My page - topic 1, topic 2, topic 3

வெண்ணெய்ப் பழம் உற்பத்தி!

வகாடோ எனப்படும் வெண்ணெய்ப் பழம், லவ்ரேசியே குடும்பத்தைச் சார்ந்தது. இதன் அறிவியல் பெயர் பர்சியா அமெரிக்கானா. மத்திய அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இம்மரம், இன்று பல்வேறு நாடுகளில் ஒரு நூற்றாண்டுக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சமவெளிப் பகுதிகளிலும், மித வெப்ப மண்டலப் பகுதிகளிலும் இம்மரம், நன்றாக வளர்ந்து மகசூலைத் தரும்.

இது, பழ வகைகளில் 30 சதம் என, கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள பழமாகும். இதனால் தான் இப்பழம், பட்டர் புரூட் என்று ஆங்கிலத்திலும், வெண்ணெய்ப் பழம் என்று தமிழிலும் அழைக்கப்படுகிறது. இந்தப் பழத்தில் 26.4 கிராம் கொழுப்புச் சத்து உள்ளது. இதில், இனிப்புச் சுவை குறைவாக இருப்பதால், சர்க்கரை நோயாளர்களும் சாப்பிடலாம். வைட்டமின்கள் ஏ, பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியன அடங்கியுள்ளன.

மண் மற்றும் தட்ப வெப்பநிலை

வெண்ணெய்ப் பழ மரம் எல்லா வகை மண்ணிலும் நன்கு வளரும். இருப்பினும், மித வெப்ப மண்டலப் பகுதிகளிலும் (800 முதல் 1500 MSL), வெப்ப மண்டலப் பகுதியிலும் (400 முதல் 700 MSL) வளரக் கூடியது. தமிழ்நாட்டில், கீழ்ப்பழனி மலைப்பகுதி, குற்றாலம், ஏற்காடு, கொல்லிமலை, நீலகிரியின் கீழ்ப்பகுதி, கல்வராயன் மலை, சிறுமலை, ஏலகிரி மலை, சித்தேரி மலை, போதமலை, சவ்வாது மலை, அறநூற்று மலை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளிலும் சாகுபடி செய்யலாம்.

மெக்சிகன் வகைகள் 20 முதல் 24 டிகிரி செல்சியஸ் வரையிலும், மேற்கிந்திய வகைகள் 25 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலும், கௌதிமாலயன் வகை 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரையிலும் தாங்கி வளரும். மேற்கிந்திய மற்றும் கௌதிமாலயன் வகைகளுக்கு, காற்றின் ஈரப்பதம் 60 சதத்துக்கு மேலும், மெக்சிகன் வகைக்கு 45 முதல் 60 சதம் வரையும் இருக்க வேண்டும்.

பூ மற்றும் காய்ப் பிடிக்கும் நேரத்தில் பனிப்பொழிவு இல்லாமல் இருக்க வேண்டும். ஆண்டுக்கு 1,000 மி.மீ.க்கு மேல் மழை பெய்யும் இடங்களில் பயிர் செய்யலாம். இம்மரத்தின் கிளைகள் எளிதில் முறிந்து போகும் தன்மை மிக்கவை. ஆகவே, வெண்ணெய்ப் பழமரங்களைத் தனித் தோட்டமாக அமைக்கும் போது, காட்டுச் சவுக்கு, பலா, கல்யாண முருங்கை போன்றவற்றை, காற்றுத் தடுப்பான்களாக வளர்க்க வேண்டும்.

இம்மரத்தின் ஆணிவேர் ஒரு மீட்டர் ஆழம் வரை மண்ணுக்குள் ஊடுருவிச் செல்லும். வண்டல் மண் மற்றும் செம்மண் நிலங்களில் இம்மரம் நன்கு வளரும். மற்ற மண் வகைகளில் வேரழுகல் நோய் அதிகமாகத் தோன்றும். களிமண் பூமியில் வேர் ஆழமாக ஊடுருவ இயலாததால், மரங்கள் செழிப்பாக வளராது. அமிலத் தன்மை 5 முதல் 7 வரை உள்ள மண்ணில் நன்கு வளர்ந்து அதிகப் பலனைத் தரும். அதனால், நடவுக்கு முன், மண் பரிசோதனை செய்வது அவசியமாகும்.

பிரிவுகள்

மெக்சிகன்: இவ்வகைப் பழத்தின் எடை 250 கிராம் இருக்கும். பூக்கள் பூத்ததிலிருந்து அறுவடை செய்வதற்கு 6 லிருந்து 8 மாதங்கள் ஆகும். பழத்தோல் மென்மையாகவும், விதை பெரிதாகவும் இருக்கும். பழத்தையும் விதையையும் எளிதாகப் பிரிக்கலாம். இதில், முப்பது சதம் வரை எண்ணெய்த் தன்மை உள்ளது. நல்ல குளிர் வெப்பப் பகுதியில் வளரக் கூடியது.

கௌதிமாலயன்: இதன் பிறப்பிடம் மத்திய அமெரிக்கா ஆகும். இந்தப் பழம் மிகவும் பெரியதாக, அதாவது, 600 கிராம் எடையில் இருக்கும். பூக்கள் பூத்ததிலிருந்து அறுவடை செய்வதற்கு 9 லிருந்து 12 மாதங்கள் ஆகும். இதன் பழத்தோல் கடினமாக மற்றும் சொரசொரப்பாக இருக்கும். விதை சிறிதாகவும், பழத்திலிருந்து பிரிப்பதற்கு இறுக்கமாகவும் இருக்கும். இதில், 8-15 சதம் எண்ணெய்த் தன்மை இருக்கும்.

மேற்கிந்திய வகை: இந்தப் பழம் நடுத்தரமாக இருக்கும். பழம் மற்றும் பழத்தோல் மென்மையாக இருக்கும். பூக்கள் பூத்ததிலிருந்து அறுவடை செய்வதற்கு 9 மாதங்கள் ஆகும். விதை பெரிதாகவும், பிரிப்பதற்கு எளிதாகவும் இருக்கும். இதில், 3-10 சதம் எண்ணெய்த் தன்மை இருக்கும்.

இரகங்கள்

உலகெங்கும் பெர்ட் (Fuerte), பெகான், சுட்டானோ (Zutano), ஹாஸ் (Hass), பூத் 7, பூத் 8, எட்டிங்கர் (Ettinger), பேலாக் (Pallock), பர்பிள், பச்சை குண்டு, நீளம், லூலா, தில்லே, ஹெலன், மஞ்சள், பிங்க் எர்டான் (Pink erton) ஆகிய இரகங்கள் சாகுபடியில் உள்ளன.

தடியன்குடிசை 1 வெண்ணெய்ப் பழம்: இந்த இரகம், தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய வெண்ணெய்ப் பழக் கருத்தொகுப்பில் இருந்து தேர்வு செய்யப்பட்டு 1996 – ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இது, ஆசியா கண்டத்திலிருந்து வெளியிடப்பட்ட முதல் வெண்ணெய்ப் பழ இரகமாகும். இந்த மரம் ஓரளவு பரந்தும், மிதமாக உயர்ந்தும் வளர்வதால், குறிப்பிட்ட பரப்பில், அதிக மரங்களை நடுவதற்கு ஏற்ற இரகமாகும்.

மேலும், காப்பி தோட்டத்தில் நிழலுக்காக, ஊடுபயிராகப் பயிரிட மிகவும் ஏற்ற இரகமாகும். ஓர் இலையடுக்கில் 2-3 பழங்கள் அடங்கிய கொத்துகள் உருவாகும். ஒரு மரத்தில் 264 கிலோ பழங்களும், ஒரு எக்டரில் 26 டன் பழங்களும் கிடைக்கும்.

பழத்தில் 23.8 சதம் கொழுப்புச்சத்து, 1.35 சதம் புரதச்சத்து, உயிர்ச்சத்து – ஏ 0.19 மி.கிராம், உயிர்ச்சத்து – சி 15.90 மி.கிராம், மொத்தக் கரையும் திடப்பொருள் 8 டிகிரி பிரிக்ஸ் இருக்கும்.

நடவு

விதைக் கன்றுகள் மற்றும் ஒட்டுக் கன்றுகளை, ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை நடலாம். காற்று அதிகமாக வீசும் பகுதிகளில் நாற்றுகளையும், குறைவாக வீசும் பகுதிகளில் ஒட்டுக் கன்றுகளையும் நட வேண்டும்.

காப்பித் தோட்டங்களில் நடவு செய்ய, 90 செ.மீ. நீள, அகல, ஆழமுள்ள குழிகளை 10×10 மீட்டர் இடைவெளியில் எடுத்து, குழிகளின் நடுவில் கன்றுகளை நட வேண்டும். எக்டருக்கு 100 கன்றுகள் தேவைப்படும். தனித் தோப்பாக நடவு செய்ய விரும்பினால், 7×7 மீட்டர் இடைவெளி விட்டால் போதும். இவ்வகையில் நடவு செய்ய, எக்டருக்கு 202 நாற்றுகள் தேவைப்படும். காற்றில் நாற்றுகள் அசையாமல் இருக்க, குச்சிகளை வைத்துக் கட்டுவது மிகவும் அவசியம்.

பூக்கும் தன்மை

வெண்ணெய்ப் பழ மரம் பூப்பதற்கு 5-6 ஆண்டுகள் ஆகும். மேலும், ஆண்டுதோறும் காய்க்காது. இது, இப்பழ சாகுபடியில் உள்ள பெருஞ் சிக்கலாகும். ஆண் பூவும் பெண் பூவும் ஒரே பூவாக இருக்கும். இவை இரண்டும் வெவ்வேறு காலங்களில் முதிர்வடைவதால், மகரந்தச் சேர்க்கை நடப்பதில்லை.

பூக்கும் தன்மையை வைத்து, வெண்ணெய்ப் பழ இரகங்கள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. இவை, A மற்றும் B வகை இரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. A வகை மரங்களின் பூக்களில், முதலில் பெண் பூ காலையில் மலரும். ஆண் பூ மறுநாள் மாலையில் மலரும். B வகை மரங்களின் பூக்களில், முதலில் பெண் பூ மாலையிலும், ஆண் பூ அடுத்த நாள் காலையிலும் மலரும். அதனால், ஒரு தோட்டத்தில் A வகை மரங்களை 2 பங்காகவும், B வகை மரங்களை 1 பங்காகவும் நடுவதன் மூலம் மகசூல் அதிகமாகும். ஒரே வகை மரங்களை நடுவதைத் தவிர்க்க வேண்டும்.

உரமிடுதல்

ஒரு மரத்துக்கு, தொழுயெரு 50 கிலோ, தழைச்சத்து 1 கிலோ, மணிச்சத்து 1.5 கிலோ, சாம்பல் சத்து 1 கிலோ வீதம் எடுத்து, இரண்டு பாகங்களாகப் பிரித்து, ஜனவரி மற்றும் ஜுன் மாதத்தில் இட வேண்டும். மரத்திலிருந்து அரையடி தள்ளி உரமிட்டதும், நீர்ப் பாய்ச்சுதல் வேண்டும். எளிதில் கரையும் உரங்களை மலைப் பகுதியிலும், மெதுவாகக் கரையும் உரங்களைச் சமவெளிப் பகுதியிலும் இட வேண்டும்.

உரங்களை இடுமுன், முதலாண்டில் மண் பரிசோதனை, இரண்டாம் ஆண்டில் மண் மற்றும் இலைப் பரிசோதனையைச் செய்ய வேண்டும். மலைப் பகுதிகளில் போரான் மற்றும் இரும்புச் சத்துக் குறைகள் இருக்கும். இதற்குத் தீர்வாக, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் சல்பர் வீதம் கரைத்து, இலைகளில் தெளிக்க வேண்டும்.

பாசனம்

நாற்றுகளை நட்டதும் உயிர்நீர் விடுவது மிகவும் அவசியம். மழை இல்லாத காலத்தில், நன்றாக வளர்ந்த ஒட்டுக் கன்றுகளுக்கு 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்ச வேண்டும்.

பின்செய் நேர்த்தி்

வேர்ச் செடிகளில் தோன்றும் துளிர்களை உடனுக்குடன் அகற்ற வேண்டும். காய்ந்து நோயுற்ற பகுதிகளை வெட்டி நீக்க வேண்டும். முதல் மூன்று ஆண்டுகளில் தோன்றும் பூக்களை நீக்கி விட வேண்டும். நிலத்தில் தோன்றும் களைகளை அவ்வப்போது நீக்கி, நிலத்தைப் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். மரங்களின் வேர்ப்பகுதி ஆழமாகச் செல்லாமல், மண்ணின் மேற் பரப்பிலேயே இருக்கும். எனவே, நிலப்போர்வை அமைத்தல் மிகவும் அவசியம்.

இயற்கை நிலப்போர்வை: பூக்கும் காலத்தில் இம்மரத்தில் உள்ள இலைகள் அனைத்தும் உதிர்ந்து விடும். எனவே, இந்த இலைகளையே இயற்கை நிலப் போர்வையாக இடலாம். மேலும், தோட்டத்தில் அகற்றிய களைகளையும் நிலப் போர்வையாக இடலாம். இதன் மூலம், நிலத்தில் உள்ள சத்துகள் மற்றும் ஈரப்பதத்தைக் காக்கலாம்.

நெகிழி நிலப்போர்வை: இது, மட்கும் தன்மை கொண்டது, மட்காத் தன்மை கொண்டது என இரு வகைப்படும். மட்கும் தன்மையுள்ள நெகிழி நிலப்போர்வை, 3 முதல் 5 மாதங்கள் வரை பயன்படும். ஆனால், மட்காத் தன்மையுள்ள நிலப்போர்வை, 2 முதல் 5 ஆண்டுகள் வரை பயன்படும்.

நெகிழி நிலப்போர்வை, நீர்ச் சேமிப்பு மற்றும் குளிர் காலத்தில் மண்ணின் வெப்பத்தை அதிகரித்து நுண்ணுயிர் வளர்ச்சியைப் பெருக்கி வளம் தரும். வேர்ப் பகுதியில் உள்ள களைகளையும், மண்ணில் உள்ள நூற்புழுக்கள் மற்றும் பூசண நோயைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

நிலப்போர்வை மூலம் மண்ணின் ஈரப்பதம் காக்கப்படுவதால், கோடையில் பாசனம் குறையும். களைகள் முளைப்பது கட்டுப்படுவதால், களையெடுப்புச் செலவும் குறையும்.

கவாத்து செய்தல்: மரம் மூன்றடி உயரம் வளர்ந்ததும், நுனிக் கிள்ளுதல் அவசியமாகும். இதனால், மரம் நன்றாகப் பரந்து வளரும். மேலும், பழ அறுவடையை விரைவாகச் செய்வதற்கும் வாய்ப்பாக அமையும்.

குட்டையான மரங்களில் இருந்து தான் அதிக மகசூலும், தரமான பழங்களும் கிடைக்கும். ஏனெனில், இத்தகைய மரங்களால் தான், அதிக மகசூலுக்குக் காரணமான சூரிய ஒளியை நன்றாகக் கிரகிக்க முடியும்.

சமீபக் காலமாக, நியூசிலாந்தில் மெல்லிய கூம்பு வடிவக் (Pyramid) கவாத்து முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இம்முறையில், மரங்களை 3 மீட்டர் உயரம் வரை, பக்கக் கிளைகளின்றி வளர்க்க வேண்டும். சிறு கிளைகள் தோன்றும் போதே கிள்ளி விட வேண்டும்.

இதனால், இம்மரங்கள் தாமாகவே உருவத்தை அமைத்துக் கொள்ளும். எனவே, குறைந்தளவு கவாத்தே தேவைப்படும். முதல் இரண்டு ஆண்டுகளில் தடிமனாக வளரும் தண்டுப் பகுதியைக் கிள்ளி விடுவதன் மூலம், பக்கக் கிளைகள் பெருகும். இப்படிச் செய்வதன் மூலம், மரம் குட்டையாகவும், பரவலாகவும் இருக்கும்.

மரங்கள் மிகவும் அடர்த்தியாக இல்லாமல் காற்றோட்டம் கிடைக்கும் வகையில் இருக்க, உள்நோக்கி வரும் கிளைகள் மற்றும் வேர்ப் பகுதியில் இருந்து வரும் கிளைகளை அவ்வப்போது நீக்க வேண்டும். அடர் நடவு முறையைப் பின்பற்றும் போது 5-7 ஆண்டுகளுக்குப் பிறகு 7×7 மீட்டர் இடைவெளி அவசியம். இடைவெளிக்கு நடுவே உள்ள மரங்களை அகற்ற வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு

பழப்புள்ளி நோய்: இது, ஒரு பூசண நோயாகும். இதனால் தாக்கப்பட்ட பூக்காம்புகள் உதிர்ந்து விடும். இதைக் கட்டடுப்படுத்த, இன்டோபில் எம்.45 என்னும் பூசண மருந்தை, 0.2 சத அளவில், பூக்கள் பூத்த மூன்று மாதம் கழித்து, 15 நாட்கள் இடைவெளியில், மூன்று முறை தெளிக்க வேண்டும்.

வேரழுகல் நோய்: இது, வடிகால் வசதி குறைந்த இடங்களில் அதிகமாகக் காணப்படும். இதனால் பாதிக்கப்பட்ட மரத்தின் இலைகள், கீழ்ப்பகுதியில் இருந்து மேல்நோக்கி வாடி உதிர்ந்து விடும். இதனால் மரம் காய்ந்து விடும். இதைக் கட்டுப்படுத்த, நடவுக்கு முன், 10 கிலோ மண்ணுக்கு ஒரு கிராம் மான்கோசெப் மருந்து வீதம் கலந்து, நடவுக் குழிகளில் இட வேண்டும். அல்லது 10 லிட்டர் நீருக்கு 10 கிராம் வீதம் கலந்து, மரத்தைச் சுற்றி ஊற்ற வேண்டும்.

செதில் பூச்சிகள்: இவற்றைக் கட்டுப்படுத்த, மெத்தைல் டெமட்டான் மருந்தை 0.03 சதவீதக் கரைசலாகத் தயாரித்துத் தெளிக்க வேண்டும்.

மாவுப் பூச்சிகள்: இவற்றைக் கட்டுப்படுத்த, மாலதியான் மருந்தை, 0.05 சதவீதக் கரைசலாகத் தயாரித்துத் தெளிக்க வேண்டும்.

இலைப்பேன்கள்: இவற்றைக் கட்டுப்படுத்த, நனையும் கந்தகம் அல்லது டைமீத்தோயேட் மருந்தை, 0.03 சதக் கரைசலாகத் தயாரித்துத் தெளிக்க வேண்டும்.

அறுவடை

நாற்று நடவு மூலம் வளரும் மரங்கள் 5-6 ஆண்டுகளுக்குப் பிறகே மகசூலைத் தரும். ஆனால், ஒட்டுச்செடி மரங்கள் 3.5 ஆண்டுகளிலேயே காய்க்கத் தொடங்கி விடும். காய்கள் முதிர்வதற்கு, பூக்கும் நாளில் இருந்து 110 முதல் 130 நாட்கள் ஆகும். இதன் பிறகு அறுவடை செய்ய வேண்டும்.

சில இரகங்களின் பழத்தோல், கத்தரிப்பூ நிறத்திலிருந்து அடர் பழுப்பு (மெருன்) நிறத்துக்கு மாறும். ஹாஸ் (Hass) வகைகளில், பளபளப்பான பச்சை நிறத் தோலிலிருந்து பழுப்பு நிறத்தில் சுருங்கிய தோலுடன் காய்கள் காணப்படும். 1-1.5 செ.மீ. காம்புடன் கத்தரித்து அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்த பின், காய்கள் ஒன்றுடன் ஒன்று உரசாமல் பாதுகாக்க வேண்டும். பறித்த ஒரு வாரத்தில் இவை சாப்பிட ஏற்ற பழங்களாக மாறும்.

இந்தக் காய்கள் அறுவடைக்குப் பிறகு தான் பழுக்கும் என்பதால், விற்பனைக்கு ஏற்றாற் போல் அறுவடை செய்யலாம். ஆண்டுக்கு மரத்துக்கு 264 கிலோ காய்களும், எக்டருக்கு 26.4 டன் காய்களும் மகசூலாகக் கிடைக்கும். இக்காய்களைக் குளிர்ப்பதன அறையில் 5.5 டிகிரி செல்சியசில், 14 வாரங்கள் வரை அழுகாமல் பாதுகாத்து வைக்கலாம்.

இப்போது சந்தையில் ஒரு கிலோ பழம் 60 முதல் 75 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வகையில், ஏக்கருக்கு 40,000 முதல் 50,000 ரூபாய் வரை இலாபம் கிடைக்கும்.


முனைவர் இரா.ஜெயவள்ளி, உதவிப் பேராசிரியர், தோட்டக்கலைப் பழவியல் துறை, தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks