செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி.
தமிழகத்தில் இப்போது நிலவி வரும் வறட்சியால், பல்லாண்டுப் பயிர்களைக் காக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. முக்கியப் பயிராகவும், அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படும் பயிராகவும் உள்ள தென்னையை, வறட்சியின் கோரப்பிடியில் இருந்து காப்பதற்கான முறைகளைப் பற்றி இங்கே காணலாம்.
தென்னைக்கு வறட்சியைத் தாங்கும் திறன் குறைவு. அதனால், இதற்கு நீர் அதிகமாகத் தேவை. தென்னைக்கு ஆணிவேர் கிடையாது. சல்லி வேர்கள் மட்டுமே உள்ளன. இவற்றில் 80 சதவீத வேர்கள் 60 செ.மீ. ஆழத்துக்குள் தான் இருக்கின்றன.
எனவே, இந்த ஆழத்துக்குக் கீழுள்ள நீரை இந்த வேர்களால் உறிஞ்ச முடிவதில்லை. நீரைத் தனது உடலில் சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றலும் தென்னைக்குக் கிடையாது. இந்தக் காரணங்களால் தான் தென்னையால் வறட்சியைத் தாங்க முடிவதில்லை.
மழைப்பொழிவு 1,000 மி.மீ.க்குக் குறைவாக உள்ள இடங்களிலும், மூன்று மாதங்களுக்கு மேல் தொடர்ந்து மழை பெய்யாத இடங்களிலும் உள்ள தென்னை மரங்கள், வறட்சியால் பாதிக்கப்படும். சுற்றுப்புற வெப்பநிலை 35 டிகிரி சென்டிகிரேடைத் தாண்டும் போதும், ஒப்பு ஈரப்பதம் 50 சதத்துக்குக் குறைவாக இருக்கும் போதும், தென்னை மரங்கள் வறட்சியால் பாதிக்கப்படும்.
பாளை விடும் பருவத்தை அடைந்த தென்னை மரம், மாதம் ஒரு ஓலை, ஒரு பாளை வீதம் உற்பத்தி செய்து கொண்டே இருக்கும். எனவே, ஓராண்டில் எந்த மாதத்தில் வறட்சி ஏற்பட்டாலும், தென்னை பாதிக்கப்படும். தென்னை மகசூலில் உண்டாகும் ஏற்றத் தாழ்வுக்கு, வறட்சியே முக்கியக் காரணம். வறட்சியால் பாதிக்கப்படும் தென்னையை மறுபடியும் நல்ல நிலைக்குக் கொண்டுவர 2-3 ஆண்டுகள் பிடிக்கும்.
வறட்சியால் பாதிக்கும் தென்னை மரங்களின் ஓலைகள், போதிய நீரின்றி, வாடி வதங்கி, பசுமை குன்றி, மஞ்சளாகி, வலுவிழந்து தொங்கி விடும். குரும்பைகளும் காய்களும் உதிர்ந்து விடும். வறட்சி அதிகமானால், ஓலைகள் ஒடிய, தென்னை மரங்கள் மடிந்து விடும். இதனால், தென்னை விவசாயிகளுக்குப் பெருத்த பொருளாதாரச் சேதம் ஏற்படும்.
தென்னைக்குக் கிடைக்கும் நீரின் அளவைப் பொறுத்து, ஓலைகளின் எண்ணிக்கை அமையும். போதிய நீர் கிடைக்கும் இடங்களில் வளரும் தென்னைகளில் 25 நாட்களுக்கு ஓர் ஓலை வீதம் ஓராண்டில் 14 ஓலைகள் வெளிவரும். நீர்த் தட்டுப்பாடு உள்ள இடங்களில், 6-7 ஓலைகள் மட்டுமே வெளிவரும். கடும் கோடையில் வளர்ச்சி இல்லாமல் தென்னை நின்று விடும்.
ஓலைகள் அதிகமாக வந்தால் தான் பாளைகள் அதிகமாக வரும். நீர்த் தட்டுப்பாட்டால் ஓலைகளை விட, பாளைகள் தான் அதிகமாகப் பாதிக்கப்படும். அதாவது, வறட்சியின் காரணமாக 6-7 ஓலைகளை விடும் தென்னையில், 4-5 பாளைகள் தான் வரும். கடும் வறட்சியால் பாதிக்கும் தென்னையில் ஒரு பாளைகூட வருவதில்லை.
ஒரு பாளையில் 16 பெண் பூக்கள் காணப்படும். இவற்றில், 66 சதவீதப் பெண் பூக்கள் வறட்சியால் கொட்டி விடுவதாகத் தெரிகிறது. மழைக்கும், தென்னை மகசூலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஒரு தென்னைக்குத் தினமும் 100 லிட்டர் நீர் தேவை. இதில், 5-10 சதவீத நீர் மட்டுமே தென்னையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மீதமுள்ள 90-95 சதவீத நீரானது, இலைத்துளைகள் மூலமாக ஆவியாகி விடுகிறது.
இந்த இலைத் துளைகளை ஓரளவு மூடச் செய்தால், ஆவியாகும் நீரின் அளவைக் குறைக்கலாம். ஒருசில தென்னை இரகங்களில், வறட்சிக் காலத்தில் இலைத் துளைகள் ஓரளவு மூடிக் கொள்ளும் தன்மை உண்டு. எனவே, தென்னையை வறட்சியில் இருந்து காப்பதற்குக் கீழ்க்காணும் முறைகளைக் கையாளலாம்.
வட்டப்பாத்தி அமைத்தல்
தென்னையின் பெரும்பகுதி வேர்கள், மரத்தைச் சுற்றிலும் 1.8 மீட்டர் ஆரமுள்ள வட்டப் பகுதிக்குள் தான் பரவியுள்ளன. எனவே, இந்தப் பரப்பில் நீரைச் சேமித்து வைக்க வேண்டும். இதற்குத் தென்னையைச் சுற்றி 1.8 மீட்டர் ஆரமுள்ள வட்டப் பாத்தியை அமைக்க வேண்டும். இந்தப் பாத்தியின் ஆழம் 20 செ.மீ. இருக்க வேண்டும். இப்படி, வட்டப்பாத்தி அல்லது வட்ட வரப்பை அமைப்பதன் மூலம், மண்ணில் நல்ல முறையில் ஈரத்தைக் காக்க முடியும்.
மூடாக்கிடுதல்
தென்னையைச் சுற்றி அமைத்த வட்டப் பாத்தியில், 15-20 தென்னை ஓலைகளைப் பரப்பி மூட வேண்டும். இப்படி மூடும் போது, 20 செ.மீ. ஆழம் வரையான மண்ணில், வெப்பம் சுமார் 6 டிகிரி செ.கி. வரை குறைந்து காணப்படும்.
உரிமட்டைகளைப் புதைத்தல்
தென்னையின் தூரிலிருந்து 1.8 மீட்டர் தள்ளி, 50 செ.மீ. ஆழம் மற்றும் அகலத்தில் வட்டமாக அகழியை எடுக்க வேண்டும். இந்த அகழியில், தென்னை மட்டைகளை, நார்ப்பகுதி மேல்நோக்கி இருக்குமாறு அடுக்கி மண்ணைப் போட்டு மூடிவிட வேண்டும். இப்படிச் செய்ய, மரம் ஒன்றுக்கு 200 உரிமட்டைகள் தேவைப்படும்.
மழைநீரை உறிஞ்சி நார்ப்பகுதியில் சேமித்து வைக்கும் இந்த மட்டைகள், தென்னைக்குத் தேவையான நீரைக் கொடுத்து வரும். ஒரு உரிமட்டை, தனது எடையைப் போல ஆறு மடங்கு நீரைச் சேமித்து வைக்கும். இதனால், வறட்சியில் தென்னை மரங்கள் காக்கப்படும்.
வரிசைக்கிடையில் உரிமட்டைகளைப் புதைத்தல்
தென்னந் தோப்பில் மர வரிசைகளுக்கு மத்தியில், 2 மீட்டர் அகலம், 50 செ.மீ. ஆழத்தில் கால்வாயை வெட்ட வேண்டும். அதில், நார்ப்பகுதி மேலே நோக்கி இருக்குமாறு உரிமட்டைகளை அடுக்கி, 5 செ.மீ. உயரத்துக்கு மண்ணைப் போட்டு மூட வேண்டும். இப்படி மூன்று அடுக்குகளை இட்டு, 10 செ.மீ. பள்ளம் இருக்குமாறு அமைக்க வேண்டும்.
இப்படிச் செய்தால், வழிந்தோடும் மழைநீரை, உரிமட்டைகள் உறிஞ்சி வைத்துக் கொண்டு, தென்னை மரங்களுக்குத் தேவையான நீரைக் கொடுக்கும். இவ்வாறு மட்கும் நூறு உரிமட்டைகள் 600 கிராம் சாம்பல் சத்தையும் தரும்.
குளத்து வண்டலை இடுதல்
மணற்பாங்கான மற்றும் செம்புரை மண்ணில் தான் தென்னை சாகுபடி அதிகளவில் நடக்கிறது. இத்தகைய மண் வகைகளில் மணல் துகள்கள் அதிகமாகவும், களிமண் துகள்கள் குறைவாகவும் இருக்கும். இவற்றால், ஈரத்தைக் காத்து வைக்க முடியாது. ஈரத்தைக் காக்கும் ஆற்றல், களிமண் துகள்களுக்கும், வண்டல் மண் துகள்களுக்கும், கரிமத் துகள்களுக்கும் மட்டுமே உள்ளது.
எனவே, கோடைக் காலத்தில் குளங்களில் காய்ந்து கிடக்கும் வண்டலை அள்ளி வந்து வட்டப் பாத்திகளில் பரப்ப வேண்டும். இத்துடன், மட்கிய தென்னைக் கழிவையும் மரத்துக்கு 50 கிலோ வீதம் இட்டுக் கலந்து விட வேண்டும். இப்படிச் செய்தால், மண்ணில் ஈரத்தைக் காக்கும் களிமண், வண்டல் மண், கரிமத் துகள்கள் மண்ணில் சேரும். இவற்றால் காக்கப்படும் ஈரம், வறட்சியால் தென்னைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உதவும்.
கூடுதலாக பொட்டாசை இடுதல்
பொட்டாஷ் உரத்தில் 60 சதம் சாம்பல் சத்தும், 40 சதம் குளோரின் சத்தும் உள்ளன. இந்த இரண்டும் வறட்சியைத் தாங்கும் ஆற்றலைத் தென்னைக்குத் தரும். இலைத் துளைகள் மூலம் வெளியாகும் நீரின் அளவைக் குறைத்து, ஓலைகளை வாட விடாமல் வைக்கும். தென்னையின் நீர்ப்பயன்பாட்டுத் திறனைக் கூட்டும். இப்படி, வறட்சியில் இருந்து தென்னைகளைக் காக்க உதவும். எனவே, பரிந்துரை அளவான 2 கிலோ பொட்டாசை, இரு மடங்காக, அதாவது 4 கிலோவாக இட வேண்டும்.
தழைச்சத்து, மணிச்சத்து உரங்களை பரிந்துரை அளவில் தான் இட வேண்டும். ஒரு மரத்துக்கு ஆண்டுக்கு 1.3 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர் பாஸ்பேட்டை இட வேண்டும். இந்த உரங்களை இரண்டாகப் பிரித்து, ஜூலை, ஆகஸ்ட் மற்றும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் இட வேண்டும். மழையில்லா நிலையில், உரமிட்ட பிறகு பாசனம் செய்ய வேண்டும்.
பொட்டாசுடன் சோடியம் குளோரைடு என்னும் சாப்பாட்டு உப்பையும் சேர்த்து இடலாம். மரத்துக்கு 2 கிலோ பொட்டாசுடன் 2 கிலோ சாப்பாட்டு உப்பைக் கலந்து இட வேண்டும். சாப்பாட்டு உப்பில், 40 சதவீதம் சோடியமும், 60 சதவீதம் குளோரினும் உள்ளன. குளோரின், தென்னைக்கு அவசியம் தேவைப்படும் சத்தாகும்.
இலைத் துளைகள் சரியாகச் செயல்பட, ஓலைச் செல்களின் விறைப்புத் தன்மை சரியாக இருக்க, குளோரின் பெரிதும் உதவும். இதனால், தென்னைக்கு வறட்சியைத் தாங்கும் திறன் அதிகமாகும். குளோரின் பற்றாக்குறை இருந்தால், வறட்சியில் தென்னை அதிகமாகப் பாதிக்கப்படும்.
ஓலைகளை வெட்டுதல்
கொடுக்கப்படும் நீரில் 10 சதத்தை மட்டுமே தென்னை பயன்படுத்தும். மீதமுள்ள நீர், ஓலைகள் மூலம் ஆவியாகி விடும். இந்த நீராவிப்போக்கு இலைத் துளைகள் மூலமே நடப்பதால், தென்னை ஓலைகளை வெட்டி விடுவது நல்லது. கடும் வறட்சியில் மரங்கள் பட்டு விடும் நிலை வந்தால், உச்சியில் குருத்தைச் சுற்றியுள்ள மூன்று ஓலைகளை மட்டும் விட்டு விட்டு, மற்ற ஓலைகளை அகற்றிவிட வேண்டும்.
உயிர் உரங்களை இடுதல்
வேம் (VAM) என்பது, வேர் ஓர் உட்பூசணம். இது, தென்னை வேர்களில் குடியேறி நீளமாக வளர்ந்து, மண்ணில் ஊடுருவி நெடுந்தூரம் செல்லும். இப்படிச் செயல்பட்டு, மண்ணில், வேர்களுக்கு எட்டாத தொலைவில் உள்ள மணிச்சத்து, துத்தநாகச் சத்து போன்ற பயிரூட்டங்களை எடுத்து, தென்னைக்குத் தரும் இப்பூசணம், வறட்சியைத் தாங்கும் ஆற்றலையும் அதற்குத் தரும். ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் வேம் உயிர் உரத்தை எடுத்து, மட்கிய தொழுவுரத்தில் கலந்து இட வேண்டும்.
சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தல்
தென்னை மரத்தைச் சுற்றிலும் தேவைக்கு ஏற்ப, 4-6 இடங்களில், தூரிலிருந்து ஒரு மீட்டர் தள்ளி, 30 செ.மீ. சதுரக் குழிகளைச் சம இடைவெளியில் தோண்ட வேண்டும். ஒவ்வொரு குழியின் நடுவிலும் 40 செ.மீ. நீளம், 16 மி.மீ. விட்டமுள்ள பிவிசி குழாயைச் சாய்வாக நட்டு, அதைச் சுற்றிலும் தென்னைநார்க் கழிவை இட்டு நிரப்ப வேண்டும்.
நீர்ச்சொட்டிகள் வழியாக வரும் நீரை, நுண்குழாய் மூலம் பிவிசி குழாயில் விழச்செய்ய வேண்டும். இதன் மூலம் பாசனநீர் 30 செ.மீ. ஆழத்துக்குச் செல்லும். அதனால், நீர் ஆவியாவதில்லை. ஒருமணி நேரத்தில் 4 லிட்டர் நீரை அளிக்கும் வகையில், சொட்டிகளை அமைக்க வேண்டும்.
வறட்சியைத் தாங்கும் இரகங்களைப் பயிரிடுதல்
வறட்சியைத் தாங்கி வளரும் தென்னை இரகங்களை சாகுபடி செய்தால், வறட்சியால் உண்டாகும் பாதிப்புகளைக் கணிசமாகக் குறைக்க முடியும். ஓலைகளின் மேற்பரப்பில் காணப்படும் வறட்சியைத் தாங்கும் மெழுகானது, நீர் ஆவியாவதைத் தடுப்பதுடன், வெப்பக் கதிர்களைச் சிதற வைத்து, ஓலையின் உட்பகுதியில் வெப்பத்தைச் சீராக வைக்கும்.
இப்படியான மரங்களில் வறட்சியால், வளர்ச்சியும் காய்ப்பும் அதிகளவில் பாதிக்கப்படாது. குட்டை இரகங்களைக் காட்டிலும், நெட்டை இரகங்களில், மேற்குக் கடற்கரை நெட்டை, ஜாவா ஜயன்ட், பிஜி நெட்டை, மலேசிய நெட்டை ஆகியன, வறட்சியைத் தாங்கி வளரும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, கிழக்குக் கடற்கரை நெட்டை, வேப்பங்குளம் 3, ஆழியார் 1, 3, ஆகிய தென்னை இரகங்கள், வறட்சியை நல்ல முறையில் தாங்கி வளர்ந்து, நல்ல மகசூலைத் தரும்.
ஜெ.கதிரவன், வேளாண்மை அறிவியல் நிலையம், ஹேன்ஸ் ரோவர் வளாகம், வாலிகண்டபுரம், பெரம்பலூர் – 621 115.
சந்தேகமா? கேளுங்கள்!