சூரியகாந்தி சாகுபடி!

சூரியகாந்தி sunflower

லக மக்களில் பெரும்பாலோர் பயன்படுத்துவது சூரியகாந்தி எண்ணெய் ஆகும். உலகளவிலான எண்ணெய் உற்பத்தியில் 40 சதம், சூரியகாந்தியில் இருந்து கிடைக்கிறது. இந்தியாவில், கர்நாடகம், மராட்டியம், ஆந்திரம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சூரியகாந்தி அதிகளவில் பயிரிடப்படுகிறது. இந்த எண்ணெய்யில் கொழுப்பு மிகக் குறைவாகவும், லினோலிக் அமிலம் 64 சதம் என அதிகமாகவும் இருப்பதால், இதய நோயாளிகளுக்கு உகந்தது.

சூரியகாந்தியின் பிறப்பிடம் மெக்சிகோ ஆகும். ஆனாலும், பல்வேறு நாடுகளில் பயிரிடப்படுகிறது. இது சமையலுக்கு மட்டுமின்றி, சோப்பு, அழகுப் பொருள்கள் தயாரிப்பிலும், குழந்தை உணவுப் பொருள்கள் தயாரிப்பிலும் பயன்படுகிறது. எனவே, சரியான உத்திகளைக் கடைப்பிடித்தால், சூரியகாந்தி சாகுபடியில் அதிக வருமானம் பெறலாம்.

காலநிலை மற்றும் மண் அமைப்பு

சூரியகாந்தி, கடல் மட்டத்திலிருந்து 1,500-2,500 மீட்டர் உயரம் வரையுள்ள பகுதிகளில் நன்கு வளரும். வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும். பூக்கும் போது ஈரமான காற்றும், மழையும் இருந்தால் மகசூல் பாதிக்கப்படும். வடிகால் வசதியுள்ள செம்மண் மற்றும் கரிசல் மண்ணில் நன்கு வளரும்.

அதிக மகசூலைத் தரும் இரகங்கள்

கோ.3: இது, அதிக மகசூலைத் தரக்கூடிய வீரிய ஒட்டு இரகமாகும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டது. அடிச்சாம்பல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத்தன்மை உடையது. 90-95 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும். எக்டருக்குச் சராசரியாக 2,214 கிலோ மகசூல் கிடைக்கும். இதில், 42% எண்ணெய்ச் சத்து உள்ளது.

நிலம் தயாரித்தல்

நிலத்தை 2-3 முறை நன்கு உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன், ஏக்கருக்கு 5 டன் வீதம் மட்கிய தொழுவுரத்தை இட வேண்டும். மேலும், 12.5 கிலோ நுண்ணூட்டக் கலவையை 40 கிலோ மணலில் கலந்து நிலத்தில் இட வேண்டும். நாட்டுக்கலப்பை மூலம் பார்கள் மற்றும் பாத்திகளை அமைக்க வேண்டும். பார்களின் இடைவெளி, வீரிய ஒட்டு இரகத்துக்கு 60 செ.மீ., சாதா இரகத்துக்கு 45 செ.மீ. இருக்க வேண்டும். ஆனால், செடி இடைவெளி இரண்டுக்குமே 30 செ.மீ. இருக்க வேண்டும்.

விதையளவும் விதை நேர்த்தியும்

சாதா இரகமெனில் எக்டருக்கு 7 கிலோ, வீரிய ஒட்டு இரகமெனில் 4 கிலோ விதைகள் தேவைப்படும். ஒரு கிலோ விதைகளுக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி வீதம் கலந்து விதைக்க வேண்டும். அல்லது ஒரு எக்டருக்குத் தேவையான விதைகளில், 600 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் 600 கிராம் பாஸ்போ பாக்டீரியாவை, ஆறிய வடிகஞ்சியில் கலந்து நேர்த்தி செய்து, 15 நிமிடம் உலர்த்தி உடனடியாக விதைக்க வேண்டும்.

குழிக்கு இரண்டு விதைகள் வீதம் எடுத்து, பார்களின் பக்கவாட்டில் 30 செ.மீ. இடைவெளியில், 3 செ.மீ. ஆழத்தில் ஊன்ற வேண்டும். நடவு செய்த பத்தாம் நாளில், வளர்ச்சியற்ற செடிகளை நீக்கி விட்டு, குழிக்கு ஒரு தரமான செடி வீதம் பராமரிக்க வேண்டும். இதனால், பயிர்களுக்குத் தேவையான நீர், உரம், காற்று போன்றவை போதியளவில் கிடைக்கும்.

சத்து மேலாண்மை

சூரியகாந்திக்கு மண் பரிசோதனை அடிப்படையில் உரங்களை இட வேண்டும். இல்லையெனில், வீரிய ஒட்டு இரகத்துக்கு 132 கிலோ யூரியா, 567 கிலோ சூப்பர் பாஸ்பேட், 96 கிலோ பொட்டாஷ் என்னும் பொதுவான உரப் பரிந்துரையைக் கடைப்பிடிக்க வேண்டும். சாதா இரகத்துக்கு 132 கிலோ யூரியா, 189 கிலோ சூப்பர் பாஸ்பேட், 48 கிலோ பொட்டாஷ் வீதம் தேவைப்படும்.

இந்த உரங்களில் பாதியை அடியுரமாகவும், மீதமுள்ள பாதியை இரண்டு பங்காகப் பிரித்து, நட்ட 20-25 நாட்களிலும், 45-50 நாட்களிலும் இட வேண்டும். மேலும், மண்வளத்தைக் கூட்ட 2 கிலோ அசோஸ்பைரில்லம், 2 கிலோ பாஸ்போ பாக்டீரியாவை, 25 கிலோ தொழுவுரம் மற்றும் 25 கிலோ மணலில் கலந்து விதைப்பதற்கு முன் இட வேண்டும்.

நீர் மேலாண்மை

விதைத்ததும் பாசனம் செய்ய வேண்டும். அடுத்து, ஏழாம் நாள் உயிர்நீர் விட வேண்டும். மூன்றாம் பாசனம் 20-25 நாளிலும், நான்காம் பாசனம், செடிகள் மொட்டு விடும் பருவத்திலும் தேவைப்படும். அடுத்து, பூக்கும் போது இரண்டு முறையும், விதைகள் உருவாகும் போது இரண்டு முறையும் நீர்ப் பாய்ச்ச வேண்டும்.

களை மேலாண்மை

களைகளைச் சரியாக நீக்குவதற்கு, விதைத்த 15 நாளில் ஒருமுறை, 30 நாளில் ஒருமுறை களையெடுக்க வேண்டும். களை அதிகமாக முளைக்கும் நிலமெனில் எக்டருக்கு 2 லிட்டர் ஃப்ளுகுளரொலின் அல்லது பென்டிமெத்தலின் களைக்கொல்லியை 500 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். பிறகு, 30-35 நாட்களில் கைக்களை எடுக்க வேண்டும்.

மணிகள் அதிகம் பிடிக்க

சூரியகாந்தி அயல் மகரந்தச் சேர்க்கைப் பயிராகும். எனவே, அதிக மகசூலை எடுப்பதற்கு, மகரந்தச் சேர்க்கை மிக முக்கியமாகும். மகரந்தச் சேர்க்கை நடக்க, எக்டருக்கு 5-10 தேன் பெட்டிகளை வைக்கலாம். பூக்கொண்டையின் வெளிவட்ட மஞ்சள் பூக்கள் மலரும் போது, போரான் நுண்சத்தை, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் விதம் கலந்து பூக்கொண்டைகள் நனையுமாறு தெளிக்க வேண்டும்.

மகரந்தச் சேர்க்கை ஏற்படும் நேரமான காலை 9 முதல் 11 மணிக்குள் மெல்லிய மஸ்லின் துணியால் ஒவ்வொரு கொண்டையையும் லேசாக ஒத்தி ஒத்தி எடுத்து அயல் மகரந்தச் சேர்க்கையை ஏற்படுத்தலாம். அல்லது அருகருகே இருக்கும் பூக்களின் முகங்களைச் சேர்த்து லேசாகத் தேய்த்து விட்டாலும் நல்ல பலன் கிட்டும்.

பூச்சி மேலாண்மை

சூரியகாந்திச் செடிகளைத் தலைத் துளைப்பான், பீகார் கம்பளிப்புழு, புகையிலைப் புழு போன்றவை தாக்கும். எனவே, இவற்றைக் கட்டுப்படுத்த, பச்சைப்பயறு, உளுந்து, சோயா மொச்சையை ஊடுபயிராக இடலாம். மக்காச் சோளத்தை வரப்புப் பயிராக நடலாம். எக்டருக்கு 15 இனக்கவர்ச்சிப் பொறிகள் வீதம் வைக்கலாம்.

தொடக்க நிலையில் 3 சத வேப்ப எண்ணெய் அல்லது 5 சத வேப்பவிதைச் சாற்றைத் தெளிக்கலாம். விளக்குப்பொறியை வைத்து அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். பிவேரியா என்னும் உயிரி பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளித்துப் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

நோய் மேலாண்மை

ஆல்டர்நேரியா கருகல், அடிச்சாம்பல் நோய், அழுகல் நோய் போன்றவை மிக முக்கிய நோய்கள். இவற்றைக் கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். விதை நேர்த்தி செய்ய வேண்டும். 10 லிட்டர் நீருக்கு 25 கிராம் மேங்கோசெப் வீதம் கலந்து தெளித்தால் கருகல் நோய் கட்டுப்படும். பயிர்ச்சுழற்சி முறையைக் கையாள வேண்டும்.

பறவைகளிடம் இருந்து பாதுகாக்க

சூரியகாந்தி விதைகளை, கிளிகள் மற்றும் பறவைகள் கொத்தி உண்ணும். இவற்றைக் கட்டுப்படுத்த, கருவிகளைக் கொண்டு ஒலி எழுப்பலாம். மேலும், கலர் ரிப்பன்களை ஆங்காங்கே கட்டி விட்டுப் பறவைகள் நடமாட்டத்தைக் குறைக்கலாம். ஒளியை எதிரொளிக்கும் வண்ணக் கண்ணாடிகளை ஆங்காங்கே வைத்தும் கட்டுப்படுத்தலாம்.

அறுவடை

சூரியகாந்திப் பூவின் பின்புறம் மஞ்சள் நிறமாக மாறும். முன்புறம் விதைகள் கடினமாகி, கறுப்பு நிறமாக மாறும். இப்படி அறுவடைக்குத் தயாரான பூக்களை மட்டும் அறுவடை செய்து காய வைத்து, விதைகளைப் பிரித்து எடுக்க வேண்டும். இந்த விதைகளை 8.9 சத ஈரப்பதம் வரும் வரை உலர்த்திய பின்பு சேமிக்க வேண்டும்.


சூரியகாந்தி MAGESHWARAN e1709465520407

பொ.மகேஸ்வரன், திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு), எம்.அருண்ராஜ், சி.சபரிநாதன், வேளாண்மை அறிவியல் மையம், தேனி மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading