அதிமதுரத்தின் பயன்கள்!

அதிமதுர adimaduram 1

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன்.

திமதுரச்செடி காடுகளில் புதர்ச் செடியாக வளரும். இயற்கையாக மலைப் பகுதிகளில் விளைகிறது. தாவரம் ஒன்றரை அடி உயரமாக வளரும். இலைகள் கூட்டிலையானவை. ஊதா நிறமான சிறு பூக்கள் தண்டின் கணுக்களில் காணப்படும். காய்கள் 3 சென்டி மீட்டர் வரை நீளத்தில் இருக்கும். ஊதா நிறமான சிறு முட்களுடன் காணப்படும். வேர்கள் படர்ந்திருக்கும். இவை, சிறிதும் பெரிதுமாக உட்புறம் மஞ்சள் நிறமாக, வெளிப்புறம் அடர்த்தியான பழுப்பு நிறமாகக் காணப்படும். வேர்களே மருத்துவத்தில் அதிகமாகப் பயன்படுகின்றன.

இவை பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. காஷ்மீர், பஞ்சாப், இமாச்சலப் பிரேதசம், உத்திரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் அதிமதுரம் வணிக நோக்கில் பயிரிடப்படுகிறது. அதிங்கம், அஷ்டி, மதூகம், இரட்டிப்பு மதுரம் ஆகிய மாற்றுப் பெயர்களும் அதிமதுரத்திற்கு உண்டு. அதிமதுரம் நாட்டு மருந்துக் கடைகளில் காய்ந்த நிலையில் கிடைக்கும்.

ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் நெல் வயல்களில் அதிமதுரமும், அடர்ந்த களைச்செடியாக வளர்கிறது. பசுமையான இந்தச் செடியின் வேர்களை சிறுவர்கள் பறித்துச் சுவைப்பது வழக்கம்.

மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்

இலைகள் இனிப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. வேர்கள் இனிப்புச் சுவையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும். காயங்கள், தாகம், அசதி, கண் நோய், விக்கல், எலும்பு நோய்கள், மஞ்சள் காமாலை, இருமல், தலைவலி ஆகியவற்றைக் குணமாக்கும் திறன் கொண்டது இந்த வேர்.

அதோடு காக்கை வலிப்பு, மூக்கில் இருந்து இரத்தம் வடிதல், படர் தாமரை ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும். தலைமுடி வளரவும், ஆண்மையைப் பெருக்கவும், ஆயுளை அதிகரிக்கவும் செய்யும் இந்த அதிமதுரம்.

இருமல் கட்டுப்பட
அதிமதுரம் வேர் 50 கிராம், மிளகு 10 கிராம் ஆகியவற்றை எடுத்து இளவறுப்பாக வறுத்துத் தூள் செய்து கலந்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டுவர வேண்டும். வறட்டு இருமல் குணமாகச் சிறிதளவு அதிமதுரத்தை எடுத்து மென்றும் சாப்பிடலாம்.

வயிற்றுப்புண் குணமாக

ஐம்பது கிராம் அதிமதுரத்தை இலேசாக இடித்து ஒன்றரை லிட்டர் நீரிலிட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். அது, 250 மில்லியாகக் குறையும் வரை காய்ச்சி அதோடு 150 கிராம் சர்க்கரை, 250 மில்லி பால் ஆகியவற்றையும் சேர்த்துப் பாகு பதம் வரும் வரை காய்ச்சி வடிக்க வேண்டும். இதில் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து, ஒன்றரை டம்ளர் வெந்நீரில் கலந்து தினமும் காலை மாலை வேளைகளில் 2 வாரங்கள் உணவுக்குப் பின்னர் சாப்பிட்டு வர வேண்டும்.

காயங்கள் மற்றும் வெட்டுக் காயங்கள் குணமாக

தேவையான அளவு அதிமதுரத் தூளை நெய் சேர்த்துப் பசையாகக் குழைத்துப் பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும்.

நரம்புத் தளர்ச்சி கட்டுப்பட

அரைத் தேக்கரண்டி அதிமதுரப் பொடியை, சிறிதளவு தேனுடன் குழைத்துக் காலை, மாலை வேளைகளில் 48 நாட்கள் வரை சாப்பிட்டு வர வேண்டும்.

தலைவலி, ஒற்றைத் தலைவலிக்கு

அதிமதுரம், பெருஞ்சீரகம், சர்க்கரை சம அளவாக எடுத்துக்கொண்டு நன்றாகத் தூள் செய்துகொள்ள வேண்டும். இதனை முதலுதவி மருந்தாக ஒரு தேக்கரண்டி அளவு, சிறிது வெந்நீருடன் சேர்த்து உள்ளுக்குச் சாப்பிடலாம்.


இந்திய மருத்துவ முறைகள் என்னும் நூலிலிருந்து.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading