கீரை வகைகளில் ஒன்றான புதினா, நறுமணம் கொண்ட மருத்துவ மூலிகையாகும். கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டப் பயன்படுகிறது. புதினாவில், நீர்ச்சத்து 84.5 சதம், புரதம் 4.9 சதம், கொழுப்பு 0.7 சதம், தாதுப்பொருள் 0.2 சதம், நார்ச்சத்து 0.2 சதம், மாவுச்சத்து 5.9 சதம் வீதம் உள்ளன.
பயன்கள்
+ சமையலில் சுவையும் மணமும் கொடுக்கப் பயன்படும் புதினா, சைவ, அசைவ உணவுக்குச் சுவையூட்டும்.
+ வயிற்றுவலி, செரிமானக் குறைவு, தொண்டைக் கரகரப்பு போன்றவற்றுக்குச் சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது.
+ மருத்துவக் குணம் கொண்ட புதினாவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்தம் சுத்தமாவதுடன், உடலுக்குப் புத்துணர்வும் கிடைக்கும் என, மருத்துவர்கள் கூறுகின்றனர்.
+ பல்வேறு மருந்துகளில் புதினா எண்ணெய்ச் சேர்க்கப்படுகிறது. இதுதவிர, அழகுப் பொருள்கள் உற்பத்தி, சோப்பு, தலைவலி மருந்து, கிரீம்கள் போன்றவற்றிலும் சேர்க்கப்படுகிறது.
+ சிறிதளவு புதினா இலைகளை எடுத்து, மூன்று மணி நேரம் நீரில் ஊற வைத்து, அந்த நீரைக் குடித்தால், மூச்சுத் திணறல் சரியாகும்.
+ புதினாவை உலர்த்திப் பொடி செய்து, பற்பொடியாகப் பயன்படுத்தினால் பற்களுக்கு நல்லது. ஈறும் வலிமை பெறும்.
+ மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக்கீரை சிறந்த மருந்தாகும்.
சாகுபடி முறை
பருவம்: புதினா, ஆண்டு முழுவதும் அறுவடை செய்யக்கூடிய பயிர்களில் ஒன்றாகும். இதற்குத் தனியாகப் பட்டம் ஏதும் இல்லை. ஆண்டு முழுவதும் பயிரிடலாம். இதற்குக் காலநிலை எதுவும் கிடையாது. ஆனால், ஜூன் ஜூலை மாதங்களில் நடவு செய்தால் புதினாவின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
ஒருமுறை நடவு செய்தால், மூன்று ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும். முழுக்க வெய்யிலோ அல்லது நிழலோ உள்ள இடத்தில் சரியாக வளராது. நிழலும், வெய்யிலும் கலந்த இடங்களில் மட்டுமே புதினாவை நடவு செய்ய வேண்டும்.
மண்: வடிகால் வசதியுள்ள செம்மண், மணல் கலந்த நிலங்களில் நன்றாக வளரும். நீர்த் தேங்கி நிற்கும் நிலம் மற்றும் களிமண் நிலங்களில், இதை சாகுபடி செய்வதைத் தவிர்க்கலாம்.
நிலம் தயாரித்தல்: நிலத்தைப் புழுதி புரள உழ வேண்டும். மேடு பள்ளம் இல்லாமல் நிலத்தைச் சமப்படுத்தி, பாத்திகளைப் பிடிக்க வேண்டும். அவரவர் இடவசதி, நீர் வசதிச் சூழலுக்கு ஏற்ப, பாத்திகளின் அளவை முடிவு செய்யலாம். பொதுவாக, பத்துக்குப் பத்தடி அளவில் பாத்திகளை அமைக்கலாம்.
நடவு செய்தல்: புதினா, பதியங்கள் மூலம் இனப்பெருக்கம் ஆவது. சிறிது வேர் இருந்தாலும் நன்கு தழைத்து வளரும். பாத்திகளில் நீரைப் பாய்ச்சிய பிறகு, புதினாத் தண்டுகளை நடவு செய்ய வேண்டும். நடவுத் தண்டுகள், புதினா சாகுபடி விவசாயிகளிடம் கிடைக்கும். முற்றிய புதினாக் கீரையை வாங்கி, அதன் தண்டுப் பகுதியை எடுத்தும் நடவு செய்யலாம். ஒரு தண்டுக்கும் அடுத்த தண்டுக்கும் நான்கு விரல்கிடை இடைவெளி இருப்பது போல், நெருக்கமாக நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்: நடவுக்குப் பிறகு, நிலத்தின் ஈரம் காய்ந்து விடாத வகையில், பாசனம் செய்ய வேண்டும். இப்படிச் செய்தால், தண்டுகள் உயிர்ப் பிடித்துத் தழைக்கத் தொடங்கும். புதினாவுக்கு உவர்நீர் அல்லது சப்பை நீரைப் பாய்ச்சினால், விளைச்சல் பாதிக்கப்படும். அதனால், நல்ல நீரை மட்டுமே பாய்ச்ச வேண்டும். இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
உரமிடுதல்: கடைசி உழவுக்கு முன், எக்டருக்கு 25 டன் வீதம் தொழுவுரத்தை இட வேண்டும். மண்புழு உரம் மற்றும் கம்போஸ்ட்டையும் இடலாம். இலைகள் அதிகமாகத் தழைத்து வர, ஒரு லிட்டர் நீருக்கு 30 மி.லி. பஞ்சகவ்யா வீதம் கலந்து தெளிக்கலாம். மாதம் இருமுறை, ஜீவாமிர்தக் கரைசலைப் பாசன நீரில் கலந்து விடலாம். இதனால், கீரைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
களை நிர்வாகம்: 15 முதல் 20 நாட்களில், கைகளால் களைகளை நீக்கி விட்டு, பத்துக் கிலோ கடலைப் புண்ணாக்கைத் தூளாக்கி, பாத்திகள் முழுவதும் தூவி விட்டு, நீரைக் கட்ட வேண்டும். 30 மற்றும் 40 நாட்களில் 20 கிலோ கடலைப் புண்ணாக்கை, பாசன நீரில் கலந்து விட வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு: புதினாவைப் பெரும்பாலும் பூச்சியோ நோயோ தாக்குவதில்லை. அப்படியும் ஏதேனும் பூச்சித் தாக்குதல் இருந்தால், இஞ்சி, பூண்டுக் கரைசலைத் தெளிக்க வேண்டும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயைச் சம அளவில் எடுத்து இடித்து, ஒரு லிட்டர் மாட்டுக் கோமியத்தைக் கலந்து ஒருநாள் வைத்திருந்தால், இக்கரைசல் தயாராகி விடும். இதை, பத்து லிட்டர் நீருக்கு 300 மி.லி. வீதம் கலந்து, பத்து நாட்களுக்கு ஒருமுறை, அதிகாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
அறுவடை
ஐம்பது நாளிலிருந்து கீரையை அறுவடை செய்யலாம். தரையில் இருந்து, இரண்டு விரல்கிடை அளவு விட்டு, கீரையை அறுக்க வேண்டும். அறுத்த பிறகு, காம்புகளை மட்டமாக அறுத்து விட்டு, களையெடுத்து நீர்ப் பாய்ச்சி, மீண்டும் கடலைப் புண்ணாக்கை உரமாகக் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்தால், மறுபடியும் புதினா தழைக்கும். ஏக்கருக்கு 4,500 – 5,000 கிலோ கீரை கிடைக்கும்.
முகூர்த்தம் மற்றும் நோன்புக் காலத்தில், சில்லறை விற்பனையில் கிலோ 50-70 ரூபாய் வரை விலை போகும். மொத்த விற்பனையில் சராசரியாக ரூ.30 கிடைக்கும். மூன்று ஆண்டுகள் வரை, தொடர்ந்து 60 நாட்களுக்கு ஒருமுறை புதினாவை அறுவடை செய்து கொண்டே இருக்கலாம். இதை விற்பனை செய்வது மிகவும் எளிது.
வீட்டில் புதினா வளர்ப்பு
வீட்டில் தோட்டம் வைக்க வேண்டும் என நினைப்பவர்கள், ஆரம்பத்தில் எளிமையாக வளர்க்கக் கூடிய, சிறுசிறு செடிகளை வளர்த்துப் பழகினால், தோட்டத்தைப் பராமரிப்பது எளிதாக இருக்கும். இவ்வகையில், அதிகச் செலவு எதுவும் இல்லாமல், வீட்டில் புதினா வளர்ப்பை எப்படி மேற்கொள்வது எனப் பார்க்கலாம்.
புதினாவை வளர்க்கப் பெரிதாக இடம் தேவையில்லை என்பதால், சிறிய இடத்தில், வீட்டுச் சன்னல் போன்ற இடங்களில் கூடப் புதினாவை வளர்க்க முடியும். வீட்டுச் சமையலில் புதினா இலைகளைப் பயன்படுத்தி விட்டு, எஞ்சியிருக்கும் தண்டை வைத்தே புதினாவை வளர்க்கலாம்.
+ தரமான, தடிமனான, குறைந்தது இரண்டாகக் கிளைத்துள்ள புதினாத் தண்டை அதன் நுனி இலைகளுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
+ பாதியளவு கண்ணாடி டம்ளரில், இந்தப் புதினாத் தண்டை வைக்க வேண்டும்.
+ இரண்டு நாட்களுக்கு ஒருமுறை நீரை மட்டும் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். டம்ளரை வெய்யிலில் வைக்கவே கூடாது.
+ கண்ணாடி டம்ளரில் வைத்திருக்கும் புதினாத்தண்டு, ஐந்து நாட்களுக்குப் பிறகு வேர்விடத் தொடங்கும். தொடக்கத்தில் இருந்த இலைகளுடன், இன்னும் சில இலைகள் வளரத் தொடங்கும்.
+ இந்த நிலையில் உள்ள தண்டை எடுத்து மண்ணில் நட வேண்டும். ஏற்கெனவே வேர் விட்டிருக்கும் புதினாத்தண்டு, மண்ணில் ஊன்றியதும் நன்றாக வளரும்.
+ புதினா, படர்ந்து வளரும் செடி என்பதால், குறுகிய தொட்டிகளில், பைகளில் வைக்க வேண்டாம். அகலமான தொட்டிகளில், குரோபேக்குகளில் வளர்க்கலாம்.
+ தேங்காய் நார்க்கழிவு, மண்புழு உரம், மற்றும் செம்மண் கொண்டு, வளர் கலவையைத் தயாரிக்க வேண்டும். இப்படித் தயாரித்த மண் கலவையில், விரல்களால் குழி பறித்து, புதினாத் தண்டுகளை நட வேண்டும்.
+ நேரடியாக வெய்யில் படும் இடத்தில், புதினா வளர்ப்புத் தொட்டியை வைக்கக் கூடாது. ஆனால், புதினாச் செடியின் வளர்ச்சிக்கு, வெய்யில் அவசியம் என்பதால், அதற்கு ஏற்ற இடத்தில் வைக்க வேண்டும்.
+ பத்து நாட்களில் புதினா வளர்ந்து விடும். அதில் மேலே இருக்கும் இலைகளை எடுத்துக் கொள்ளலாம். இதனால், கீழிருக்கும் இலைகளுக்குச் சூரியவொளி கிடைக்கும்.
முனைவர் சி.இராஜா பாபு, இணைப் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, திருச்சி மாவட்டம்.