My page - topic 1, topic 2, topic 3

சேப்பங்கிழங்கைத் தாக்கும் இலைக்கருகல் நோய்!

செய்தி வெளியான இதழ்: 2017 மே

மிழ்நாட்டில் சேப்பங்கிழங்கு (colocasia) பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. ஒருசில மாவட்டங்களில் முதன்மைப் பயிராகச் சேப்பங்கிழங்கு சாகுபடி நடக்கிறது. இந்த சாகுபடியில் பல்வேறு இடர்களை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

சேப்பங்கிழங்குப் பயிரைப் பூசண நோய்களில் ஒன்றான இலைக்கருகல் தாக்குவதால், 40-50 சதவீத அளவில் கிழங்கு மகசூலும், 95 சதவீத அளவில் இலைகளும் பாதிக்கப்பட்டு, பெரிய பொருளாதார இழப்பு விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. இந்நோய் ஆண்டு முழுவதும் பாதிப்பை உண்டாக்கும் வல்லமை மிக்கது.

நோய் அறிகுறிகள்

இந்நோய், பைடோப்தோரா கொலகேசியா என்னும் பூசணத்தால் ஏற்படுகிறது. நோயின் தொடக்க அறிகுறியாகச் சிறிய அடர் பழுப்பு நிற அல்லது வெளிர் ஊதா நிறப் புள்ளிகள் இலையின் மேற்புறத்தில் தோன்றும். மேலும், இந்தப் புள்ளிகள், இலையின் நுனி அல்லது இலை விளிம்பில் தோன்றும். புள்ளியின் மையத்தில் நீர்க்கசிவு இருக்கும்.

நோய் தீவிரமானால், புள்ளிகள் விரிவடைந்து வட்ட வடிவத்திலும், மையத்தில் பழுப்பு அல்லது கருஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும். இலையின் அடியில் சாம்பலாகவும் நீர்க்கசிவுடனும் புள்ளிகள் தெரியும். பிறகு, புள்ளிகள் அனைத்தும் இணைந்து இலையைக் கருகச் செய்யும்.

புள்ளிகள் தோன்றியதில் இருந்து 2 முதல் 4 நாட்களில் இலை முழுவதையும் நோயானது கருகச் செய்து விடும். நோய் தாக்கிய நிலத்தில் இலைகள் காய்ந்து தொங்கிக் கொண்டிருக்கும். சில சமயங்களில் இலைக் காம்புகளையும் கிழங்கையும் நோய் தாக்கும். இதனால், செடியில் கிழங்கு சிறுத்தும், எடை குறைவாகவும் இருக்கும்.

நோய்க்கு வாய்ப்பான நிலைகள்

நிலத்தில் முறையான வடிகால் வசதி இல்லாமல் இருத்தல். நெருக்கமாகப் பயிரிடுதல். தொடர்ந்து சேப்பங் கிழங்கையே பயிரிடுதல். அதிகளவில் தழைச்சத்தை இடுதல். பூசணம் வளர ஏதுவான மிதமான வெப்பம் மற்றும் குளிர்ந்த இரவுள்ள காலநிலை. அதாவது, வெப்பநிலை 25-30 டிகிரி செல்சியஸ் மற்றும் ஈரப்பதம் 90 சதத்துக்கு மேலிருத்தல். நோய்த் தாக்குதலுக்கு உள்ளான கிழங்குகளை மீண்டும் மீண்டும் விதைக் கிழங்குகளாகப் பயன்படுத்துதல்.

பரவும் முறைகள்

விதைக் கிழங்கின் மூலம் ஒரு நிலத்திலிருந்து இன்னொரு நிலத்துக்குப் பரவுகிறது. பூசண வித்துகள், காற்று மற்றும் மழைநீர் மூலம் பரவுகிறது. பாசனநீர் மூலமும் பரவும்.

நோய் மேலாண்மை

நீர்த் தேங்காத வகையில் நிலத்தில் வடிகால் வசதி இருக்க வேண்டும். நோய்த் தாக்காத நிலத்தில் இருந்து விதைக் கிழங்குகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சுடுநீரில் தொற்று நீக்கம் செய்ய வேண்டும். அதாவது, விதைக் கிழங்குகளை 50 டிகிரி செல்சியஸ் வெப்பமுள்ள வெந்நீரில் 10-20 நிமிடங்கள் ஊற வைத்து நடவேண்டும்.

நோயெதிர்ப்புத் திறனுள்ள இரகங்களை சாகுபடி செய்ய வேண்டும். தாக்குதலுக்கு உள்ளான இலைகளைச் சேகரித்து அழிக்க வேண்டும். சரியான இடைவெளியில், அதாவது, 45×45 செ.மீ. இடைவெளியில் நடவேண்டும்.

ஒரு நிலத்தில் தொடர்ந்து சேப்பங் கிழங்கையே சாகுபடி செய்யக் கூடாது. மாற்றுப் பயிர்களையும் பயிரிட வேண்டும். காப்பர், மாங்கனீசு, துத்தநாகம் ஆகிய சத்துகளை இலை வழியாகத் தெளிக்க வேண்டும்.

நோய்த்தாக்கம் அதிகமானால், ஏக்கருக்கு, அசாக்ஸிட்ரோபின் (azoxystrobin) 23% SC 200 மில்லி அல்லது பாசடைல் அலுமினியம் (fosetyl aluminium) 80% WP 200 மில்லி அல்லது மேன்கோசெப் (mancozeb) 500 கிராம் பூசண மருந்தை, 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

இந்தப் பூசணக் கொல்லிகளில் ஒன்றை மட்டுமே தொடர்ந்து தெளிக்காமல், நோயானது கட்டுப்படும் வரையில், சுழற்சி முறையில் மற்ற மருந்துகளையும் மாற்றி மாற்றித் தெளிக்க வேண்டும்.


ப.நாராயணன், வேளாண்மை அறிவியல் நிலையம், கீழ்நெல்லி, வெம்பாக்கம் வட்டம், திருவண்ணாமலை – 604 410.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks