நன்செய் பகுதிக்கேற்ற ஒருங்கிணைந்த பண்ணையம்!

ஒருங்கிணைந்த பண்ணையம் nansei fish

வேளாண்மையுடன் கால்நடைகள், கோழியினங்கள், மீன்கள் ஆகியவற்றை, ஒரே இடத்தில் இணைத்துப் பராமரிக்கும் ஒருங்கிணைந்த பண்ணையத்தில், ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பையும் கூடுதல் வருவாயையும் பெற முடியும்.

உதாரணமாக, ஒரே இடத்தில் மேல் தளத்தில் கோழிகளையும், அவற்றின் எச்சத்தைப் பயன்படுத்தி, கீழ்த் தளத்தில் மீன்களையும் வளர்க்க முடியும்.

குளத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரைப் பயிர்கள் மற்றும் பசுந்தீவன உற்பத்திக்குப் பாய்ச்சுவதன் மூலம், இருக்கும் வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி அதிக வருவாயை ஈட்டலாம்.

இவ்வகையில், சிறு குறு விவசாயிகளுக்கு ஏற்ற ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தைப் பற்றி, தஞ்சாவூர் காட்டுத் தோட்டத்தில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் குறித்துப் பார்க்கலாம்.

ஒருங்கிணைந்த பண்ணை முறையின் அவசியம்

ஆண்டுக்கு ஒரு பயிரை மட்டும் சாகுபடி செய்யும் இடங்களில், பாசனப் பற்றாக்குறை மற்றும் பருவமழை குறைவாக இருக்கும் இடங்களில், வேளாண்மையுடன் கால்நடைகளை வளர்க்கும் போது, ஆண்டு முழுவதும் கூடுதல் வருவாயும், குடும்பத்தினர் அனைவருக்கும் வேலை வாய்ப்பும் கிடைப்பதுடன், கால்நடைக் கழிவுகள் உரமாகப் பயன்படுவதால் உரச்செலவு குறைந்து, வருவாயும் கூடுகிறது.

விவசாயத்தில் கிடைக்கும் பொருள்கள் கால்நடைத் தீவனமாகப் பயன் படுவதால், தீவனச் செலவு வெகுவாகக் குறைகிறது. விவசாயிகள் பயிர்களை மட்டுமே நம்பியிராமல், இத்தகைய ஒருங்கிணைந்த பண்ணைய முறையைச் செயல்படுத்தும் போது, ஒன்றில் ஏற்படும் வருவாய் இழப்பு, மற்றொன்றால் ஈடு செய்யப் படுகிறது.

கால்நடைக் கழிவுகள் மீனுக்கு உணவாக, சிறந்த உரமாக மாறுவதால் நிலவளம் காக்கப் படுகிறது.

பயிர் சாகுபடியை மட்டும் தனித்து மேற்கொண்டு நிரந்தர வருமானம் பெற முடியாத நிலையில், விவசாயம் சார்ந்த தொழில்களை இணைத்து, ஒருங்கிணைந்த பண்ணைய முறையைப் பின்பற்றுதல் காலத்தின் கட்டாயம்.

இத்திட்டத்தில் தானிய சாகுபடியுடன் ஆடு, கோழி, மீன், முயல், தேனீ வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு, தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி, மரங்கள் வளர்ப்பு, தீவனப் பயிர் சாகுபடி போன்றவற்றைச் செய்தால், ஒன்றிரண்டு விளை பொருள்களுக்கு ஏற்படும் விலைக் குறைவை, மற்ற உற்பத்திப் பொருள்களின் மூலம் ஈடுகட்ட முடியும்.

ஒரு பிரிவில் அல்லது துணைத் தொழிலில் கிடைக்கும் கழிவுகள் மற்றும் விளை பொருள்களைப் பண்ணை அளவிலேயே மற்றொரு உற்பத்திக்கு இடுபொருளாகப் பயன்படுத்த, ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம் வழி வகுத்துக் கொடுக்கிறது. உதாரணமாக, நெல் சாகுபடி மூலம் கறவை மாட்டுக்கு வைக்கோல் கிடைக்கிறது. எரு, வயலுக்கு உரமாகிறது. பால், வீட்டுக்குப் பயன்படுகிறது.

இதன் மூலம் இணைந்துள்ள தொழில்களின் உள்ளீட்டுச் செலவுகளைக் குறைத்துப் பண்ணை இலாபத்தைக் கூட்டலாம். இந்தத் திட்டத்தில் எந்தக் கழிவும் வீணாவதில்லை. பண்ணைக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதால், இயற்கை உரச்செலவு குறைந்து இலாபம் கூடுகிறது. சுற்றுச்சூழல் காக்கப் படுகிறது.

வறட்சி, இயற்கைச் சீற்றம் போன்ற சூழல்களால் சாகுபடியில் ஏற்படும் இழப்பை, ஒருங்கிணைந்த பண்ணையத்தில் உள்ள மற்ற தொழில்கள் மூலம் ஈடுகட்ட முடியும். நிலையான வருமானம் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கும்.

பால், முட்டை, மீன், இறைச்சி, காய்கறிகள் அனைத்தும் ஒரே இடத்தில் விளைவதால், குடும்பத்தினருக்குச் சத்தான உணவு கிடைக்கும். மண்வளம் காத்து, குறைந்த செலவில் அதிக உற்பத்தியைப் பெறலாம். இதனால், நிகர இலாபமும் கூடும்.

பண்ணைக் குட்டைகள் மழைநீரைச் சேமிக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் பயன்படும். இவற்றில் நீர் இருக்கும் கால அளவைப் பொறுத்து, கட்லா, ரோகு, மிர்கால், புல் கெண்டை போன்ற மீன்களை வளர்க்கலாம்.

குட்டையின் மேல் நிலையில் கிடைக்கும் உணவைக் கட்லாவும், இடை நிலையில் கிடைக்கும் உணவை ரோகும், குட்டையின் அடியிலுள்ள உணவை மிர்காலும் சாப்பிட்டு வளரும்.

இவ்வகையில், ஓர் ஏக்கர் குட்டையில் 2,000 குஞ்சுகளை வளர்க்கலாம். உணவுப் பழக்கத்துக்கு ஏற்ப, மீன் வகைகளைப் பிரித்து விட வேண்டும். இதனால், ஒன்றுக்கொன்று போட்டி யில்லாமல் வளரும். மேலும், தீமை செய்யும் கொசு மற்றும் பூச்சிகளை மீன்கள் உண்டு அழித்து விடும்.

தென்னந் தோப்புகளில் மீன் குட்டைகளை அமைத்தால், தென்னை மரங்களுக்குத் தனியாகப் பாசனம் தேவை யில்லை. கோடையில் மீன்களைப் பிடித்த பிறகு, மீன் குட்டை வண்டல் மண்ணைத் தென்னை மரங்களுக்கு உரமாக இடலாம். தென்னை மட்டைகளை மற்றும் ஏனைய பொருள்களை மட்க வைத்து இயற்கை உரமாக்கலாம். மீன் குட்டைகளைச் சுற்றி, காய்கறிப் பயிர்கள் மற்றும் தீவனப் பயிர்களைப் பயிரிடலாம். தேனீக்களை வளர்க்கலாம்.

மீன் மற்றும் கோழி வளர்ப்பு

கோழியின் எச்சம் மீனுக்கு உணவாக அமையும் வகையில், மீன்களை வளர்ப்பது நல்ல பலனைத் தந்துள்ளது. கோழியெச்சம் தானாகவே மீன் குட்டையில் விழும் வகையில், கோழிக் கொட்டகையின் அடித்தளத்தில் கம்பி வலையைப் பொருத்தி, மீன் குட்டையின் மேல் கோழிக் கொட்டகை அமைக்கப் பட்டது.

கோழி எச்சத்தில், ஃபைடோ ப்ளாங்க்டான் என்னும் தாவர நுண்ணுயிர்கள் மற்றும் ஜீ ப்ளாங்க்டான் என்னும் விலங்கின நுண்ணுயிர்கள் வளர்கின்றன. குறிப்பிட்ட மீன் வகைகள் குறிப்பிட்ட நுண்ணுயிர்களை மட்டும் உண்டு வளர்கின்றன. எனவே, மீன்களிடம் உணவுக்காகப் போட்டி ஏற்படுவதில்லை.

மீன்களையும் கோழிகளையும் கூட்டாக வளர்ப்பதுடன், நெல்- நெல்- உளுந்து மற்றும் மாற்றுப் பயிர்த் திட்டமாக நெல்- நெல்- மக்காச்சோள சாகுபடி செய்யப்பட்டது.

ஓர் எக்டர் பரப்பில் பயிர் சாகுபடியும், 20 சென்ட் பரப்பில் மீன் குட்டையும் அமைத்து, அதன் மேல் 50 கோழிகளை வளர்க்கும் பண்ணைத் திட்டத்தில், மாற்றுப் பயிர், தொடர் பயிர் சாகுபடியில் இருந்து கிடைக்கும் வருவாயுடன், மீன் மற்றும் கோழி வளர்ப்பில் இருந்தும் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

மேலும், இத்திட்டம் நடைமுறைப் பயிர்த் திட்டத்தை விட அதிகமான ஆட்களுக்கு வேலை வாய்ப்பையும் தந்துள்ளது.

கறவை மாடு வளர்ப்பு

ஓர் எக்டர் நிலத்தில் பயிர் சாகுபடியுடன், மூன்று கறவை மாடுகளை வளர்க்கலாம். அதாவது, ஒரே நேரத்தில் இரண்டு மாடுகள் கறவையில் இருக்கும் போது, ஒரு மாடு சினையாக இருக்குமாறு பார்த்துக் கொள்வதால் ஆண்டு முழுவதும் பால் உற்பத்தி இருக்கும்.

நடைமுறை சாகுபடியுடன் மூன்று கறவை மாடுகளைச் சேர்த்து வளர்த்தால், கூடுதல் வருமானம் கிடைக்கும். கறவை மாடு வளர்ப்பால், வீட்டுக்குச் சத்தான பாலும், 12 டன் வரை சாணமும் கிடைக்கும்.

அதை மட்க வைத்து வயலுக்கு உரமாக இடலாம். அல்லது மண்புழு உரம் தயாரிக்கலாம். இயற்கை எருவை இடுவதால் மண்வளத்தைப் பாதுகாக்கலாம்.

கோழி வளர்ப்பு

தனித் துணைத் தொழிலாக 250 உயரின முட்டைக் கோழிகள் அல்லது இறைச்சிக் கோழிகளை வளர்க்கலாம். நாட்டுக் கோழிகளுக்கு வீட்டிலுள்ள எஞ்சிய உணவுப் பொருள்களை இடலாம். குடும்ப உறுப்பினர்களே கவனித்துக் கொள்ளலாம். உற்பத்திச் செலவைக் குறைத்து அதிக இலாபம் பெறலாம்.

ஆடு வளர்ப்பு

தலைச்சேரி, ஜமுனாபாரி ஆடுகளை 5+1 வீதம் வளர்க்கலாம். உயரின ஆடுகளை ஆழ்கூள முறையில் வளர்க்கலாம். ஓர் ஆட்டுக்கு 15 சதுரடி கொட்டகை இடம் தேவை. நிரந்தரமாகப் பச்சைத் தீவனம் கிடைக்க, நிலத்தில் சிறிது பரப்பை ஒதுக்க வேண்டும்.

புரதச்சத்து அடங்கிய சூபாபுல், வேலிமசால், குதிரை மசால், கிளைடோரியஸ், ஸ்டைலோ சான்தாஸ், அகத்தி போன்ற தீவனப் பயிர்களை, வரப்புகள் மற்றும் வேலிகளில் பயிரிட்டுத் தீவனமாகத் தரலாம். அடர் தீவனத்தையும் தரலாம்.

நெல் தரிசு பயறுவகைப் பயிர்களின் கழிவுகளையும் தீவனமாக, சிக்கன முறையில் பயன்படுத்தலாம். ஆடு வளர்ப்பில் பராமரிப்புச் செலவு மிகவும் குறைவு. சிறு குறு விவசாயிகள் இதன் மூலம் நல்ல வருமானம் அடைய முடியும். ஓர் எக்டர் நிலத்தில், நெல் சாகுபடியுடன், ஐந்து பெண் ஆடுகள் மற்றும் ஓர் ஆண் ஆட்டை, ஆழ்கூள முறையில் வளர்ப்பதால் கூடுதல் வருமானம் கிடைக்கிறது.

காளான் வளர்ப்பு

காளான் சத்துமிகு உணவாகும். வேளாண்மையில் கிடைக்கும் வைக்கோல் மூலம், குறைந்த செலவில் காளானை உற்பத்தி செய்யலாம். நமது தட்ப வெப்ப நிலைகளில் வளரும் சிப்பிக் காளான் மற்றும் பால் காளான் வளர்ப்பு, கூடுதல் வருமானம் தரக்கூடிய சிறந்த குடிசைத் தொழிலாகும். குடும்பத்தினரே இதைச் செய்யலாம்.

ஒரு படுக்கை மூலம் 350-450 கிராம் காளான் கிடைக்கும். அறுவடை செய்த காளான் 24 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும். உடனே விற்க முடியாவிடில், வெய்யிலில் உலர்த்தி உலர் காளானாக மாற்றி விடலாம். இதைச் சமையலுக்கு இருபது நிமிடங்கள் முன் வெந்நீரில் இட்டால், மீண்டும் சதைப் பிடிப்புள்ள காளானாக மாறி விடும்.

மண்புழு உரம் தயாரித்தல்

மண் புழுக்கள், ஆயிரம் டன் ஈரமான பண்ணைக் கழிவுகளை 300 டன் உரமாக மாற்றும் திறன் மிக்கவை. மண்புழு உரத் தயாரிப்பின் மூலம், சுற்றுச்சூழல் மாசுபடாமல் காக்கலாம்; வீணாகும் பண்ணைக் கழிவுகள் மற்றும் அங்ககப் பொருள்களை, மறு சுழற்சி முறையில் எருவாக மாற்றிப் பயன் படுத்தலாம்.

எனவே, விவசாயிகள் அவரவர்க்கு ஏற்ற வகையில், வேளாண்மை சார்ந்த துணைத் தொழில்களைத் தேர்ந்தெடுத்து, ஒன்றுடன் மற்றொன்றை ஒருங்கிணைத்துச் செய்ய வேண்டும். இதனால், விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் மிகவும் உயரும். மண்வளம் காத்து நீடித்த, நிலைத்த, வளமான வேளாண்மையை மேற்கொள்ளலாம்.

நன்மைகள்

ஒன்றிலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருள் மற்றொரு தொழிலுக்கு இடு பொருளாகப் பயன்படுகிறது. மட்கிய தொழுவுரம், கோழியெரு, மண்புழு உரம், ஆட்டு எரு ஆகியன கிடைப்பதால் மண்வளத்தைக் காக்கலாம். வீட்டுக்குத் தேவையான சத்தான உணவு கிடைக்கிறது. உற்பத்திச் செலவு குறைந்து நிகர வருமானம் கூடும். ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்புக் கிடைக்கும்.


ஒருங்கிணைந்த பண்ணையம் PORPAVAI

முனைவர் .பொற்பாவை, பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர் .இராஜேஸ்குமார், முதுநிலை ஆராய்ச்சியாளர்,

வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், தஞ்சாவூர் – 613 501.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading