My page - topic 1, topic 2, topic 3

மிளகாயில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை!

red chilli pepper plant, very hot!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச்.

மது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறிப் பொருள்களில் ஒன்று மிளகாய். இது பச்சையாக அல்லது வற்றலாகப் பயன்படுகிறது. தமிழ்நாட்டில் 56,500 எக்டரில் நடைபெறும் மிளகாய் சாகுபடி மூலம், 34,000 டன் அளவுக்கு மிளகாய் வற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. மிளகாய்ச் செடிகளைப் பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்குவதால், பெருத்த மகசூல் இழப்பு ஏற்படுகிறது. எனவே, இவற்றைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகிறது.

மிளகாயைத் தாக்கும் பூச்சிகள்: இலைப்பேன்

மஞ்சள் நிறமுள்ள நுண்ணிய பூச்சிகள், இலைகளின் அடியில் அதிகமாகக் காணப்படும். இவை இலைச்சாற்றை உறிஞ்சுவதால், இலைகள் பச்சையத்தை இழக்கின்றன. தீவிரத் தாக்குதலுக்கு உள்ளான இலைகள், மேல்நோக்கிச் சுருண்டும், சிறுத்தும், ஒழுங்கற்றும் காணப்படும். இறுதியில், இந்த இலைகள் பழுப்பாக மாறி உதிர்ந்து விடும். இப்பூச்சிகள், பயிரின் அனைத்து நிலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அசுவினி

மஞ்சள் அல்லது பழுப்பாகக் காணப்படும் இப்பூச்சிகள், செடியின் துளிரில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து சாற்றை உறிஞ்சுவதுடன், பயிரில் மஞ்சள் தேமல் நோயைப் பரப்பும் காரணியாகவும் இருக்கின்றன. அசுவினியின் தாக்குதலுக்கு உள்ளான செடிகள் வீரியமற்று, வெளிர் மஞ்சளாக மாறும். இப்பூச்சிகள் வெளியேற்றும் தேன் துளிகளை உண்பதற்குச் செடிகளில் எறும்புகள் மொய்க்கும். இதன் மூலம் அசுவினியின் தாக்கம் உள்ளதை அறியலாம். இதனால், செடிகளில் இருக்கும் பூக்களும் பிஞ்சுகளும் அதிகளவில் உதிரும்.

காய்ப்புழு

மூன்று வகையான காய்ப்புழுக்கள் மிளகாய்ச் செடிகளைத் தாக்கிச் சேதப்படுத்தும். துவரைக் காய்ப்புழு, புகையிலைப் புழு, ஆமணக்குப் புழு ஆகிய இப்புழுக்கள், காய்களின் உட்புறத் திசுக்களை முழுமையாக உண்டு சேதத்தை ஏற்படுத்தும். தாக்குதலுக்கு உள்ளான காய்கள், கீழே உதிர்ந்து விடும். உதிர்ந்த காய்களில் துளைகள் இருப்பதைக் கொண்டு, இப்புழுக்களின் தாக்குதலை அறியலாம். பெரும்பாலும் இரவு நேரத்திலேயே இப்புழுக்கள் காய்களைத் துளைப்பதால், பகலில் கண்களுக்குப் புலப்படாத வகையில், செடிகளுக்கு அருகிலுள்ள மண்ணில் மறைந்திருக்கும்.

சிலந்திப் பூச்சி (முறணை)

சிவப்புச் சிலந்தி, முத்துப் போன்ற சிலந்தி, வெண்பட்டுச் சிலந்தி என மூன்று வகையான சிலந்திகள் மிளகாய்ச் செடிகளைத் தாக்கும். இவை, செடிகளின் திசுக்களைச் சுரண்டியும், இலைகளை வெளிரச் செய்தும் சேதத்தை உண்டாக்கும். தாக்குதலுக்கு உள்ளான இலைகளின் ஓரங்கள், கீழ்நோக்கி மடிந்தும், முதிர்ந்த செடிகள் ஒடிந்தும் காணப்படும்.

இலைகளைக் கசக்கினால், மொறமொறவென நொறுங்கும். செடியின் துளிர்ப் பகுதிகள் ஒன்று சேர்ந்து சிறுத்து அடர்த்தியாகக் காணப்படும். பூக்களும் இலைகளைப் போலப் பச்சையாக உருமாறுவதால், காய்கள் பிடிக்காது. காய்கள் பிடித்தாலும், சிறிதாகவும், ஒழுங்கற்றும் காணப்படும்.

ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாடு

கோடை உழவு செய்ய வேண்டும். பூச்சிகளின் மாற்று உறைவிடமாக இருக்கும் களைகளை, வயல் வரப்புகளில் இருந்து சுத்தமாக அகற்ற வேண்டும். மேட்டுப்பாங்கான இடத்தில் நாற்றங்காலை அமைக்க வேண்டும். நீர்த் தேங்காமல் நல்ல வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

அடியுரத்துடன் ஏக்கருக்கு நூறு கிலோ வேப்பம் புண்ணாக்கையும் சேர்த்து இட வேண்டும். சாற்றை உறிஞ்சும் பூச்சிகளான, இலைப்பேன், அசுவினி, சிலந்தி ஆகியவற்றைக் கட்டுப்படுத்த, அகத்தி, மக்காச்சோளம் போன்ற பயிர்களைப் பொறிப் பயிராக வளர்க்க வேண்டும்.

ஏக்கருக்கு ஒரு சூரிய விளக்குப்பொறி வீதம் வைத்து, பறக்கும் தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும். ஏக்கருக்குப் பத்து மஞ்சள் ஒட்டுப்பொறிகளை வைத்து, இலைப்பேன்களைக் கட்டுப்படுத்தலாம். ஏக்கருக்கு ஐந்து இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்து, காய்ப் புழுக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கலாம்.

பூச்சிகளின் தாக்குதல் தெரியும் போது, வேப்பங்கொட்டைக் கரைசல் 5 சதம் அல்லது வேப்பெண்ணெய் 3 சதம் கரசலைத் தெளித்துப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். ஒரு கிலோ விதைக்கு இமிடாகுளோபிரிட் 70% WS 10 கிராம் வீதம் எடுத்து, விதைநேர்த்தி செய்து சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

இலைப்பேன், அசுவினியைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் வெர்ட்டிசிலியம், அல்லது ஒரு ஏக்கருக்கு பிப்ரோனில் 5% SC 250 மில்லி, அல்லது இமிடாகுளோபிரிட் 17.8% SL 80 மில்லியைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

காய்ப் புழுக்களைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு, ஹெலிகோ வெர்பா அல்லது ஸ்போடாப்டிரா என்.பி.வி. 100 LE, அல்லது எமாமெக்டின் பென்சோயேட் 5% SG 80 கிராம், அல்லது இண்டக்சாகார்ப் 14.5% SC 130 மில்லி, அல்லது பிப்ரோனில் 5% SC 400 மில்லியைத் தெளிக்க வேண்டும்.

முறணைச் சிலந்தியைக் கட்டுப்படுத்த, ஒரு ஏக்கருக்கு, பிப்ரோபெசின் 25% SC 150 கிராம், அல்லது ஸ்பைரோ மெசிபேன் 22.9% SC 100 மில்லி, அல்லது ஹெக்சிதையாசாக் 5.45% EC 150 மில்லியைத் தெளிக்க வேண்டும்.

மிளகாயைத் தாக்கும் நோய்கள்: நாற்றழுகல் நோய்

இந்நோய் நாற்றங்காலில், இரண்டு முறைகளில் சேதத்தை ஏற்படுத்துகிறது. முதலாவது, விதை முளைக்கும் முன்பே தாக்கி, செடி வெளியே வருவதற்கு முன்பே அழுகச் செய்கிறது. இரண்டாவதாக, வளர்ந்த இளம் நாற்றுகளின் தண்டுப் பகுதியைத் தாக்குகிறது. தாக்குதலுக்கு உள்ளான செடியின் மண்ணை ஒட்டிய தண்டுப் பகுதியில் நீர்க்கசிவுடன் கூடிய புள்ளிகள் தோன்றித் தண்டானது முழுமையாக அழுகிப் போகிறது.

இந்நோயின் தாக்குதல் தீவிரமானால், நாற்றுகள் ஒடிந்து தொங்கும். இந்நோய் தாக்கிய நாற்றங்காலில், திட்டுத் திட்டாக நாற்றுகள் அழுகிக் காணப்படும். நாற்றழுகல் நோயானது, மண், பாசனநீர் மூலம் பரவுகிறது.

கட்டுப்படுத்துதல்: நல்ல வடிகால் வசதியுள்ள, நீர்த் தேங்காத மற்றும் நிழலில்லாத இடத்தில் மேட்டுப் பாத்திகளை அமைக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டசிம், அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி, அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் வீதம் எடுத்து, விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி 24 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும்.

நோய்த் தாக்கம் தென்படும் போது, ஒரு லிட்டர் நீருக்கு 2.5 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு, அல்லது ஒரு கிராம் கார்பென்டசிம் வீதம் கலந்து, வேர்கள் நன்கு நனைய ஊற்ற வேண்டும்.

வேர் மற்றும் தண்டழுகல் நோய்

நடவு முதல் அறுவடை வரையில் இந்நோயானது பயிரைத் தாக்கும். தாக்குதலுக்கு உள்ளான செடியின் இலைகள், திடீரென வாடி, பளபளப்புத் தன்மையை இழந்து காணப்படும். தீவிரம் அதிகமானால், செடி காய்ந்து விடும். நோய் தாக்கிய செடியை இழுத்தால், எளிதாகக் கையோடு வந்து விடும். செடியின் அடியில் வெண் பூசணம் வளர்ந்திருக்கும்.

கட்டுப்படுத்துதல்: நோய் தாக்கிய செடிகளைப் பிடுங்கி எரித்துவிட வேண்டும். டிரைக்கோடெர்மா மற்றும் சூடோமோனாஸ் தலா ஒரு கிலோவை 25 கிலோ தொழுவுரத்தில் கலந்து மண்ணில் இட வேண்டும். தாக்குதல் தெரியும் போது, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பென்டசிம் அல்லது 2.5 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு வீதம் கலந்து வேர்ப்பகுதி நனைய ஊற்ற வேண்டும்.

சாம்பல் நோய்

இது ஒரு பூசண நோயாகும். நோயின் தொடக்கத்தில், இலையின் அடியில் வெண் பூசண வளர்ச்சித் தென்படும். இலையின் மேல்புறம், பச்சை நிறத்தை இழந்து மஞ்சளாகக் காணப்படும். இதனால், ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு இலைகள் வலுவிழந்து காய்ந்து உதிர்ந்து விடும். தீவிரத் தாக்குதலின் போது, அனைத்து இலைகளும் உதிர்ந்து தண்டு மட்டும் நிற்கும்.

கட்டுப்படுத்துதல்: பாதிக்கப்பட்ட இலைகளைச் சேகரித்து அழிக்க வேண்டும். தொழுவுரத்தில் ஒரு கிலோ டிரைக்கோடெர்மா ஆர்சியானத்தைச் சேர்த்து இட வேண்டும். தழைச்சத்தை ஒரே சமயத்தில் இடாமல் பிரித்து இட வேண்டும். தீவிரத் தாக்குதலின் போது, ஒரு ஏக்கருக்கு, 500 மில்லி ஹெக்சகோனசோல் 5% EC, அல்லது 200 மில்லி அசாக்ஸிரோபின் 23% SC, அல்லது 500 கிராம் மேன்கோசெப் வீதம் கலந்து தெளிக்கலாம்.

நுனிக்கருகல் அல்லது பழ அழுகல் நோய்

இலையின் மேற்பரப்பில் சாம்பல் நிறத்தில் சிறிய வட்டப் புள்ளிகள் தோன்றும். நோய் தாக்கிய செடியின் இலைகள் பழுப்பாகி உதிர்ந்து விடும். செடியின் நுனி உலர்ந்து சாம்பலாக அல்லது கறுப்பாக மாறிவிடும். செடியானது நுனியிலிருந்து உலர்ந்து பின்னோக்கிக் காய்ந்து கொண்டே வரும். காய்ந்து போன செடியின் தண்டில் கருமையாகச் சிறிய புள்ளிகள் இருக்கும்.

இதைப் போலவே, பழங்களில் சாம்பல் அல்லது பழுப்புப் புள்ளிகள் தோன்றி, பிறகு விரிவாகிப் பழத்தை அழுகச் செய்யும். புள்ளியின் மையத்தில் கருமையான மற்றும் அடர்த்தியான புள்ளிகளைக் காணலாம். இதனால், மிளகாயின் தரம் வெகுவாகக் குறையும்.

கட்டுப்படுத்துதல்: இப்பூசணம், காற்று மற்றும் விதை மூலம் பரவுகிறது. எனவே, நோய் தாக்காத செடிகளில் இருந்து விதைகளை எடுக்க வேண்டும். விதை நேர்த்தி செய்த பிறகே விதைக்க வேண்டும். நோய் தாக்கும் போது, ஏக்கருக்கு, 200 மில்லி புரபிகோனசோல், அல்லது 250 மில்லி டெபுகோனசோல், அல்லது 500 கிராம் மேன்கோசெப் மருந்தைத் தெளிக்க வேண்டும்.

இலைப்புள்ளி நோய்

இலைகளில் பழுப்பு நிறத்தில் வட்டப் புள்ளிகள் தோன்றும். புள்ளிகள் விரிவாகும் போது, புள்ளியின் மையத்தில் சாம்பாலாகவும், ஓரத்தில் அடர் பழுப்பாகவும் தெரியும். தீவிரத் தாக்குதலின் போது, இலைகள் காய்ந்து உதிர்ந்து விடும். இந்நோய் காற்றின் மூலம் பரவும்.

கட்டுப்படுத்துதல்: விதை நேர்த்தி செய்த பிறகே விதைக்க வேண்டும். நோய் தாக்கும் போது, ஏக்கருக்கு 250 கிராம் குளோரோ தலோனில், அல்லது 200 மில்லி புரபிகோனசோல், அல்லது 500 கிராம் மேன்கோசெப் மருந்தைத் தெளிக்க வேண்டும்.


ப.நாராயணன், வேளாண்மை அறிவியல் நிலையம், கீழ்நெல்லி, திருவண்ணாமலை – 604 410.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks