ஒவ்வொரு விவசாயியும் தங்கள் நிலத்தின் மண்வளம் மற்றும் மேலாண்மை குறித்து அறிந்து கொள்ள உதவுவது மண்ணாய்வு அறிக்கை. ஓரிடத்தில் உள்ள கரிமச்சத்தின் அளவைப் பொறுத்துத் தான் ஒரு பயிருக்குத் தேவையான இதர சத்துகளும் கிடைக்கும்.
அதனால் தான், எளிய வடிவில் தொழுவுரம், மட்கிய தழையுரம், மண்புழு உரம், மட்கிய கோழியெரு, மட்கிய கரும்புச் சக்கை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை, ஏக்கருக்கு ஐந்து டன்னுக்குக் குறையாமல் இட வேண்டும் என்று சொல்கிறோம்.
மண்ணின் கார அமில நிலை, பி.எச். என்னும் அலகு மூலம் குறிப்பிடப்படும். சம அளவு என்பது 7 ஆகும். இதற்கு மேலுள்ள மண், உப்புத் தன்மை மிக்கது எனப்படும். இதற்குக் கீழேயுள்ள மண், அமிலத் தன்மை மிக்கது எனப்படும்.
பாசன நீருக்கும் இதே அலகுக் கணக்கு உண்டு. நீருக்கும் சமநிலை என்பது 7 தான். மண்ணும் நீரும் இந்தச் சம நிலையில் இருந்தால், அந்த நிலத்தில் எந்த உரத்தைப் போட்டாலும் நல்ல விளைவுகளைக் காணலாம்.
மண்ணில் உள்ள உப்புகளின் அளவைச் சுட்டிக் காட்ட இ.சி. என்னும், மின் கடத்தும் திறன் மதிப்பீடு பயன்படுகிறது. மின் கடத்தும் திறன் கூடுதலாக இருப்பது, அதாவது, 4 க்கு மேலே இருந்தால், அது உவர் அல்லது உவர் களர் தன்மையுள்ள மண்ணாகும். இத்தகைய பி.எச். மற்றும் இ.சி. மிகுதியாக இருக்கும் மண், சாகுபடிக்கு ஏற்றதாக இருக்காது.
இத்துடன், அந்த மண்ணிலுள்ள பேரூட்டங்களான, தழை, மணி, சாம்பல் சத்துகளின் அளவும் இந்த மண்வள அட்டையில் தெரிவிக்கப்படும். கந்தகம், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், காப்பர், போரான் ஆகிய நுண்ணுரங்களின் அளவுகளும் ஆய்வு செய்து தரப்படும். மேலும், சிக்கலான மண்ணைச் சீராக்க, எவ்வளவு ஜிப்சம் அல்லது சுண்ணாம்பை இட வேண்டும் என்பதைப் பற்றியும் குறிப்பிடப்படும்.
உப்பு நிலங்களை, உவர் நிலம், களர் நிலம், உவர் களர் நிலம் என, மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். உவர் மண் என்றால், இ.சி. என்னும் மின் கடத்தும் திறன் 4க்கு மேல் இருக்கும்.
சோடிய அயனியின் படிமானம் 15 சதத்துக்குக் கீழும், கார அமில நிலை 8.5க்குக் கீழும் உள்ளன என்று பொருளாகும். இப்படி இல்லாமல், மின் கடத்தும் திறன் 4க்குக் கீழும், சோடிய அயனியின் படிமானம் 15க்கு மேலும், பி.எச்.8.5க்கு மேலும் இருந்தால் களர் மண்ணாகும்.
எல்லா மண்ணையும் திருத்த முடியும். சரியான பயிர்களை சாகுபடி செய்து கூடுதலான வரவைப் பெறுவதற்கான வழிகள் நிறைய உள்ளன. மேலும் விவரங்களைப் பெற விரும்புவோர், 98420 07125 என்னும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
முனைவர் பா.இளங்கோவன், மேனாள் கூடுதல் இயக்குநர், வேளாண்மை- உழவர் நலத்துறை.
சந்தேகமா? கேளுங்கள்!