வாழையைத் தாக்கும் கூன்வண்டு!

வாழை banana

வாழை, பழப்பயிர்களில் மிக முக்கியமானது. வாழைப்பழம் முக்கனிகளில் ஒன்றாகும். இந்தியாவில் மா சாகுபடிக்கு அடுத்த இடத்தில் வாழை சாகுபடி உள்ளது.

உலகளவில் வாழை உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தை வகிக்கிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வாழை சாகுபடி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில், சேலம், கோயமுத்தூர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் அதிகளவில் வாழை பயிராகிறது. வாழை முக்கியமான உணவுப் பயிராகும்.

வாழைப்பழம் அனைத்து வயதினரும் விரும்பி உண்ணத் தக்கது. வாழைக்காய் சிப்ஸ் தயாரிக்கப் பயன்படுகிறது. வாழைத்தண்டு மற்றும் வாழைப்பூவைச் சமைத்து உண்ணலாம்.

உணவை இட்டு உண்ண வாழையிலை உதவுகிறது. சில விவசாயிகள் இலைக்காக மட்டும் வாழையைப் பயிரிடுகின்றனர்.

வாழைப் பழத்தில் இருந்து குளிர்பானம் தயாரிக்கலாம். மருத்துவக் குணமிக்க இப்பழத்தை, உணவுக்குப் பிறகு பாலுடன் உண்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உண்டாகும்.

உணவு நன்கு செரிக்கும், மலச்சிக்கல் வராது. நரம்புகளுக்கு நல்ல பலம் கிடைக்கும். பல் சார்ந்த நோய்களுக்கு இது சிறந்தது. தொற்று நோய்களைத் தடுக்கும். கண் பார்வைக்கு நல்லது.

இத்தகைய சிறப்புகள் நிறைந்த வாழையை நூறு பூச்சிகள் தாக்குகின்றன. அவற்றில் கிழங்குக் கூன்வண்டு, தண்டுக் கூன்வண்டு என, இருவகைக் கூன் வண்டுகளும் அடங்கும். இவற்றின் தாக்குதலால் மகசூல் பெரிதும் பாதிக்கப்படும்.

கிழங்குக் கூன்வண்டு: காஸ்மோபொலிட்ஸ் சொரிடஸ்

தாக்குதல் அறிகுறிகள்: வாழையை மட்டுமே தாக்கும் இந்தக் கூன்வண்டு, வாழை விளையும் அனைத்துப் பகுதிகளிலும் உள்ளது. இந்த வண்டின் புழுக்கள் மேற்பரப்பில் இருந்து தின்று, வலைப் பின்னலைப் போலப் பாதையை அமைத்துக் கொள்ளும். தாய் வண்டுகள் மற்றும் புழுக்கள், தண்டுகளைத் துளைப்பதால், வாழை மரங்கள் வலுவிழந்து காணப்படும்.

இந்த வண்டுகளின் தாக்கம் தொடங்கும் போது, பசுமையான இலைகளில் மஞ்சள் நிறத்தில் கோடுகள் காணப்படும். மரத்தின் வளர்ச்சிக் குன்றி விடும்.

மரத்தின் அடிப்பகுதி பருத்தும், நுனிப்பகுதி மெலிந்தும் இருக்கும். பூக்கும் போது அல்லது காய்க்கும் போது இந்த வண்டுகள் தாக்கினால், குலை தள்ளுவது பாதிக்கப்படும்.

பூச்சியின் வரலாறு: இந்த வண்டு சிவப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் இருக்கும். தாய் வண்டுகள் கிழங்குகளில் துளையிட்டு அதற்குள் முட்டைகளை இடும்.

இந்த முட்டைகள் 5 முதல் 8 நாட்களில் பொரிந்து, மஞ்சள் நிறப் புழுக்கள் வெளிவரும். தலை சிவப்பு நிறத்தில் இருக்கும். புழுக்கள் முழுமையாக வளர 25 நாட்களாகும். முதிர்ந்த கூன்வண்டுகள் ஓராண்டு வரை உயிருடன் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: கிழங்குக் கூன்வண்டு கிழங்குகள் மூலம் வருவதால், பூச்சித் தாக்குதல் இல்லாத கிழங்குள்ள கன்றுகளை நட வேண்டும்.

இந்த வண்டுகள் அடுத்தடுத்த மரங்களுக்குப் பரவுவதால், காய்ந்த இலைகள் மற்றும் சருகுகளை நீக்க வேண்டும்.

வாழைக் கிழங்குகளைச் சிறிய துண்டுகளாக வெட்டி மரங்களின் அடியில் வைத்து, கூன்வண்டுகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும்.

அறுவடை முடிந்த வாழைத் தண்டை 30 செ.மீ. அளவில் இரண்டாகப் பிளந்து, பிளந்த பகுதி தரையை நோக்கி வைக்க வேண்டும். இதனால் கவரப்படும் வண்டுகளைச் சேகரித்து அழிக்க வேண்டும். எக்டருக்கு ஐந்து இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்து, அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும்.

அறுவடை முடிந்த வாழை மரங்களைத் தரை மட்டத்தில் வெட்டி விட வேண்டும். பிறகு, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் கார்பரில் வீதம் கலந்த கரைசலை, அந்த மரங்களின் தூர்களில் ஊற்ற வேண்டும். இதனால், கூன்வண்டுகள் முட்டையிடுவதைத் தடுக்கலாம்.

நடவுக்கு முன் குழிக்கு 250 கிராம் வேப்பம் புண்ணாக்கு வீதம் இட வேண்டும். நடவுக் கிழங்குகளை நன்றாகச் சீவி விட்டு, 40 கிராம் கார்போபியூரான் குருணை வீதம் தூவி நட வேண்டும்.

தண்டுக் கூன்வண்டு: ஒடியோபோரஸ் லான்கிகோலிஸ்

தாக்குதல் அறிகுறிகள்: வாழை விளையும் அனைத்துப் பகுதிகளிலும் இதன் தாக்குதல் இருக்கிறது. இந்தப் புழுக்கள் வாழைத்தண்டைத் துளைத்து உள்ளே சென்று தண்டை உண்ணும்.

இதன் அறிகுறியாகத் துளையில் இருந்து பிசினைப் போன்ற திரவம் வெளிவரும். தாக்குண்ட தண்டுப்பகுதி சிதைந்து காணப்படும். வாழைத்தண்டு குடையப்படுவதால் உயிர்ச் சத்துகள் செல்வதில் தடை ஏற்படும்.

இதனால், இலைகள் மஞ்சளாக மாறிவிடும். மரத்தை வெட்டிப் பார்த்தால், புழுக்களால் ஏற்பட்ட துளைகளும், அதன் வெள்ளை நிறப் பிசின் வடிதலும் தெரியும்.

புழுக்கள் உண்ணும் தண்டுப்பகுதி அழுகியிருக்கும். ஆறேழு மாதங்களில் குலை தள்ளும் பருவத்தில், இவற்றின் தாக்குதல் ஏற்பட்டால் காய்கள் சிறுத்து விடுவதுடன், அவற்றின் முதிர்ச்சியும் பாதிக்கப்படும். தண்டுக் கூன்வண்டு தாக்கிய மரத்தினுள் 5-15 வண்டுகள், 15-20 புழுக்கள், 5-6 கூட்டுப் புழுக்கள் இருக்கும்.

பூச்சியின் வரலாறு: முதிர்ந்த வண்டுகள் தண்டுப் பகுதியில் முட்டைகளை இடும். இந்த முட்டைகள் 4-8 நாட்களில் பொரிந்து புழுக்கள் வெளிவரும். இவை முழுமையாக வளர 30-65 நாட்களாகும்.

இந்தப் புழுக்களின் வளர்ச்சியில் ஐந்து நிலைகள் உண்டு. கூட்டுப்புழுப் பருவத்தைத் தண்டுக்குள் அமைத்துள்ள சுரங்கத்தில் கழிக்கும். 24-44 வரை கூட்டுப் புழுவாக இருக்கும். வண்டாக வெளிவந்த பிறகு இரண்டு ஆண்டுகள் உயிருடன் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: வண்டுகளைச் சேகரித்து அழிக்க வேண்டும். காய்ந்த இலைகளை உடனுக்குடன் நீக்கி, வாழைத் தோட்டத்தைச் சுத்தமாக வைக்க வேண்டும்.

பக்கக் கன்றுகளை மாதம் ஒருமுறை வெட்டிவிட வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. மீத்தைல் பாரத்தியான் 50 ஈசி வீதம் கலந்த கரைசலைத் தண்டுப் பகுதியில் தெளிக்க வேண்டும்.

வாழை மரங்களின் அருகில், காய்ந்த இலைகள், அறுவடை செய்த மரங்கள் மற்றும் வெட்டிய பக்கக் கன்றுகளைக் குவித்து வைக்கக் கூடாது. அதிகப் பாதிப்புள்ள மரங்களை வேருடன் வெட்ட வேண்டும். அறுவடை முடிந்த மரத்தின் தண்டுப் பகுதியை 30 செ.மீ. நீளத்தில் வெட்டி இரண்டாகப் பிளக்க வேண்டும்.

பிறகு, பிளந்த பகுதி தரையை நோக்கி இருக்குமாறு, ஏக்கருக்கு 40 இடங்களில் வைத்து வண்டுகளை ஈர்க்க வேண்டும். அல்லது அறுவடை முடிந்த மரங்களின் கிழங்குகளைத் தோண்டி எடுத்து, நான்கு துண்டுகளாக வெட்டி தரையை நோக்கி வைத்து வண்டுகளை ஈர்த்துச் சேகரித்து அழிக்க வேண்டும்.


வாழை DR.K.GOVINDHAN

முனைவர் கு.கோவிந்தன், சி.சிவக்குமார், பி.சி.பிரபு, ப.பரசுராமன், மண்டல ஆராய்ச்சி நிலையம், பையூர், கிருஷ்ணகிரி – 635 112.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading