My page - topic 1, topic 2, topic 3

ஆடிப் பட்டத்தில் இராகி சாகுபடி!

ணவே மருந்து என்பது நம் முன்னோர் வாக்கு. ஆனால், தற்போது மருந்தே உணவு என்னும் நிலையில் உள்ளோம். அந்தக் காலத்தில் நோயின் பாதிப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால், இப்போது உணவுப் பழக்கம் முற்றிலும் மாறுபட்டு இருப்பதால், பலவகையான நோய்களுக்கு உள்ளாகி வருகிறோம்.

இந்நிலையில், அன்றாட உணவில் கேழ்வரகைச் சேர்த்துக் கொண்டால், நீரிழிவு, இதய நோய், சுண்ணாம்புச் சத்துப் பற்றாக்குறை போன்றவற்றில் இருந்து விடுபடலாம். கேழ்வரகு போன்ற சிறுதானியங்களை உணவாகக் கொள்ளும்படி மருத்துவர்களும் பரிந்துரை செய்கின்றனர்.

கேழ்வரகில், மற்ற தானியங்களைக் காட்டிலும் கால்சியம் என்னும் சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியன அதிகமாக இருப்பதால், கேழ்வரகு சாகுபடியை, வேளாண் விஞ்ஞானிகளும் பரிந்துரை செய்கின்றனர். பருவமழை சரியாகப் பெய்தால், இறவையை விட, மானாவாரி கேழ்வரகு சாகுபடியில் அதிக இலாபம் கிடைக்கும்.

பருவம் மற்றும் நிலத் தயாரிப்பு

ஆடி மற்றும் புரட்டாசிப் பட்டத்தில், மானாவாரிப் பயிராகக் கேழ்வரகைப் பயிரிடலாம். செம்மண் மற்றும் இருமண் கலந்த நிலங்கள் கேழ்வரகைப் பயிரிட உகந்தவை. நிலத்தை 2-3 முறை நன்கு உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன்னால் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும். இதனால், மகசூல் கூடுவதுடன், ஈரப்பதமும் பல நாட்களுக்கு இருக்கும்.

நாற்றங்கால் அமைத்தல்

கேழ்வரகில் மகசூலைக் கூட்ட, தூர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். அதற்குச் சரியான பயிர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். எனவே, நாற்றங்கால் விதைப்பு இறவைக்கு மட்டுமின்றி, மானாவாரிக்கும் ஏற்றதாகும். நாற்றங்கால் முறையில் பயிரிட எக்டருக்கு 5 கிலோ விதைகள் தேவை. 12.5 சென்ட் பரப்பில் நாற்றங்காலை அமைக்க வேண்டும். பாசன வசதிக்கு ஏற்ப, பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

நடவு

நடவுக்கு 17-20 நாட்கள் நாற்றுகளைப் பயன்படுத்தலாம். குத்துக்கு 2-3 நாற்றுகளை 7.5 செ.மீ இடைவெளியில் நட வேண்டும்.

உர நிர்வாகம்

கடைசி உழவின் போது எக்டருக்கு 12.5 டன் மட்கிய தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும். மண் பரிசோதனை முடிவுக்கு ஏற்ப உரமிட வேண்டும். மண் பரிசோதனை செய்யா விட்டால், எக்டருக்கு 60:30:30 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து தேவைப்படும்.

இவற்றில் மணிச் சத்தையும், சாம்பல் சத்தையும் விதைக்கும் போதே அடியுரமாக இட்டுவிட வேண்டும். தழைச்சத்தில் பாதியை அடியுரமாகவும், மீதமுள்ளதை இரு பாகமாகப் பிரித்து, விதைத்த 25-30 மற்றும் 40-45 நாட்களில் இட வேண்டும். பருவமழை சரியாக இல்லாத நிலையில், மீதமுள்ள தழைச்சத்து முழுவதையும், ஈரம் இருக்கும் போது ஒரே தடவையில் மேலுரமாக இடலாம்.

நுண்ணுயிர் உரங்கள்

எக்டருக்கு இரண்டு கிலோ அஸோபாஸ் உயிர் உரம் வீதம் எடுத்து, 25 கிலோ மண் மற்றும் மக்கிய தொழுவுரத்தில் கலந்து நிலத்தில் விதைக்கலாம். இறவையில் 5 பொட்டல அஸோபாஸ் உயிர் உரத்தை 40 லிட்டர் நீரில் கலந்து, ஒரு எக்டருக்குத் தேவையான நாற்றுகளின் வேர்கள், 15-30 நிமிடம் மூழ்கும்படி நனைத்தும் நடலாம்.

களை நிர்வாகம்

விதைத்த அல்லது நாற்று நட்ட 18 நாளில் ஒருமுறையும், 45 நாளில் ஒருமுறையும் களையெடுக்க வேண்டும். அல்லது எக்டருக்கு 2 லிட்டர் பூட்டாகுளோர் அல்லது 3 லிட்டர் பென்டிமெத்தலின் களைக்கொல்லியை, 625 லிட்டர் நீரில் கலந்து, நாற்று நட்ட மூன்றாம் நாள் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு

பூச்சிகள்: கேழ்வரகைப் பூச்சிகள் அதிகமாகத் தாக்குவதில்லை. எனினும், பருவ மாற்றத்துக்கு ஏற்ப, வெட்டுப் புழுக்கள், தண்டுத் துளைப்பான்கள், சாறு உறிஞ்சிகள், இலைப்பேன்கள், வேர் அசுவினிகள் முதலிய பூச்சிகள் தென்படலாம். வெட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்த, 200 மி.லி. மாலத்தியான் 50 இ.சி. வீதம் எடுத்து நீரில் கலந்து தெளிக்கலாம்.

தண்டுத் துளைப்பான்களைக் கட்டுப்படுத்த, தூர்க்கட்டும் பருவத்திலும், பூக்கும் பருவத்திலும் 200 மி.லி. மாலத்தியான் 50 இ.சி. வீதம் எடுத்து நீரில் கலந்து தெளிக்கலாம். வேர் அசுவினியைக் கட்டுப்படுத்த, 0.03 சத டைமித்தோயேட் கலவையை வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும். சாறு உறிஞ்சிகளைக் கட்டுப்படுத்த, மேலே கூறப்பட்ட ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கலாம்.

நோய்கள்: கேழ்வரகை, குலைநோய், செம்புள்ளி நோய் மற்றும் தேமல் நோய் தாக்கும். குலை நோயைக் கட்டுப்படுத்த, 200 கிராம் பெவிஸ்டின் மருந்தை, நட்ட 20-45 நாட்களில் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். செம்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 500 மி.லி. எடிபென்பாஸ் அல்லது ஒரு கிலோ மேன்கோசெப் வீதம் எடுத்து, நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

தேமல் நோயைக் கட்டுப்படுத்த, நோயுற்ற பயிர்களை முதலில் அகற்ற வேண்டும். இந்நோய், தத்துப் பூச்சிகளால் பரவுவதால், அவற்றைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 500 மி.லி. டெமட்டான் அல்லது மோனோ குரோட்டோபாஸ் வீதம் எடுத்து, நோய் தோன்றியதும் ஒருமுறையும், அடுத்து 20 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.

அறுவடை

கதிர்கள் நன்கு காய்ந்து மணிகள் முற்றிய பிறகு குறைந்தது இருமுறை அறுவடை செய்ய வேண்டும். பிறகு, கதிர்களைக் களத்தில் காய வைத்து அடித்துத் தானியத்தைப் பிரித்தெடுக்க வேண்டும். பிறகு, நன்றாகக் காய வைத்து, சுத்தம் செய்து சேமிக்க வேண்டும்.

முக்கியக் குறிப்புகள்

அசோபாஸ் உயிர் உரத்தில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். சூடோமோனாஸ் உயிர் பூசணக்கொல்லியில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். பயிர் எண்ணிக்கையைச் சரியாகப் பராமரிக்க வேண்டும். கேழ்வரகுடன் 4:1 அல்லது 8:2 வரிசை வீதம் துவரை அல்லது மொச்சையை ஊடுபயிராக இட வேண்டும்.

நாற்று நட்ட 18-25 நாட்களில் களையெடுக்க வேண்டும். குலைநோயைக் கட்டுப்படுத்த, சூடோமோனாசைத் தெளிக்க வேண்டும். 70-80 விழுக்காடு கதிர்கள் முற்றியதும் அறுவடை செய்ய வேண்டும். கல், மண் கலக்காத வகையில், சுத்தமான களத்தில் தானியத்தைப் பிரித்தெடுக்க வேண்டும். இராகித் தாள்களைப் பூசணம் தாக்காத வகையில், நன்கு காய வைத்துச் சேமிக்க வேண்டும்.


மா.அவின்குமார், வேளாண்மை அலுவலர்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks