நிலத்தைப் பண்படுத்துவதன் அவசியம்!

Manavari land

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச்.

நிலத்தைப் பண்படுத்தல் என்பது, பயிர் செய்வதற்கு ஏற்ற வகையில், அதை உருவாக்குதல் ஆகும். சாகுபடி செய்யப்படும் பயிர்களின் தன்மைக்கு ஏற்ப, நிலத்தைச் சீர் செய்ய வேண்டும். ஆனால், கால நிலைகளுக்கு ஏற்ப, நிலத்தைப் பண்படுத்தும் முறை வேறுபடுகிறது.

உழவுக் கருவிகள் மூலம், தாவர வளர்ச்சிக்கு ஏற்றவாறு நிலத்தை மாற்றுவதை, உழவு அல்லது நிலத்தைப் பண்படுத்தல் என்கிறோம். இதனால், மண்ணின் இயற்பியல் கூறுகளான, காற்று உட்புகும் திறன், மண் துகள்களின் அளவு, நீரைச் சேமிக்கும் திறன், மண்ணடர்த்தி ஆகியவற்றில் மாற்றம் உண்டாகிறது.

மேலே கூறியுள்ள தேவைகளின் அடிப்படையில், உழவு இரு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அதாவது, முதன்மை உழவு, இரண்டாம் நிலை உழவு. முதன்மை நிலை உழவு என்பது, பயிர் செய்வதற்கு முன் மண்ணைப் பண்படுத்துவது. இதனை, ஆழமான உழவு, அடிமண் உழவு முறை, வருடாந்திர உழவு எனப் பிரிக்கலாம்.

ஆழமான உழவு என்பது, அதிக ஆழத்தில் மண்ணைத் திருப்புதல் ஆகும். கோடையுழவு இதற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகும். கோடையுழவு பெரிய மண் கட்டிகளை உருவாக்கும். இக்கட்டிகள், பின்னர் உண்டாகும் காலநிலை மாற்றத்தால் சிறியனவாக மாறும்.

கோடையுழவின் பயன்கள்

மண்ணின் கட்டமைப்பு மேம்படுகிறது. மண்ணின் நீர்ப்பிடிப்புத் திறன் கூடுகிறது. பல்லாண்டுக் களைகள் அழிகின்றன. மண்ணின் அடியிலுள்ள பூச்சிகளின் முட்டைகள் அழிக்கப்படுவதால், பூச்சிகளின் தாக்குதல்களில் இருந்து பயிர்கள் காக்கப்படுகின்றன.

அடிமண் உழவு

பொதுவாக விவசாயிகள் ஒரே ஆழத்தில் உழுவதையே தொடர்ந்து செய்கின்றனர். இதனால், மண்ணுக்கு அடியில் உண்டாகும் இறுக்கம், பயிர்களின் வளர்ச்சியைப் பாதிக்கும். இதைச் சரி செய்ய, அடிமண் உழவு செய்யப்படுகிறது.

அடிமண் உழவானது, கடினமான மண்ணை உடைத்து வேர்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. உளிக்கலப்பை மூலம் அடிமண் உழவு செய்யப்படுகிறது. இதனால், 60-70 செ.மீ. ஆழத்துக்கு மண் திருப்பப்படுகிறது. இந்த உழவை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டும்.

வருடாந்திர உழவு

முதல்நிலை உழவின் அடுத்த வகையான வருடாந்திர உழவானது, ஆண்டு முழுவதும் பல்வேறு தேவைகளுக்கு ஏற்பச் செய்யப்படுவது. இந்த உழவானது, களைகளைக் கட்டுப்படுத்த, மண்ணில் காற்றுப் புகும் திறனை அதிகமாக்க மற்றும் விதைப்புக்காகச் செய்யப்படுவது.

இரண்டாம் நிலை உழவு

நிலத்தில் குறைவான ஆழத்தில் உழுதல், இரண்டாம் நிலை உழவு எனப்படுகிறது. பொதுவாக அறுவடைக்குப் பிறகு இந்த உழவு செய்யப்படுகிறது. மேலும், கடினமான கட்டிகளை உடைக்கவும், மண்ணைச் சமப்படுத்தவும், மேற்பரப்பைச் சீராக்கவும் இந்த உழவு பயன்படுகிறது.

இப்படிப் பண்படுத்தல் என்பது, பழங்காலம் முதலே வழக்கத்தில் உள்ளது. எனினும், இன்று இயந்திரங்கள் மூலம் செய்யப்படுகிறது. முதன்மை உழவுக்கு, மரக்கலப்பை, மண்ணைப் புரட்டும் கலப்பை, வளைப்பலகைக் கலப்பை, சட்டிக் கலப்பை, உளிக்கலப்பை, திருப்பிப் போடும் கலப்பை, ஆழக்கலப்பை, சரல் கலப்பை, சுழல் கலப்பை, குழிப்படுகை அமைக்கும் கருவிகள் ஆகியன பயன்படுகின்றன.

இரண்டாம் நிலை உழவுக் கருவிகளில், டிராக்டரால் இயங்கும் கொத்துக் கலப்பை, சுவீப் கொத்துக் கலப்பை, பலுகுக் கலப்பை, சட்டிப்பலுகுக் கலப்பை, பரப்புப் பலகைச் சுழல் கலப்பை ஆகியன அடங்கும்.

மேலும், பயிர்களுக்கு இடையில் களையெடுத்தல், மண்ணைக் கிளறி விடுதல் போன்ற வேலைகளைச் செய்வதிலும் பல்வேறு கருவிகள் பயன்படுகின்றன. களையெடுக்கும் கருவி, சுழலும் களைக்கருவி, குறுகிய இடைவெளியைக் கொண்ட கலப்பைகள் ஆகியன இவ்வகையில் அடங்கும்.

மண்ணைப் பண்படுத்துதல் என்பது, சாகுபடியில் மிக முக்கியப் பங்கை வகிக்கிறது. பண்படுத்திய நிலத்தில் இருந்து தான், நல்ல பயிர் வளர்ச்சியையும், அதிக மகசூலையும் காண முடியும்.


நிலத்தை SUGANTHI e1629915824578

முனைவர் மு.சுகந்தி, முனைவர் பி.சுரேஷ் சுப்பிரமணியன், முனைவர் ஹ.கோபி, கால்நடை மருத்துவ முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading