செய்தி வெளியான இதழ்: 2017 ஜனவரி.
வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, வேளாண்மை உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதே நேரத்தில், அதை நிலைப்படுத்துதல் முக்கியமாகும். அங்கக வேளாண்மையால் நுண்ணுயிரிகளின் செயல்கள் அதிகரிப்பதால், மண்வளம் நெடுநாட்கள் காக்கப்படுகிறது. கால்நடைகளுக்கு நஞ்சில்லாத் தீவனம் கிடைப்பதால், தரமான பால் கிடைக்கிறது. மேலும், கால்நடைக் கழிவுகளும் முறையாக மறுசுழற்சி மூலம் பெறப்படுகிறது.
அங்கக வேளாண்மையில் உற்பத்திச் செலவானது சற்று அதிகமாக இருந்தாலும், விளை பொருள்களுக்கு உகந்த விலை கிடைப்பதால், விவசாயிகள் இலாபம் அடைகின்றனர். போதுமான விலை மற்றும் விளை பொருள்களின் ஏற்றுமதிக்கு அங்ககச் சான்றளிப்பு மிகவும் முக்கியமாகும். எனவே, அதைப்பற்றிச் சுருக்கமாகக் காண்போம்.
தமிழ்நாட்டில் அங்ககச் சான்றளிப்பு, மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண்மைச் செயல் திட்டத்தின் படியும், அபீடா நிறுவன வழிகாட்டுதல் மற்றும் அங்கீகாரத்தின் மூலமும் வழங்கப்படுகிறது.
அங்கக வேளாண்மையில் ஈடுபட்டுள்ள தனி விவசாயி, குழுவாகச் செயல்படுவோர், பெரிய நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இந்தச் சான்றிதழைப் பெற முடியும். மேலும், வனப்பொருள்களைச் சேகரிப்போர், கால்நடைகளை வளர்ப்போர், தேனீ வளர்ப்போர் இதில் பதிவு செய்யலாம்.
வழிமுறைகள்
இயற்கை வேளாண்மை முறைப்படி சாகுபடி செய்யப்பட வேண்டும். தேசிய அங்கக உற்பத்தித் திட்டத்தின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு, அங்கக வேளாண்மையைப் பின்பற்ற வேண்டும். இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், வளர்ச்சி ஊக்கிகள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள், இரசாயன நேர்த்தி செய்யப்பட்ட விதைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது. அங்ககப் பண்ணையில் மாசடையக் கூடாது. இதற்கு ஏற்றபடி அங்கக வேளாண்மையில் ஈடுபடும் பண்ணை தனிமைப்பட்டிருக்க வேண்டும்.
அங்ககச் சான்றளிப்புக்கு மாறும் காலத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்தக் கால அளவானது, சுற்றுச்சூழலையும், முந்தைய நிலப் பயன்பாட்டையும் பொறுத்து அமையும். மாறும் காலம் பொதுவாக, பதிவு செய்த நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளாகும். அங்ககச் சான்றளிப்புக்கு மாறும் காலம், பல்லாண்டுப் பயிர்களுக்கு, பதிவு செய்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் ஆகும்.
தாவரப் பூச்சிக் கொல்லிகள், இயற்கை உரம் ஆகியவற்றை, பண்ணைக்கு வெளியிலிருந்து வாங்கிப் பயன்படுத்தும் நிலையில், இத்துறையின் அனுமதியைப் பெற வேண்டும். மண்ணரிப்புத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். கால்நடைகள் பண்ணையிலேயே பராமரிக்கப்பட வேண்டும். கால்நடைத் தீவனம் வெளியிலிருந்து பெறப்பட்டால், அந்தத் தீவனம், மாசில்லா இடங்களில் விளைந்ததாக இருக்க வேண்டும்.
அங்கக வேளாண்மைக்குப் பயன்படும் கருவிகள் மாசடையாமல் சுத்தமாக இருக்க வேண்டும். அங்ககப் பொருள்களை அனுப்புவதற்குப் பயன்படும் கொள்கலன்கள், எளிதில் மட்கும் பொருள்களால் தயாரிக்கப் பட்டிருக்க வேண்டும். மேலும், கொள்கலன்களில் உள்ள பொருள்களின் முழு விவரங்கள் குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அங்கக வேளாண் பண்ணையில், தினசரிப் பணி விவரம், இடுபொருள் விவரம், இடுபொருள்கள் பெறப்பட்ட இட விவரம், பயிர் உற்பத்தி விவரம், விற்பனை விவரம், ஆண்டுப் பயிர்த் திட்டம் மற்றும் பரிசோதனை விவரங்கள் ஆகியன அடங்கிய குறிப்பேடு பராமரிக்கப்பட வேண்டும்.
அங்ககச் சான்றளிப்பைப் பெறுவதற்கு, விண்ணப்பப் படிவம், பண்ணையின் பொது விவரக் குறிப்பு, பண்ணை வரைபடம், மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை விவரம், ஆண்டுப் பயிர்த் திட்டம், துறையுடனான ஒப்பந்தம் ஆகியவற்றின் மூன்று நகல்களை, உரிய கட்டணத்துடன் அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, அங்ககச் சான்றளிப்பு இயக்குநர், 142ஏ, தடாகம் சாலை, ஜிசிடி அஞ்சல், கோயம்புத்தூர்-641 013 என்னும் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி: 0422-2435080. மின்னஞ்சல்: tnocd@yahoo.co.in
முனைவர் மு.சுகந்தி, முனைவர் பி.சுரேஷ் சுப்பிரமணியன், முனைவர் எச்.கோபி, முதுகலை கால்நடை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.
சந்தேகமா? கேளுங்கள்!