கரும்பச்சை இலைகள், கண்களைக் கவரும் ஊதா மலர்கள், உருண்டை வடிவத்தில் செவ்விய பழங்கள், சிறுசிறு முட்களைக் கொண்டிருக்கும் முள்சூழ் தேகம் என, மாறுபட்ட அமைப்புடன், மழைக்காலத்தில் தானாக முளைக்கும் கீரை தூதுவளை. தண்டுக்கொடி வகையான தூதுவளை, ஏறுவதற்கு வசதியான இடம் இருப்பின், அழகாக வளைந்து நெளிந்து, மேல் நோக்கிப் பற்றிப் படரும்.
தூதுவளைக்கு, தூதுளம், தூதுளை, சிங்கவல்லி, அளர்க்கம் எனப் பல பெயர்கள் உண்டு. இது, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பயிராகும் மூலிகைகளில் ஒன்றாகும்.
தூதுவளை பயன்கள்
+ தூதுவளை இலை, பூ, பழம், வேர் ஆகியன, பல்வேறு நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகின்றன.
+ இலைகள், சளி, இருமல், எலும்புருக்கி, ஆஸ்துமா ஆகிய நோய்களைக் குணமாக்கும்.
+ பூக்கள், உடல் வலுவாக, நினைவாற்றல் பெருக, இருமலைப் போக்கப் பயன்படும்.
+ பழங்கள், இதயக் கோளாறுகள், மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள் ஆகியவற்றைக் குணப்படுத்த உதவும்.
தூதுவளையின் தண்டு, இலை ஆகிய அனைத்துப் பகுதிகளிலும், வளைந்த சிறு சிறு முட்கள் இருக்கும். இது, வேலியில் அல்லது மற்ற செடிகளைப் பற்றிப் படர்ந்து வளரும். ஈரமான இடங்களில் புதரைப் போலச் செழித்து வளரும். இதன் இலைகள் கரும்பச்சை நிறத்திலும், பூக்கள் ஊதா நிறத்திலும் இருக்கும். அரிதாக, வெள்ளைப் பூக்களைப் பூக்கும் தூதுவளை வகையும் உண்டு.
சாகுபடி முறை
பருவம் மற்றும் மண் வகை: இதை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். தூதுவளை அனைத்து மண் வகைகளிலும் வளரும் என்றாலும், நல்ல வளர்ச்சிக்கு மணற்பாங்கான செம்மண் நிலமே ஏற்றது.
நிலம் தயாரித்தல்: நிலத்தை நன்கு உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன் எக்டருக்கு 25 டன் வீதம் தொழுவுரத்தைப் பரவலாகக் கொட்டி, மண்ணை வளப்படுத்த வேண்டும். பிறகு, நிலத்தைச் சமப்படுத்தி, தேவையான அளவில் பாத்திகளை அமைக்க வேண்டும்.
வீட்டில் தொட்டியில் வைத்து வளர்க்கும் போது, மட்கிய எரு, செம்மண், மணல் ஆகிய மூன்றையும் சமமாகக் கலந்த கலவையைத் தொட்டியில் நிரப்பி, தொட்டிக்கு 2-3 விதைகளை நட்டு நீரூற்ற வேண்டும். சாலையோரம் மற்றும் ஆற்றோரம் பரவலாக வளர்ந்து கிடக்கும் தூதுவளைச் செடிகளில் இருந்து விதைகளைச் சேகரித்து நடலாம்.
பயிர்ப் பெருக்கம்: தூதுவளை, விதைகள் மூலம் பயிர்ப் பெருக்கம் செய்யப்படுகிறது. விதைகளை நாற்றங்காலில் விதைத்து நாற்றுகளை வளர்த்து, வாளிப்பான நாற்றுகளைப் பிடுங்கி நடவு செய்ய வேண்டும். விதைகள், விதைத்த ஒரு வாரத்தில் முளைக்கும். நாற்றுகள் நன்கு வளர்ந்த பிறகு, நீரைப் பாய்ச்சி, ஒரு மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்: நாற்றங்காலில் விதைகளை விதைத்ததும் நீர்ப்பாய்ச்ச வேண்டும். விதைகள் ஒரு பக்கமாக அடித்துச் செல்லாமல் இருக்க, பூவாளியால் நீரைத் தெளிக்க வேண்டும். வாய்க்கால் பாசனமாக இருந்தால், கவனமாகப் பாசனம் செய்ய வேண்டும். விதைத்த மூன்றாம் நாள் உயிர்நீர் விட வேண்டும். விதைத்த ஒரு வாரத்தில் விதைகள் முளைக்கத் தொடங்கும். நடவுக்குப் பிறகு, மண் மற்றும் தட்பவெப்ப நிலையைப் பொறுத்துப் பாசனம் செய்யலாம்.
உரமிடுதல்: எக்டருக்கு 25 டன் மட்கிய தொழுவுரம் வீதம் எடுத்து, கடைசி உழவுக்கு முன் அடியுரமாக இட வேண்டும். மேலும், 70 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, 20 கிலோ சாம்பல் சத்தும் தேவைப்படும்.
மண்புழு உரம், கம்போஸ்ட் ஆகியவற்றையும் இடலாம். இலைகள் அதிகமாகத் தழைத்து வர, ஒரு லிட்டர் நீருக்கு 30 மி.லி. பஞ்சகவ்யா வீதம் கலந்து தெளிக்கலாம். மாதம் இருமுறை, ஜீவாமிர்தக் கரைசலைப் பாசனநீரில் கலந்து விடலாம். இதனால், கீரைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
பயிர்ப் பாதுகாப்பு: பூச்சித் தாக்குதல் ஏதேனும் இருந்தால், இஞ்சி, பூண்டுக் கரைசலைத் தெளிக்க வேண்டும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயைச் சம அளவில் எடுத்து இடித்து, ஒரு லிட்டர் மாட்டுக் கோமியத்தைக் கலந்து ஒருநாள் வைத்திருந்தால், இக்கரைசல் தயாராகி விடும். இதை, பத்து லிட்டர் நீருக்கு 300 மி.லி. வீதம் கலந்து, பத்து நாட்களுக்கு ஒருமுறை, அதிகாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
அறுவடை: நடவு செய்த 60 நாட்களுக்குப் பிறகு, இலைகளை அறுவடை செய்யலாம். இந்த இலைகளை நிழலில் உலர்த்திப் பொடியாக அரைத்துச் சேமித்து வைக்கலாம்.
மூலிகைத் தயாரிப்பு முறை
தூதுவளைக் கீரையைப் பறித்து, நிழலில் உலர்த்தி, அதிலுள்ள முட்களை நீக்க வேண்டும். ஏனெனில், முட்கள் உள்ள செடிகளில் சற்று நச்சுத் தன்மை இருப்பதாகக் கருதப்படுவதால், சமையல் செய்வதற்கு முன்பே, இந்த முட்களை நீக்க வேண்டியது அவசியம். பிறகு, எண்ணெய் அல்லது நெய்யில் சிறிது வறுத்து எடுத்துப் பொடியாக அரைக்க வேண்டும். இந்தப் பொடி, சளி, ஆஸ்துமா, நாள்பட்ட சளி, காய்ச்சல் மற்றும் பொதுவான குளிர்ச்சியைப் போக்கப் பயன்படும்.
முனைவர் சி.இராஜா பாபு, இணைப் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, திருச்சி மாவட்டம்.