தமிழ்நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படும் பயிர்களில், கரும்பு, மணிலா, பயறுவகைப் பயிர்கள், மக்காச்சோளம், பருத்தி போன்றவை முக்கியமானவை. இவற்றில், சத்துகள் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளைச் சரியான பருவத்தில், சரியான அளவில் இலை வழியாகத் தெளிப்பதன் மூலம் மகசூல் அதிகமாகும்.
இலைவழித் தெளிப்பின் மூலம், சத்துகள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள், இலைத் துளைகளால் எளிதாகக் கிரகிக்கப்பட்டு, பயிரின் பல்வேறு பாகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதால், ஒளிச்சேர்க்கை விரைவாக நடந்து உணவு உற்பத்தி அதிகமாகும்.
விவசாயிகள் பயிரிடும் போது, மிகவும் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, நிலமானது நல்ல வடிகால் வசதியுடன் இருக்க வேண்டும். இல்லையெனில், போதியளவில் சத்துகளை இட்டாலும், அவை, பயிர்களுக்குச் சரியான அளவில் கிடைக்காமல் போய் விடும். அதனால், பயிர்களில் சத்துப் பற்றாக்குறை ஏற்பட்டு, பயிர்களின் வளர்ச்சியானது குன்றி விடும்.
அதாவது, முதலில் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். பயிர்களின் வளர்ச்சிக் குறையும். பயிர்கள் காய நேரிடும். ஆற்றல் பரிமாற்றம் குறைந்து, பூக்கள் மற்றும் காய்கள் உருவாவது குறையும். மேலும், பூக்களும் காய்களும் உதிரும். முடிவில் முழுமையாக மகசூல் இழப்பு ஏற்படும்.
இந்நிலையை மாற்ற, பயிர்களுக்குத் தேவையான சத்துகளை இலைகள் வழியாக அளிக்க வேண்டும். இதனால், பயிர்களில் வினையியல் மாற்றத்தை அதிகப்படுத்தி மகசூலைக் கூட்டலாம். பயிர்களில் ஏற்படும் சத்துக் குறைகளைப் பின்வருமாறு கண்டறியலாம்.
தழைச்சத்துப் பற்றாக்குறை: செடிகளின் வளர்ச்சிக் குன்றி, முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாகக் காணப்படும். இதைச் சரி செய்ய, ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் யூரியா அல்லது 20 கிராம் டிஏபி வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
மணிச்சத்துப் பற்றாக்குறை: முதிர்ந்த இலைகள் கருஞ்சிவப்பு நிறமாக மாறி விடும். இதனால், தானிய வளர்ச்சி அதிகளவில் பாதிக்கப்படும். இதைச் சரி செய்ய, ஒரு லிட்டர் நீருக்கு 20 கிராம் டிஏபி வீதம் கலந்து 2-3 முறை தெளிக்க வேண்டும்.
சாம்பல் சத்துப் பற்றாக்குறை: முதிர்ந்த இலைகளின் நுனியும் ஓரமும் மஞ்சள் நிறமாக மாறிக் காய்ந்து விடும். இதைச் சரி செய்ய, ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் பொட்டாசியம் குளோரைடு வீதம் கலந்து, பத்து நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.
சுண்ணாம்புச் சத்துப் பற்றாக்குறை: இளம் இலைகளின் நுனிகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து வாலைப் போல இருக்கும். மேலும், இலைகள் கிழிந்தும், ஒடிந்தும் காணப்படும். இதைச் சரி செய்ய, ஒரு லிட்டர் நீருக்கு 20 கிராம் கால்சிய சல்பேட் வீதம் கலந்து, இருமுறை தெளிக்க வேண்டும்.
கந்தகச் சத்துப் பற்றாக்குறை: வளர்ந்து வரும் இலைகள் மங்கலான மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதைச் சரி செய்ய, ஒரு லிட்டர் நீருக்கு 20 கிராம் கால்சிய சல்பேட் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
இரும்புச் சத்துப் பற்றாக்குறை: இளம் இலைகளின் நரம்புகள் வெளிர் பச்சைக் கோடுகளாகவும், நரம்புக்கு இடைப்பட்ட பகுதி வெளிர் மஞ்சள் நிறமாகவும் காணப்படும். இதைச் சரி செய்ய, ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் பெரஸ் சல்பேட் வீதம் கலந்து, பத்து நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.
துத்தநாகச் சத்துப் பற்றாக்குறை: இலைகளின் அடிப்பகுதியில் நரம்பின் இரு புறமும் பெரிய வெளிர் மஞ்சள் வரிகள் தோன்றும். கணுக்களின் இடைவெளியும் குறைந்து காணப்படும். இதைச் சரி செய்ய, ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் துத்தநாக சல்பேட் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
தாமிரச்சத்துப் பற்றாக்குறை: இளம் இலைகளின் நுனிகள் பழுப்பு நிறமாக மாறி, ஒன்றோடு ஒன்று சுருண்டு உடைந்து விடும். இதைச் சரி செய்ய, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் காப்பர் சல்பேட் வீதம் கலந்து பயிர்களில் தெளிக்க வேண்டும்.
த.வே.ப.க. பூஸ்டர்கள்
பயிர்களின் இயல்பான வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பூஸ்டர்களில் அடங்கியுள்ளன. இந்த பூஸ்டர்கள் மிகச் சிறந்த இடுபொருளாக இருப்பதால், அதிகப் பரப்பளவில் விவசாயிகள் இவற்றைப் பயன்படுத்தி, வருமானத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.
பயிர்களின் முக்கியமான வளர்ச்சிப் பருவத்தில் இந்த பூஸ்டர்களை இட்டால், தாவரத் திசுக்களில் சத்து மற்றும் வளர்ச்சி ஊக்கிகளின் அளவை நிலைநிறுத்தி, பயிர் உற்பத்தித் திறனைக் கூட்டலாம்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பயிர் வினையியல் துறையானது, தென்னை, பயறு வகைகள், நிலக்கடலை, பருத்தி, மக்காச் சோளம், கரும்பு ஆகியவற்றுக்கு இந்த பூஸ்டர்களைப் பரிந்துரைத்துள்ளது. இந்த ஆறு பூஸ்டர்களும் இயல்பான பயிர் வளர்ச்சிக்குத் தேவையான பேரூட்டங்கள், நுண்ணூட்டங்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகளை உள்ளடக்கிய கலவையாகும்.
இவற்றைப் பயிர்களுக்கு இடுவதன் மூலம், சத்து மற்றும் ஹார்மோன் குறைபாடு மற்றும் வினையியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு நிவாரணம் கிடைக்கும். மேலும், குறிப்பிட்ட பருவத்தில் பயிர்களுக்குத் தேவையான சத்துகளின் தேவையும் பூர்த்தியாகும்.
இந்த பூஸ்டர்களின் பயன்பாடு, சுற்றுச்சூழல் காரணிகளுக்கு எதிரான சகிப்புத் தன்மையை அளித்து, மகசூல் இழப்பிலிருந்து பயிர்களைக் காப்பதுடன், குறிப்பிட்ட பயிரின் சாகுபடிப் பரப்பளவை அதிகரிப்பதால், உணவு உற்பத்தியும் அதிகமாகும்.
இந்தப் பயிர் பூஸ்டர்களைப் பயன்படுத்துவதன் மூலம், மகசூல் 20 சதம் அதிகரிக்கும் என, ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், பயிர் வினையியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் -641 003 என்னும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி: 91-422-6611243.
முனைவர் கி.ஆனந்தி, முனைவர் நா.முத்துக்கிருஷ்ணன், முனைவர் அ.செந்தில், முனைவர் க.சிவகாமி,
வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வாழவச்சனூர், திருவண்ணாமலை – 606 753.
சந்தேகமா? கேளுங்கள்!