My page - topic 1, topic 2, topic 3

Advertisement:

முருங்கைக் கீரை சாகுபடி!

முருங்கைக் கீரை

கீரைகளின் அரசன் என்னும் பெயரைச் சூட்டத் தகுதியானது முருங்கைக் கீரை. முருங்கையின் பசுமையான இலைகளில் மறைந்திருக்கும் கறுப்பு நிற இரும்புச்சத்து, இரத்தச் சோகையைத் தடுக்கும். உடனடி சமையலுக்கு உதவுவது முருங்கைக் கீரை. இந்தக் கீரையை, வாரத்தில் மூன்று முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று, மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

காரணம், இந்தக் கீரையில் இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், காப்பர், சோடியம், ஜிங்க், மெக்னீசியம், வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ், நார்ச்சத்து, புரதம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.

முருங்கைக் கீரையின் சிறப்பை உணர்ந்து தான், ஒரு எருதும் ஒரு முருங்கை மரமும் இருந்து விட்டால், எவ்வித வறட்சியையும் சமாளித்து விடலாம் என்று, நம் பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். இத்தகைய கீரைகளை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டு வந்தால், சத்துக்குறை, வளர்ச்சிப் பாதிப்புப் போன்ற பிரச்சனைகள் இல்லாமல் வாழலாம்.

வெந்து கெட்டது முருங்கை என்பது, கீரையின் நளபாகத்தோடு தொடர்புடைய ஆழமான உணவு மொழி. முருங்கைக் கீரையை அளவுக்கு மேல் வேக வைத்தால், அதிலிருக்கும் சத்துகள் வீணாகி விடும். அதனால், அவற்றின் பயன்கள் முழுமையாகக் கிடைக்காமல் போய் விடும்.

முருங்கை வகைகள்

முருங்கையில், பாரம்பரிய மர முருங்கை, செடி முருங்கை என இரண்டு வகைகள் இருக்கின்றன. மரங்களாக வளராமல் செடி நிலையிலேயே காய்ப்பதால், செடி முருங்கை எனப்படுகிறது. மர முருங்கையில் மருத்துவக் குணமும், சுவையும் அதிகமாக இருக்கும். செடி முருங்கையில் காய்கள் சற்றுத் திடமாக இருந்தாலும், சற்றே சலசலப்புடன் இருக்கும்.

செடி முருங்கையின் அதிகளவு ஆயுட்காலம் இரண்டு ஆண்டுகள். ஆனால், மர முருங்கையின் அதிகளவு ஆயுட்காலம் ஐம்பது ஆண்டுகள். செடி முருங்கை, விதை மூலமும், மர முருங்கை, நாற்றுகள், போத்துகள், அதாவது, முருங்கைக் கட்டைகள் மூலமும் சாகுபடி செய்யப்படும். செடி முருங்கையில், பி.கே.எம்.1, கே.எம்.1, பி.கே.எம்.2 என்று, மூன்று இரகங்கள் உள்ளன.

முருங்கைக் கீரை சாகுபடி முறை

மண்: களர், உவர் நிலங்களைத் தவிர்த்து, வடிகால் வசதியுள்ள அனைத்து நிலங்களிலும் செடி முருங்கை நன்றாக வளரும். இதற்கு, வைகாசிப் பட்டம் ஏற்றது. செம்மண், கரிசல் மண் நிலத்தில் நன்றாக வளர்ந்து அதிக விளைச்சலைத் தரும்.

சாகுபடிக் காலம்: முருங்கையை, ஜூன் – ஜூலை மற்றும் நவம்பர் – டிசம்பர் ஆகிய மாதங்களில் பயிரிடலாம். ஏப்ரல், மே மாதங்களில் நடவு செய்தால் இலாபம் கிடைக்கும். ஆனால், இந்த மாதங்களில் மழை குறைவாக இருப்பதால், பாசனப் பற்றாக்குறை ஏற்படும். நடவு செய்ய, ஏக்கருக்கு 200 கிராம் விதைகள் தேவைப்படும்.

நிலத் தயாரிப்பு: முதலில், நிலத்தை நன்கு உழுது பண்படுத்த வேண்டும். அடுத்து, 45 செ.மீ. அகல, நீள, ஆழமுள்ள குழிகளைத் தோண்டி, ஒரு வாரம் ஆறப்போட வேண்டும். பிறகு, குழிக்கு 15 கிலோ தொழுவுரம் வீதம் இட வேண்டும்.

அடுத்து, ஏழு நாட்கள் கழித்து, 15 கிலோ தொழுவுரம், மேல்மண் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். குழிகளில் நீரைப் பாய்ச்சி, 3 செ.மீ. ஆழத்தில் முருங்கை விதைகளை நட வேண்டும். நட்ட மூன்று நாட்கள் கழித்து, போதியளவில் நீரை ஊற்ற வேண்டும். மண்ணின் தன்மைக்கு ஏற்ப, சாம்பல் சத்து, யூரியா, சூப்பர் பாஸ்பேட் போன்ற உரங்களை இட வேண்டும்.

விண் பதியன் முறையில் ஒட்டு நாற்றுகள் தயாரிப்பு: தென்னைநார்க் கழிவை, சிறிதளவு பஞ்சகவ்யா, அசோஸ்பைரில்லம் ஆகியவற்றுடன் கலந்து, ஒருமணி நேரம் ஊற வைத்து, 40 சதம் ஈரப்பதம் இருக்கும் வகையில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது, தென்னைக்கழிவு ஈரமாக இருக்க வேண்டும். ஆனால், கையில் எடுத்து இறுக்கிப் பிடித்தால், நீர்ச் சொட்டக் கூடாது. இதுதான், ஊட்டமேற்றிய தென்னை நார்க்கழிவு.

முருங்கை மரம் பூவெடுக்கும் போது, அந்த மரத்தில் கட்டை விரல் அளவுள்ள குச்சியின் ஒரு பகுதியில் உள்ள பட்டையை நீக்க வேண்டும். அந்த இடத்தில், ஊட்டமேற்றிய தென்னைநார்க் கழிவை வைத்து, நெகிழிக் காகிதத்தால், காயத்துக்குக் கட்டுப் போடுவதைப் போல, இறுக்கமாகக் கட்டி வைக்க வேண்டும்.

இப்படிச் செய்து நாற்பது நாட்கள் கழித்துப் பார்த்தால், அந்தப் பகுதியில் புது வேர்கள் உருவாகி இருக்கும். அந்தக் குச்சியை வெட்டியெடுத்து, ஊட்டமேற்றிய மண்புழு உரம் நிரம்பிய நெகிழிப் பைகளில் வைத்து, நீர் ஊற்றி 60 நாட்கள் வளர்த்து நிலத்தில் நடவு செய்யலாம். இப்படி நாற்றுகளைத் தயாரித்து விற்பதன் மூலமும், விவசாயிகள் வருமானம் பார்க்க முடியும்.

பின்செய் நேர்த்தி: அடித்து வளர்க்காத பிள்ளையும், ஒடித்து வளர்க்காத முருங்கையும் பயனில்லாமல் போய் விடும் என்பது, விவசாயிகள் மத்தியில் சொல்லப்படும் சொலவடை. முருங்கை மரம், உயரமாக வளர்ந்தால், அதிலேறிக் காய்களைப் பறிக்க முடியாது. எனவே, முருங்கைச் செடிகள், ஒரு மீட்டர் உயரம் வளர்ந்ததும், நுனிக் கொழுந்தைக் கிள்ளிவிட வேண்டும், இதன் மூலம், பக்கவாட்டில் கிளைகள் உருவாகி, செடிகள் நன்கு படர்ந்து வளரும். இரண்டு மாதங்கள் கழித்து, செடி முருங்கைக் கீரையை அறுவடை செய்ய வேண்டும்.

நடவு செய்த ஆறு மாதங்கள் கழித்து, முருங்கைக் காய்கள் காய்க்கத் தொடங்கும். காய்கள் காய்த்து முடித்த பிறகும், இந்தச் செடிகளைக் கவாத்து செய்து, மூன்று ஆண்டுகள் வரை பராமரித்து வருமானம் பார்க்கலாம். இந்த முருங்கையைக் காய்ப்புக்கு விடும் ஒவ்வொரு முறையும், தேவையான அளவு உரங்களை இட வேண்டும். செடி முருங்கை நன்றாக வளர்வதற்கு, இயற்கை உரங்களான, சாணம், காய்ந்த இலைகள் போன்றவற்றை இடலாம்.

இயற்கை முறையில் பூச்சி மேலாண்மை: முருங்கை இலைகளில் துளைகள் இருந்தால், புழுத்தாக்குதல் உள்ளது என்று பொருள். இந்தப் புழுக்கள் கண்ணுக்குத் தெரியாது. இந்த அறிகுறி தெரிந்ததும், இலைகள் முழுக்க நனையும் வகையில், மூலிகைப் பூச்சி விரட்டியைத் தெளித்து, புழுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.

சில சமயங்களில் கம்பளிப் பூச்சித் தாக்குதல் இருக்கும். இதை, வேப்ப எண்ணெய்க் கரைசல் அல்லது அடுப்புச் சாம்பலைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். ஒவ்வொரு முறையும் பூவெடுக்கும் முன், பஞ்சகவ்யா கரைசலைத் தெளித்து வந்தால், எந்த நோயும் தாக்காது. இயற்கை முறையில் பெரும்பாலும் பூச்சிகள், நோய்கள் வருவதில்லை.

மகசூல்

ஆறாம் மாதத்திலிருந்து காய்க்கத் தொடங்கும். ஆண்டுக்கு மூன்று முறை காய்ப்பு இருக்கும். ஒவ்வொரு முறையும் நாற்பது நாட்கள் மட்டுமே காய்ப்பு இருக்கும். காயை அறுவடை செய்வதற்கு முன், ஒவ்வொரு மரத்துக்கும் 200 கிராம் கடலைப் புண்ணாக்கை இட வேண்டும். அதைப்போல் மகசூல் முடிந்ததும், ஒவ்வொரு மரத்துக்கும் 30 கிலோ தொழுவுரத்தை வைக்க வேண்டும்.

இதை முறையாகச் செய்தால் தான், தரமான விளைச்சல் கிடைக்கும். ஒவ்வொரு செடி முருங்கையிலும் ஆண்டுக்கு 180-200 காய்கள் கிடைக்கும். இவ்வகையில், ஒரு ஏக்கரில் ஆண்டுக்கு 20 டன் முருங்கைக் காய்கள் கிடைக்கும்.

மாடித்தோட்ட முருங்கைக்கீரை சாகுபடி

முருங்கைக் கீரையில் பலவிதமான சத்துகள் உள்ளன. அதனால், நிலத்தில் சாகுபடி செய்து கஷ்டப்படாமல், நமது வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து, நல்ல பலனை அடையலாம். மிகவும் எளிமையான முறையில், முருங்கைக் கீரை வளர்ப்பது மற்றும் சாகுபடி செய்வதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

முருங்கை விதை: முதலில் முருங்கை விதையை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். விதையின் மேல் வெண்பூச்சு இருக்கும் விதைகளைப் பார்த்து வாங்க வேண்டும். ஏனெனில், இந்த வெண்பூச்சு இருந்தால் தான், முளைப்புத் திறன் நன்றாக இருக்கும்.

நாற்றுத்தட்டு: நாற்றுத்தட்டை எடுத்து, அதில் மட்கிய குப்பை மற்றும் மண்ணைச் சேர்க்க வேண்டும். பின்பு, மண்ணில் குழியை இட்டு, அதில் முருங்கை விதையை ஊன்றி, சிறிதளவு நீரைத் தெளிக்க வேண்டும். இப்படிச் செய்து, நான்கு நாட்களில் விதை முளைத்து விடும். இதை, அடுத்த ஒரு வாரத்தில் எடுத்து நடவு செய்து விடலாம்.

மண் கலவை: இதில், செம்மண், மாட்டுச்சாணம், ஆற்று மணல் மற்றும் ஏதாவது ஒரு மண் வகையைச் சேர்த்தால், செடி நன்றாக வளரும். முதலில் ஒரு சாக்குப்பையை எடுத்துக் கொண்டு, அதில் பாதியளவு இந்த மண் கலவையை நிரப்ப வேண்டும். பிறகு, முளைத்த முருங்கைச் செடிகளை நட்டு, வேர்ப்பகுதியில் நீரைத் தெளிக்க வேண்டும். தினமும் கொஞ்சம் கொஞ்சமாக நீரைத் தெளிப்பது நல்லது.

பின்செய் நேர்த்தி: முருங்கைச் செடி நன்றாக வளர்ந்த பிறகு, கீழேயிருந்து நான்கடி விட்டு வெட்டிவிட வேண்டும். முருங்கைத் தண்டு காயாமல் இருக்க, வெட்டுப் பகுதியில் மாட்டுச் சாணத்தைத் தடவிவிட வேண்டும். இப்படிச் செய்தால், நிறையக் கிளைகள் உருவாகும்.

பூச்சிகள் தாக்காமல் இருக்க: வேப்ப எண்ணெய் மற்றும் இஞ்சி, பூண்டுக் கரைசலைத் தெளித்தால், பூச்சிகள் தாக்காமல் இருக்கும். மேலும், மாதம் ஒருமுறை வேப்பம் புண்ணாக்கை இடுவதன் மூலமும், பூச்சிகள் இல்லாமல் செடிகள் நன்றாக வளரும்.

உரம்: மண்புழு உரம், கம்போஸ்ட் ஆகியவற்றை இடலாம். இலைகள் அதிகளவில் தழைக்க, ஒரு லிட்டர் நீருக்கு 30 மி.லி. பஞ்சகவ்யா வீதம் கலந்து செடிகளில் தெளிக்கலாம். மாதம் இருமுறை, ஜீவாமிர்தக் கரைசலைப் பாசனநீரில் கலந்து விடலாம். இதனால், கீரைகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.

முருங்கைச் செடிக்கு, உளுந்தை ஊற வைத்த நீர் மற்றும் அரிசியை ஊற வைத்த நீரைக் கொடுத்தால், காய்கள் பெரிதாக வளரும். மாட்டுச் சாணத்தை முருங்கைச் செடியின் வேர்களில் இடுவதன் மூலம், நல்ல வளர்ச்சியை அடையச் செய்யலாம்.

பயிர்ப் பாதுகாப்பு: கீரைகளில் பூச்சிகளின் தாக்குதல் இருந்தால், இஞ்சி, பூண்டுக் கரைசலைத் தெளிக்க வேண்டும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் சம அளவில் எடுத்து, இடித்து ஒரு லிட்டர் மாட்டுக் கோமியத்தைச் சேர்த்து, ஒருநாள் வைத்திருந்தால், இக்கரைசல் தயாராகி விடும். இந்தக் கரைசலை, பத்து லிட்டர் நீருக்கு 300 மி.லி. வீதம் கலந்து, பத்து நாட்களுக்கு ஒருமுறை, அதிகாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.

மருத்துவக் குணங்கள்

+ மூட்டுவலி, வாயுக்கோளாறு மற்றும் கண் நோய்களுக்கு, மாத்திரை மருந்துகளே தேவையில்லை.

+ மூட்டுவலி உள்ளவர்கள் முருங்கைக் கீரையைத் தொடர்ந்து உண்டு வந்தால், எழுபது வயதில் கூட மாரத்தானில் ஓடலாம்.

+ அதைப்போல், வாயுக்கோளாறு இருப்பவர்கள், முருங்கைக் கீரையுடன், பூண்டைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட வேண்டும்.

மருத்துவ ஆராய்ச்சி

இன்றும் முருங்கைக் கீரையை வைத்து, எண்ணற்ற ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இத்தகைய ஆராய்ச்சிகளில் ஒன்று, முருங்கைக் கீரையில் 46 ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறது. ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், உடல் செல்களின் அழிவைக் குறைத்து, நாம் இளமையோடு இருக்க உதவும்.

முருங்கைக்கீரை மட்டுமல்ல, முருங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் மருத்துவக் குணம் கொண்டது. அதன் காய், இலை, பட்டை, வேர் ஆகிய அனைத்தும், மருத்துவப் பயன்களுக்கு உகந்தவை.


C.RAJA BABU e1738060655504

முனைவர் சி.இராஜா பாபு, இணைப் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, திருச்சி மாவட்டம்.

Share:

Advertisement:

  சந்தேகமா? கேளுங்கள்!  

Advertisement:

இன்னும் படியுங்கள்!