நிலக்கடலை சாகுபடியில், விதைகள் திரட்சியாக இருந்தால் தான் மகசூல் அதிகமாகும். நல்ல விலையும், எண்ணெய்ச் சத்தும் கூடுதலாகக் கிடைக்கும். இதற்கு என்ன செய்யலாம்?
பெரிய விதைகளைக் கொண்ட நிலக்கடலை இரகங்களில், நெற்று முழுமையாக நிரம்பாமல், அதாவது, திரட்சியான மணிப்பிடிப்பு இல்லாமல் இருக்கும். இதற்கு, சத்துப் பற்றாக்குறை தான் காரணம். எனவே, விதைகள் திரட்சியாக உருவாக, சத்துக் கரைசலைத் தெளிக்க வேண்டும்.
சத்துக் கரைசல் தயாரிப்பு
டி.ஏ.பி. 2.5 கிலோ, அம்மோனியம் சல்பேட் 1 கிலோ, போராக்ஸ் 0.5 கிலோ ஆகியவற்றை, 37 லிட்டர் நீரில் கலந்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை வடிகட்டினால் 32 லிட்டர் கரைசல் கிடைக்கும்.
இந்தச் சத்துக் கரைசலை, 468 லிட்டர் நீர் மற்றும் 350 மி.லி. பிளானோபிக்சில் கலந்து, விதைத்த 25 மற்றும் 35 நாட்களில் தெளிக்க வேண்டும். இது, ஒரு எக்டருக்கான கலவையாகும்.
த.நா.வே.ப. நிலக்கடலை ரிச்
மேலே கூறியுள்ள கரைசலுக்குப் பதிலாக, நிலக்கடலையில் பூக்கள் உதிராமல் இருக்கவும், திரட்சியான விதைகள் கிடைக்கவும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத் தயாரிப்பான, நிலக்கடலை ரிச்சைத் தெளிக்கலாம்.
இதை, 50 சதவீதச் செடிகள் பூக்கும் போதும், காய்கள் பிடிக்கும் போதும் தெளிக்க வேண்டும். இரண்டு முறை தெளிக்க, எக்டருக்கு 10 கிலோ நிலக்கடலை ரிச் தேவைப்படும்.
இரண்டு கிலோ எடையுள்ள நிலக்கடலை ரிச்சின் விலை, 545 ரூபாய். இதை, tnauagricart.com என்னும் இணையதளம் மூலம் விண்ணப்பித்து வாங்கலாம்.
இயக்குநர், மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.
சந்தேகமா? கேளுங்கள்!