My page - topic 1, topic 2, topic 3

மலைவாழை சாகுபடி!

மிழ்நாட்டில் கீழ்ப்பழனி மலை, குற்றாலம், பேச்சிப்பாறை, சிறுமலை, கல்வராயன் மலை, பச்சை மலை, அற்றூத்து மலை, கொல்லிமலை, சித்தேரி மலை, ஏலகிரி, சேர்வராயன் மலை, நீலகிரியின் அடிவாரப் பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகளில், விருப்பாட்சி, சிறுமலை, நமரன், செவ்வாழை, கற்பூரவள்ளி, சந்தன வாழை ஆகிய இரகங்கள் பயிரிடப்படுகின்றன. இந்த இரகங்கள் பெரும்பாலும் பல்லாண்டுப் பயிராக சாகுபடி செய்யப்படுகின்றன.

மண் மற்றும் தட்பவெப்ப நிலை

நல்ல வளமான, வடிகால் வசதியுள்ள மண்ணில் சாகுடிபடி செய்யலாம். களர், உவர் நிலங்கள் வாழை சாகுபடிக்கு உகந்தவை அல்ல. களிமண் அதிகமாக உள்ள நிலங்களில், வேர்களின் வளர்ச்சிக் குன்றுவதாலும், மணல் சார்ந்த பூமியில் ஈரத்தன்மை விரைவாகக் குறைவதாலும், இவ்விரு நிலங்கள் வாழை சாகுபடிக்கு ஏற்றவை அல்ல.

மேலும், பகலில் 25 முதல் 35 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும், இரவில் 20 முதல் 22 டிகிரி செல்சியசுக்கு மிகாத வெப்ப நிலையும் இருக்க வேண்டும். கடல் மட்டத்தில் இருந்து 2000 அடி முதல் 500 அடி உயரம் வரையுள்ள இடங்கள், வாழை சாகுபடிக்கு ஏற்றவை.

கன்றுகள் தேர்வும் நேர்த்தியும்

சீரான வளர்ச்சிக்கும், நல்ல மகசூலுக்கும் தரமான கன்றுகளை நட வேண்டும். தாய் மரத்துக்கு அருகில், கிழங்கிலிருந்து வளரும் 2-3 அடி உயரமுள்ள சுமார் 3 மாத ஈட்டிக் கன்றுகளே சிறந்தவை. வைரஸ் கிருமி, கிழங்கழுகல் நோய் மற்றும் நூற்புழுத் தாக்குதல் இல்லாத தோட்டங்களில் இருந்து கன்றுகளை எடுக்க வேண்டும்.

தேர்ந்தெடுத்த கிழங்குகளின் வெளிப்புற வேர்கள் மற்றும் அழுகிய பகுதிகளை நீக்கிய பிறகு, சேற்றுக் குழம்பில் நனைத்து, ஒரு கிழங்குக்கு 40 கிராம் வீதம் கார்போ பியூரான் குருணை மருந்தைத் தூவி நட வேண்டும். வாடல் நோயைக் கட்டுப்படுத்த, 0.1 சத கார்பென்டாசிம் அல்லது எமிசான் கரைசலில், கிழங்குகளை 5 நிமிடம் நனைத்து எடுத்து நட வேண்டும்.

நடவுப் பருவம்

ஏப்ரல், மே-யில் வரும் சித்திரைப் பட்டமும், ஜூன், ஜூலையில் வரும் ஆடிப்பட்டமும், மலைப் பகுதிகளில் நடுவதற்கு ஏற்றவை. இவற்றில் ஆடிப்பட்ட நடவு சிறப்பு மிக்கது.

நடவு முறை

நடவுக்கு முன் நிலத்தை நன்கு பண்படுத்தி அதிகளவில் இயற்கை உரங்களை இட வேண்டும். 2x2x1.5 கன அடியில் குழிகளைத் தோண்டி, அவற்றில் மட்கிய எரு மற்றும் ராக்பாஸ்பேட்டை இட வேண்டும். நடவு செய்யும் போது, கிழங்குகளை லேசாகச் சீவி, அழுகல், ஒடிந்த பட்டை ஆகியவற்றை நீக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம், கிழங்கைத் துளைக்கும் வண்டுகள், பூச்சிகளை அகற்றுவதுடன், நோய் இருந்தாலும் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், சீவப்பட்ட கிழங்கில் 40 கிராம் கார்போ பியூரான் வீதம் இட்டு நடுவதன் மூலம், வாடல் நோய் வராமல் தவிர்க்கலாம். கன்றுகளைச் சமதளக் கோட்டில் நட வேண்டும். சரிவுகளில் சூரிய ஒளி படும்படி நட வேண்டும். அதிக மழை பெய்யும் காலத்தைத் தவிர மற்ற பருவங்களில் நடலாம். சாகுபடி முறை, தட்ப வெப்பம் மற்றும் இரகங்களைப் பொறுத்து, நடவுப் பருவம் மாறுபடும்.

மலை வாழை காய்க்கும் போது, சித்திரைச் சுழற்காற்று, ஆடிக்காற்று மற்றும் மழைக்காலச் சூறாவளியில் பாதிக்காத வகையில் நட வேண்டும். மேலும், நல்ல விலை கிடைக்கும் காலத்தில், காய்கள் அறுவடைக்கு வரும் வகையில் நட வேண்டும்.

பயிரிடும் முறை

மலை வாழையைத் தனிப்பயிராக அல்லது அடுக்குப் பயிர் முறையில் பயிரிடலாம். தனிப் பயிராகப் பயிரிட, 2×2 மீட்டர் இடைவெளியில், ஏக்கருக்கு 1,000 கன்றுகள் தேவைப்படும். காபியில் ஊடுபயிராகப் பயிரிட, 3.6×3.6 மீட்டர் இடைவெளியில், ஏக்கருக்கு 300 கன்றுகள் வரை தேவைப்படும்.

மேலும், அடுக்குப் பயிர் முறையிலும் வளர்க்கலாம். இதற்கான பயிர்கள், வெவ்வேறு வேர் பரப்பைக் கொண்டிருக்க வேண்டும். இம்முறையில், வாழையுடன், காப்பி, சில்வர் ஓக் மரங்கள், மிளகுச் செடிகள், இலவ மரங்கள், ஆரஞ்சு மரங்கள் ஆகியன, மலைப் பகுதியில் பயிரிடப்படுகின்றன.

அடர் நடவு முறை

அடர் நடவு முறை என்பது, சாதாரண நடவு முறையை விட அதிகக் கன்றுகளைக் குழிகளில் அல்லது குறைந்த இடைவெளியில் நட்டு, குறிப்பிட்ட பரப்பில் கன்றுகளை அதிகரிக்கும் புதிய உத்தியாகும். இம்முறையில், வாழையைத் தனிப்பயிராக, 2.0×3.5 மீட்டர் இடைவெளியில், குழிக்கு 2 கன்றுகள் வீதம் 1,713 கன்றுகளை நடலாம். காப்பியில் கலப்புப் பயிராக 979 கன்றுகளை நடலாம்.

கன்றுகளின் எண்ணிக்கை கூடுவதால் உற்பத்தித் திறன் கூடும். வாழைக்குத் தேவையான நீர் மற்றும் உரத்தேவை 30-40 சதம் குறையும். களை மற்றும் பக்கக் கன்றுகளின் வளர்ச்சியைத் தடுக்கலாம். சாகுபடிச் செலவு கணிசமாகக் குறையும். களை மற்றும் கன்றுகளை அகற்றும் செலவு குறையும். நிலம், நீர், உரம் மற்றும் சூரிய ஒளி திறம்படப் பயன்படும். ஆனால், பயிரின் அறுவடைக் காலம் சற்றுக் கூடும்.

உரமிடல்

மலை வாழைக்குத் தக்க நேரத்தில் உரமிடுதல் அவசியம். இது, மண்வளம், வளர்ச்சிப் பருவம், தட்ப வெப்பம் மற்றும் இரகங்களைப் பொறுத்து மாறுபடும். தழைச்சத்தை இடுவதால், மலை வாழை பசுமையாக, விரைவாக, உயரமாக வளரும். இதில் பற்றாக்குறை ஏற்பட்டால், கன்றுகளின் வளர்ச்சிக் குன்றும். பக்கக் கன்றுகள் உற்பத்திக் குறையும். இலைகள் மஞ்சளாக மாறும். தழைச்சத்து மிகுந்தால், வாழைத்தார் முதிர்ச்சிக் காலம் கூடும்.

மணிச்சத்தை இடுவதால், வேர் வலுவாகும். தண்டு நன்கு பருக்கும். காய்கள் அதிகமாக உருவாகும். இதில் பற்றாக்குறை ஏற்பட்டால், மரத்தின் வளர்ச்சிக் குன்றும். முதிர்ந்த இலைகள் சுருங்கும். மணிச்சத்து மிகுந்தால், காய்கள் விரைவாக முற்றும். சீப்புகள் வளைந்த நிலையில் இருக்கும்.

சாம்பல் சத்தை இடுவதால், வாழைக்கு நோயெதிர்ப்புத் திறன் கூடும். பழங்களின் சுவையும் கூடும். இதில் பற்றாக்குறை ஏற்பட்டால், இலை நுனி வெளுத்து, இலை விளிம்புகளுக்கும் பரவும். பற்றாக்குறை அதிகமானால், இலை விளிம்புகள் கருகி எரிந்ததைப் போல இருக்கும். காய்கள் முற்றும் முன்பே மஞ்சளாக மாறிவிடும். சாம்பல் சத்து மிகுந்தால், சீப்புகளின் எண்ணிக்கை மற்றும் பழத்தின் தரம் குறைந்து விடும்.

எனவே, மலை வாழை மரம் ஒன்றுக்கு 120 கிராம் தழைச்சத்து, 90 கிராம் மணிச்சத்து, 360 கிராம் சாம்பல் சத்துத் தேவைப்படும். மேலும், மட்கிய தொழுவுரம் அல்லது மட்கிக் காய்ந்த கம்போஸ்ட் உரத்தை இட்டால், வாழைக்குத் தேவையான தழைச்சத்துக் கிடைப்பதுடன், மண்ணின் கடினத்தன்மை குறைந்து வேர்கள் நன்கு வளரும்.

வாழைக்கு அதன் காலம் முழுவதும் தேவைப்படுவதால், தொழுயெரு அல்லது கம்போஸ்ட்டில் உள்ள சத்துகள் உடனடியாக வெளியேறி வீணாவதில்லை. சிறிது சிறிதாக வெளியேறி வாழையின் வளர்ச்சிக் காலம் முடிய சத்துகள் கிடைக்கும். எனவே, மலை வாழைக்குத் தொழுயெரு அல்லது கம்போஸ்ட்டை, ஆண்டுக்கு, மரத்துக்குப் பத்துக் கிலோ வீதம் இட வேண்டும்.

இயற்கை உரம்

தொழுயெரு, மட்கிய கம்போஸ்ட்டைத் தவிர, மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்கு, எள்ளு புண்ணாக்கு, ஆமணக்குப் புண்ணாக்கு ஆகியவற்றையும் வாழைக்கு இடலாம். இவற்றைத் தவிர, அசோஸ் பயிரில்லம், பாஸ்போ பாக்டீரியா, மைக்கோரைசா போன்ற நுண்ணுயிர் உரங்களையும் இடலாம். இவற்றை, தொழுவுரம் அல்லது கம்போஸ்ட் அல்லது புண்ணாக்கில் கலந்து இட வேண்டும்.

இந்த நுண்ணுயிர் உரங்கள் குறைந்தளவில் மட்டுமே தேவைப்படும். அதாவது, ஒரு மரத்துக்கு 3-5 கிராம் வீதம் இட்டால் போதும். இவை இனப்பெருக்கம் மூலம் பெருகி, சத்துகளை நிலைப்படுத்தும். ஒரு குழிக்கு 25 கிராம் வீதம் அசோஸ் பயிரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவை இட்டால், தரமான பழங்கள் உருவாகும். மரத்துக்கு 300 கிராம் வேப்பம் புண்ணாக்கு வீதம் இட்டால், நூற்புழுத் தாக்கம் குறையும்.

உரமிடும் காலம்

மலைவாழை வளர்ச்சிக் காலம் முழுவதும் உரம் தேவைப்படும். எனவே, அதன் வளர்ச்சியைப் பொறுத்து உரங்களைப் பிரித்து இட வேண்டும். தொழுவுரம் அல்லது புண்ணாக்கு வகைகளை, வாழை நடவுக்கு முன்பே குழிகளில் இட்டு விட வேண்டும். இரசாயனத் தழைச்சத்து, சாம்பல் சத்தை, நட்ட 3, 5, 7 மாதங்களில் சமமாகப் பிரித்து இட வேண்டும். மணிச்சத்து முழுவதையும், முதல் உரம் வைக்கும் போதே இட்டு விட வேண்டும். உயிர் உரங்களை, நட்ட நான்காம் மாதத்தில் இட வேண்டும்.

மலை வாழைக்கு நுண் சத்துகளான துத்தநாக சல்பேட் 0.5 சதம், இரும்பு சல்பேட் 0.2 சதம், தாமிர சல்பேட் 0.2 சதம், போராக்ஸ் 0.1 சதம் வீதம் இட்டால், மகசூல் கூடும். இந்த நுண் சத்துகளைக் கரைசலாக ஆக்கி, குலை தள்ள 2-3 மாதங்கள் இருக்கும் போது தெளிக்க வேண்டும்.

பாசனநீர்வழி உரமிடல்

இது, உரமிடல் மற்றும் பாசனநீரை ஒருசேரப் பயிருக்கு அளிக்கும் உத்தியாகும். நீரில் கரையும் உரங்களை, விரயமின்றிச் சிறந்த முறையில், சமச்சீராக அளிக்கும் இம்முறை, சொட்டுநீர் உரப்பாசனம் எனப்படும்.

சாதாரணமாக உரங்களை மண்ணில் இடுவதால், சுமார் 50 சதவீதச் சத்துகள் மட்டுமே பயிருக்குக் கிடைக்கும். மீதமுள்ள 50 சதவீதச் சத்துகள் பல்வேறு வகையில் வீணாகி விடும். ஆனால், பாசனநீரில் உரங்களைக் கலந்து விடும் போது, அவற்றின் பயன்பாட்டுத் திறன், 80-90 சதம் வரை கூடும். மகசூலும் தரமும் மேம்படும். மேலும் இவற்றின் நன்மைகளாவன:

சத்துகளை உறிஞ்சும் திறன் 80 சதத்துக்கு மேல் அதிகமாகும். நீரில் சத்துகள் அடித்துச் செல்லப்படுதல் மற்றும் பயிருக்குக் கிடைக்காத வகையில் நிலத்தின் அடிப்பகுதிக்குச் சென்று விடுதல் தவிர்க்கப்படும். களைகள் வளர்வது கட்டுப்படும்.

சொட்டுநீர் மூலம் உரத்தைத் தரும் போது, நீரும் உரமும் செடிகளின் வேர்ப் பாகத்தை நேரடியாக அடையும். இதனால், தேவையான சத்துகளை வேர்கள் மூலம் பயிர்கள் எளிதாக எடுத்துக் கொள்ளும். இந்தத் தொழில் நுட்பத்தின் மூலம், பயிருக்குத் தேவைப்படும் நீரையும் உரத்தையும் துல்லியமாகக் கணக்கிட்டு அளிக்க முடியும்.

பயிருக்குத் தேவையான சத்துகளை, பயிரின் வெவ்வேறு வளர்ச்சிப் பருவங்களில், அதாவது, விதைக்கும் போது அதிக மணிச்சத்து, வளர்ச்சிப் பருவத்தில் தழை மற்றும் சாம்பல் சத்து, முதிர்ச்சிப் பருவத்தில் கூடுதல் சாம்பல் சத்து எனத் தேர்வு செய்து அளிக்க முடியும். நுண் சத்துகளைத் திறம்பட அளிக்க முடியும்.

அனைத்துப் பயிர்களுக்கும் நீரும் உரமும் சீராகக் கிடைப்பதால், 25 முதல் 50 சதம் வரை மகசூல் கூடும். உரப் பயன்பாடு 80 முதல் 90 சதம் வரை உள்ளதால், உரச் செலவில் 25 விழுக்காடு குறையும். நீர்ச் சேமிப்பு, நேரம், ஆட்கள் தேவை, ஆற்றல் போன்றவை பெருமளவில் குறையும்.

உரமிடும் காலம்

10-20 வாரம் வரை, குழிக்கு 3.6 கிராம் யூரியா, 5.5 கிராம் பொட்டாஷ்.
21-33 வாரம் வரை, குழிக்கு 5.0 கிராம் யூரியா, 9.2 கிராம் பொட்டாஷ்.
34-45 வாரம் வரை, குழிக்கு 2.0 கிராம் யூரியா 7.4 கிராம் பொட்டாஷ்.
46-49 வாரம் வரை, 5.5 கிராம் பொட்டாஷ் மட்டும்.

பயிர் நிர்வாகம்

நடவு முடிந்து ஒரு மாதம் கழித்து 10 கிராம் கார்பரில் அல்லது 20 கிராம் லிண்டேன் 1.3 சதம் மருந்தை, கிழங்குப் பகுதியில் சிறு வட்டமாக இட்டு மூடிவிட வேண்டும். நடவுக்குப் பிறகு கிடைக்கும் மழையைப் பயன்படுத்தி, குழியைச் சுற்றி மண்ணை அணைத்து, காற்றுப் புகாமல் மிதித்து விட வேண்டும்.

ஒரு மாதத்தில் இலை வராத கன்றுகளை நீக்கி விட்டு வேறு கன்றுகளை நட வேண்டும். நன்கு வளர்ந்து பூ வந்ததும், ஒரேயொரு பக்கக் கன்றை மட்டும் விட்டு விட்டு, பிற கன்றுகளை நீக்கி விட வேண்டும். முடிக்கொத்து நோய் அறிகுறிகளை அடிக்கடி கவனித்து வர வேண்டும். நோய் தென்பட்டால் மலை வாழையைத் தூருடன் தோண்டி அழிக்க வேண்டும்.

கொந்தம் போடுதல்

கோடையில், நிலத்தடி நீர் இலைகள் மூலம் ஆவியாகாமல் தடுக்கவும், குளிர் காலத்தில் காப்பி செடிகளுக்குச் சூரிய வெளிச்சம் கிடைக்கவும், பருவக் காலங்களில் காற்றினால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்கவும், கொந்தம் போடப்படுகிறது.

காய்ந்த மற்றும் பழுத்த இலைகளைச் சிறிது சிறிதாக அரித்து நிலத்தில் பரப்பி விட்டால் களைகள் கட்டுப்படும். மண் ஈரம் காக்கப்பட்டு மண்ணரிப்புத் தடுக்கப்படும். கொந்தமிடுவது, பட்டையிழுப்பு வேலை செய்ய உதவுகிறது. பட்டையிழுப்பதால் தரை மட்டத்துக்கு மேல் கிழங்கு வராது. இம்முறையை மார்ச், ஜூலை, நவம்பர் ஆகிய மாதங்களில் செய்ய வேண்டும்.

களையெடுத்தல்

மலை வாழை சாகுபடியில், தொடக்கத்தில் களைகளின் பாதிப்பு அதிகமாக இருக்கும். இதனால், நீர்ப்பற்றாக்குறை மற்றும் உரப்பற்றாக்குறை ஏற்படும். மேலும், களைகள் மூலம், பூச்சி, நோய்கள் அதிகமாகப் பரவும் வாய்ப்புண்டு. எனவே, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை களைகளை நீக்கி, நிலத்தைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

களைக்கொல்லி மூலம் களைகளைக் கட்டுப்படுத்தலாம். நடவுக்கு முன், எக்டருக்கு 4 கிலோ டையூரான் களைக்கொல்லி வீதம் தெளிக்க வேண்டும். நடவுக்குப் பிறகு, எக்டருக்கு 4 லிட்டர் கிளைப்போசெட் களைக்கொல்லி வீதம் எடுத்து, 1,000 லிட்டர் நீரில் கலந்து நல்ல வெய்யில் உள்ளபோது, கன்றுகளில் களைக்கொல்லி படாமல் தெளிக்க வேண்டும்.

முட்டுக் கொடுத்தல்

அனைத்து சாகுபடி முறை வாழைகளுக்கும் முட்டுக் கொடுப்பது நல்லது. மலை வாழையின் வேர்ப்பிடிப்புத் திறன் குறைவாக இருப்பதால், மரங்கள் காற்றினால் எளிதாகச் சாய்ந்து விடும். வாழைத்தாரின் எடையைத் தாங்க முடியாமலும் சாய்ந்து விடும். இதனால், முழுமையாக மகசூல் இழப்பு ஏற்படும். எனவே, வாழை மரங்கள் எந்தச் சூழலிலும் சாய்ந்து விடாமல் இருக்க, நேர்முட்டுக் கொடுக்க வேண்டும்.

மரங்கள் குலை தள்ளிய பிறகு, இந்த நேர்முட்டை எடுத்து விட்டு, தார் இருக்கும் பகுதியில் எதிர்முட்டுக் கொடுக்க வேண்டும். மரத்தின் உயரம் மற்றும் தாரின் கனத்தைப் பொறுத்து, ஒன்று அல்லது இரண்டு கம்புகளை வைத்து முட்டுக் கொடுக்க வேண்டும். முட்டுக் கொடுக்க, மூங்கில், சவுக்கு, அகத்தி, பூவரசு, சில்வர் ஓக், கல்யாண முருங்கை போன்ற மரங்களைப் பயன்படுத்தலாம்.

பக்கக் கன்றுகளை நீக்குதல்

மலைவாழைக் கருந்துகளை நட்ட, 3-4 மாதங்களில் இடைக்கன்றுகள் உருவாகி மண்ணுக்கு மேல் வளரும். இந்தக் கன்றுகளின் வளர்ச்சிக்குத் தேவையான நீரும் சத்துகளும் தாய்மரக் கிழங்கில் இருந்தே செல்லும். எனவே, தாய் மரங்களின் வளர்ச்சிக் குன்றும். குலை தள்ளவும் நீண்ட நாட்கள் ஆகும். தாரின் எடையும் மகசூலும் குறையும்.

எனவே, பட்டை வடிவத்தில் கூர்மையாக உள்ள கடப்பாரை மூலம், தாய்க் கிழங்குக்குச் சேதமில்லாமல், இடைக்கன்றுகளை நீக்க வேண்டும். தாய்க்கிழங்கில் பெரிதாகக் காயம் ஏற்பட்டால், அதன் வழியே வாடல் நோய், நூற்புழுக்கள், கிழங்குக் கூன்வண்டுகள் உள்ளே சென்று வாழை மரத்தைப் பாதிக்கச் செய்யும்.

இடைக்கன்றுகளை அவ்வப்போது நீக்குவது மிகவும் நல்லது. மலை வாழை மரத்தின் வளர்ச்சிப் பருவத்திலும், மாதம் ஒருமுறையும் இடைக்கன்றுகளை நீக்க வேண்டும். குலை தள்ளும் வரை இந்த வேலையைச் செய்ய வேண்டும். நடவுக்குத் தேவைப்படின், பக்கக் கன்றுகளை அதிகளவில் வளர்க்கலாம்.

பல்லாண்டுப் பயிராகப் பயிரிடும் முறையில், இடைக்கன்றுகளை நீக்குதல் முக்கியமாகும். தார்கள் வரும் போது, 1-2 பக்கக் கன்றுகளை விட்டு விட்டு, மற்ற கன்றுகளை நீக்கி விட வேண்டும். ஆண்டுதோறும் குலை தள்ளும் பருவத்தில் இப்படிச் செய்ய வேண்டும். தார் போடும் இரண்டு மரங்கள் மற்றும் இரண்டு பக்கக் கன்றுகளை விட்டு விட்டு, மீதமுள்ள கன்றுகளை நீக்கி விட வேண்டும்.

ஊடுபயிர்

மலை வாழையில் ஊடுபயிர் சாகுபடி மிக முக்கியமாகும். இதனால், மகசூல் அதிகமாகக் கிடைக்கும். மேலும், எதிர்பாரா இயற்கைச் சீற்றம் அல்லது பூச்சி, நோய்த் தாக்கத்தால் வாழை மகசூல் பாதிக்கப்பட்டால், ஊடுபயிர் மூலம் வருமானம் மூலம் இந்த இழப்பைச் சமாளிக்கலாம். ஊடுபயிர் மூலம், மண்வளம், நீர் மற்றும் சூரிய ஒளியை முழுதாகப் பயன்படுத்தலாம்.

சாகுபடி செய்யும் ஊடுபயிர், குறைந்த வயதில் அதிக மகசூலைத் தருவதாக இருக்க வேண்டும். ஊடுபயிர் வேர்கள் அதிக ஆழத்துக்குச் செல்லாமலும், சத்துகளை எடுப்பதில் மலைவாழைக்குச் சிக்கலை ஏற்படுத்தாமலும் இருக்க வேண்டும். நச்சுயிரி நோய்ப் பாதிப்பு இல்லாத ஊடுபயிராக இருக்க வேண்டும். மலைவாழை மர நிழலில் நன்கு வளர்வதாக இருக்க வேண்டும்.

மலைப் பகுதி மலைவாழை சாகுபடியில், காப்பி, கோகோ, ஆரஞ்சு, மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், பிரியாணி இலை, இலவங்கப்பட்டை ஆகியன, ஊடுபயிர்களாக சாகுபடி செய்யப்படுகின்றன.

வடிகால் எடுத்தல்

மலைப் பகுதியில் பயிரிடப்படும் மலை வாழைக்கு, வடிகால் எடுத்தல் தேவையற்ற செயலாகும். நிலத்தின் தன்மையே தேவைக்கு அதிகமுள்ள நீரை வடிகட்டி விடுவதால், வடிகால் தேவையில்லை.

மண் அணைத்தல்

மலைவாழை மரங்கள் வளர வளர, தூருக்கு மண் அணைத்தல் முக்கியம். மரத்தைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள மண்ணைக் களைகளுடன் வெட்டி அணைப்பதால் களைகள் கட்டுப்படுவதுடன், காற்றுக் காலத்தில் மரங்கள் சாயாமலும், ஒடியாமலும் இருக்கும். இடைக்கன்றுகள் நிறைய வெடித்துக் கிளம்பும்.

நிலத்தைக் கொத்துதல்

மலைவாழைக் கன்றுகளை நடவு செய்த மூன்று மற்றும் ஒன்பது மாதத்துக்குப் பிறகு, நிலத்தைக் கொத்தி விடுதல் முக்கியச் செயலாகும். இதனால், மண்ணின் ஈரத்தன்மை காக்கப்படும். களைகள் நீக்கப்படுவதால், பூச்சிகள் மற்றும் நோய்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குப் பரவாமல் தடுக்கலாம்.

இந்த முறையை, நாமக்கல், சேலம் மலைப்பகுதி மலைவாழை விவசாயிகள் செய்து வருகிறார்கள். இதைத் தொடர்ந்து மண் அணைக்கும் வேலையையும் செய்வதால், பக்கக் கன்றுகள் நிறைய வெடித்துக் கிளம்புவதற்கு வாய்ப்பாகிறது. மண் அணைப்பால், காற்றுக் காலத்தில் மரங்கள் சாயாமலும், ஒடியாமலும் இருக்கும்.

காய்ந்த இலைகளை நீக்குதல்

காய்ந்த இலைகள் மற்றும் பூச்சி, நோய்களால் பாதிக்கப்பட்ட இலைகளை அவ்வப்போது வெட்டி அகற்றி, தீயிட்டுக் கொளுத்த வேண்டும். இதனால், பூச்சிகள் மற்றும் நோய்கள் இடம் விட்டு இடம் பெயர்வதைத் தடுக்கலாம். நோயற்ற இலைகளை எக்காரணம் கொண்டும் அறுக்கக் கூடாது. இலைகளை மரத்திலேயே சருகாகக் காய விட வேண்டும்.

இலைகள் முதிர முதிர அவற்றிலுள்ள சத்துகள், குறிப்பாக, மக்னீசியம் உச்சியில் உள்ள இலைகளுக்குச் சென்று பயன்படும். சில நேரங்களில் வாழைமரப் பட்டைகள், தண்டிலிருந்து பிரிந்து நிற்கும். இதனால், வாழை மரத்தின் பலம் குறைவதுடன், காற்றடித்தால் ஒடிந்து விடும். எனவே, காய்ந்த இலைகளை மரத்தில் வைத்துக் கட்டி, பட்டை பிரியாமல் காக்க வேண்டும்.

பூ ஒடித்தல்

மலைவாழை மரம், ஆறு மாதத்தில் இருந்து எட்டு மாதத்தில் குலை தள்ளி விடும். இது, இரகத்தைப் பொறுத்தும், மண்ணின் தன்மையைப் பொறுத்தும் அமையும். குலை தள்ளிக் கடைசிச் சீப் வெளிவந்து 10-15 நாட்கள் கழித்து, சீப்பிலிருந்து 10-15 செ.மீ. தள்ளி, ஆண் பூக்களை நீக்கிவிட வேண்டும். இதனால், காய்களின் எடையும் உருவமும் அதிகமாகும்.

குலைகளுக்கு உறையிடல்

பூ வெடித்து, எல்லாச் சீப்புகளும் வெளியே வந்ததும், குலைகளை நெகிழி உறையால் மூட வேண்டும். இதனால், பழங்கள் விரைவில் ஒரே மாதிரி முதிர்வதுடன், பூச்சித் தாக்கம் இல்லாமலும், காற்றில் உராய்வால் ஏற்படும் பாதிப்பு இல்லாமலும் இருக்கும். மேலும், காயின் நீளமும் அகலமும், ஏற்றுமதிக்கு ஏற்ற வகையில் உருவாகும். நெகிழி உறையின் தடிமன் 90-100 காஜ் இருக்க வேண்டும். அதில், சீரான இடைவெளியில் சிறிய துளைகளைப் போட வேண்டும்.

மலைகளில் விளையும் மலை வாழைக்கு, பனிக் காலத்தில் காய்ந்த இலைகளைக் கொண்டு குலைகளை மூடுவது நல்லது. இதனால், வெய்யிலால் காய்கள் நிறமாற்றம் அடைவதையும், கடும்பனியால் காய்களில் கரும் புள்ளிகள் விழுவதையும் தடுக்கலாம்.

உறையிடப்பட்ட குலைகள் அறுவடையின் போது பச்சை நிறத்தில் பளபளக்கும். இதனால், சந்தையில் நல்ல விலை கிடைக்கும். குலைக் காம்பையும் காய்ந்த இலைகளால் மூடி வெய்யில் படாமல் பாதுகாக்க வேண்டும். இதனால், காம்பழுகல் நோயைத் தடுக்கலாம்.

மகசூல்

நட்டதிலிருந்து 12 முதல் 15 மாதங்களில் வாழைக் குலைகள் அறுவடைக்குத் தயாராகும். பூ வெடித்ததில் இருந்து 100 முதல் 150 நாட்களில் குலைகளை அறுவடை செய்யலாம். வாழைக்குலையின் எடை 12 முதல் 15 கிலோ வரை இருக்கும். அறுவடைக்குப் பிறகு தாய்மரத் தண்டை, நிலத்திலிருந்து 60 செ.மீ. உயரத்தில் வெட்டி விட வேண்டும். இப்படிச் செய்தால், தாய் மரத்தில் சேமிக்கப்பட்ட சத்துகள், அடுத்து வளரக்கூடிய பக்கக் கன்றுகளுக்குக் கிடைக்கும்.

சந்தைப்படுத்துதல்

செவ்வாய் மற்றும் வியாழக் கிழமையில், அந்தந்த மாவட்டத்தின் தரகு மண்டிக்குக் கொண்டு வரப்படும் மலைவாழைக் குலைகள், மொத்த வணிகர்களால் கொள்முதல் செய்யப்படும். மலை வாழையில், சிறுமலை, விருப்பாட்சிப் பழம் ஒன்று, 1-3 ரூபாய், செவ்வாழை 5 ரூபாய், நமரன் 1-3 ரூபாய் வீதம் கொள்முதல் செய்யப்படுகிறது.


முனைவர் இரா.ஜெயவள்ளி, முனைவர் இரா.அருள் மொழியான், முனைவர் ஜே.சுரேஷ், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சிராப்பள்ளி.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks