சூபாபுல் வெப்பப் பகுதிகளில் சாகுபடி செய்ய ஏற்ற தீவன மரமாகும். இம்மரம், ஆண்டுக்கு 500 முதல் 2,000 மி.மீ. வரை மழைப் பொழிவு உள்ள பகுதிகளில், 22-30 டிகிரி செல்சியஸ் தட்ப வெப்பம் நிலவும் பகுதிகளில் நன்கு வளரும்.
இதன் வலுவான மற்றும் ஆழமான வேர்களால், இந்த மரம், வறட்சியைத் தாங்கும் தன்மையைக் கொண்டுள்ளது. ஆனால், நீர்த் தேக்கத்தைத் தாங்கி வளராது.
உப்பும், அமிலமும் நிறைந்த நிலத்தில் சூபாபுல் மரம் வளரும். செங்குத்தான பாறைகள், மலைகளில் உள்ள நிலப்பகுதி மற்றும் மணற்சாரி பகுதியிலும் வளரும். எனினும், நிலத்தை உழுது சமப்படுத்தி நட வேண்டும்.
சூபாபுல் நாற்றுகளை, மே- ஜூன் காலத்தில், அல்லது செப்டம்பர்- அக்டோபரில் மழை தொடங்கியதும் நடலாம்.
சூபாபுல் விதையுறை கடினமாக இருப்பதால், முளைப்புத் திறன் மந்தமாக இருக்கும். இதைத் தவிர்க்க, இந்த விதைகளை 80 டிகிரி செல்சியஸ் சூடுள்ள நீரில் நான்கு நிமிடங்கள் போட்டு எடுத்து நடலாம்.
அல்லது, ஒரு கிலோ விதைக்கு 100 கிராம் அடர் கந்தக அமிலம் வீதம் சேர்த்துக் கலந்து வைத்து எடுத்து, நீரில் நன்கு கழுவி விதைக்கலாம். விதைப்புக்கு முன், விதைகளை ஒரு மணி நேரம் வெய்யிலில் போட வேண்டும்.
எக்டருக்கு 10 கிலோ விதைகள் தேவைப்படும். நாற்றுகளை உற்பத்தி செய்ய, நாற்றங்காலில் அல்லது நெகிழிப் பைகளில் 2-3 செ.மீ. ஆழத்தில் விதைக்க வேண்டும். பிப்ரவரி, மார்ச் மாதங்கள் இதற்கு ஏற்ற பருவமாகும்.
ஆறு முதல் எட்டு இலைகளை விட்டதும், அதாவது, 1.5-3 மாத நாற்றுகளை, 2×1 மீட்டர் இடைவெளியில் நடலாம். தேவையைப் பொறுத்துப் பாசனம் செய்யலாம்.
இறவையில், ஆண்டுக்கு 80-110 டன் தீவனமும், மானாவாரியில் இரண்டு ஆண்டுகள் வளர்ந்த மரங்கள் மூலம் 40 டன் தீவனமும் கிடைக்கும்.
செய்தி: இயக்குநர், மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.
சந்தேகமா? கேளுங்கள்!