கத்தரிக்காய் சாகுபடியில் நோய் மேலாண்மை!

கத்தரி kaththiri

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச்.

த்தரிப் பயிர் எல்லா இடங்களிலும், ஆண்டு முழுவதும் பயிரிடப் படுகிறது. கத்தரிக்காய் இல்லாத சமையலே இல்லை என்று சொல்லும் அளவில், பெரிய இடத்தைப் பிடித்துள்ளது. கத்தரிச் செடிகளின் வளர்ச்சிக் காலத்தில், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் அதிகமாக உள்ளதால், மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது. நோய்த் தாக்குதலால் குறைந்தது 20-30% மகசூல் இழப்பு உண்டாகிறது. இந்த இழப்பைத் தவிர்க்க, கத்தரிச் செடிகளை நோய்களில் இருந்து காக்க வேண்டும்.

நாற்றழுகல் நோய்

விதைப் படுக்கையில் திடீரென்று நாற்றுகள் வாடத் தொடங்கும். இதற்குக் காரணம் நாற்றழுகல் நோயாகும். மண் மூலம் இந்நோய் பரவும். இதைத் தடுக்க, ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைக்கலாம். மண்ணில் ஒரு கிலோ டிரைக்கோடெர்மா அல்லது சூடோமோனாசை இடுவதன் மூலம் நாற்றழுகல் நோய் பரவாமல் கட்டுப்படுத்தலாம்.

பாக்டீரியா வாடல் நோய்

நோய்த் தாக்கப்பட்ட இலைகளில், முதல் அறிகுறிகள் தோன்றும். இப்பகுதிகளில் நோய்க் காரணியின் திரவம் கசிந்து கொண்டிருக்கும். செடிகளின் கீழ்ப்புறம் இருக்கும் இலைகள் தொங்கி, வாடல் நோய் தோன்றத் தொடங்கும். இதைத் தடுக்க, நோய்த் தாக்குதலுக்கு உள்ளான செடிகளைப் பிரித்தெடுக்க வேண்டும். வயலைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மண்ணில் பசுந்தாள் உரங்களை இடுவதன் மூலம், நோய்க் காரணியைத் தவிர்க்கலாம்.

செர்கோஸ்போரா இலைப்புள்ளி நோய்

நீளவாக்கில் அல்லது ஒழுங்கற்ற வடிவில் இலைகளில் புள்ளிகள் தோன்றும். பிறகு, சாம்பல் கலந்த பழுப்பு நிறமாக மாறும். நோய்த் தாக்கம் அதிகமாகும் போது, இலைகள் காய்ந்து உதிர்ந்து விடும். இதனால், காய்ப்பிடிப்புக் குறையும். இதைக் கட்டுப்படுத்த, இலைகளின் மேல் ஒரு சத போர்டோ கலவை அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு என்னும் கணக்கில் கலந்து தெளிக்கலாம்.

கழுத்தழுகல் நோய்

இந்நோயானது தண்டின் கீழ்ப்பகுதியில் தோன்றும். கீழேயுள்ள திசுக்கள் காய்ந்து செடிகள் உருக்குலைந்து விடும். செடிகளில் பூ மற்றும் காய்ப்பிடிப்புக் குறையும். தண்டைச் சுற்றி நீர் தேங்கியிருக்கும். இதைக் கட்டுப்படுத்த, நோயால் தாக்கப்பட்ட செடிகளைப் பிடுங்கி அகற்ற வேண்டும். ஒரு கிலோ விதைகளுக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி என்னும் கணக்கில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் என்னும் கணக்கில் மாங்கோசெப் மருந்தைக் கலந்து தெளிக்க வேண்டும். மண்ணில் டிரைக்கோடெர்மா விரிடியை இடுவதன் மூலம், நோய்க் காரணியை அழிக்க முடியும்.

சிற்றிலை நோய்

இந்நோயின் தாக்குதலுக்கு உள்ளான செடிகளின் இலைகள் சிறிதாகக் காணப்படும். இலைத் தண்டு சிறிதாகவும், கணுக்கிடையே தண்டுகள் சிறுத்தும், இலைகளின் அகலம் குறைந்தும், மஞ்சளாகவும் தோன்றும். பாதிக்கப்பட்ட செடிகள் புதரைப் போல இருக்கும். மேலும், செடிகளில் பூ மற்றும் காய்ப்பு இருக்காது.

இதைக் கட்டுப்படுத்த, நோய்த் தாக்குதலுக்கு உள்ளான செடிகளை நீக்க வேண்டும். இந்நோய் பூச்சிகள் மூலம் பரவுகிறது. அதனால், பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும், டைமத்தயேட் மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம்.

பழ அழுகல் நோய்

நோயால் தாக்கப்பட்ட பழங்களில் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் அறிகுறிகள் தோன்றும். காய்கள் சிறுத்தும், நீர் கோர்த்ததைப் போலும் தோன்றும். இதனால், காய்கள் அழுகி விழுந்து விடும். இதைக் கட்டுப்படுத்த, உயிரியல் காரணிகளைக் கொண்டு விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.


Pachai boomi DR GAYATHIRI

முனைவர் காயத்ரி சுப்பையா, முனைவர் மா.விமலாராணி, முனைவர் க.வேல்முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading