பனிவரகும் பயன்பாடும்!

னைத்துலகச் சிறுதானியப் பயிர்கள் ஆண்டாக, இந்த 2023 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், சிறுதானியங்களில் ஒன்றான பனிவரகு சாகுபடி மற்றும் அதன் அவசியம் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

சிறப்புகள்

இந்தியாவில் பயிரிடப்படும் சிறுதானியப் பயிர்களில் பனிவரகு முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் சிறப்பே, மிகக் குறுகிய நாட்களில் விளைவது தான். மேலும், இது வறட்சியைத் தாங்கி வளர்வதால், வறண்ட மற்றும் மானாவாரியில் சாகுபடி செய்ய மிகவும் உகந்தது. வறட்சியை மட்டுமின்றி, நீர்த் தேக்கத்தையும் ஓரளவுக்குத் தாங்கி வளரக் கூடியது.

பனிவரகில், புரதம், தாதுகள், நார்ச்சத்து, பாலி பினால்கள், வைட்டமின்கள், அவசியமான அமினோ அமிலங்கள் மற்றும் பாஸ்பரஸ், கால்சியம், துத்தநாகம், இரும்பு போன்ற கனிமச் சத்துகள், லெசித்தீன், பைட்டேட் ஆகியன உள்ளன. இந்த பைட்டேட் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

உயர் இரத்தழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் போன்ற இதய நோய்கள் உள்ளோர்க்குச் சிறந்த உணவாக அமைகிறது. இதிலுள்ள லெசித்தீன் நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கிறது. மேலும் இதில் வைட்டமின்கள், நியாசின் (பி காம்ப்ளக்ஸ்), போலிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளன. பனி வரகு உணவை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொண்டால், இரத்தச்சோகை போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.

சாகுபடி முறை

பனிவரகானது அனைத்து மண் வகைகளிலும் நன்கு வளரும். குறிப்பாக, களிமண்ணும், கரிசல் மண்ணும் மிகவும் உகந்தவை. ஆடிப்பட்டமும், சித்திரைப் பட்டமும் பனிவரகு விதைப்புக்கு மிகவும் ஏற்றவை. பரவலான கை விதைப்புக்கு, எக்டருக்கு 12 கிலோ விதைகளும், வரிசை விதைப்புக்கு எட்டு கிலோ விதைகளும் தேவைப்படும். வரிசை முறையில் 20×10 செ.மீ. இடைவெளியில் விதைத்தால் அதிக மகசூல் கிடைக்கும்.

எக்டருக்கு, 40:30:20 கிலோ வீதம் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து தேவைப்படும். அதாவது, 88 கிலோ யூரியா, 189 கிலோ சூப்பர் பாஸ்பேட், 32 கிலோ பொட்டாஷ் தேவைப்படும். நீர் மேலாண்மை இப்பயிருக்குத் தேவைப்படாது. இருப்பினும், வறட்சி மிகுந்த காலத்தில் 2-4 முறை நீர்ப் பாய்ச்சுதல் அவசியம். விதைத்ததில் இருந்து முப்பது நாட்கள் வரை நிலத்தில் களைகள் இல்லாமல் பார்த்துக் கொண்டால் அதிக மகசூலை ஈட்டலாம்.

நோய் மற்றும் பூச்சி தாக்குதல் இப்பயிரில் பெரும்பாலும் இருக்காது. சிறந்த சாகுபடி முறைகள் மூலம், விதைத்த 65-75 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும். எக்டருக்கு 20-23 குவிண்டால் தானியம், 50-60 குவிண்டால் வைக்கோல் கிடைக்கும்.


முனைவர் க.ஸ்ரீமதி, முனைவர் க.பிருந்தா, உழவியல் துறை, பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரி, நாமக்கல் – 637 405.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!