My page - topic 1, topic 2, topic 3

காய்கறி நாற்றங்கால் மேலாண்மை!

ணவே மருந்து என்பது நம் முன்னோர் மொழி. இதற்கேற்ப அவர்கள் உணவு தானியங்களை, காய்கறிகளை, கனிகளை உற்பத்தி செய்து உண்டு வாழ்ந்தனர். சத்துமிகு காய்கறிகளை நமக்கு அடையாளம் காட்டி விட்டுச் சென்றுள்ளனர்.

சரிவிகிதச் சத்துக்கு நாம் விளை பொருள்களைத் தான் நம்பியுள்ளோம். இவை, பழங்களாக, வேர்களாக, கிழங்குகளாக, தண்டுகளாக, இலைகளாக நம் அன்றாட உணவில் பங்கு வகிக்கின்றன. இவற்றில், கார்போ ஹைடிரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்புகள் நிறைந்து உள்ளன.

இத்தகைய காய்கறிச் செடிகள் சில விதைகளாக நடப்படுகின்றன. வெண்டை, அவரை, கொத்தவரை மற்றும் கொடிவகைக் காய்கறிப் பயிர்கள் இவ்வகையில் அடங்கும். சிலவகைக் காய்கறிப் பயிர்கள் நாற்றுகள் மூலம் சாகுபடி செய்யப் படுகின்றன. கத்தரி, தக்காளி, மிளகாய் போன்றவை இவ்வகையில் அடங்கும்.

இளம் காய்கறிச் செடிகளை மிகுந்த பாதுகாப்புடன் நடவு வரையில் வளர்க்கும் முறையே நாற்றங்கால். இதனால், பூச்சி மற்றும் நோய்ப் பாதிப்பை எளிதில் கட்டுப் படுத்தலாம். பயிர்களின் வயதில் சில நாட்களை நாற்றங்காலில் கழிப்பதால், சாகுபடி நிலத்தில் இவற்றின் வாழ்நாட்கள் குறைகின்றன.

மேலும், வீரியக் கலப்பின விதைகள் மிகுந்த மதிப்பு உள்ளவை. எனவே, நாற்றங்காலில் விதைப்பதால், விதைகள் சேதமடைவது குறையும்.

நாற்றங்கால் இடத்தேர்வு

ஓரளவு நிழலான இடத்தில் நாற்றங்காலை அமைக்க வேண்டும். இந்தப் பகுதிக்கு அருகில் நீர் வசதி இருக்க வேண்டும். சமமாகவும், மழைக் காலத்தில் நீர்த் தேங்காத இடமாகவும் இருக்க வேண்டும். நாற்றங்காலில், மேட்டுப்பாத்தி முறை, குழித்தட்டு முறை என இரண்டு முறைகள் உள்ளன.

மேட்டுப்பாத்தி முறை

பழங்காலம் முதல் மேட்டுப்பாத்தி முறை நமது விவசாயிகளால் பின்பற்றப் படுகிறது. ஒரு மீட்டர் அகலத்தில், தேவையான நீளத்தில் மேட்டுப் பாத்திகளை அமைக்கலாம்.
இந்தப் பாத்திகளில் 10 செ.மீ. இடைவெளியில் வரிசையாக விதைகளை விதைக்கலாம். ஆழம் 1.5-2 செ.மீ. வரையில் இருக்கலாம்.

விதைத்த பிறகு மட்கிய உரத்தால் இந்த வரிசைகளை மூட வேண்டும். அதற்கு மேலே, வைக்கோலை மூடி, பூவாளியால் நீரைத் தெளிக்க வேண்டும்.

குழித்தட்டு முறை

இதற்காகப் பயன்படும் தட்டு, செவ்வக வடிவத்தில் 98 குழிகளைக் கொண்டதாக இருக்கும். மிகுதியாக இருக்கும் நீர் வெளியேறும் விதத்தில், ஒவ்வொரு குழியிலும் துளை இருக்கும். இதில், குழிக்கு ஒரு விதையை இட வேண்டும். இந்தத் தட்டை பல தடவை பயன்படுத்த முடியும்.

சிறப்புகள்: இம்முறையில் முளைப்புத் திறன் அதிகம். நாற்றுகள் வீரியமாக வளரும். வேர் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். நடவுக்குப் பிறகு நிலத்தில் நாற்றுகள் இறப்பது குறைவு.

வேர்ப் பகுதியில் தென்னைநார்க் கழிவு இருப்பதால், நாற்றுக்குத் தேவையான ஊட்டம் எளிதில் கிடைக்கும். எங்கும் எளிதாக எடுத்துச் செல்லலாம்.

நாற்றங்கால் அமைப்பதற்கான காலம்

கத்தரி: டிசம்பர்- ஜனவரி மற்றும் மே- ஜூன்.

தக்காளி: மே-ஜூன், நவம்பர்- டிசம்பர், பிப்ரவரி- மார்ச்.

மிளகாய்: ஜூன்- ஜூலை, செப்டம்பர்- அக்டோபர்.

பெரிய வெங்காயம்: மே- ஜூன், ஜனவரி- பிப்ரவரி.

ஒரு எக்டருக்குத் தேவையான விதை

கத்தரி: சாதா இரகம்: 375-500 கிராம். ஒட்டு இரகம்: 100-200 கிராம்.

தக்காளி: சாதா இரகம்: 400-500 கிராம். ஒட்டு இரகம்: 120-150 கிராம்.

மிளகாய்: சாதா இரகம்: 1 கிலோ. ஒட்டு இரகம்: 200-250 கிராம்.

விதை நேர்த்தி

விதைகளை நாற்றங்காலில் விதைப்பதற்கு முன்பு, ஒரு கிலோ விதைக்கு, பூசணக் கொல்லியான கேப்டான் அல்லது திரம் அல்லது கார்பன்டசிம் மருந்தை 2 கிராம் வீதம் எடுத்துக் கலந்து 24 மணி நேரம் வைக்க வேண்டும். பிறகு, அரிசிக் கஞ்சியில், உயிர் உரமான அசோஸ் பயிரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியாவை 250 கிராம் எடுத்துக் கலந்த கலவையில், விதைகளை நன்கு பிசைந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

நிழல்வலைக் கூடம்

குழித்தட்டுகள் நிழல்வலைக் குடிலில் வைத்தே பாதுகாக்கப் படுகின்றன. நிழல் வலையை அமைப்பதற்கான தூண்கள் 10x6x4 அங்குல அளவில் அமைக்கப் படுகின்றன. இதன் மேலே 75 அல்லது 50 சதவீதப் பச்சை நிற வலை போர்த்தப் படுகிறது.

குடிலின் நீள அகலத்தை அவரவர் தேவைக்கு ஏற்ப அமைக்கலாம். உயரம் 8 அடி இருப்பது நல்லது. இந்த வலை, நாற்றுகளின் ஒளிச் சேர்க்கைக்குத் தேவையான ஒளியை மட்டும் குடிலுக்குள் அனுப்பும். மேலும், நாற்றுகளில் சாற்றை உறிஞ்சும் பூச்சி மற்றும் வண்டுகளை அனுமதிக்காது. அதனால், நாற்றுகள் சிறப்பாக வளர்கின்றன.

எனவே, நாற்றுகளைச் சரியான நாற்றங்காலில் உற்பத்தி செய்தால், அவை நிலத்தில் நன்கு வளர்ந்து அதிக மகசூலைக் கொடுக்கும். எனவே, விவசாயிகள் தங்களுக்குத் தேவையான நாற்றுகளைச் சரியான நாற்றங்கால் மூலம் உற்பத்தி செய்வதில் மிகுந்த கவனத்தைச் செலுத்த வேண்டும்.


முனைவர் செ.ஸ்ரீதரன், முனைவர் செ.அறிவரசன், ப.ஜெயசங்கரன், ஜெ.எஸ்.ஏ. வேளாண்மைக் கல்லூரி, கடலூர்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks