மக்கள் அதிகளவில் விரும்பி உண்ணும் கீரைகளில், மணத்தக்காளியும் அடங்கும். நல்ல மணமிக்க இக்கீரை, வெப்ப மண்டல நாடுகளில் மிகுதியாக விளைகிறது. பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் காய்கள், கறுப்பாகவும் கரும் பச்சையாகவும் இருக்கும்.
பழமாகும் போது, சிவப்பு, மஞ்சள், கறுப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். இதன் இலை, தண்டு, காய், பழம் ஆகியவற்றை மருந்தாகப் பயன்படுத்தலாம். தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இக்கீரையைச் சுக்குட்டிக் கீரை என்று சொல்கிறார்கள்.
மணத்தக்காளிக் கீரை சாகுபடி
+ சித்திரை, ஆடி, மார்கழி, மாசியில், இந்தக் கீரையைப் பயிர் செய்யலாம்.
+ அனைத்து மண் வகைகளில் வளரும் என்றாலும், மணற் பாங்கான நிலம் மற்றும் கரிசல் நிலத்தில் இந்தக் கீரை நன்றாக வளரும்.
+ நாற்றங்காலை அமைத்து நாற்றுகளை வளர்த்து, நிலத்தில் சாகுபடி செய்யலாம்.
நாற்றங்கால்: ஏக்கருக்கு ஒரு கிலோ விதைகள் தேவைப்படும்.
+ பழங்களில் இருந்து சேகரித்த விதைகளைச் சாம்பலில் கலந்து, மேட்டுப் பாத்திகளில் விதைகளைத் தூவ வேண்டும்.
+ விதைகளை விதைத்ததும் பாசனம் செய்ய வேண்டும். மூன்றாம் நாள் உயிர்நீர் விட வேண்டும். பிறகு, தேவைக்கு ஏற்ப, பாசனம் செய்ய வேண்டும்.
+ ஆறு செ.மீ. உயரம் வளர்ந்த நாற்றுகளைப் பறித்து நடவு செய்யலாம்.
நடவு நிலம்: நிலத்தை 2-3 முறை நன்றாக உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன், ஏக்கருக்கு ஐந்து டன் தொழுவுரத்தைப் பரப்பிச் சமப்படுத்த வேண்டும். மண்புழு உரம், கம்போஸ்ட் ஆகியவற்றையும் இடலாம்.
+ பிறகு, பாசன வசதியைப் பொறுத்துப் பாத்திகளை அமைக்க வேண்டும்.
+ இந்தப் பாத்திகளில் பாசனம் செய்து, 30×40 செ.மீ. இடைவெளியில் நாற்றுகளை நட வேண்டும். நட்ட மூன்று மாதங்களில் சுமார் 120 செ.மீ. உயரம் வளரும்.
பராமரிப்பு: களைகளால் கீரைச் செடிகள் பாதிக்கப்படாமல் இருக்க, சரியான நேரத்தில் களைகளை நீக்க வேண்டும்.
+ இலைகள் அதிகமாகத் தழைத்து வர, ஒரு லிட்டர் நீருக்கு 30 மி.லி. பஞ்சகவ்யா வீதம் கலந்து, பத்து நாட்களுக்கு ஒருமுறை, காலை நேரத்தில் தெளிக்கலாம்.
+ ஜீவாமிர்தக் கரைசலைப் பாசனநீரில், மாதம் இருமுறை கலந்து விடலாம். இதனால், கீரைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
+ கீரைகளில் பூச்சிகளின் தாக்குதல் இருந்தால், இஞ்சி, மிளகாய், பூண்டுக் கரைசலைத் தெளிக்க வேண்டும்.
+ இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயைச் சமமாக எடுத்து இடித்து, ஒரு லிட்டர் மாட்டுக் கோமியத்தில் கலந்து ஒருநாள் வைத்திருந்தால், இந்தக் கரைசல் தயாராகி விடும்.
+ இதைப் பத்து லிட்டர் நீருக்கு 300 மி.லி. வீதம் கலந்து, பத்து நாட்களுக்கு ஒருமுறை, காலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
அறுவடை: இந்தக் கீரையின் சாகுபடிக் காலம் 120 நாட்கள் ஆகும்.
+ செடிகளை வேருடன் பிடுங்கி எடுத்து, வேர்களையும், பழங்களையும் நீக்கி விட்டு, இலை மற்றும் தண்டைத் துண்டுகளாக நறுக்கிக் காய வைக்க வேண்டும்.
+ பழங்களை நீக்குவதன் மூலம், பூசணம் வராமல் தடுக்கலாம் மற்றும் விரைவாகக் காய வைக்கலாம்.
+ சிமெண்ட் களம் அல்லது தார்ப்பாயில் காய வைத்தால், பிற தாவரங்கள், கல், மண் இல்லாமல் சுத்தமாக இருக்கும்.
+ இப்படி, எட்டு சதம் ஈரப்பதத்துக்கு மிகாமல் காய வைத்து, கோணிச் சாக்குகளில் இட்டு வைக்கலாம்.
+ ஏக்கருக்கு 1,000 முதல் 1,500 கிலோ வரை, உலர் கீரை மகசூலாகக் கிடைக்கும்.
முனைவர் சி.இராஜா பாபு, இணைப் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, திருச்சி மாவட்டம்.