பருப்புக் கீரை, மிகக் குறுகிய காலத்தில் பலன்களை அள்ளித் தரும் கீரைகளில் ஒன்றாகும். இந்தக் கீரை இருபது நாட்களில் அறுவடைக்கு வந்து விடும். அதிக சத்துகள் அடங்கிய இந்தக் கீரைக்கு, குறைந்தளவு பராமரிப்பு இருந்தாலே போதும்.
இந்தக் கீரையைப் பருப்புடன் சமைத்து உண்ணும் பழக்கம் நெடுங்காலமாக இருந்து வருவதால், இதைப் பருப்புக்கீரை என்று அழைக்கின்றனர். மேலும், இந்தக் கீரை, பெண்களின் கீரை எனவும் அழைக்கப்படுகிறது. அதற்குக் காரணம், பருப்புக்கீரை, தாய்ப்பால் சுரப்பைச் சீராக்குகிறது. எனவே, பருப்புக்கீரை சாகுபடி மற்றும் பருப்புக் கீரையின் பயன்களை இப்போது பார்க்கலாம்.
பருப்புக் கீரை சாகுபடி முறை
மண் கலவை தயாரித்தல்: செம்மண் மற்றும் மட்கிய தொழுவுரத்தைக் கொண்டு மண் கலவையைத் தயாரித்தால், நல்ல வளர்ச்சியைப் பெறலாம். செம்மண் 60 சதவீதம், மட்கிய தொழுவுரம் 40 சதவீதம் எடுத்து, இரண்டையும் நன்கு கலந்து, மாடித் தோட்டத்தில் நடவு செய்ய ஏதுவாக, நெகிழிப்பை அல்லது மண் தொட்டியில் நிரப்பிக் கொள்ள வேண்டும்.
விதைத்தல்: பருப்புக் கீரை விதைகள் சிறியளவில் கறுப்பு நிறத்தில் இருக்கும். இவற்றை மண் கலவையில் தூவ வேண்டும். இதில் அனுபவம் இல்லையெனில், மணல் அல்லது சாம்பலுடன் பருப்புக்கீரை விதைகளைக் கலந்து தூவலாம்.
நீர் நிர்வாகம்: தூவிய பிறகு, பூவாளி மூலம் நீரைத் தெளிக்க வேண்டும். விதைத்த மூன்றாம் நாள் உயிர் நீர் தர வேண்டும். பின்பு, நான்கு நாட்களுக்கு ஒருமுறை நீர் விட வேண்டும்.
உரங்கள்: மண்புழு உரம், கம்போஸ்ட் ஆகியவற்றை இடலாம். இலைகள் அதிகமாகத் தழைத்து வர, ஒரு லிட்டர் நீருக்கு 30 மி.லி. பஞ்சகவ்யா வீதம் கலந்து தெளிக்கலாம். மாதம் இருமுறை, ஜீவாமிர்தக் கரைசலைப் பாசன நீரில் கலந்து விடலாம். இதனால், கீரைகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.
பயிர்ப் பாதுகாப்பு: கீரைகளில் பூச்சிகளின் தாக்குதல் இருந்தால், இஞ்சி, பூண்டுக் கரைசலைத் தெளிக்க வேண்டும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் சம அளவில் எடுத்து இடித்து, ஒரு லிட்டர் மாட்டுக் கோமியத்தில் சேர்த்து, ஒருநாள் வைத்திருந்தால், இந்தக் கரைசல் தயாராகி விடும். இதை, பத்து லிட்டர் நீருக்கு 300 மி.லி. வீதம் கலந்து, பத்து நாட்களுக்கு ஒருமுறை, அதிகாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
வளர்ச்சி மற்றும் அறுவடை
விதைத்த மூன்று நாட்களில் பருப்புக்கீரை விதைகள் முளைத்து வரத் தொடங்கி விடும். ஏழு நாட்களில் நல்ல வளர்ச்சியைக் கண்கூடாகப் பார்க்கலாம். சுமார் 20 நாட்களில் அறுவடை செய்யும் அளவில் வளர்ந்து விடும்.
இருபது நாட்களில் சிறிய மொட்டுகள் வைக்கத் தொடங்கும். எனவே, உணவுத் தேவைக்குப் போக மீதியை விதைக்காக விட்டு விடலாம். அந்த மொட்டுகள் மஞ்சள் நிறப் பூக்களாக மாறிக் காய்க்கும். காய்கள் காய்ந்த பிறகு அதிலுள்ள பருப்புக் கீரை விதைகளைப் பிரித்தெடுத்து, மீண்டும் விதைக்கப் பயன்படுத்தலாம்.
முனைவர் சி.இராஜா பாபு, இணைப் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, திருச்சி மாவட்டம்.