My page - topic 1, topic 2, topic 3

பூக்கும் பருவத்தில் உள்ள துவரைக்கு டி.ஏ.பி கரைசல் தெளித்தல்!

கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நடப்பு ஆண்டில், 1950 ஏக்கர் பரப்பில் துவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது துவரை, பூ முதல் காய்கள் பிடிக்கும் பருவத்தில் உள்ளது.  இந்தப் பருவத்தில் சில எளிய தொழில் நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம் துவரையில் கூடுதல் மகசூலைப் பெறலாம். இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.பச்சையப்பன், கிருஷ்ணகிரி வட்டாரத் துவரை விதைப் பண்ணையை ஆய்வு செய்த பின் கூறிய அறிவுரைகளாக, கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வெ.சுரேஷ்குமார் கூறியதாவது:

துவரை சாகுபடியில் தற்போது பின்பற்ற வேண்டிய தொழில் நுட்பங்கள்

டி.ஏ.பி. கரைசலைத் தெளித்தல்: பூக்கும் தருணத்தில் உள்ள துவரையில், 2 சத டி.ஏ.பி. கரைசலைத் தெளிக்க வேண்டும். இதற்கு, ஒரு ஏக்கருக்குத் தேவையான 4 கிலோ டி.ஏ.பி-யை 10 லிட்டர் நீரில் கரைத்து 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின், மறுநாள் டி.ஏ.பி. கரைசலின் படிவு, திப்பி ஏதுமின்றி நன்கு தெளிந்த நீரை மட்டும் வடிகட்டி, அதனை 190 லிட்டர் நீரில் கலந்து, ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் அளவில், மாலை வேளையில் மட்டும், கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். இந்தக் கலவையை வடிகாட்டாமல் அப்படியே தெளித்தால் பயிர்கள் கருகும் அபாய நிலை ஏற்படும்.

காய்ப்புழு மேலாண்மை: துவரையில் காணப்படும் காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த, உயிரியல் முறையில், ஒரு லிட்டர் நீருக்கு ஒன்றரை மில்லி என்.பி.வி. வீதம் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது ஏக்கருக்கு ஒரு கிலோ அசாடிராக்டின் 0.035 WSP வீதம் எடுத்து 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம். அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் 5%WP வீதம் கலந்து தெளித்துக் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தலாம்.

இரசாயன முறையில் பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துவதாக இருந்தால், ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் இமாமெக்டின் பென்சோயேட் 5% SG-220 வீதம் கலந்து தெளிக்கலாம். அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 1.5 முதல் 1.75 மில்லி இண்டாக்ஸோ கார்ப் 14.5% SC வீதம் கலந்து விசைத் தெளிப்பான் மூலம் தெளித்துக் காய்ப்புழுவை எளிதாகக் கட்டுப்படுத்தலாம் என்றார்.

நோய்த் தாக்குதல் பெரும்பாலும் பொருளாதாரச் சேத நிலையை ஏற்படுத்துவதில்லை.  இப்படி, சிறிய மற்றும் எளிய தொழில் நுட்பங்களைச் சீராகப் பின்பற்றுவதன் மூலம், மானாவாரி துவரையிலும் ஏக்கருக்கு 550-600 கிலோ மகசூலைப் பெறலாம் என்றார். மேலும், தாக்குதலுக்கு ஏற்ற மேலாண்மை முறைகளுக்கு, அவரவர் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை அல்லது கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகிப் பயன் பெறுமாறு கேட்டுக் கொண்டார்.


 செய்தி: கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks