பட்டுப்பூச்சியின் வாழ்க்கைக் கதை!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர்.

ட்டாடைகளை அணிவது ஒருவரின் தகுதியை உயர்த்திக் காட்டுவதாக உள்ளதை நாமறிவோம். கிழிந்தாலும் பட்டு பட்டு தான் என்னும் பழமொழி, பட்டின் பெருமையைக் கூறும். பட்டாடைகள் நமது வழிபாட்டிலும் இடம் பெறுவது உண்டு. பட்டாடைகளை அணிந்தால் உடற்சூடு தணியும். இப்படிப் பெருமையுள்ள பட்டாடைக்கான நூல், பட்டுப் பூச்சிகள் மூலம் கிடைக்கிறது. இந்தப் பட்டுப் பூச்சிகளின் வாழ்க்கை முறையை இங்கே காணலாம்.

பட்டுப்பூச்சி வளர்ப்பை செரிக்கல்சர் (Sericulture) என்கிறோம். தூய்மையான பட்டு என்பது, லெபிடாப்டிரஸ் பூச்சிகள் எனப்படும், பட்டுப் புழுக்கள் அல்லது பட்டுப் பூச்சிகளின் கூடுகளில் இருந்து பெறப்படுகிறது. பட்டுப் புழுக்கள் வளர்ப்பானது பல நாட்களைக் கொண்டதால், மனிதக் கவனிப்பு இல்லாமல் அவற்றால் வாழ இயலாது.

பட்டுப் பூச்சிகளால் அதிக நேரம் பறக்க முடியாது. பட்டுப்பூச்சி லார்வாக்களுக்கு உணவைத் தேடும் பழக்கம் கிடையாது. அதனால், உணவைப் பக்கத்தில் வைக்க வேண்டும். வணிக அடிப்படையிலான பட்டு உற்பத்தியில், பாம்பிக்ஸ் மோரி என்னும் சிற்றினம் தான் முதலிடம் வகிக்கிறது.

விலங்குகள் தொகுதியில் பட்டுப்பூச்சியின் வகைப்பாடு

தொகுதி: கணுக்காலிகள். வகுப்பு: பூச்சிகள். துணை வகுப்பு: ப்டெரிகோட்டா. பிரிவு: என்டோப்டெரிகோட்டா. வரிசை: லெபிடோப்டிரா. பேரினம்: பாம்லிக்ஸ். சிற்றினம்: மோரி.

பட்டுப்பூச்சியின் வகைகள்

சைனா பட்டுப்புழு அல்லது மல்பெரி பட்டுப்புழு, முகா பட்டுப்புழு, டஸ்ஸார் பட்டுப்புழு, ஓக் பட்டுப்புழு, இராட்சதப் பட்டுப்புழு, எரி பட்டுப்புழு என ஆறு வகைப்படும்.

பட்டுப்பூச்சியின் புறத்தோற்றம்

பட்டுப்பூச்சி 25 மி.மீ. நீளத்தில் இருக்கும். இதன் இறக்கை 40-50 மி.மீ. இருக்கும். முழு உடலும் செதிகளால் மூடப்பட்டிருக்கும். பெண் பூச்சியானது சற்றுப் பெரிதாக இருக்கும். இதற்குக் காரணம், முட்டைகளை அதிகளவில் உடலில் வைத்திருப்பது தான். இதனால், பறக்கும் போது நிலையாக இருக்க முடியாது.

வாழ்க்கைச் சுழற்சி

பட்டுப்பூச்சியில், ஆண் பூச்சி, பெண் பூச்சி எனத் தனித்தனியாக உள்ளன. இவற்றில் உட்கருவுறுதல் நடைபெறும். ஆனால், பட்டுப்பூச்சியின் வளர்ச்சிநிலை, சிக்கலான பல்வேறு வளர் உருமாற்றங்களைக் கொண்டது.

முட்டைகள்

கருவுற்ற பிறகு, ஒவ்வொரு பெண் பூச்சியும் 300-500 முட்டைகளைக் கொத்துக் கொத்தாக மல்பெரி இலைகளில் இடும். பிறகு, இந்த முட்டைகளை ஜெலாட்டினால் மூடிவிடும். சிறிய, மென்மையான, கோளவடிவ முட்டைகள், முதலில் மஞ்சள் கலந்த வெள்ளையாகவும், பிறகு அடர்த்தியான நிறமாகவும் மாறும். முட்டைகளை இட்ட பூச்சிகள், உணவை எடுத்துக் கொள்ளாமல் 4-5 நாட்களில் இறந்து விடும்.

Ad:

விவசாயக் கண்காட்சி dth=

பட்டுப்புழு லார்வா

முட்டைகளில் இருந்து வெளிவரும் லார்வாக்கள் ஒவ்வொன்றும் 6 மி.மீ. நீளத்தில் இருக்கும். கடினமான சுருக்கங்களையும், வெள்ளை அல்லது சாம்பல் நிற உடலில் 12 கண்டங்களையும் கொண்டிருக்கும். இந்த லார்வாக்கள் மல்பெரி இலைகளை உண்டு மிக வேகமாக வளரும்.

இந்த வளர்ச்சிக் காலத்தில் நான்கு முறை தோலை உரித்துக் கொள்ளும். இவை முதிர்ச்சியும் முழு வளர்ச்சியும் அடைய 45 நாட்களாகும். இறுதியில், 8 செ.மீ. நீளத்தை அடையும். இந்த நேரத்தில், ஓரிணை உமிழ்நீர்ச் சுரப்பிகள் உடலின் பக்கவாட்டில் வளரும். பட்டுநூல் ஐந்து இழைகளால் ஆனது. செரிசின் (Sericin) எனப்படும் புரதம் இந்த இழைகளை இணைக்கும்.

கூட்டுப்புழு

இந்நிலையில், பட்டுப் புழுக்கள் உணவைத் தவிர்த்து விட்டு, மல்பெரி இலையின் ஓரத்துக்கு வந்து சேரும். இப்போது இவை, உமிழ்நீர்ச் சுரப்பிகளில் இருந்து குறுகிய துளையின் வழியாக, ஒட்டும் தன்மையுள்ள திரவத்தைச் சுரக்கத் தொடங்கும். இந்தத் திரவத்தில் காற்றுப் படும்போது, அது, நீளமான மற்றும் கெட்டியான பட்டுநூலாக மாறும்.

இந்த நூலால் தன் உடல் முழுவதையும் சுற்றிக் கொள்ளும் புழுவானது, கூட்டுப்புழு நிலை என்னும் குக்கூன் நிலைக்கு மாறும். இந்த நடைமுறை முடிய 3-4 நாட்களாகும். இதன் முடிவில் பட்டுப் புழுவானது, அடர்த்தியான, முட்டை வடிவத்தில் வெள்ளை அல்லது மஞ்சள் கூட்டுக்குள் அடங்கி விடும். ஒரு பட்டுப்புழு, 1,000-1,500 மீட்டர் பட்டுநூலை உற்பத்தி செய்யும்.

இமாகோ

கூட்டுப்புழு நிலையில் செயல் வளர் உருமாற்றங்கள் நிகழும். இறுதியில் கூட்டுப்புழு, இமாகோ எனப்படும் சிறிய பட்டுப் பூச்சியாக மாறி, அல்கலைன் திரவத்தைச் சுரந்து, கூட்டின் ஒரு முனையை ஈரமாக்கி, மென்மையான பட்டுக்கூட்டில் இருந்து வெளியேறும். கூட்டிலிருந்து வெளிவரும் பட்டுப்பூச்சி, கலவியில் ஈடுபட்டு முட்டைகளை இட்டுவிட்டு இறந்து விடும்.

பட்டுப்புழு வளர்ப்பு

பட்டுப்புழு வளர்ப்புக்கு, மூங்கில் சட்டம், மூங்கில் வட்டத் தட்டுகள், மூங்கில் கூடைகள், இலைகளை வெட்டும் கத்தி, சந்திரிகை ஆகிய பொருள்கள் தேவை. 25-30 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும், 70-80% ஈரப்பதமும் உள்ள இடங்களில் பட்டுப்புழுக்களை வளர்க்கலாம். கருவுற்ற பூச்சியானது தலைகீழாக்கப்பட்ட புனலால் மூடப்பட்டு, அட்டைகளில் முட்டைகளை இடுவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

மூங்கில் தட்டுகளில் நெல் தவிட்டைப் பரப்பி, இதில் லார்வாக்களை விட வேண்டும். இளம் மல்பெரி இலைகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கி உணவாகக் கொடுக்க வேண்டும். இப்படி, ஒரு நாளைக்கு ஐந்து முறை உணவளிக்க வேண்டும். நான்காம் நாளிலிருந்து முழு இலைகளை உணவாகக் கொடுக்கலாம்.

பட்டுப்புழுக்கள் உண்ணும் இலைகளின் அளவானது, அவற்றின் வயதைப் பொறுத்து கூடிக்கொண்டே போகும். நன்கு வளர்ந்து கூடுகட்டத் தயாராகும் புழுக்களை, சந்திரிகை எனப்படும் மூங்கில் தட்டுகளில் விட வேண்டும்.

குக்கூன் அல்லது பியூப்பா கூடு, ஒற்றைப் பட்டு இழையால், புழுவின் சுரப்பியில் இருந்து வெளிவரும் புரதத்தால் கட்டப்படுகிறது. இப்படிக் கட்டப்படும் கூடுகளுக்குள் இருந்து வெளிவரும் முன்பே, நீராவி அல்லது சூடான காற்று அல்லது ஃபியூபிகேஷன் முறையில் பட்டுப்பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதற்கு விறைப்பாக்குதல் என்று பெயர். பிறகு, கூடுகள் உலர்த்தப்பட்டு, பட்டு இழைகள் நூற்கப்படுகின்றன.

குறிப்பு

1943 ஆம் ஆண்டு மத்திய பட்டுப்புழு வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் (Central Sericultural Reserch Station) மேற்கு வங்கத்தில் பெர்ஹேம்பூரில் நிறுவப்பட்டது. அடுத்து, 1947 ஆம் ஆண்டு மத்திய அரசு, பட்டுத்தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, மத்திய பட்டு நிறுவனத்தை (Central Silk Board) நிறுவியது.


முனைவர் மா.சி.நளினசுந்தரி, உதவிப் பேராசிரியர், ம.த.கௌரி, முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவி, விலங்கியல் துறை, இராணிமேரி கல்லூரி, சென்னை – 600 004.

Share:

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks