குறைந்த மழையிலும் விளையும் ஏ.டி.எல்.1 பனிவரகு!

பனிவரகு HP scaled

வானம் பார்த்த பூமியில், பருவமழை பொய்ப்பதோ, தாமதித்துப் பெய்வதோ, குறைவாகப் பெய்வதோ புதிதல்ல. ஆனாலும், ஆடி மழை ஆவணியில் பெய்தாலும் மனம் சோர்ந்திடத் தேவையில்லை. அதற்கும் ஒரு மாற்றுப்பயிர் உண்டு. பனிவரகு என்று பெயர். 70-75 நாட்களில் விளைந்து அறுவடைக்கு வந்து விடும்.

பனிவரகு, தொன்று தொட்டு பயிரிடப்படும் குறுந்தானியப் பயிர்களில் ஒன்றாகும். இது, மண்வளம் குறைந்த பகுதிகளில், மலைவாழ் மக்களால் மானாவாரியாகப் பயிரிடப்படுகிறது. ஏலகிரி, ஏற்காடு, கல்வராயன் மலை, சேர்வராயன் மலை மற்றும் கொல்லிமலைப் பகுதியில் தொன்று தொட்டு விளைந்த பயிர் தான் பனிவரகு.

புதிது புதிதாகச் சில பணப்பயிர்கள் புகுந்து விட்ட காரணத்தால் காணாமல் போனதிந்த கானகப் பயிர். பருவமழை பட்டும் படாமல் பொய்தாலும், மிகையும் குறையுமாகப் பெய்தாலும் பனிவரகைப் பயிரிடலாம். உழுத மண்ணில் வளமில்லையே என்னும் சஞ்சலமின்றி நம்பிக்கையோடு பனிவரகை விதைக்கலாம்.

ஏ.டி.எல்.1 பனிவரகின் சிறப்புகள்

மிகக் குறுகிய வயது. 70-75 நாட்களில் விளைந்து விடும். சாயாமல் இருக்கும். அதிக மகசூலைத் தரும். சத்துகள் நிறைந்த தானியம். பட்டத்துக்கு முந்தியும் பிந்தியும் விதைக்க ஏற்ற இரகம். தானியம் மஞ்சள் நிறத்தில் திரட்சியாக இருக்கும். வறட்சியைத் தாங்கி வளரும். பூச்சி, நோய்களையும் தாங்கி வளரும். ஆடி மற்றும் புரட்டாசிப் பட்டத்தில் விதைக்கலாம்.

நிலம் தயாரித்தல்

செம்மண் மற்றும் இருமண் கலந்த நிலங்கள் உகந்தவை. கோடை மழையைப் பயன்படுத்தி, நிலத்தைச் சட்டிக் கலப்பையால் ஆழமாக உழ வேண்டும். கோடை உழவால் மண்ணரிப்புத் தடுக்கப்பட்டு, மழைநீர் சேமிக்கப்படும். களைகளைக் கட்டுப்படுத்தலாம். உழவின் போது, நிலத்தடியில் இருக்கும் கூட்டுப் புழுக்களை மேலே கொண்டு வந்து அழிப்பதால், பயிர்களைப் பூச்சிகள் தாக்குவது குறையும்.

விதைப்பு

வரிசையில் விதைக்க எக்டருக்கு 10 கிலோ விதைகள் தேவைப்படும். சாதா விதைப்புக்கு 12.5 கிலோ விதைகள் தேவைப்படும். வரிசையில் விதைக்க 22.5 x 7 செ.மீ. இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். கையால் அல்லது விதைப்பானால் அல்லது கொர்ரு கருவி மூலம் வரிசையாக விதைக்கலாம்.  இப்படிச் செய்தால் நிலத்தின் ஈரம் காயும் முன்பே அதிகப் பரப்பில் விதைத்து முடிக்கலாம்.

நுண்ணுயிர் உர விதை நேர்த்தி

ஒரு எக்டருக்குத் தேவையான விதைகளை, மூன்று பொட்டலம் (600 கிராம் அசோபாஸ் கலந்த அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். நிலத்தில் இடுவதாக இருந்தால் எக்டருக்குப் பத்துப் பொட்டலம் அசோபாஸ் வீதம் எடுத்து, 25 கிலோ மணல் மற்றும் 25 கிலோ தொழுவுரத்தில் கலந்து தூவ வேண்டும்.

உரமிடுதல்

கடைசி உழவுக்கு முன் எக்டருக்கு 12.5 டன் மட்கிய தொழுவுரத்தை இட வேண்டும். விதைப்பின் போது, 20 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்தை அடியுரமாக இட வேண்டும். விதைத்த 20-25 நாட்கள் கழித்து, கிடைக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி 20 கிலோ தழைச்சத்தை, மேலுரமாக இட வேண்டும்.  

பயிர்களைக் களைதல்

விதைத்த 12-15 ஆம் நாளில் பயிர்களைக் களைந்து, தேவையான பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும். விதைத்த 18-20 ஆம் நாள் கைக்களை எடுத்தல் அவசியம். அடுத்து, தேவைப்பட்டால் 40 ஆம் நாளில் இன்னொரு களையும் எடுக்கலாம்.

நீர் நிர்வாகம்

பனிவரகுப் பயிர்கள் நன்கு வளர்வதற்கு 300-350 மி.மீ மழை போதும். தேவையான ஈரப்பதம் மண்ணில் இல்லை என்றாலோ, போதியளவு மழை இல்லை என்றாலோ, பண்ணைக் குட்டையில் சேமிக்கப்பட்ட மழைநீரைப் பயன்படுத்த வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு

இந்த இரகத்தைப் பொதுவாக, பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்குவதில்லை. எனவே, பயிர்ப் பாதுகாப்பு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

அறுவடை

நன்கு காய்ந்து முற்றிய கதிர்களை அறுவடை செய்து, களத்தில் காய வைத்து அடித்து, தானியங்களைப் பிரித்துச் சுத்தம் செய்ய வேண்டும். மானாவாரியில் எக்டருக்கு 2,000-2,100 கிலோ தானியமும், 5,000-5,900 கிலோ தட்டையும் கிடைக்கும்.

மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருள்கள்

பனிவரகில் இருந்து, அரிசி, அவல், உப்புமா, சப்பாத்தி, ரொட்டி, தோசை, கூழ், புட்டு, முறுக்கு, பக்கோடா, சேலட் போன்ற பல்வேறு வகையான உணவுப் பொருள்களைத் தயாரிக்கலாம்.

சந்தை நிலவரம்

ஒரு கிலோ பனிவரகு 40-45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தற்போது குறுந் தானியங்களில் உள்ள சத்துப் பொருள்களைப் பற்றியும் அவற்றின் நன்மைகளைப் பற்றியும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. எனவே, வரும் காலத்தில் உறுதியாக இந்தத் தானியங்களின் தேவை அதிகமாகும். அப்போது இந்த விலை மேலும் உயரும்.

பனிவரகு எப்போதும் விவசாயிகளைக் கைவிடாது. உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களிலும் இதற்கு நல்ல மதிப்புள்ளது. எனவே, விவசாயிகள் ஒருங்கிணைந்து பனிவரகை உற்பத்தி செய்தால், விற்பனை செய்வதில் மற்றும் நிறைவான இலாபம் கிடைப்பதில் சிக்கல் இருக்காது. மாற்றி யோசித்தால் மாற்றுப் பயிர் உண்டு, ஒற்றுமையாய்ப் பாடுபட்டால் ஓராயிரம் பயனுண்டு.


பனிவரகு THANGA HEMAVATHY

முனைவர் .தங்க ஹேமாவதி, உதவிப் பேராசிரியர்,

பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையம்,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை.

முனைவர் அ.நிர்மலகுமாரி, பேராசிரியர் மற்றும் தலைவர்,

சிறுதானிய மகத்துவ மையம், அத்தியந்தல்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading