My page - topic 1, topic 2, topic 3

Advertisement:

பசலைக்கீரை சாகுபடி!

பசலைக்கீரை

நாம் நோயற்று வாழ வேண்டுமெனில், தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது, கீரையாகவும், பந்தலில் படர்ந்து அழகுக் கொடியாகவும் பயன்படுகிறது.

பசலைக்கீரை சாகுபடி

+ ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். சித்திரை, ஆடி, மார்கழி, மாசி ஆகிய மாதங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

+ அதிகக் களி மற்றும் மணல் நிலத்தைத் தவிர மற்ற மண் வகைகளில் பயிரிடலாம்.

+ சாகுபடி நிலத்தை நன்றாக உழுது, கடைசி உழவுக்கு முன் ஏக்கருக்கு 5 டன் மட்கிய தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும். மண்புழு உரம், கம்போஸ்ட் ஆகியவற்றையும் இடலாம்.

+ பிறகு, தேவையான அளவில் பாத்திகளை அமைக்க வேண்டும்.

+ பசலைக்கீரையை, விதை அல்லது தண்டு மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். எனவே, ஒரு அடி இடைவெளியில் விதை அல்லது தண்டுகளை நட வேண்டும். ஏனெனில், வெய்யில் நன்றாகக் கிடைக்கும் போது, செடிகள் சிறப்பாக வளரும்.

+ விதை நடவாக இருந்தால், விதைகளை முதல் நாள் இரவே ஊற வைத்து அடுத்த நாள் நடலாம். இதனால், நல்ல முளைப்புத் திறன் கிடைக்கும்.

+ நடவு செய்ததும் நீர் விட வேண்டும். அடுத்து, மூன்றாம் நாள் உயிர்நீர் விட வேண்டும். பிறகு, தேவைக்கு ஏற்ப பாசனம் செய்யலாம்.

+ நடவு செய்த விதைகள், ஒரு வாரத்தில் முளைக்கத் தொடங்கும். தண்டுகளை நடவு செய்தால், தண்டுகளில் வேர்கள் உருவாகும் வரை, வெய்யில் படாமல் பாதுகாக்க வேண்டும்.

+ தண்டுகளை நடுவதை விட, விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்வதே நல்லது.

+ கொடிகள் செழிப்பாக வளர, சரியான நேரத்தில் களைகளை நீக்க வேண்டும்.

+ பசலைக்கீரைக் கொடிகள் படர்வதற்குப் பந்தல் அமைத்து, கிடை மட்டமாகப் படர விட வேண்டும். செங்குத்தாகப் படர விட்டால், இலைகளைப் பறிப்பதில் சிரமம் ஏற்படும்.

+ இலைகள் அதிகமாகத் தழைத்து வர, ஒரு லிட்டர் நீருக்கு 30 மி.லி. பஞ்சகவ்யா வீதம் கலந்து, பத்து நாட்களுக்கு ஒருமுறை, காலை நேரத்தில் தெளிக்கலாம்.

+ ஜீவாமிர்தக் கரைசலைப் பாசனநீரில், மாதம் இருமுறை கலந்து விடலாம். இதனால், கீரைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

+ இந்தக் கீரையைப் பெரும்பாலும் புழு, பூச்சிகள் தாக்குவதில்லை. அப்படி ஏதேனும் தாக்கினால், இயற்கைப் பூச்சி விரட்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

+ இதற்கு, ஐந்து சதவீத வேப்பங் கொட்டைக் கரைசலைத் தயாரித்து, 15 நாட்கள் அல்லது மாதம் ஒருமுறை, இலை, தண்டு ஆகியவற்றில் படும்படி தெளிக்கலாம்.

அறுவடை

இது, ஓராண்டுப் பயிராகும். சாகுபடி செய்து 6-8 மாதங்களில் செழிப்பாக வளர்ந்த கொடியில் இருந்து ஒரு கிலோவுக்கு மேல் இலைகள் கிடைக்கும்.

+ கொடிகள் பூக்கும் வரை காத்திருக்காமல் அதற்கு முன்பே அறுவடை செய்வது நல்லது.

+ இலைகளில் நீர்ச்சத்து நிறைந்து இருப்பதால், இந்தக் கீரை விரைவாக வாடிப் போவதில்லை. சில நாட்கள் வரையில் பசுமையாக இருக்கும். ஆனாலும், வாடுவதற்கு முன் சமையலில் பயன்படுத்த வேண்டும்.


C.RAJA BABU e1738060655504

முனைவர் சி.இராஜா பாபு, இணைப் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, திருச்சி மாவட்டம்.

Share:

Advertisement:

  சந்தேகமா? கேளுங்கள்!  

Advertisement:

இன்னும் படியுங்கள்!