 நாளில், 10 சதவீத நொச்சி இலைச்சாற்றில் 0.1 சத போராக்ஸ் துகளைக் கரைத்துத் தெளிக்க வேண்டும். தேவைப்பட்டால், ஏக்கருக்கு 100 கிராம் அசிட்டாமிபிரிட் 20 எஸ்.பி. வீதம் தெளிக்கலாம்.

அல்லது ஏக்கருக்கு 70 கிராம் தயாமீத்தாக்சம் 25 சதம் டபிள்யு.சி. அல்லது 100 மி.லி. இமிடாகுளோபிரிட் 17.8 சதம் எஸ்.எல். அல்லது 100 மி.லி. மீத்தைல் டெமட்டான் 25 இ.சி. அல்லது 100 மி.லி. டைமீத்தோயேட் 25 சதம் இ.சி. மருந்தை, 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

இலைச் சுருட்டை நோய் அல்லது மொட்டுக் கருகல் நோய்

அறிகுறிகள்: இந்நோய், நிலக்கடலை மொட்டுக் கருகல் நச்சுயிரி மூலம் தோன்றும். முதலில் இலைகள் மேல் நோக்கி வளைந்து, மொரமொரப்பாக, அடிப்புற நரம்புகள் காய்ந்து காணப்படும். ஆரம்ப நிலையில் தாக்கப்பட்ட பயிரின் நுனிப்பகுதி கருகி இறந்து விடும். பாதிக்கப்பட்ட செடியில் ஒரு சில காய்களே உருவாகும். அக்காய்கள் உருமாறிக் காணப்படும். இந்த நச்சுயிரி, இலைப்பேன்கள் மூலம் பரவும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: ஒரு கிலோ விதைகளுக்கு 2 கிராம் போராக்ஸ், 300 மி.லி. நொச்சி இலைச்சாறு கரைசல் வீதம் எடுத்துக் கலந்தும், அடுத்து, 5 மி.லி. இமிடாகுளோபிரிட் 600 எப்.எஸ். வீதம் எடுத்துக் கலந்தும், விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். நிலத்தைச் சுற்றி 2 வரிசையில் மக்காச்சோளத்தைப் பயிரிட வேண்டும்.

நோயுற்ற செடிகளை, விதைத்த 25 நாட்கள் வரை பிடுங்கி அழிக்க வேண்டும். ஏக்கருக்கு 5 மஞ்சள் ஒட்டுப் பொறிகளை வைக்க வேண்டும். விதைத்து 30 நாளில், 10 சதவீத நொச்சி இலைச்சாற்றில் 0.1 சத போராக்ஸ் துகளைக் கரைத்துத் தெளிக்க வேண்டும். தேவைப்பட்டால், ஏக்கருக்கு 100 கிராம் அசிட்டாமிபிரிட் 20 எஸ்.பி. வீதம் தெளிக்கலாம்.

அல்லது ஏக்கருக்கு 70 கிராம் தயாமீத்தாக்சம் 25 சதம் டபிள்யு.சி. அல்லது 100 மி.லி. இமிடாகுளோபிரிட் 17.8 சதம் எஸ்.எல். அல்லது 100 மி.லி. மீத்தைல் டெமட்டான் 25 இ.சி. அல்லது 100 மி.லி. டைமீத்தோயேட் 25 சதம் இ.சி. மருந்தை, 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

மலட்டுத் தேமல் நோய்

அறிகுறிகள்: இந்நோய், துவரை மலட்டுத் தேமல் நச்சுயிரி மூலம் தோன்றும். இதனால், 95 சதவீதம் வரை இழப்பு ஏற்படும். பாதிக்கப்பட்ட பயிர்கள் வளர்ச்சிக் குன்றி, அதிகத் தழை வளர்ச்சியுடன், இலைகள் சிறுத்து வெளிரி, தேமல் அறிகுறிகளுடன் ஒரு புதரைப் போலத் தெரியும். இதனால், பூப்பிடிப்பது முழுமையாக அல்லது பகுதியளவில் பாதிக்கப்பட்டு மலட்டுத் தன்மை ஏற்படும். இந்த நச்சுயிரி, எரியோஃபிட் சிலந்தி (அசரியா கஜினி) மூலம் பரவும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: பயிரின் தொடக்க நிலையில் பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றி அழிக்க வேண்டும். நோய் அறிகுறிகள் தெரியும் போது, ஏக்கருக்கு 200 மி.லி. பெனாசாகுயின் 10 சத இ.சி. மருந்தைத் தெளித்தால், எரியோஃபிட் சிலந்திப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தி, நோய்ப் பரவலைத் தடுக்கலாம்.


பயறுவகை RAM JEGATHEESH 2 e1726971359122

இரா.இராம் ஜெகதீஷ், இராஜா.ரமேஷ், இ.ஜான்சன், மூ.பரமசிவம், ஆ.யுவராஜா, தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையம், வம்பன், புதுக்கோட்டை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading